தலைவர்களுக்கு புத்தி வருமா?

சென்னை கார்ப்பரேஷன் கௌன்சிலர் தோழர் எம். சுந்தரம் நாயுடு ஜஸ்டிஸ் கட்சியை விட்டுப் பிரிந்து விட்டதாகத் தெரிய வருகிறது. பிரிவதற்குள்ள காரணத்தை விளக்கி அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

“ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தது முதல் நான் அதில் அங்கத்தினராக இருந்து வந்திருக்கிறேன். கௌன்சில் வேலையைத் தவிர்த்து அதை (கட்சியை) ஒழுங்குபடுத்துவதற்கோ நல்ல தேசீய வழிகளில் அதைத் திருப்புவதற்கோ அதன் தலைவர்கள் கொஞ்சம் கூட இஷ்டப்படுவதாகத் தோன்றவில்லை. நகரத்தில் ஆதரிப்பவர்களோடோ அல்லது மற்ற இடங்களில் தங்களை ஆதரிப்பவர்களோடோ அவர்கள் சம்பந்தம் ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை. முக்கியமான தீர்மானங்களைச் செய்வதிலும் அவர்கள் கலப்பதில்லை. ஒரு அரசியல் கட்சி முறையில் யதார்த்தமாக வேலை செய்வதை அது நிறுத்திவிட்டது”.

தோழர் சுந்தரம் நாயுடு கூறியிருக்கும் மேல்காட்டிய அபிப்பிராயங்கள் முற்றிலும் சரியானவைகளாகும். ஜஸ்டிஸ் கட்சியின் தற்கால நிலைமையை படம் பிடித்ததுபோல் அவர் விளக்கிக் காட்டியிருக்கிறார். சென்ற அசம்பிளித் தேர்தல் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்காக அந்தரங்க சுத்தியாக வேலை செய்த இரண்டொருவரில் தோழர் சுந்தரம் நாயுடுவும் ஒருவர். அவருக்கே கட்சி மீது இப்பொழுது வெறுப்புத் தோன்றியிருக்க வேண்டுமானால் அதற்கு ஜவாப்தாரிகள் கட்சித் தலைவர்களேயாகும். சென்னை நகர சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெறப்போகிறது. காங்கிரஸ் கட்சியார் இப்பொழுதே வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களோ உண்பதும் உறங்குவதுமே போதுமென்று திருப்தி யடைந்திருக்கிறார்கள். கட்சியைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு இல்லை. சென்னை அசம்பிளிக்கு இப்பொழுது வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையிலும் வெளியூர்களிலும் வாக்காளர் பதிவு விஷயத்தில் காங்கிரஸ்காரர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சென்னையிலே காங்கிரஸ் தொண்டர்கள் முயற்சியினால் பிரதிதினமும் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறார்களாம். ஜஸ்டிஸ் கட்சியாரோ ஒன்றும் செய்யவில்லை. மத்திய பிரசாரக் கமிட்டிக் காரியதரிசி தோழர் மதனகோபால நாயுடு, ஜஸ்டிஸ், விடுதலை பத்திரிகைகளில் வாக்காளர் பதிவு செய்ய வேண்டியதைப்பற்றி இரண்டு அறிக்கைகள் வெளியிட்டு விட்டுச் சும்மா இருக்கிறார். நம்மவர்கள் பூரணமான அரசியல் உணர்ச்சி பெற்றவர்கள் அல்ல. பிறர் தூண்டினாற்றான் அவர்கள் தத்தம் பெயர்களைப் பதிவு செய்ய முன் வருவார்கள். காங்கிரஸ்காரர் வாக்காளர் களுக்குத் தேவையான உதவிகள் எல்லாம் செய்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களோ படே ஆசாமிகள். பக்கத்து வீட்டுக்காரனிடம் பேசமாட்டார்கள். வீடு தேடிச் சென்றாலும் பேட்டி கொடுக்க மாட்டார்கள். இந்தக் காலத்திலே இப்பேர்ப்பட்ட ஆசாமிகளை வைத்துக் கொண்டு எந்தக்கட்சியையாவது நடத்த முடியுமா? இப்பேர்ப்பட்ட உணர்ச்சியற்ற தலைவர்களைக் கொண்ட கட்சியை யார்தான் கட்டி அழுவார்கள்? இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சி பேரால் சென்னை நகரத்துக்கு மூன்று பிரதிநிதிகள் சென்னைச் சட்டசபையில் வீற்றிருக்கிறார்கள். அவர்களுள் இருவர் கௌன்சில் சிக்கரிட்டரிகள். மாதா மாதம் 500ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஒருவர் கௌன்சில் டிப்டி பிரசிடெண்டு. மாதம் 500ரூபாய் சம்பளம். கட்சியின் பெயரால் வாங்கும் காசுக்காகவாவது இந்த மும்மூர்த்திகளும் கட்சி முன்னேற்றத்துக்காக சிறிதளவாவது வேலை செய்ய வேண்டாமா? தற்காலமிருப்பது போல் மேலும் அவர்கள் இருந்துகொண்டிருந்திருந்தால் அடுத்த தேர்தலில் அவர்கள் முறியடிக்கப்படுவது திண்ணம், திண்ணம். வேலை செய்யவேண்டிய காலத்து சும்மா இருந்துவிட்டு கடைசி காலத்து கட்சிப்பிரசாரம் செய்வது வீண் பணச்செலவேயாகும். சென்னை நிலைமை மிக மிக மோசமாகவே இருக்கிறது. சென்னையில் முனிசிபல் வார்டுகள் தோறும் ஒவ்வொரு கிளை ஸ்தாபிக்கவும் மெம்பர்கள் சேர்க்கவும் எத்தனையோ முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

ஆனால் தீர்மானப்படி ஒன்றுமே நடைபெறவில்லை. தற்கால சட்டசபை மெம்பர்களான டாக்டர் நடேசமுதலியார் தோழர்கள் சுந்தரராவ் நாயுடு, மதனகோபால் நாயுடு ஆகிய மூவரும் வசிக்கும் சேப்பாக்கம், புதுப்பேட்டை, ஜார்ஜ் டௌண் முதலிய பகுதிகளிலாவது கிளைச்சங்கங்கள் உண்டா? தொண்டர்கள் உண்டா? கட்சிப் பிரசாரம் உண்டா? இல்லை, இல்லை. இல்லை யென்றே எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டியிருக்கிறது. கட்சியின் பேரைச் சொல்லிக்கொண்டு தேர்தல் காலத்து இவர்கள் எவ்வாறு வெளிவரப்போகிறார்களோ தெரியவில்லை. தோழர் சுந்தரம் நாயுடு ராஜிநாமாவைப் பார்த்த பிறகாவது இவர்களுக்கு உணர்ச்சி உண்டாகுமா! புத்தி வருமா?

குடி அரசு கட்டுரை 24.05.1936

You may also like...