தற்கால அரசியல்

தலைவரவர்களே! தோழர்களே!!

இன்று தற்கால அரசியல் என்பது பற்றி நான் பேசுவேன் என்று நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தற்கால அரசியல் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும். அரசியல் என்கின்ற வார்த்தை புதிய வார்த்தை. நம் நாட்டில் முன் காலத்தில் அரசியல் என்கின்ற பிரஸ்தாபம் இருந்ததாக யாரும் சொல்ல முடியாது. அரசியல் என்று பேசுவதே தோஷமான காரியமாகும். ஏனென்றால் இந்துமத வேத ஆதாரப்படி அரசர்கள் கடவுள்களாவார்கள். அதாவது அரசன் விஷ்ணு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவோ புராணங்களிலும் அரசர்களின் அநீதிக்காகப் பிரஜைகள் அரசியல் என்று பேர் வைத்து இயக்கம் உண்டாக்கி கிளர்ச்சி செய்ததாக ஒரு வார்த்தையும் காண முடியாது.

ஆதலால் அரசியல் என்கின்ற வார்த்தை மேல் நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்ததாகும். மேல்நாட்டுக்கார மேதாவி ஒருவரே அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு கடைசி மார்க்கம் என்று சொல்லி இருக்கிறார்.

அரசியல் என்கின்ற வார்த்தை எப்படி மேல்நாட்டில் இருந்து இறக்குமதி ஆயிற்றோ அதுபோலவே அரசியல் காரியங்களும் மேல் நாட்டிலிருந்தே இறக்குமதியாகி அந்த காரியங்களே நடந்து வருகின்றன. மற்ற நாட்டு அரசியல் லட்சியம் சுதந்திரம் என்று சொல்லப்பட்டால் நமது நாட்டு அரசியல் லட்சியம் சுயராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. இதை அயோக்கியத்தனத்துக்கு மேல் அயோக்கியத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் என்பதே அயோக்கியத்தனம் என்றால் சுயராஜ்யம் என்பது அதைவிட மோசமானது என்றுதான் சொல்லவேண்டும்.

சுயராஜ்யம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. மோக்ஷம் என்ற வார்த்தை எப்படி அர்த்தமில்லாமல் வெறும் சூழ்ச்சியும், தந்திரமும் நிறைந்த வார்த்தையோ அதுபோல்தான் சுயராஜ்யம் என்கின்ற வார்த்தையும் இருந்து வருகிறது.

மோக்ஷம் என்கின்ற வார்த்தைக்கு சோம்பேறிகளும் அயோக்கியர்களும் ஆகிய புரோகிதர்கள் என்ன அருத்தம் சொல்லுகிறார்கள்? சுலபத்தில் மக்கள் ஆசைப்படும்படியாகவும், சுலபத்தில் ஏமாறும்படியாகவும் பார்த்து அதற்கு அர்த்தம் சொல்லுகிறார்கள். அதாவது மோக்ஷத்தில் எல்லாம் தங்கமயமாய் இருக்கும் என்றும் ஊர்வசி முதலிய நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும், காமதேனுவால் நல்ல ஆகாரம் கிடைக்குமென்றும், கற்பக விருக்ஷத்தால் மற்றும் வேண்டிய போக போக்கிய பொருள்களும் கிடைக்குமென்றும் சொல்லி மக்களுக்கு ஆசையூட்டுகிறார்கள். இந்த ஆசை மனிதனுக்கு ஏற்பட்ட பின்பு புரோகிதர்கள் வெகு சுலபத்தில் அதற்கு மார்க்கம் சொல்லிவிடுகிறார்கள். அதாவது “எனக்கு 4 அணா தக்ஷணை கொடுத்து என் காலில் விழுந்து கால் கழுவின தண்ணீரை சாப்பிட்டால் மோக்ஷத்திற்கு டிக்கட்டு கிடைக்கும்” என்று சொல்லுகிறார்கள். பேராசை பிடித்த முட்டாள்கள் அதுபோலவே நடந்து கொள்வதன் மூலம் புரோகிதர்களின் சோம்பேறிப் பிழைப்பையும் அயோக்கியத்தனத்தையும் ஆதரிக்கிறார்கள்.

அதுபோலவே அரசியல் என்னும் பேரால் வயிறு வளர்க்கும் சோம்பேறி அயோக்கிய அரசியல் புரோகிதர்கள் மக்கள் சுலபத்தில் ஏமாறும்படி சுயராஜ்யத்துக்கு அருத்தம் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அதாவது சுயராஜ்யம் ராமராஜ்யம் என்றும், அரிசிபருப்பு சும்மா கிடைக்குமென்றும், பூமிகளுக்கு வரி இருக்காதென்றும், வானத்தில் இருந்து மழை வேண்டும் போதெல்லாம் பெய்யும் என்றும், ரயிலுக்கு சார்ஜ் இருக்கா தென்றும், தபால் தந்தி சும்மா அனுப்பலாம் என்றும் சொல்லுகிறார்கள். இதைக் கேட்கும் பேராசை பிடித்த மூட ஜனங்களும் மடையர்களும் நம்பிவிடுகிறார்கள். இந்த நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு விட்டதை தெரிந்த அரசியல் புரோகிதர்கள் சுலபத்தில் சுயராஜ்யத்துக்கு மார்க்கம் சொல்லி விடுகிறார்கள்.

அதாவது காங்கிரசுக்கு கால் ரூபாய் கொடுத்து கையெழுத்து போட்டுவிட்டால் போதும் என்றும், அதுவும் செய்ய சக்தி அற்றவர்கள் எங்களுக்கு ஓட்டு கொடுத்தால் போதும் என்றும், அதுவே சுயராஜ்யத்திற்கு போகும் டிக்கட் ஆகிவிடும் என்றும் சொல்லி விடுகிறார்கள்.

இதனால்தான் அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்களின் கடசி வயிற்று பிழைப்பு மார்க்கம் என்பது உறுதியாகிறது.

உதாரணமாக இந்தியாவில் அரசியலின் பேரால் காங்கிரசு என்கின்ற ஸ்தாபனம் ஏற்பட்டு 50 வருஷங்கள் ஆயிற்று.

அதனால் ஏற்பட்ட நன்மை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். காங்கிரசின் பேரால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள், காங்கிரஸ் ஏற்பட்ட பின்பு மக்கள் உழைப்பில் இருந்து அதிக பாகம் வரியாக கொடுக்கப்பட வேண்டியதாயிற்று.

அதன்பயனாய் சோம்பேறிகள் அயோக்கியர்கள், பிச்சையெடுத்து வயிறு வளர்த்த பார்ப்பனர்கள் ஆகியவர்கள் பெரும் பெரும் பதவியும் ஆயிரம் பத்தாயிரம் ரூபாய் மாத வருமானங்களும் அடைந்தார்கள் அடைகிறார்கள் இன்னும் அடைய முயற்சிக்கிறார்கள் என்பதல்லாமல் 50 வருஷ காங்கிரசால் ஏற்பட்ட பலன் இன்னது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்.

இதுதான் அரசியலின் பலன் என்றால் அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்கள் வயிற்றுப் பிழைப்பு என்பதில் என்ன தப்பு என்று கேட்கிறேன்.

நிற்க, சுயராஜ்யம் என்பதற்கு மற்றொரு வியாக்கியானம் சொல்லப் படுகிறது. அதாவது இந்தியா அன்னியனால் ஆளப்படுவதால் அது பர ராஜ்யமாய் இருக்கிறது என்று அன்னியராகிய வெள்ளைக்காரனை விரட்டி அடித்துவிட்டால் அதுவே சுயராஜ்யமாகிவிடும் என்றும் சொல்லுகிறார்கள்.

அப்படியானால் இந்தியா அன்னிய ராஜ்யமாய் இல்லாமல் இந்திய மக்களாலேயே ஆளப்பட்ட காலமாகிய ராமன், அரிச்சந்திரன் முதலியவர்களும் சேர, சோழ, பாண்டியன், நாயக்கன் ஆகியவர்களும் ஆண்ட காலத்தில் இல்லாத என்ன அக்கிரமும் கொடுமையும் கஷ்டமும் இழிவும் இந்த வெள்ளைக்கார ஆட்சியால் அதிகமாகி இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

ராமன் காலத்து ஏழைகளும் கூலிகளும், அரிச்சந்திரன் காலத்து பறையனும், பார்ப்பன அயோக்கியத்தனமும், சேர, சோழ, பாண்டியன், காலத்து மனுநீதி ஆட்சியும் தான் இன்று இருக்கிறதே தவிர அதைவிட கொடுமையாக இன்று என்ன இருக்கிறது என்று உங்களைக் கேட்கிறேன்.

இந்திய சுயராஜ்யத்தில் வேதத்தின் விதிப்படி, மனுதர்ம சாஸ்திர நியதிப்படி அவனவன் அவனவன் வருணத்துக்கும் ஜாதிக்கும் தகுந்த தொழிலைச் செய்தாக வேண்டும். ஆனால் வெள்ளைக்கார பர ராஜ்யத்தில் அந்த நிபந்தனை இல்லை. குறைந்து வருகிறது. இதுதான் சுயராஜ்யத்துக்கும், பர ராஜ்யத்துக்கும் வித்தியாசம் என்பதல்லாமல் மற்றபடி வேறு என்ன கெடுதி சொல்லமுடியும்.

பழங்கால சுயராஜ்யத்துக்கு ஒரு பழமொழி உண்டு. “நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போகாது” என்பார்கள். இந்தப் பழமொழி பர ராஜ்யத்தில் பறந்தோடிவிட்டது. வெள்ளைக்கார ராஜ்யத்தில் தோழர் எம்.சி. ராஜா அவர்களும், என். சிவராஜு அவர்களும் இன்று வாத்தியார்களாய் மந்திரி சட்டசபை அங்கத்தினர்களாய் இருக்கிறார்கள். மற்றும் அனேக “தோட்டிகள்” சாமியார்களாகி விபூதி உத்திராக்ஷ தாரணர்களாகி விட்டார்கள்.

நாளைக்கு மந்திரிகளாய்க்கூட வரப்போகிறார்கள்.

இந்தக் காரியம் சுயராஜ்ய காலத்தில் இருந்ததா அல்லது சுயராஜ்ய காலத்தில் உண்டாகுமா என்று கேட்கிறேன்.

சுயராஜ்ய திட்டமாகிய கராச்சி பிரஜா உரிமை திட்டத்தில் “ஜாதி மத வருணங்களையும் சாஸ்திர புராணங்களையும் ஜாதி தொழில்களையும் காப்பாற்றப்படும்” என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய சுயராஜ்யத்தில் மனிதன் இழிவும் பட்டினியும் நீங்கி சுயமரியாதையுடன் எல்லாரும் வாழ முடியுமா? என்று கேட்கின்றேன்.

காந்தியார் சுயராஜ்யம் வருணாச்சிரம ராமராஜ்யமாகும்.

ஜவஹர்லால் சுயராஜ்யம் யார் மனதையும் புண்படுத்தாத கோமுட்டித் தந்திரமாகும்.

இனி சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் சுயராஜ்யத்தைப் பற்றி கேட்கவேண்டுமா?

ஆகவே சுயராஜ்யம் என்பது உள்ளபடியே அயோக்கியர்களும், தந்திரசாலிகளும், சோம்பேறிகளும் ஆதிக்கம் செலுத்தும் ராமராஜ்யமாகுமே யொழிய ஏழை மக்களுக்கும் இழிகுல மக்கள் என்பவர்களுக்கும் கடுகளவு லாபமும் இல்லை என்பதோடு இன்னமும் அதிக துன்பமும் தொல்லையும் உள்ள ராஜ்யமேயாகும்.

ஆகையால் இன்றைய அரசியலையோ சுயராஜ்யத்தையோ நாம் ஒப்புக் கொள்ள முடியாது.

~subhead

ஒரு கேள்வி

~shend

இந்த சமயத்தில் ஒருவர் “அப்படியானால் நீங்கள் ஏன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறீர்கள்”? என்று கேட்டார்.

நான் இந்தக் கேள்வியை வரவேற்கிறேன். நானே இதன் காரணத்தை முடிவில் சொல்ல இருந்தேன். இப்போது கேட்டுவிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகும்.

ஜஸ்டிஸ் கட்சியை நான் ஒரு அரசியல் கட்சியாக மதிக்கவில்லை. அது ஒரு சமுதாய சீர்திருத்தக் கட்சியாகும்.

ஜஸ்டிஸ் கட்சியானது சமூக சுதந்திரத்திற்கு ஆகவே ஆட்சி இன்ன விதமாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதே ஒழிய இன்னார்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று சொல்லவில்லை.

அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் நிர்வாகத்தில் எல்லா ஜாதியாரும் மதத்தாரும் வகுப்பாரும் விகிதாச்சாரம் ஸ்தானம் வகிக்க வேண்டும் என்று சொல்லுகிறது.

அது வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டுப்போய் விடவேண்டும் என்றோ, அவர்களுக்கு அரசியலில் சம்மந்தமே கூடாது என்றோ, இந்துவே ஆளவேண்டும் என்றோ, மற்ற ஜாதி மதத்துக்கு விகிதாச்சாரம் பதவி கொடுக்க முடியாது என்றோ சொல்லுவதில்லை.

ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆட்சியில் இன்ன இன்ன முறை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கைப் பிரச்சினையே ஒழிய இன்னார்தான் ஆளவேண்டும் என்கின்ற நபர் பிரச்சினை கிடையாது.

ஆகையால் நான் ஜஸ்டிஸ் கட்சியை ஒரு சீர்திருத்த இயக்கக்கட்சி என்று கருதுகிறேன். இந்த கொள்கைகளை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகிறதா? என்று கேள்வி கேட்டவர் சொல்லட்டும் என்று கேட்கிறேன்.

நிற்க, காங்கிரஸ் இதுவரை உத்தியோகப் பெருக்கத்துக்கும் பதவி அபகரிப்புக்கும் அல்லாமல் எந்தவித சமூக சீர்திருத்தத்திற்காகவாவது முயற்சி செய்கிறதா? அல்லது முயற்சி செய்தவர்களையாவது ஆதரித்து இருக்கிறதா? என்று கேட்கிறேன்.

சகலவித சீர்திருத்தத்திற்கும் காந்தி முதல் சத்தியமூர்த்தி வரை காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டே வந்திருக்கிறார்கள்.

குழந்தைகளைக் கல்யாணம் செய்ய வேண்டாம் என்றால் காங்கிரஸ் காரர்களே முட்டுக்கட்டை போடுவது விபசாரித்தனத்துக்கு என்று ஒரு ஜாதியும் அதை ஆதரிக்க ஒரு ஸ்தாபனமும் வேண்டாம் என்றால் அதற்கும் காங்கிரஸ்காரர்களே முட்டுக்கட்டை போடுவது.

கோவில்களை எல்லா ஜாதியாருக்கும் திறந்துவிட சட்டம் கொண்டு வந்தால் அதற்கும் காங்கிரசுக்காரர்களே முட்டுக்கட்டை ஆகிய இடையூறுகள் செய்து வந்திருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு அரசியல் ஸ்தாபனங்களில் இடம் இருக்கும்படி பிரிக்க வேண்டும் என்றால் அதற்கும் காங்கிரசுக்காரர்களே முட்டுக்கட்டை.

இம்மாதிரி எவ்வித சமூக சீர்திருத்தத்திற்கும் காங்கிரஸ் முட்டுக் கட்டையாகவே இருந்து வருகிறது. இதன் காரணம் என்ன? பார்ப்பனர்களின் உயர்வும் ஏக போக ஆதிக்கமும் போய்விடும் என்கின்ற பயமே.

ஆனால் ஜஸ்டிஸ் இயக்கம் அப்படி இல்லை. இதுவரை சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட சகலவித சமூக சீர்திருத்த சட்டங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியே காரணமாகவும் ஆதாரமாகவும் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லுவேன்.

இதுபோல் காங்கிரஸ் ஏதாவது ஒரு சமூக சீர்திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்தோ ஆதாரமாயிருந்தோ வந்திருக்கிறதா? என்று கேட்கிறேன்.

சமூக சீர்திருத்தமல்லாமல் சமூக சுதந்திரம் பேசப்படும் எவ்வித சுயராஜ்யமும், திருட்டு ராஜ்யம், அயோக்கியர்கள் ராஜ்யம் என்று சொல்லுவேன். அது காந்தியானாலும் ஜவஹர்லால் ஆனாலும் சத்தியமூர்த்தி ஆனாலும் ஒரே யோக்கியதை என்றுதான் சொல்லுவேன்.

இன்றைய அரசியல் நிர்வாகத்தில் இந்திய வைஸ்ராயாக லின்லித்கோ பிரபு போய் சத்தியமூர்த்தி வந்தால் என்ன? வில்லிங்டன் பிரபுபோய் காந்தியார் வந்தால் என்ன? இர்வின் பிரபு போய் ஜவஹர்லால் வந்தால் என்ன?

யார் வந்தாலும் நமக்கென்ன கவலை. பிராமணன் என்கின்ற ஒரு சோம்பேறி ஜாதியும், பறையன் என்கின்ற ஒரு பாட்டாளி ஜாதியும் மறைந்து சமமான மனிதர்கள் என்கின்ற ஒரே மனித ஜாதி இருந்து வருமா?

இதற்கு காந்தியோ, சத்தியமூர்த்தியோ, ஜவஹர்லாலோ ஒப்புக் கொள்ளுகிறார்களா என்று கேட்கின்றேன். ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக்கொள்ளு கிறார்கள். ஆகவேதான் காங்கிரசை அரசியல் பித்தலாட்டம் என்கிறேன்.

ஜஸ்டிஸ் கட்சியை சீர்திருத்தக் கட்சி என்கின்றேன்.

இதை ஆட்சேபிக்கிறவர்களை நான் அறைகூவி அழைக்கின்றேன்.

என்போல் உள்ளவர்கள் எங்கள் குடும்ப நிலையை பாழாக்கிக் கொண்டு சொந்தப்பணத்தை செலவு செய்து கொண்டு கட்சியின் பேரால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் சொந்தத்துக்கு எதிர்பாராமல் ஏன் இந்த மாதிரி கிராமம் கிராமமாய் காயலாவோடு அலைகிறோம் என்பதை சுயநலமற்ற வாலிபர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். கூலிகளைப்பற்றி எனக்குக் கவலையில்லை.

மனித சமூக ஜீவாபிமானம் பிரதானமே ஒழிய பழமையைக் காப்பாற்ற உத்தியோகமும், பதவியும், அதிகாரமும் விரும்பும் அரசியலோ சுயராஜ்யமோ 2000 வருஷத்துக்கு முந்தின நிலைமைக்குப் போகும் தேசீயமோ, தேசபக்தியோ பிரதானமல்ல. அவைகளை ஒழித்தாக வேண்டும்.

வாலிபர்களே! நீங்கள் ஏதாவது மனித சமூகத்துக்கு உழைக்க வேண்டு மானால் பார்ப்பனர்களையும், பறையர்களையும் அடியோடு ஒழியுங்கள். அதுவே உங்களுடைய முக்கியமானதும் முதன்மையானதுமான வேலை.

பார்ப்பனர்களும் பறையர்களும் ஒழிந்தால் சூத்திரர்கள் தானாக ஒழிந்து விடுவார்கள். ஒரு சிறு பார்ப்பன பூண்டு இருந்தாலும் பறையனும் சூத்திரனும் இருந்துதான் இருப்பான்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் வேலை பார்ப்பான் என்று ஒருவனும், பறையன் என்று ஒருவனும் இருக்கக்கூடாது என்பதே. அதுதான் எங்கள் சுயராஜ்யம், அதுதான் எங்கள் அரசியல், அதுதான் எங்கள் மூச்சு என்பதை உணருங்கள். அது இல்லாத மற்றதெல்லாம் அயோக்கியர்கள், வஞ்சகர்கள், மனித சமூகத் துரோகிகள் வாழ்க்கை என்று கருதுங்கள். சுய மரியாதைக் காரருக்கு ஜஸ்டிஸ் கட்சி ஒரு நல்ல ஆயுதமாகும். அதை உபயோகித்துக் கொள்ள யெவரும் தவறிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

அரசியல் சுயராஜ்யத்தை விட சமூக சுயராஜ்யம் ஆயிரம் மடங்கு மேலானது. இதில் புரட்டு பித்தலாட்டமில்லை, இதில் சுயநலம் இல்லை. ஏழை மக்கள் நலமும், “இழி மக்கள்” விடுதலையுமேயாகும்.

குறிப்பு: 13.05.1936 ஆம் நாள் இராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தில் நடைபெற்ற தளவாய்புரம் சீர்திருத்த வாலிப சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 24.05.1936

You may also like...