வேலூர் ஜில்லா போர்டுக்கு ஜே! அப்துல் ஹக்கீம்கு ஜே!!

 

சௌகார் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்கள் வேலூர் ஜில்லா போர்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர் கோடீஸ்வர செல்வவான், தாராளமாய் தர்மம் செய்யும் தயாளவான், கட்சி பிரதிகட்சி சார்பில்லாமல் தனக்கு தோன்றியபடி நடந்து கொள்ளுபவர் என்றாலும் பார்ப்பனர்களுக்கு மிகவும் வேண்டியவராயும் காங்கிரசுக்கு தாராளமாக கேட்டபோதெல்லாம் பணம் உதவிக் கொண்டும் இருந்து வந்தவர். ஜஸ்டிஸ் கட்சியில் பற்றில்லாதவராகவும் இருந்தவர்.

இப்படி இருந்தும் பாம்புக்கு பால் வார்த்த பயன்போல் பார்ப்பனர்கள் இவருக்கு தொந்திரவு கொடுக்க ஆரம்பித்து அவர் வேலூர் ஜில்லா போர்டுக்கு ஒரு மெம்பராகக்கூட வருவதற்கு இல்லாமல் செய்ய பலமாய் முயற்சித்து இவருக்கு போட்டியாக ஒரு முஸ்லீமை நிறுத்தி முஸ்லீம்களுக்குள் கட்சி உண்டாக்கினார்கள்.

தோழர் அப்துல் ஹக்கீம் அவர்கள் இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படியே செய்ததுடன் “நான் ஜஸ்டிஸ் கட்சி சார்பாகவே நிற்கிறேன், என்னை யார் என்ன செய்யக்கூடும்” என்று வீரம் பேசினார். “பல கூட்டங்களில் யார் என்ன செய்தாலும் நான் பிரசிடெண்டாய் வரப்போவது நிச்சயம்” என்று பந்தயம் கட்டினார்.

காங்கிரசின் பேரால் நின்ற பலர் தங்கள் தேர்தல் செலவுகளுக்கு சாயபு அவர்களிடமே உதவி பெற்றார்கள். சிவிக்போர்ட் மெம்பர்களிலும் சிலர் வாய் பூசப்பட்டார்கள். இவ்வளவும் பெற்றுக்கொண்டு கடைசியில் சாயபை ஏமாற்றப்பார்த்தார்கள். கடைசியாக காங்கிரசுக்காரர்கள் என்பவர்களிலேயே 10 பேர்கள் சாயபு அவர்களை ஆதரிக்க ஓடிவிட்டார்கள். ஆகவே “எவ்வளவு அயோக்கியனாய் இருந்தாலும் 4 அணா கொடுத்து கையெழுத்து போட்டு விட்டால் யோக்கியர்களாகி விடுவார்கள்” என்று சொன்ன ஆச்சாரியாரின் வேதவாக்கு இன்று என்ன ஆயிற்று என்று கேட்கின்றோம்.

காங்கிரசுக்காரர்கள் எலக்ஷன்களில் செய்த இழி தொழில்களை நினைத்தால் நம் தேசத்திற்கு சுதந்திரம் வேண்டுமா, வருமா, இந்தியர் என்னும் பேரால் ஒரு சமூகம் இருக்க வேண்டுமா? என்று கூட எண்ண வேண்டிவரும்.

நிற்க, இதுவரை நடந்த ஜில்லா போர்டு தேர்தல்களில் எந்த ஜில்லா போர்டிலாவது உண்மையில் காங்கிரஸ்காரர்கள் ஜெயித்தார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

காங்கிரஸ்காரர்களின் இழி தொழில்கள், சூழ்ச்சிகள் ஆகியவைகள் வெளியாகப்பட்டதே யல்லாமல் காங்கிரஸ்காரர்கள் யார் ஜெயித்தார்கள் என்று தான் கேட்கின்றோம்.

திருநெல்வேலி தளவாய் முதலியாரும், திருச்சி தேவரும், திருப்பாப் புலியூர் ரெட்டியாரும், திருவண்ணாமலை முதலியாரும் காங்கிரசுக்கு 4 அணா கொடுத்திருந்தாலும் கதர்வேஷம் போட்டிருந்தாலும் இவர்கள் காங்கிரஸ் காரர்கள் என்று எந்த மூடனாவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.

4 அணா கொடுத்ததும், கையெழுத்துப் போடுவதும், கதர் வேஷம் போடுவதும்தான் காங்கிரஸ்காரர்களுக்கு அடையாளம் என்றால் இவர்களை யெல்லாம் காங்கிரசுக்காரர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கு ஏதாவது கொள்கைகள் இருக்கிறது, மெம்பர்கள் ஆவதற்கு ஏதாவது சட்டதிட்டங்கள் இருக்கிறது, அதன்படி நடந்தவர்கள் நடப்பவர்கள் தான் காங்கிரசுக்காரர்கள் என்றால் இப்போது தலைவர்களாய் இருப்பவர்கள் காங்கிரசின் விரோதிகள் என்றே சொல்லுவோம். காங்கிரசின் தோல்விக்கும், பரிதாப நிலைக்கும் இந்த பிரசிடெண்டுகள் காங்கிரஸ் பிரசிடெண்டுகளாய் இருக்கிறார்கள் என்று சொல்லுவது ஒரு பிரத்தியக்ஷ உதாரணம் என்று கூடச் சொல்லுவோம்.

ஏனெனில் நேற்று வரை காங்கிரசுக்கு வெளிப்படையான எதிரிகளாய் இருந்தவர்களை சரணாகதி அடைந்து அவர்கள் கால்களுக்குள் புகுந்து அவர்களைக் கூடா ஒழுக்கத்தால் அதாவது கோயில்களுக்கு ஆட்கள் வருவதற்கு தாசி, வேசி, சதுர்க் கச்சேரிகள் வைத்து ஆட்களைப் பிடிப்பது போன்ற காரியங்கள் செய்து சுவாதீனப் படுத்திக் கொண்டு அவர்களைக் காங்கிரஸ் மெம்பர்கள் என்றும், காங்கிரஸ் வெற்றி என்றும் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டால் பிறகு காங்கிரசுக்கு என்னதான் யோக்கியதை இருக்கிறது என்பது விளங்கவில்லை என்பதோடு எப்படியாவது பாமர மக்கள் ஏமாந்தால் போதும் என்பதல்லாமல் வேறு கொள்கை இல்லை என்பதும் விளங்குகிறது.

ஸ்தல ஸ்தாபனம் என்பது ஒரு “குருட்டுக் கோமுட்டிக் கடை”யாக ஆகிவிட்டது. இதற்குத் தலைமை வகிப்பவர்கள் கடன்காரர்களாயில்லாத வர்களும், பொருளாதார நெருக்கடி இல்லாதவர்களும், தாட்சண்யத்தாலும் கெஞ்சுதலாலும் ஓட்டுப் பெறுபவர்களாய் இல்லாமல் தன்னுடைய யோக்கியதையாலேயே ஓட்டுப் பெறுகிறவர்களாகவும், இதன் பேரால் பணம் சம்பாதிக்க இஷ்டமில்லாதவர்களாகவும் இருக்க முடியாமலே போய்விட்டது.

காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு, இந்த ஸ்தாபனங்கள் இத்துறைகளில் மிகமிக மோசமான நிலைமைக்கே போய் கொண்டிருந்தன என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின் பயனாய் ஒரு அளவாவது கட்டுத்திட்டம் செய்ய முடிந்தது. இப்போது அடியோடு பாழாகக்கூடிய நிலைமைக்கு போய்க் கொண்டிருப்பதை ஒரு அளவுக்காவது வேலூர் ஜில்லா போர்டைப் பொறுத்தவரையாவது தடுக்க தோழர் ஹக்கீம் சாயபு அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லுவோம்.

அவர் பணக்காரர், கடனில்லாதவர், இந்த பதவியின் பேரால் ஜீவனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர். இதிலிருந்து சம்பாதித்து கடன் கட்ட வேண்டியதில்லை. மெம்பர்கள் தயவுக்கு பல்லைக் காட்டிக்கொண்டு ஒவ்வொரு மெம்பர்களுக்கு ஒவ்வொரு கண்டிறாக்ட் கொடுத்து கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தனக்கு ஆகவேண்டி தன் வேலைக்காரன் பேருக்கோ, சொந்தக்காரன் பேருக்கோ கண்டிறாக்ட் எடுத்துப் பணம் சேர்க்க வேண்டிய அவசியமுமில்லாதவர்.

கூடியவரையில் சௌகார் சாயபு தேர்தலானது இன்று இந்த 25 ஜில்லா போர்டுகளில் இருக்கும் பிரசிடெண்டுகளை விட நாணயமானதும், யோக்கியமானதுமான கனவான் தேர்தல் என்றே சொல்லுவோம்.

அதோடு மாத்திரமல்லாமல் ஜில்லா போர்டில் இவருடைய காலாவதி ஆவதற்குள்ளாக அவருடைய சொந்தப் பணம் ஒரு லக்ஷ ரூபாயாவது செலவு செய்து நிர்வாகம் செய்வார் என்றும் சொல்லலாம்.

இப்படிப்பட்ட ஒரு நன்மையும் வெற்றியுமான காரியம் வேலூர் ஜில்லா போர்டுக்கு ஏற்பட்டதானது காங்கிரசின் தோல்வியினாலேயே என்பதைத் தெரியப்படுத்திக் கொண்டு வேலூர் ஜில்லா போர்டானது இப்படிப்பட்ட ஒரு நாணயஸ்தரைத் தலைவராக அடைந்ததற்காக அதைப் பாராட்டுகிறோம்.

ங்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படியும் ஒரு முஸ்லீம் வந்ததானது அதுவும் ஜஸ்டிஸ் கட்சி சார்பாய் வந்ததானது அக்கட்சியின் நியாய உணர்ச்சியைக் காட்டுகிறது.சி

குடி அரசு துணைத் தலையங்கம் 03.05.1936

You may also like...