காங்கிரஸ் புளுகு

பாமரமக்கள் காங்கிரசை அதிகமாக ஆதரிக்கும் பொருட்டு, காங்கிரஸ் மனப்பான்மையுடைய பத்திரிகை நிருபர்கள் தத்தம் மனோதர்மப்படி அடிக்கடி பத்திரிகைகளில் கயிறு திரிப்பதுண்டு. வெள்ளை அறிக்கை வெளிவந்த காலத்து, காந்தியாரை இந்தியா மந்திரி லண்டனுக்கு அழைக்கப் போவதாகவும், அவருடன் கலந்து, வரப்போகும் அரசியல் திட்டத்தை வகுக்கப்போவதாகவும் ஒரு கதை கட்டிவிடப்பட்டது. அப்பால், வைஸ்ராய் காந்தியை பேட்டி காணப் போகிறார், காந்தி சிம்லாவுக்குச் செல்லப் போகிறார் என்றெல்லாம் பல வெங்காய வெடிகள் கிளம்பின. இரண்டு வாரங்களுக்கு முன், எட்வர்டு மன்னர் பண்டித ஜவஹர்லாலைப் பேட்டி காண விரும்பியதாகவும் பண்டிதர் மறுத்து விட்டார் என்றும் ஒரு டெல்லிப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்தது. அதைப்பற்றிப் பலருக்கு சந்தேகம் ஏற்படவே அந்தச் செய்தி உண்மைதானென்று அந்த டெல்லிப் பத்திரிகை மீண்டும் ஊர்ஜிதம் செய்தது. ஆனால் பண்டித ஜவஹர்லால் அந்தச் செய்தியை இதுவரை ஆதரிக்கவோ மறுக்கவோ முன்வரவில்லை. சென்ற வாரத்தில் காந்தியாரும் புதிய வைஸ்ராய் லார்டு லின்லித்கோவும் சந்தித்துப் பேசுவதற்கு லார்டு ஹாலிபாக்ஸ் (பழைய லார்டு இர்வின்) ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும் இது சம்பந்தமாகக் கடிதப்போக்குவரத்துகள் நடந்து கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளிவந்தது. அந்தச் செய்தியை காங்கிரஸ் பத்திரிகைகள் எல்லாம் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டுப் பிரமாதப்படுத்தின. இப்பொழுது லார்டு ஹாலிபாக்ஸிடமிருந்து தமக்கு ஒரு விதமான கடிதமும் வரவில்லை யென்றும் அந்தச் செய்தி பூராவும் கட்டுக்கதை என்றும் காந்தியாரே மறுத்துக் கண்ணீர் வடிக்கிறார். இம் மாதிரிப் பொய்ச் செய்திகளினால் காங்கிரஸ் மதிப்பு எவ்வளவு காலத்துக்குக் காப்பாற்றப்படுகிறதோ தெரியவில்லை. கிராம தேவதைகளின் மீது ஆணை வைத்து ஓட்டுக் கொடுக்கும் அறிவாளிகள் இந்தியாவில் இருக்கும் வரை இம்மாதிரி அரசியல் பித்தலாட்டங்கள் நடந்து கொண்டுதானிருக்கும்.

குடி அரசு கட்டுரை 05.04.1936

You may also like...