சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு

காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் பலர் காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களின் நடத்தையும், நாணயமும், எண்ணமும் பிடிக்காமல் அதாவது காங்கிரசை பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நலத்துக்கும் தங்கள் சொந்த பார்ப்பன சமூக நலத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அக்காரிய சித்திக்கு ஆகவே மற்ற காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் பெயர்களையும், பணங்களையும், தொண்டர்களையும், உழைப்புகளையும், ஆயுதமாக உபயோகித்துக் கொள்ளுகிறார்கள் என்றும், இந்த 20 வருஷ காலமாக எங்கும் கூப்பாடு எழுந்த வண்ணமாக இருந்து வருகிறது என்பது யாரும் அறியாததல்ல.

சுமார் 10, 12 வருஷங்களுக்கு முன்பாகவே தோழர் ஈ.வெ.ராமசாமி இதை உணர்ந்து அடியோடு காங்கிரசையும் பார்ப்பனரையும் விட்டு விலகி வந்து தனித்த முறையில் தன்னாலான தொண்டை தான் சரி என்று பட்ட காரியத்திற்கு பயன்படுத்தி வருகிறார் என்பதும் யாரும் அறியாததல்ல.

இப்பொழுது சமீபகாலத்தில் அதுவும் காங்கிரசுக்கு எங்கும் வெற்றி என்று சொல்லப்படும் காலத்திலும் தோழர்கள் கல்யாணசுந்தர முதலியார், வி.ஓ.சிதம்பரம் பிள்ளை, ராய சொக்கலிங்கம், தண்டபாணிபிள்ளை, வேதாரண்யம் காங்கிரஸ் காரியதரிசி, தியாகராஜஞானியார், சாமி ஷண்முகாநந்தம் முதலிய பல காங்கிரஸ் பிரமுகர்களும் காங்கிரசுக்காவே தங்களை தியாகம் செய்துகொண்ட பல தொண்டர்களும் அதுபோலவே காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் நடத்தை முதலியவை பிடிக்காமல் கண்டித்தும், எதிர்த்தும், பேசியும், எழுதியும் வருவதோடு காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்களை தனிப்பட்ட முறையில் கண்டித்துப் பேசி காங்கிரஸ் ஊழலையும், பார்ப்பனர் சூழ்ச்சிகளையும் பல வழிகளில் வெளியிட்டும் வந்திருக்கிறார்கள்.

இதன் பயனாகவே தோழர் கல்யாணசுந்திர முதலியார் காங்கிரசை பரிசுத்தம் செய்வதற்காக காங்கிரஸ் பற்றுக் கொண்ட பார்ப்பனரல்லாதாரைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் காஞ்சீபுரத்தில் கூட்டுவதாக விளம்பரம் செய்ததோடு மாத்திரமல்லாமல் காங்கிரசினிடம் அபிப்பிராய பேதம் கொண்ட பார்ப்பனரல்லாதார்களும் அதில் ஒத்துழைக்க வேண்டுமென்றும் தனித்தனியாகப் பல பார்ப்பனரல்லாத பிரமுகர்களுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டும் இருந்தார்.

இதை நம்பியே தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அதே சமயத்தில் ஒரு சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டினால் அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்கள் எல்லோரும் எவ்வளவு தூரம் ஒன்று கூடி உழைக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்து அந்த அளவுக்கு ஒற்றுமையாய் வேலை செய்வதின் பயனாய் தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் இருந்துவரும் பார்ப்பன ஆதிக்கத்தையும் சூழ்ச்சியையும் ஒருவாறு குலைக்கப் பார்க்கலாம் என்கின்ற ஆசையின் மீதே ஒரு சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட்டும்படி காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் மகாநாடு கூட்ட முயற்சித்த பிரமுகர்களையும் குறிப்பாக தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியாரையும் கேட்டுக் கொண்டார். அதன்பயன் இப்போது காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட கூட்டப்படுவதில்லை என்கின்ற முடிவு ஏற்பட்டு விட்டதாகத் தோழர் திரு.வி.க. அவர்கள் மெயில் பத்திரிக்கைக்கு அனுப்பிய சேதியில் இருந்து தெரியவருகிறது.

அது மாத்திரமல்லாமல் இந்த காங்கிரஸ் பார்ப்பனரல்லாத பிரமுகர்களை நம்பி முன்னுக்கு வந்த பலருக்கும் அப்பிரமுகர்கள் மீது சிறப்பாகத் தோழர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மீது மனக்கசப்பும் அவநம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

அப்பிரமுகர்களில் தோழர் முதலியாரவர்களின் சொந்த நாணயத்தை பாதிக்கும்படியாகக்கூட கண்டித்தெழுதப்பட்ட பல கடிதங்களும் பத்திரிக்கையில் பிரசுரிக்கும்படி சேதிகளும் நமக்கு கிடைத்திருக்கின்றன. அவற்றை வெளியிட நாம் விரும்பவில்லை.

ஆனாலும் இம்மாதிரியாக தோழர் முதலியார் அவர்களால் அடிக்கடி சில அபிப்பிராயங்கள் வெளியிடப்படுவதும் அவற்றை நம்பி பலர் கலந்து கொள்வதும் பிறகு யாதொரு யோக்கியமான காரணமும் இல்லாமல் முதலியார் அவர்கள் பின் வாங்கிக் கொள்வதும் இவர்களை நம்பின பேர்களை தெருவில் தியங்க விட்டுவிடுவதுமான காரியம் ஏன் செய்யப்பட வேண்டும்? என்பது நமக்கு விளங்கவில்லை.

காங்கிரஸ் அனுபவமும் அங்குள்ள பார்ப்பனர்கள் யோக்கியதையும், அவர்களது சுயநல தந்திரமும் சூட்சியும், அடிக்கடி நம்மை ஏமாற்றி வருவதும் நாம் அறியாததல்ல. தோழர்கள் கல்யாணசுந்திர முதலியார் போன்ற காங்கிரஸ் பார்ப்பனரல்லாத பிரமுகர்களும் அறியாததல்ல.

இன்னும் விளக்கமாய்ச் சொல்லவேண்டுமானால் இவற்றை தோழர் ஈ.வெ. ராமசாமி அறிவதற்கு முன்னதாகவே முதலியார் போன்ற மற்ற பிரமுகர்கள் அறிந்ததேயாகும் என்றும் உறுதியாய் கூறலாம். என்றாலும் தோழர் ராமசாமி அவர்கள் உணர்ந்த உடன் அவர்களை விட்டு வெளியேறியதால் ஏதோ ஒரு சிறு அளவாவது தன் காலால் நின்று கொண்டு தன்னால் கூடியதை தன்னிஷ்டப்படி செய்ய முடிந்தது. இதனால் தனக்கு ஏற்படும் நல்ல பெயரையோ கெட்ட பெயரையோ லட்சியம் செய்யாமலும் இருக்க முடிந்தது.

ஆனால் மற்றவர்கள் என்ன காரணத்தாலோ அந்த தைரியம் கொள்ளாததால் பார்ப்பனர்களின் கூட்டுறவில் இருந்து விலகி இருப்பதாய் காட்டிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்து வரவேண்டியதாய் ஏற்பட்டுவிட்டது.

இதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவருக்கு மற்றவரிடம் நம்பிக்கை இன்மையும், துவேஷமும், போட்டியும், பொறாமைக் குணமும் தான் முக்கியமானது என்று சொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய மற்றப்படி பொதுநல சேவையோ மக்கள் நலன் பற்றிய கொள்கைகளோ வேறு ஏதோ காரணமாக இருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியவில்லை.

பார்ப்பன பிரமுகர்களுக்குள்ளும் ஒருவருக்கொருவர் போட்டியும், பொறாமையும், துவேஷமும், வெறுப்பும் இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு உத்தமமான குணம் இருந்து வருகிறது. அது என்னவென்றால் கொள்கையில் அபிப்பிராய பேதமே இருப்பதில்லை. இருந்தாலும் அது ஒற்றுமைக்கு இடையூறாய் இருப்பதுமில்லை. அதிலும் தங்கள் சமூக நலம் என்பதே முக்கியமான முதன்மையான லட்சியமாகவும் அதற்கு ஆக எத்தகைய தியாகமும் செய்ய தகுந்த உறுதியுமான உத்தம குணமும் இருந்து வருகிறது. நம்மிலோ பல பிரமுகர்கள் ஒருவேளை கூழுக்குப் போடும் உப்புக்கு நமது சமூக நலனை விட்டுக்கொடுக்கும் தன்மையும் எதை விற்றானாலும் நம் சுயநலமே பெரிதெனக்கருதும் சாமானிய குணமும் இருந்து வருகிறது.

இதற்கு உதாரணம் வேண்டுமானால் காங்கிரஸ் பார்ப்பனரல்லா தார்களை பார்ப்பனர்கள் எப்படி மதிக்கிறார்கள் அந்த மதிப்பை பார்ப்பன ரல்லாதார்கள் எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே போதுமானது.

இது நிற்க மற்றொரு காரியத்தையும் உதாரணமாக கூறுவோம். தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் இந்திய சட்டசபை தேர்தலுக்கு ஒரு அபேக்ஷகராக நின்ற காலத்தில் 4 அணா கொடுத்து காங்கிரஸ் பாரத்தில் ஒரு கையெழுத்து போட்டிருந்தால் அவருக்கு ஒரு காசு செலவு கூட இல்லாமல் அந்த பதவி கிடைத்து இருக்கும். தோழர் ராமசாமி கூட பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்து கொள்வதில் குற்றமில்லை என்றும் காங்கிரஸ் அபிப்பிராயத்துக்கும், தோழர் வரதராஜுலு அபிப்பிராயத்துக்கும் அதிக வித்தியாசமில்லை என்றும் கூட ஜாடை காட்டினார்.

ஆனால் தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் அதற்கு சம்மதிக்காதவராய் கண்டிப்பாய் வெளியில் இருந்தே அந்த பதவியை அடையலாம் என்றும் சொல்லி அதற்கு ஆக தானே கடைசிவரை கூட இருந்து உழைத்து வெற்றி தேடித்தர உதவுவதாயும் வாக்களித்தார். மற்றொரு பிரமுகரும் அப்படியே சொன்னார்.

இதைப் பலரும் நம்பினார்கள். நாயுடுவும் நம்பினார். ஆனால் கடைசியில் நடந்தது என்ன? அவரை நடு ஆற்றில் விட்டு விட்டு எல்லோரும் ஓடிப்போனார்கள். இதை அறிந்தும், தோழர் ராமசாமிக்கு தான் நிற்பதானால் காங்கிரசில் சேராவிட்டாலும் அந்த ஸ்தானம் போட்டி இல்லாமல் பெறலாம் என்கின்ற உறுதி எதிர்க்கட்சி தலைவரால் தோழர் ராமசாமிக்கு ஜாடை காட்டப்பட்டும் இவைகளை லக்ஷியம் செய்யாமல் கடைசியாக தோல்வியில் தனக்கும் பங்கு இருக்கட்டும் என்பதற்காகவே அவர் மாத்திரம் தோழர் வரதராஜுலுவுடன் கடைசிவரை இருந்து வந்தார்.

இப்படி இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம். ஆனால் பார்ப்பன சமூகத்தில் மாத்திரம் இம்மாதிரியான சம்பவங்கள் தங்களுக்குள் ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொள்ளுவது என்பது எதிர்பார்க்க முடியாததாகும்.

இப்போதும் தோழர் திரு.வி.க. அவர்கள் காஞ்சீபுரத்தில் 38வது தமிழர் மகாநாடு கூட்டுவது என்கின்ற பிரச்சினைக்கு முக்கிய காரண கர்த்தராய் இல்லாத பக்ஷம் அவ்வுத்தேசம் அந்த முறையில் வெளிவந் திருக்காதென்றே கருதலாம்.

அதை தோழர் ஈ.வெ.ராவும் நம்பி ஒரு வேண்டுகோளும் விடுத்திருக்கமாட்டார்.

கடைசியில் பொஸ்ஸென்று போய்விட்டது. அதற்குக் காரணம் இன்னது என்று உள் எண்ணம் கற்பித்து முதலியார் அவர்களைத் தாக்கி பல கடிதங்கள் வந்திருக்கின்றன. அவை எப்படியோ போகட்டும்.

இம்மாதிரி அடிக்கடி செய்வதால் பார்ப்பனரல்லாதார் பொதுநலத்துக்குக் கேடு எவ்வளவு ஏற்படக்கூடுமோ அதில் ஒரு அளவுக்காவது தோழர் முதலியார் அவர்களது நற்பெயரையும் பாதிக்காதா? என்றே பயப்படுகின்றோம்.

இது ஒருபுறமிருக்க தோழர் திரு.வி.க. அவர்களுக்கு பார்ப்பனர்கள் இடம் இருக்கும் துவேஷத்துக்கும் அவநம்பிக்கைக்கும் எல்லையே கிடையாது என்பதை நாம் தைரியமாய் சொல்லக்கூடும். ஆனால் அவர்களிடம் அவருக்கு பயமும் தாட்சண்யமும் அதுபோலவே எல்லையற்றதாகும்.

இந்தக் காரணத்தாலேயே துவேஷம் அதிகரித்திருக்கும் போது பார்ப்பனரை எதிர்க்க துணிவதும், நம் போன்றவர்களை உதவிக்கு அழைப்பதும் பயமும், தாட்சண்யமும் அதிகரிக்கும்போது ஒருவரையும் கலக்காமல் பின் வாங்கிக்கொள்வதுமாய் தொடர்ந்து நடந்து வருகிறது.

போனது போகட்டும், இப்பொழுதும் சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கூட்டப்படுமானால் அது எல்லோருக்கும் பயன்தரும் என்பதே நமதபிப்பிராயம்.

காங்கிரசை விட்டு விலகி வாழ முடியாத பார்ப்பனரல்லாதாருக்குக் கூட தங்களை சிறிதாவது சுயமரியாதையோடு வாழும்படி செய்வதற்கும் பார்ப்பனரால் சுயமரியாதையுடன் நடத்தப்படுவதற்கும் இக்கூட்டம் பயன்படும் என்றே சொல்லுவோம். அன்றியும் அக்கூட்டத்தின் பயனாய் காங்கிரசு பார்ப்பனர்களுக்கும் காங்கிரசிலில்லாத உண்மையான பார்ப்பனரல்லாதார் நலம் கருது வோருக்கும் ஏதாவது ஒரு ராஜி ஏற்பட மார்க்கமேற்பட்டாலும் ஏற்படலாம்.

பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வேற்றுமையாலும், தேசீயம் வகுப்புவாதம் என்னும் வேற்றுமையாலும் நாட்டில் இருதரப்பிலும் அயோக்கியர்களுக்கும் சமய சஞ்சீவிகளுக்கும் நாணயமற்றவர்களுக்கும் தான் யோகத்தின் மேல் யோகம் அடிப்பதைத் தவிர வேறு என்ன பொது நன்மை ஏற்பட்டு வருகிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

ஆகையால் பார்ப்பனத் தலைவர்களும் இதை யோசித்துப் பார்த்தார்களானால் அவர்களிலும் யோக்கியமாய் இருப்பவர்கள் ஏதாவது ஒரு அளவுக்கு இரங்கி வந்து நல்ல முடிவுக்கு வரக்கூடும்.

இந்தக் காரணங்களால் தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மறுபடியும் புனராலோசனை செய்து பார்ப்பனரல்லாதார் காங்கிரஸ் கூட்டம் அதாவது 38 வது தமிழர் கூட்டம் கூட்டாவிட்டாலும் சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் கூட்டம் கூட்டவாவது முன்வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

தோழர்கள் வரதராஜுலு நாயுடு, வி.ஓ.சிதம்பரம்பிள்ளை, மாசிலாமணி முதலியார் முதலியவர்கள் தங்கள் சம்மதத்தை மனப்பூர்வமாய் தெரிவித்து இருக்கிறார்கள். ஆதலால் முதலியாரவர்கள் பயப்படத் தேவையில்லை என்றே கருதுகிறோம்.

பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு ஆக என்று உழைக்கும் உண்மையான பல தோழர்கள் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் என்பவர்களிடம் எவ்வளவோ இழிவும் சுயமரியாதைக் குறைவுமான பல சங்கடங்களை அனுபவித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அதையும் நாம் மறைக்கவில்லை. பதவியும் லாபமும் பெற்றவர்கள் எல்லாம் பெற்றுக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் “ஐஸ்டிஸ் கட்சி இன்னமுமா இருக்கிறது செத்த பாம்பை எடுத்து எத்தனை நாளைக்கு ஆட்ட முடியும்” என்றெல்லாம் கேட்பதைக்கூட சகித்துக் கொண்டு மறுபடியும் அப்படிப்பட்டவர்கள் பதவியும், பட்டமும், செல்வமும் பெறுவதற்கு ஆகவே உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருக்கிறார்கள். இம்மகாநாடு கூட்டப்படுவதால் அவ்வித இழிவிலும் நிர்ப்பந்தத்திலும் இருந்தாவது விலக நம் போன்றவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படாதா என்பதற்காகவே சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட்ட ஆசைப்படுகிறோமே ஒழிய மற்றபடி அதனால் சுயநலமோ, சுயநல பெரிய லாபம் பெறவோ, பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர்களின் மதிப்பைப் பெறவோ அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்தப்படி எழுதுவதினாலேயே பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏதோ நெருக்கடியில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம்.

தோழர் ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணம் வாரத்துக்கு ஒரு தரம் தவறாமல் இருந்து வருவது யாவரும் அறிந்திருக்கலாம். சென்ற இடங்களில் எல்லாம் இருக்கும் உற்சாகமும், ஊக்கமும் ஆதரவும், ஆடம்பரங்களும், கூட்டங்களும், மற்ற காரியங்களும் பார்ப்பனர்களும் பத்திரிக்கைகளும் எவ்வளவு தான் மறைத்துத் திருத்திக்கூறினாலும் அவர்களை அறியாமலே அவர்களது பத்திரிகையில் வரும் சேதிகளாலும் மற்ற பத்திரிக்கைகளில் வரும் சேதிகளிலும் பார்த்து இருக்கலாம்.

ஆதலால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கோ அக்கொள்கைகளுக்கோ ஒரு சிறு ஆதரவும் குறையவில்லை என்பதோடு ஊக்கமும் வேகமும் வளர்ந்து கொண்டுதான் போகின்றது என்றும் காங்கிரசின் யோக்கியதை வெளுத்து வருகிறது என்றும் சொல்லுவோம். தலைவர்களின் பயன் அடைந்தவர்களின் பதவியும், பட்டமும், செல்வமும் பெற்றவர்களின் துரோகமும், சுயநல சூழ்ச்சியும் மக்களை ஒன்று சேரவிடாமல் செய்யும் காரியங்களும், பிரசாரமின்மையும், தினசரி பத்திரிக்கை இன்மையும், எல்லாம் சேர்ந்து இன்று உள்ள உணர்ச்சியும், ஊக்கமும் பயன் தருவதற்கு இல்லாமல் செய்து வருகிறது என்பதைத் தவிர வேறில்லை.

ஆகவே காங்கிரஸ் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் யோசித்து சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாட்டை கூட்ட யோசிப்பார்கள் என்று ஆசைப்படுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 17.05.1936

 

You may also like...