நம்மவர் கோழைத்தனம்

தோழர் சுபாஷ் சந்திரபோஸைக் கைது செய்து, விசாரணையின்றிச் சிறையிலடைத்து வைத்திருப்பதை அழுத்தமாய்க் கண்டிப்பதாக ஒரு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டுமென்று சென்னை நகரசபை மெம்பர் தோழர் தாமோதரம் நாயுடு ஏப்ரல் 28ந் தேதி மாலை சென்னை நகரசபைக் கூட்டத்தில் ஒரு பிரேரணை கொண்டுவந்தார். இம்மாதிரிப் பிரேரணைகளுக்கு, நகரசபையில் பிரசன்னமாயிருக்கும் மெம்பர்களில் முக்கால்வாசிப் பேர் ஆதரவளித்தால்தான் சட்டப்படி அநுமதி கொடுக்க முடியும். ஆகவே மேயர் பிரேரணையை ஓட்டுக்கு விட்டார். 18 பேர் சாதகமாகவும், 7 பேர் பாதகமாகவும் ஓட்டுக் கொடுக்க 6 பேர் நடுநிலைமை வகித்தனர். எனவே பிரேரணை தோற்றுப் போய்விட்டதாக மேயர் தெரிவித்தார். உடனே தோழர் சக்கரை செட்டியார் எழுந்து சபையில் பிரசன்னமாயிருந்த அங்கத்தினர் 25 பேரில் 18 பேர் பிரேரணைக்குச் சாதகமாக ஓட் செய்திருக்கின்றனரென்றும், 25ல் முக்கால்வாசிப் பேர்கள் என்பது 18லு பேர்கள் என்றும், ஒரு நபரில் லு மனிதன் என்பது கருதக்கூடாத விஷய மென்றும் ஆதலின் பிரேரணைக்கு சபை அநுமதி கொடுத்து விட்டதாகவே கருதப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் முக்கால்வாசிப் பேர் என்பது பாதிக்கு மேற்பட்டதென்றும், ஆதலின் அதை ஒன்றாகவே மதிக்க வேண்டு மென்றும், பிரேரணைக்கு சபை அநுமதி மறுத்து விட்டதென்றும் மேயர் அப்துல் ஹமீத்கான் கண்டிப்பாக முடிவு கூற பிரேரணை நிராகரிக்கப்பட்டது.

ஆனால் இந்தச் சிறு விதிகூட மேயராய் வர ஆசைப்படும் சக்கரை செட்டியாருக்கு தெரியாமல் போனது ஆச்சர்யமே.

நிற்க, தோழர் சுபாஷ்சந்திரபோஸை சர்க்கார் சிறைப்படுத்தியதும் விசாரணையின்றி சிறையிலடைத்து வைத்திருப்பதும் தவறேயாகும். சட்ட மறுப்பையும், புரட்சி இயக்கத்தையும் அடக்கிவிட்டதாகப் பெருமை பாராட்டிக்கொள்ளும் சர்க்கார் அவைகளை ஒழிப்பதற்கு உதவி புரிந்த சாதனங்கள் எல்லாம் தமது கையில் இப்பொழுதும் இருந்து வருகையில் தோழர் சுபாஷ் சந்திரபோஸை கைது செய்யத் தேவையே இல்லை. அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக சர்க்காருக்குத் தகவல் கிடைத்தால் எந்த நிமிஷத்தில் அவரைக் கைது செய்யவும் சர்க்காருக்கு முடியும். மேலும் அவரை சர்க்கார் கைது செய்யாதிருந்தால் அவர் காங்கிரஸ் காரியதரிசியாக நியமிக்கப்பட்டிருப்பார். காங்கிரஸ் தலைவர் அபேதவாதியாக விருந்தாலும், காங்கிரஸ் அவரைப் பின்பற்ற வில்லையென்பது லக்ஷ்மணபுரி முடிவுகளினால் தெளிவாகி விட்டது.

காங்கிரஸ்காரரில் பெரும்பாலார் பதவி மோகம் கொண்டிருப்பதினால் காங்கிரஸ் ராஜபக்தி ஸ்தாபனமாகவும், ஒத்துழைப்பு ஸ்தாபனமாகப் போவதும் உலகமறிந்த விஷயம். இந்நிலையில் காங்கிரஸ் காரியதரிசி ஆகவிருந்த சுபாஷ் பாபுவினால் கடுகளவு தொல்லையாவது விளையுமென்று சந்தேகப்படத் தேவை இல்லை.

தோழர் சுபாஷ்போஸ் சிறைவாசத்தைக் கண்டிக்குமுகத்தான் அசம்பிளி மெம்பர்கள் எல்லாம் ராஜினாமாச் செய்து விட்டு வெளியேறியிருந்தால் சென்னைச் சட்டசபை ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் எல்லாம் உடன் வெளியேற வேண்டுமென்று நாமும் சிபார்சு செய்திருப்போம். அன்றி சென்னைச் சட்டசபையில் ஒரு கண்டனத் தீர்மானம் வந்திருந்தால் அதை ஆதரிக்குமாறு நாம் ஜஸ்டிஸ் கட்சியாரைக் கேட்டுமிருப்போம்.

ஆனால் சென்னை நகரசபைக்கும் கண்டனத் தீர்மானத்துக்கும் என்ன சம்மந்தம் என்பதுதான் நமது கேள்வி.

அரசியல் விஷயங்களுக்கும் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை. இது ஜஸ்டிஸ் கட்சியாரின் கொள்கை. பலாபலன்களை எதிர்பாராமல் அந்தக் கொள்கையைக் காப்பாற்ற வேண்டியதே ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லிக் கொள்வோரின் கடமை. அம்மாதிரி உறுதியான கட்சிப்பற்றுடையோர்களாற்றான் கட்சிக்கு வலிமையும் பெருமையும் உண்டாக முடியும். ஆனால் சென்னை நகரசபையில் நடந்திருப்பதென்ன? ஒரு 4 அணா காங்கிரஸ்வாதி கொண்டுவந்த தீர்மானத்தை ஒரு வெகுநாளைய காங்கிரஸ்வாதியான மேயரே ஸ்தல ஸ்தாபன விதிகளுக்கு முரணானது என்று தைரியமாக நிராகரித்திருக்கிறார்.

அடிக்கடி கரணம்போடும் தோழர் சக்கரை செட்டியாரின் மழுப்பலில் மயங்கி மேயர் தோழர் அப்துல் ஹமீத்கான் பிரேரணைக்கு அனுமதி யளித்திருக்கலாம். சாமானியர் அவ்வாறே செய்திருப்பார்கள். ஆனால் நெஞ்சழுத்தமுடைய அமீத்கான் ஸ்தல ஸ்தாபன விதிகளுக்கே மதிப்பு கொடுத்தார். கட்சிப்பற்றுக்கோ, மலிவான வேஷப் பாராட்டுக்கோ மதிப்புக் கொடுக்கவில்லை.

ஆனால் தம் கட்சிக்கொள்கைப்படி அத்தீர்மானத்தை எதிர்க்கக் கடமைப் பட்ட ஜஸ்டிஸ் கட்சியாரோ பிரஸ்தாப விஷயத்தில் மிகவும் கோழைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சிப் பேரைச் சொல்லிக்கொள்ளும் தோழர்கள் பாலசுந்தரம் நாயுடு, சி.பி. சுப்பிரமணியம், பார்த்தசாரதி நாயக்கர், வெங்கடசாமி நாயுடு, ஜானகி ராமசெட்டி, சிவசண்முகம் பிள்ளை, டாக்டர் நடேச முதலியார் ஆகிய 7 பேரும் நடுநிலைமை வகித்து கட்சிக் கொள்கையை அலட்சியம் செய்ததுடன் தமது கோழைத்தனத்தையும் காட்டிக்கொண்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். நெருக்கடியான சமயங்களில் கட்சிக் கொள்கைகளைக் கொலை செய்பவர்களே கட்சிக்குப் பேராபத்து விளைவிக்கக் கூடியவர்கள். ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகரும் சட்டசபை உதவித் தலைவருமான டாக்டர் நடேசமுதலியார் அவ்வாறு நடந்து கொண்டது ஒரு பொழுதும் ஆதரிக்கத்தக்கதே யல்ல. காங்கிரஸ்காரருக்கு பயந்து இவர்கள் நடுநிலைமை வகித்ததினால் இவர்களை தேச பக்தர்கள் என்று காங்கிரஸ்காரர் கூறப் போவதில்லை. வரப்போகும் நகரசபைத் தேர்தல்களில் இவர்களுக்குப் போட்டியாக ஆட்களை நிறுத்தத்தான் போகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் எல்லாம் தேசத்துரோகிகள், பிற்போக்காளர்கள் என்று பிரசாரம் செய்யத்தான் போகிறார்கள். தற்கால மிருப்பதுபோல் சென்னை ஜஸ்டிஸ்கட்சித் தலைவர்கள் மேலும் இருந்துகொண்டிருந்தால், அடுத்த நகரசபைத் தேர்தலில் இந்த ஏழு பேரும் தோல்வியுற்று மண் கௌவத்தான் போகிறார்கள்.

ஒருகால் தீர்மானம் நேர்மையானதென்று இந்த ஏழுபேருக்கும் தோன்றியிருந்தால் அவர்கள் அனைவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக தைரியமாக வோட்டளித்திருக்கலாம். அப்பொழுது தைரியசாலிகள் என்ற பெயராவது கிடைத்திருக்கும். நடுநிலைமை வகித்ததினால் கட்சிக்குத் துரோகம் செய்ததுடன் தமது பயங்காளித்தனத்தையும் காட்டிக்கொண்டு விட்டார்கள். அரசியலில், நடுநிலைமை ஒண்ணாம் நம்பர் பயங்காளித்தன மாகவே மதிக்கப்படுகிறது. இம்மாதிரி சமய சஞ்சீவித் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் நிறைந்திருப்பதினாலேயே ஜஸ்டிஸ் கட்சி இன்று மேல் மூச்சு வாங்கிக்கொண்டு கிடக்கிறது. உறுதியான கட்சிப் பற்றில்லாதவர்கள் ஆயிரம் பேர் கட்சியிலிருப்பதைவிட அசைக்க முடியாத கட்சிப்பற்றுடையவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் கட்சிக்கு அவமானமாவது ஏற்படாமலிருக்கும்.

கடைசியாக ஒரு சிறு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறோம். சென்ற மேயர் தேர்தலின்போது மூன்று முஸ்லீம் காங்கிரஸ்வாதிகள் மேயர் பதவிக்குப் போட்டிபோட முன்வந்தனர். அவர்களுள் தோழர் அப்துல் ஹமீத்கானையே ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரிக்கவேண்டுமென்று கட்சித் தலைவர் பொப்பிலி ராஜா கட்டளையிட்டார். அதற்குக் காரணம் என்ன? தோழர் அப்துல் ஹமீத்கான் காங்கிரஸ்வாதியாக இருந்தாலும், நேர்மையும், மனவுறுதியும் உடையவர் என்று பொப்பிலி ராஜா நம்பியதே காரணம். பொப்பிலி ராஜா நம்பிக்கை நியாயமானதென்பதை தோழர் ஹமீத்கான் ஏப்ரல் 28ந் தேதி நடவடிக்கைகளினால் யோக்கியமாய் நடந்து சந்தேகமறக் காட்டி விட்டார். தோழர் ஹமீத்கானுக்குள்ள மனவுறுதி டாக்டர் நடேச முதலியாருக்கு இருந்திருந்தால் எவ்வளவோ அழகாக இருந்திருக்குமே!

குடி அரசு கட்டுரை 03.05.1936

You may also like...