முதலில் மனிதர்களாக வாழப் பழகுங்கள் வடகலை-தென்கலை அய்யங்கார்களுக்கு உயர்நீதிமன்றம் இடித்துரை

வைணவக் கோயிலான காஞ்சிபுரம் தேவ ராஜசாமி கோயிலில் தென்கலை அய்யங்கார் களுக்கும் வடகலை அய்யங்கார்களுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. வடகலை அய்யங்கார் பார்ப்பனர்கள் ‘தமிழ் பிரபந்தங்களை’ பாடக் கூடாது என்கிறார்கள். தென்கலை அய்யங்கார்கள், ‘ஆச்சாரியா வேதாந்த தேசிகரின்’ தமிழ் பிரபந்தங்களைப் பாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். தமிழ் பிரபந்தம் பாட அனுமதிக்கக் கோரி சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தமிழ் பிரபந்தத்தைப் பாடலாம் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை அக்.22ஆம் தேதி தள்ளி வைத்தார். இந்த நிலையில் சீனிவாசன் என்பவர் தமிழ் பிரபந்தத்தை ஒரு நாள் மட்டும் பாடாமல், தொடர்ந்து பாடுவதால் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘சரசுவதி பூஜை’ நாளன்று நீதிமன்றம் விடுமுறை. மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியதால் வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் வீட்டிலேயே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மீனாள், “செப்டம்பர் 21ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே தமிழில் பாட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அதற்குப் பிறகும், தமிழில் பாடுகிறார்கள்; எனவே தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

அறநிலையத் துறையின் சார்பில் வாதாடிய சிறப்பு வழக்கறிஞர் மகாராஜா, “வடகலை-தென்கலை பிரிவினருக்கிடையே தகராறு உள்ளது; பிரதான வழக்கு அக்.22இல் விசாரணைக்கு வருகிறது” என்றார். நீதிபதி வைத்தியநாதன் தனது உத்தரவில் நீதிபதி மகாதேவன் முன் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், மறு உத்தரவு வரும் வரை தமிழ் பிரபந்தம் பாட தடை விதிக்கப்படுகிறது” என்று அறிவித்தார். அப்போது நீதிபதி, “கோயில் என்பது அனைவரின் வழிபாட்டுக்கும் பொதுவான இடம். துரதிருஷ்டவசமாக வடகலை அய்யங்கார்களும் தென்கலை அய்யங்கார்களும் பிரச்னை செய்து வருகிறார்கள். இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இந்த பிரபஞ்சத்தில் பூமி இருக்கும் வரை இந்த கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வே கிடைக்கப் போவதே இல்லை. தங்களை மனிதர்கள் என்று கூறிக் கொள்கிறவர்கள் முதலில் ஒரு மனிதனாக இருப்பதற்கான முக்கியத்து வத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று நீதிபதி தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் முழக்கம் 25102018 இதழ்

You may also like...