ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்
தோழர்களே! ஈரோடு வர்த்தகக் குமாஸ்தாக்களின் சங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு நிரம்பவுண்டு. நான் எனது 11வது வயதில் வியாபாரத் தொழிலுக்கு வந்தவன். எனது 42வது வயதுவரை வியாபாரியாகவே இருந்தேன். ஈரோடு வர்த்தக சங்கம் 1916ம் வருஷம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு முன்பு இருந்தே அதில் தலைவனாக பல வருஷம் இருந்தேன். கடைசியாக நான் முனிசிபல் சேர்மென் ஆனதும், காங்கிரசில் சேர்ந்ததும்தான் எனது வியாபாரம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். நான் ஏற்றுக்கொண்ட பொதுவேலைகளில் அதிகக் கவனம் செலுத்தியதாலேயே என் சொந்த வேலைகள் கவனிக்கப்படாமல் போய் விட்டன. ஆனபோதிலும் இந்த ஊர் வர்த்தகர்களிடமும் வர்த்தகக் குமாஸ்தாக்களிடமும் எனக்கு மிகவும் பற்றுதலும் மரியாதையும் உண்டு. நான் உள்ளுரிலேயே இருக்க முடியாததாலும் போதிய சாவகாசமில்லாததாலேயும் அடிக்கடி அவர்களுடன் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. என்றாலும் இன்று இந்த அதாவது ஈரோடு வர்த்தகர்களும், வர்த்தகக் குமாஸ்தாக்களும் கலந்த இந்தப் பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதை நான்...
