ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்

தோழர்களே! ஈரோடு வர்த்தகக் குமாஸ்தாக்களின் சங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு நிரம்பவுண்டு. நான் எனது 11வது வயதில் வியாபாரத் தொழிலுக்கு வந்தவன். எனது 42வது வயதுவரை வியாபாரியாகவே இருந்தேன். ஈரோடு வர்த்தக சங்கம் 1916ம் வருஷம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு முன்பு இருந்தே அதில் தலைவனாக பல வருஷம் இருந்தேன்.

கடைசியாக நான் முனிசிபல் சேர்மென் ஆனதும், காங்கிரசில் சேர்ந்ததும்தான் எனது வியாபாரம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். நான் ஏற்றுக்கொண்ட பொதுவேலைகளில் அதிகக் கவனம் செலுத்தியதாலேயே என் சொந்த வேலைகள் கவனிக்கப்படாமல் போய் விட்டன. ஆனபோதிலும் இந்த ஊர் வர்த்தகர்களிடமும் வர்த்தகக் குமாஸ்தாக்களிடமும் எனக்கு மிகவும் பற்றுதலும் மரியாதையும் உண்டு. நான் உள்ளுரிலேயே இருக்க முடியாததாலும் போதிய சாவகாசமில்லாததாலேயும் அடிக்கடி அவர்களுடன் கலந்து கொள்ள முடியாமல் போகிறது.

என்றாலும் இன்று இந்த அதாவது ஈரோடு வர்த்தகர்களும், வர்த்தகக் குமாஸ்தாக்களும் கலந்த இந்தப் பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதை நான் ஒரு பெருமையாகவே நினைக்கிறேன். அதிலும் எனது நண்பர் தோழர் வி.வி. ஷண்முகம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்வதில் மிகவும் பெருமையாக மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்குச் செய்யும் மரியாதையை எனக்குச் செய்வதுபோலவே கருதுகிறேன்.

தோழர் வி.வி.ஷண்முகம் அவர்கள் குடும்பம் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மிக்க செல்வந்தர்கள், நல்ல படிப்புள்ளவர்கள், பொது விஷயங்களிலும் ஊக்கமுள்ளவர்கள். ஒரு சகோதரர் பி.ஏ. வாசித்துத் தூத்துக்குடி பர்மை நடத்துகிறார். மற்றொரு சகோதரர் விருதுநகர் சேர்மெனாக இருக்கிறார். மற்றும் அனேக பொதுக்காரியங்களில் உழைக்கிறார். வருஷா வருஷம் இவர்கள் வியாபாரத்தில் ஏராளமான பணம் சம்பாதித்தாலும் பொதுக்காரியங்களில் அதிக ஊக்கம். ஆகையால் அவர்களை நீங்கள் வரவேற்று மரியாதை செய்து அவருடைய உபதேசங்களை பெறமுயற்சித்தது மிகவும் புத்திசாலித்தன காரியமாகும்.

நிற்க, என்னுடைய முடிவுரையாகப் பேசுவதில் முக்கிய பாகமாக குமாஸ்தாக்களைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதென்று நினைக்கிறேன். நான் இந்த ஊரில் பிரபல வியாபாரியாயும், வியாபார சங்கத் தலைவனாகவு மிருந்த காலத்தில் என்னுடைய நெருங்கிய ஆப்தரான நண்பர்கள் குமாஸ்தாக்களாக இருந்தார்களே ஒழிய முதலாளிமார்களல்ல. எனக்காக வேண்டிய காரியங்களெல்லாம் ஈரோட்டிலுள்ள எல்லாக் குமாஸ்தாக் களிடத்திலிருந்தும் அடைந்து வந்தேன். ஆகையால் குமாஸ்தாக்களிடத்தில் எப்பொழுதுமே எனக்கு மதிப்பு அதிகம்.

குமாஸ்தாக்களெனப்படுபவர்கள் யார் என்பதை முதலில் உணர வேண்டும். அவர்கள் வருணாச்சிரம அடிமைகளல்ல. முதலாளிகளின் கூலிகளல்ல. முதலாளிகளின் உற்ற துணைவர்களாவர்கள். அடுத்த நிமிஷத்தில் முதலாளிகளாக வருபவர்கள். எப்படி எம்.ஏ.க்கு கீழ்படி பி.ஏ. இருக்கின்றதோ அதுபோல் முதலாளிக்கு முந்திய படியில் இருப்பவர்கள் குமாஸ்தாக்களேயாவார்கள்.

இப்பொழுது இந்த ஊர் முதலாளிமார்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே குமாஸ்தாக்களாக இருந்தவர்களும் குமாஸ்தாக்களாக இருந்து முதலாளியானவர்களுடைய பிள்ளைகளுமேயாவார்கள். ஆதலால் குமாஸ்தாக்கள் என்பதை யாரும் இழிவாய்க் கருதிவிட முடியாது.

குமாஸ்தாக்களுக்கு மரியாதை ஏற்பட வேண்டுமானால் குமாஸ்தாக்கள் முதலில், தங்களைத் தாங்களே மரியாதை செய்து கொள்ள வேண்டும். தங்களைப்பற்றி தாழ்மையாய் நினைத்துக் கொள்ளக்கூடாது. குமாஸ்தாக்களை கவுரவமாகவும், தாராளமாகவும் முதலாளிமார்கள் நடத்தினால் அதற்குத் தகுந்த லாபமடைவார்கள்.

இந்த நாட்டில் குமாஸ்தாக்களின் நிலைமை மிக மோசமாகத்தானிருக்கிறது. அவர்களுக்கு ஓய்வு கிடையாது. காலை 6 மணிக்கு எழுந்து 7 மணிக்குக் கடைக்குப் போகவும் இரவு 10 மணிக்கு வீடு திரும்பவுமான நிலைமையிலிருக் கிறார்கள். ஒழுங்கான லீவ் கிடையாது. வாழ்க்கையில் பின் வாழ்க்கைக்கு ஒரு பந்தோபஸ்தும் கிடையாது. அவர்களுடைய உத்தியோகத்திற்கும் கால அளவுக்கு ஒரு ஜவாப்தாரித்துவம் கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் முதலாளிமார்கள் குமாஸ்தாக்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம். அதற்குக் காரணம் “வேண்டாமென்றால் வெளியில் போக வேண்டியது தானே” என்பது தான். இந்த நிலையில் அவர்களுடைய வருமானமோ பெரும்பாலும் சாதாரண மனிதனின் ஜீவியத்திற்கே போதாமலிக்கிறது. இந்தக் காரணங்களிலேயே குமாஸ்தாக்கள் வருணாச்சிரம அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகிறார்கள். ஒரு முதலாளி இடத்தில் ஒரு குமாஸ்தா விஸ்வாசத்துடன் 30 வருஷகாலம் உழைத்துவிட்டு வீட்டுக்குப் போவதா யிருந்தால் முதலாளிக்குப் பழைய பாக்கிக்காக பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு போகவேண்டி இருப்பதும், அல்லது அதிக பத்துவளியை தள்ளிக் கொடுக்கும்படி கெஞ்சிவிட்டுப் போகவேண்டி இருப்பதும், வீட்டுக்குப்போய் பிள்ளைக்குட்டிகளின் வரும்படியை எதிர்பார்த்து நடைப் பிணங்களாய் இருக்க வேண்டியதாய்த் தான் முடிகிறது.

~subhead

சர்க்கார் உத்தியோகம்

~shend

உத்தியோகத்தை விட வர்த்தக குமாஸ்தாக்களாக இருப்பது மேல் என்று தோழர் கேசவலால் சொன்னார். உத்தியோகத்தை இகழ்ச்சியாகவும் பேசினார். நான் அதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்.

மாதம் 100 ரூபாய் சம்பளத்தில் இருக்கும் குமாஸ்தாவை 15 வருஷம் பொறுத்து முதலாளி வீட்டுக்குப் போ என்று சொன்னால் ஏன் என்று கேட்பதற்கு உரிமையில்லை. வேறு இடத்தில் வேலை கிடைக்கும் வரை சாப்பாட்டிற்கும் வழியில்லை.

30 வருஷம் உழைத்த பிறகும் வீட்டுக்குப் போகும் போது வெறுங் கையோடுதான் போக வேண்டும். ஆனால் 8 ரூபாய், 10 ரூபாய் சம்பளமுள்ள சர்க்கார் சேவகரை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் உத்தியோகத்துக்கு காரண்டியிருக்கிறது. அவன் வேலை செய்து நீங்கிய பின் பென்ஷன் இருக்கிறது. ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி ரயில்வே ஆகியவைகளில் பிராவிடண்ட் பண்டு இருக்கிறது. மேல்நாடுகளிலும் இப்படித்தான். வெள்ளைக்கார வியாபார ஸ்தலங்களிலும் இப்படித்தான். இந்தியாவில்தான் எந்தத் தொழிலுக்கும் தொழிலாளிகளுக்கும் நம்பிக்கையான வாழ்க்கைக்கு இடம் இல்லை. இது மிகவும் கொடுமையான விஷயம்.

~subhead

ஓய்வு

~shend

தவிர குமாஸ்தாக்களுக்கு ஓய்வு வேண்டாமா? அநேக குமாஸ்தாக் களுக்கு தங்கள் பிள்ளை குட்டிகளையும், பெண் ஜாதியையும் வெளிச்சத்தில் பகல் காலத்தில் பார்க்கக்கூட நேரம் கிடையாது. பிள்ளைகள் எழுந்திருக்கு முன் கடைக்கு ஓடிவரவேண்டும். பிள்ளைகள் தூங்கின பிறகு வீட்டுக்குப் போகவேண்டும். இப்படித்தான் இருக்கிறது. லீவ் நாட்களும் கிடையாது. இது மிகவும் கொடுமையான ஜீவஹிம்சையான காரியமாகும்.

மனித சமூகம் உள்ள நேரமெல்லாம் கஞ்சிக்கு ஆகவே உழைக்க வேண்டும் என்பது மிகவும் அவமானகரமும், இழிவுமான காரியமாகும். இது முதலாளிமார்களுக்கும் அரசாங்கத்திற்கும் கூட அநாகரீகமான காட்டு மிராண்டித்தனமான காரியமாகும்.

மேல் நாடுகளில் காலை 9 மணிக்குத் திறந்து 2 மணிக்கு மூடி 4 மணிக்குத் திறந்து 7 மணிக்கு மூடி விடவேண்டும். இது முனிசிபல் சட்டமாகும். இதற்கு விரோதமாய் மருந்து ஷாப்புகளும், ஓட்டல்களும் தவிர வேறு எந்தக் கடை திறந்திருந்தாலும் அக்கடைக்காரர்களை போலீசார்கள் பிராசிகூஷன் செய்து விடுவார்கள். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தவறாமல் கடைமூடி விடுவார்கள். குமாஸ்தாக்களுக்கு பிராவிடெண்ட் பண்டு, போனஸ் முதலியவை உண்டு.

இங்கு ஒன்றும் இல்லை. இந்த ஊரில் ஷராப் கடைக்காரர்களும் பல சரக்குக் கடைக்காரர்களும் மாதத்தில் ஒரு நாள் லீவு விடுகிறார்களாம். மண்டிக்கடைக்காரர்கள் இன்னமும் அப்படி செய்யாமல் இருப்பது அவர்களுக்கு அவமானகரமான காரியமாகும்.

குமாஸ்தாக்கள் சங்கம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். வர்த்தகர்கள் சங்கமும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இருவர்களும் ஒத்து ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்.

குமாஸ்தாக்கள் குறைகளை கண்டிப்பாய் வியாபாரிகள் கவனிக்க வேண்டும். குமாஸ்தாக்களால்தான் முதலாளிகளாகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் 30 வருஷம் உழைத்துவிட்டு வீட்டுக்குப் போய் பிள்ளை குட்டிகள் வரும்படியை எதிர்பார்ப்பதும், பிள்ளை இல்லாதவர்கள் பிச்சை எடுக்க வேண்டி வருவதும் முதலாளிகளுக்குத்தான் இழிவாகும். குமாஸ்தாக்கள் கஷ்டத்துக்கு ஒரு கதை சொல்லுவதுண்டு.

~subhead

ஒரு கதை

~shend

அதாவது ஒரு முதலாளி தன் மகளை ஒரு குமாஸ்தாவுக்கு கொடுத்தார். அந்த குமாஸ்தா மற்றொரு முதலாளி கடையில் குமாஸ்தாவாக இருந்தார். குமாஸ்தா காலை 6 மணிக்கு எழுந்து கடைக்குப் போவதும் பகல் சாப்பாடு தருவித்துக் கொள்வதும் இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வருவதும் வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு தூங்கப்போவதும் பெண்ஜாதியிடம் கொஞ்சவோ குலாவவோ கூட நேரமும் உற்சாகமும் இல்லாமல் இருப்பதுமாயிருந்தான். இதைப்பார்த்த முதலாளி மகள் இதை எப்படி தான் தகப்பனுக்கு தெரிவிப்பது என்று சமயம் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஒருநாள் அவர்களது வீட்டுவாசலில் கட்டி இருந்த இரண்டு கன்றுக்குட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று கால்களைத் தூக்கிப் போட்டு குதித்து முட்டி விளையாடிக் கொண்டிருந்தன. இதைப்பார்த்த அந்த முதலாளி மகள் தகப்பனைக் கூப்பிட்டு அப்பா அப்பா இந்த கன்றுகுட்டிகளுக்கு ஒரு குமாஸ்தா வேலை செய்து வைத்துவிடு, அதன் திமிர் அடங்கிவிடும் என்றாள். இதைக்கேட்ட தகப்பன் யோசிக்கத் தொடங்கி உண்மையை அறிந்து பிறகு தன் குமாஸ்தாக்களையும் ஒழுங்காய் நடத்தி, தன் மருமகனையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான் என்று ஒரு கதை உண்டு. அதுபோல் நம் குமாஸ்தாக்கள் வாழ்க்கை இருந்து வருகிறதை யாரும் மறுக்க முடியாது.

வேலை செய்யும் நேரம் திட்டப்படுத்த வேண்டும். தோட்டிகளுக்குக் கூட வேலை நேர திட்டம் இருக்கிறது.

காலை 8 மணி முதல் மாலை 7 மணிக்குள் வியாபார வேலை தீர்ந்துவிட வேண்டும். 7 மணி அடித்தவுடன் கிளப்புகளுக்கோ, விளையாட்டு மைதானங் களுக்கோ, பார்க்குக்கோ போய்விட வேண்டும். தன் பெண்டு பிள்ளைகளுடன் போய் உலாவவும் விளையாடவும் வசதி செய்து கொள்ள வேண்டும். இது அவசியம் மனித சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.

~subhead

நாணயம்

~shend

குமாஸ்தாக்கள் நாணயமாய் இருக்கவேண்டும் என்று தோழர் வி.வி.ஷண்முகம் சொன்னார். நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் முதலாளிமார்களும் நாணயமாய் இருக்க வேண்டும். லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும். குமாஸ்தாவின் நல்வாழ்க்கையின் பொறுப்பை முதலாளி ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வழக்கம் முதலாளிகளிடம் இல்லை.

குமாஸ்தா திருடினால்தான் சீக்கிரம் முன்னுக்கு வரமுடிகிறது, பணம் சேர்க்க முடிகிறது. அல்லது முதலாளி டிஸ்மிஸ் செய்த காரணத்தால் வேறு சொந்தத்தில் கடை வைத்து சீக்கிரம் முதலாளியாக முடிகிறது.

அப்படி முதலாளி ஆனவர்கள் இந்த ஊரிலேயே இருக்கிறார்கள். அப்படி இருக்க வெறும் நாணயம் பேசி என்ன பயன்?

முதலாளிகள் நாணயம் எனக்குத்தெரியும். நானும் 30 வருஷ காலம் முதலாளியாய் இருந்தவன். என் தகப்பனார் 50 வருஷ காலம் முதலாளியாய் இருந்தவர். நாங்கள் திருடினது குமாஸ்தாக்கள் பார்த்துக்கொண்டும் உதவி செய்து கொண்டும் தான் இருப்பார்கள். 10 மனு சரக்கை 8 மனு என்று கூட சொல்லியிருக்கிறோம். மூட்டைக் கணக்கில் கூட திருடி இருக்கிறோம். ஒரு வண்டிக்காரன் 10 மூட்டை கொண்டு வந்தால் 8 மூட்டையை அவிழ்த்து கொட்டிவிட்டு 2 மூட்டையை உள்ளே கொண்டுபோய் மறைத்துக்கொண்டு இரண்டு காலிச் சாக்குகளை கொண்டு வந்து போட்டு 10 மூட்டை கொட்டினதாக கணக்குக்காட்டி 10 பைகளை ஒப்புவித்து விடுவோம். இப்படியே எல்லா வியாபாரிகளும் செய்வார்கள். இதனாலேயே கிராம விவசாய குடியானவர்கள் எல்லாம் பாப்பராகி கூலிகளானார்கள். இந்த முதலாளிமார்களிடம் பழகும் குமாஸ்தா எப்படி நாணயமாய் இருப்பான். இந்த திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொழில் முறையாய் விடுகிறது. அதாவது தாசி கற்புப் போலவும், வக்கீல் ஒழுக்கம் போலவும் வியாபாரி நாணயமும் கேள்விக்கு இடமில்லாததாகி விடுகிறது.

அரசியலில் எப்படி அதிக அயோக்கியத்தனமுள்ளவர்களே தலைவர்களாகி விடுகிறார்களோ அதுபோல் அதிகம் திருடத் துணிந்த முதலாளியே பெரிய கவுரவ கெட்டிக்கார முதலாளியாகிறான்.

குமாஸ்தா திருடிவிட்டால் கிரிமினல் குற்றவாளி ஆகிவிடுகிறான்.

ஆகையால் குமாஸ்தாக்கள் நாணயமாய் இருக்க வேண்டும் என்பதில் அருத்தமே இல்லை. குமாஸ்தாவை முதலாளி நன்மைக்காக முதலாளியே திருடச் சொல்லுகிறான். அத்திருட்டில ஒரு நேர்மையான பங்கு கொடுப்பதாய் இருந்தால் குமாஸ்தாவை திருடாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ள உரிமை உண்டு.

திருட்டு இன்றைய தனிஉடமை உலகில் உலக சுபாவம். கையில் வலுத்தவனுக்குத்தான் நாணயம் ஒழுக்கம் என்று சொல்லிக்கொள்ள முடியும். இளைத்தவன் குற்றவாளியாகத் தான் இருக்க முடிகிறது.

முதலாளியும் குமாஸ்தாவும் வாழ்க்கைத் துணைவர்கள் போல வாழ வேண்டும். இருவருக்கும் ஒரே நியாயமிருக்க வேண்டும். முதலுக்கு ஆக அதிகப்பங்கு எடுத்துக் கொள்வதை நான் ஆக்ஷேபிக்கவில்லை.

நான் சொல்லுவது புதுமையாகத் தோன்றுமாதலால், அதிதீவிர முறையாகத் தோன்றுமாதலால் குமாஸ்தாமார்கள் அவசரப்படாமல் முதலாளிகளுக்கு இணங்கி படிப்படியாக முன்னேறப் பார்க்க வேண்டும். முதலாளிகளோடு சச்சரவு கூடாது.

நயத்திலும் பிறகு பயத்திலும் காரியம் சாதிக்கப் பார்க்க வேண்டும். முதலாளிகளும் ஒருபடி இறங்கி வந்து குமாஸ்தாக்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னால் ஆனதை எப்போதும் குமாஸ்தாக்களுக்கு செய்ய காத்திருக்கிறேன்.

குறிப்பு: ஈரோட்டில் 22.05.1936 ஆம் நாள் நடைபெற்ற ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கக் கூட்டத்தில் ஆற்றிய தலைமையுரை.

குடி அரசு சொற்பொழிவு 31.05.1936

You may also like...