ராஜினாமா சூழ்ச்சி

காங்கிரஸ் “கண்டிப்பு” நாடகம்

வட ஆற்காடு ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வி உற்றதை மறைத்து பொது மக்கள் கண்களில் மிளகாய் பொடியைத் தூவ காங்கிரஸ் கண்டிப்பு முறையைக் கையாளப் போவதாக ஒரு நாடகம் நடிக்கப்படுகிறது.

காங்கிரசுக்கு எப்போதாவது ஒரு கண்டிப்போ, ஒழுங்கு முறையோ இருந்திருந்தால் இந்த கண்டிப்பு நாடகத்தைப் பார்க்க நாலு பேராவது வரக்கூடும். இன்று திடீரென்று ஏதோ தவறு ஏற்பட்டதாகவும், அதை அடியோடு அடக்கப்போவதாகவும் வேஷம் போடுவதானது தோழர் ஷண்முகம் தேர்தலில் ஏற்பட்ட துரோகத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எடுத்துக் கொண்ட நடவடிக்கையைப் பார்த்து இது காப்பி அடிப்பதேயாகும். அதாவது மயிலைப் பார்த்து வான் கோழி ஆடுவது போலவேயாகும்.

திருநெல்வேலி ஜில்லாபோர்டு எலக்ஷனில் காங்கிரஸ் எந்தக் கண்டிப்பு முறையை எந்த ஒழுக்கத்தைக் கையாடிற்று.

காங்கிரசின் பேரால் இன்று வெற்றி பெற்ற ஜில்லா போர்டு மெம்பருக்கு பிரசிடெண்டு வேலை செய்து வைத்ததா, ஒழுங்கைப் பற்றியோ, கண்டிப்பைப் பற்றியோ பேச காங்கிரசுக்கு வெட்கமில்லையா? என்று கேட்கின்றோம்.

  1. தளவாய் முதலியார் காங்கிரஸ் ரூல்படி காங்கிரஸ் மெம்பரா? அல்லது காங்கிரஸ் தலைவர்கள் சிவிக் போர்ட் மெம்பர்கள் ஆகியவர்களை விலைக்கு வாங்கிய முறைப்படி காங்கிரஸ் மெம்பரா?
  2. அந்த தேர்தலில் காங்கிரஸ் நியமித்த தலைவருக்கு ஓட்டுப் போடாத மெம்பர்களைப் பற்றி காங்கிரஸ் என்ன கண்டிப்பு முறையைக் கையாடிற்று?
  3. வேலூர் ஜில்லா போர்டு எலக்ஷனுக்கு கள்ளுக்கடை கண்டிராக்ட்தாரரை அபேட்சகராக காங்கிரஸ் நிறுத்த வில்லையா?
  4. காங்கிரஸ் சிவிக் போர்ட் நியமனத்துக்கு விரோதமாக நின்ற காங்கிரஸ் அங்கத்தினர்களை காங்கிரஸ் என்ன செய்தது?
  5. அந்தப்படி காங்கிரஸை மீறி நின்ற காங்கிரஸ்காரர்களை மறுபடியும் காங்கிரஸ் கெஞ்சி தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வில்லையா?
  6. சௌகார் அப்துல் அக்கீம் சாயுபு அவர்கள் காங்கிரசுக்கு விரோதமாய் இருந்தும், தேர்தலில் காங்கிரசுக்கு விரோதமாய் வேலை செய்து இருந்தும், அவர் கதர் கட்டாதிருந்தும், அவர் காங்கிரசில் சேராதிருந்தும் இருக்க தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் “அப்துல் அக்கீம் சாயபுக்கு விட்டுக் கொடுங்கள்” என்று சொன்னது எந்தக் கண்டிப்பையும் ஒழுக்கத்தையும் சேர்ந்தது?
  7. திருவண்ணாமலை தோழர் ஷண்முக முதலியார் எந்த சட்டப்படி காங்கிரஸ் மெம்பர்? இப்படி இன்னம் எத்தனையோ கேள்விகள் கேட்கலாம்.

எனவே காங்கிரசு என்னும் பேரால் பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம் போலெல்லாம் நடந்து கொண்டு அதை காங்கிரஸ் சட்டம் என்றும், கொள்கை என்றும் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதல்லாமல் இப்போது கண்டிப்பு பேச வந்து விட்டது “குச்சுக்காரி கிராக்கியில்லாததால் கற்பு பிரசாரத்துக்கு விண்ணப்பம் போடுகிற மாதிரி” இருக்கிறது.

இந்த தடவை வேலூர் ஜில்லா போர்டுக்கு தலைவராய் காங்கிரசால் நியமனம் செய்யப்பட்ட தோழர் டி.வி. கண்ணப்ப முதலியாரைப் பற்றி காங்கிரஸ் மெம்பர்களே வகுப்புவாதம் பேசி காங்கிரசின் பேரால் தெரிந் தெடுக்கப்பட்ட மெம்பர்களில் முதலியார் பட்டக்காரர்களே அதிகமாய் இருப்பதால் முதலியார் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முதலியார்கள் கட்டுப்பாடாய் சௌகார் சாயபை ஆதரித்து விடுவார்கள் என்று பயந்தும் ஒரு டி.வி. கண்ணப்ப முதலியாரை தேர்ந்தெடுத்து நியமித்தார்களாம். இதுதான் வகுப்பு வாதமில்லாத காங்கிரசின் யோக்கியதை.

மற்றும் அக்கூட்டத்திலேயே ஒரு பார்ப்பனரும் முதலியாரல்லாத 2, 3 தோழர்களும் கண்ணப்ப முதலியாரை பிரசிடெண்டாக தெரிந்தெடுத்த பின் அவர் தலைமையின் கீழ் மெம்பராய் இருப்பது தாங்கள் சுயமரியாதைக்கு ஈனம் என்று பேசிக் கொண்டார்களாம்.

இது எப்படியோ இருக்கட்டும். ராஜினாமா பூச்சி காட்டுவது எதற்கு ஆக என்று கேட்கிறோம். ராஜினாமா பூச்சி காட்டுவது காங்கிரசின் வெகு நாளைய தந்திரம் என்பது நமக்குத் தெரியும்.

சட்டசபைகளில் ராஜினாமா நாடகம், வெளியேறும் நாடகம் எல்லாம் இன்றைய நேரு அல்ல இவர்கள் அப்பன் நேரு காலத்திலேயே நடித்துக் காட்டி பொக்கணமாய் போன விஷயம். அதை மறுபடியும் ஜில்லா போர்டில் காட்டுவது முட்டாள் தனம் என்று உணரும் காலம் உடனே வரும் என்று உறுதி கூறுவோம்.

தோழர் T.R. வெங்கிட்டராம சாஸ்திரியார் சட்ட மெம்பர் வேலையை சர். சி.பி. ராமசாமி பேச்சைக் கேட்டு ராஜினாமா செய்தார். என்ன நடந்தது? அதில் இளைத்து நீண்டு போன அய்யர் இன்னம் உடல் தேறாமல் என்ன என்னமோ உளறிக் கொட்டுவதோடு அவர் வாழ்க்கை சரி என்ற நிலைக்கு வந்தது.

நிற்க, 26 பேர் ராஜினாமா செய்யாவிட்டால் காங்கிரஸ் அவர்களை என்ன செய்யக்கூடும்? தோழர் சேஷாசல செட்டியார் தனக்காகவும் தோழர் சீனிவாச ராவுக்காகவும் இந்த தேர்தலில் சுமார் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தாராம். இவர்கள் ராஜினாமா செய்தால் ஓட்டருக்கும், பெட்ரோலுக்கும், கார்காரனுக்கும், கூலிகளுக்கும் இன்னம் ஒரு 10 ஆயிரம் ரூ அல்லது 15 ஆயிரம் ரூபாயாவது பிரேஸ் விழுகும். மற்றபடி ஜில்லா போர்ட் கட்டிடத்தில் ஒட்டிய ஒரு ஒட்டரைக் கூட்டைக் கூட அசைக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

ராஜினாமா செய்தபின் செய்யப் போகின்ற வேலை என்ன என்றும், அதனால் ஏற்படும் பயன் என்ன என்றும் காங்கிரஸ் எடுத்துக் காட்டியிருந்தால் அது புத்திசாலித்தனமாயிருக்கும். அதில்லாமல் பூச்சாண்டி காட்டினால் வாய்த் தவிடும் போய் நெருப்பும் அணைந்தது என்கின்ற மாதிரியில்தான் தானாகத் தேடித் தின்பதும் கெட்டு வாழ்க்கைப்படுவதும் கெட்டு தெருவில் நிற்க வேண்டியதல்லாமல் வேறில்லை.

ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து மனிதர்களாகி பெருமை அடைந்த ஆள்கள் ஒரு நாள் கூத்துக்கு மீசையை சிரைத்துக் கொண்டதுபோல் எலக்ஷனுக்காக காங்கிரசில் சேருகிறார்கள் அவர்களை என்ன செய்வது?

காங்கிரசுக்கு சுயமரியாதையோ, நாணயமோ இருக்குமானால் இப்படிப்பட்ட ஆள்களை வலிய அணைந்து பட்டம் கட்டுமா என்பதையும் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். ஆகவே ராஜினாமா பூச்சாண்டிக்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும், காங்கிரசு யோக்கியமானதாகவும், நாணயமுள்ளதாகவும், ரோஷமுள்ளதாகவும் இருந்தால் 26 பேர்களையும் ராஜினாமா கொடுக்கச் செய்து பார்க்கட்டும் என்றும், அது முடியாவிட்டால் பார்ப்பன “மித்திரன்” சொல்வது போல் காங்கிரஸ் கமிட்டி சிவிக் போர்ட் எல்லாம் கலைக்கட்டும் என்றும், பிறகு நடப்பது என்ன என்பதை பார்க்கலாம் என்றும் காத்திருக்கிறோம். வேலூர் ஜில்லா போர்டு மெம்பர்கள் இந்தப் பூச்சாண்டிக்கு ஏமாந்து போகமாட்டார்கள் என்றும் எண்ணுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 10.05.1936

You may also like...