லக்னோவில் ஏமாற்றுந் திருவிழா அல்லது காங்கிரசின் கபட நாடகம்

 

காங்கிரஸ் மகாநாடுகள் என்பவை ஏமாற்றும் திருவிழாக்கள் என்றும், கபட நாடக நடிப்பு என்றும் 10, 12 வருஷ காலமாகவே கூறி வருகின்றோம். அதற்கு ஏற்பவே இன்று லக்னோவில் அவ்வேமாற்றத் திருவிழாவானது நாடக முறையில் நடைபெறுகிறது.

அந் நாடகத்திற்கு மூவர் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர்.

ஒன்று சூத்திரதார் ஸ்தானத்தில் அமர்த்தப்பட்ட தோழர் காந்தியாராவார்.

இரண்டு நாடகத்தின் முக்கிய பாத்திரம் ஆகிய தோழர் ஜவஹர்லால் ஆவார்.

மூன்று அந்நாடகத்தின் கதாசிரியரும் உண்மையான சூத்திர தாருமான தோழர் ராஜகோபாலாச்சாரியாராவர்.

கதாசிரியராய் இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் இந்திய மக்களின் முட்டாள் தனத்தையும், அவர்களது மூடபக்தியையும் சரியானபடி அளவெடுத்து அதற்கேற்றபடி மக்களை ஏமாற்றத்தக்க விதமாக கதை எழுத வல்லவர். அப்படிப்பட்டவரே உண்மை சூத்திரதாராக (டைரக்டராக) இருந்து நாடகம் நடத்தும்போது கதையின் நடிப்பு வெற்றிகரமாய் முடிவதில் யாருக்குத்தான் சந்தேகம் இருக்க முடியும்?

கதையின் முக்கிய நடிகரான தோழர் ஜவஹர்லால் அவர்கள் இன்று டாக்கீஸ் என்னும் சினிமாக்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் இருக்கும் விளம்பரத்தை விட அதிக விளம்பரம் கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறவர். டம்மி சூத்திரதாரான காந்தியாரோ ராஸ்புடீனையும் தோற்கடிக்கக்கூடிய திறமை பெற்றவர். இப்படிப்பட்டவர்கள் கூடி நடத்தும் கபட நாடகத்தில் யார் தான் ஏமாறாமல் இருக்க முடியும்?

ஆனாலும் இந்த மும்மூர்த்திகளுக்கும் காங்கிரசு என்பதற்கும் உள்ள அதாவது இருந்துவரும் சம்பந்தத்தை முதலில் விளக்குவோம்.

தோழர் காந்தியார் காங்கிரசின் நடத்தை தன்னால் சகிக்க முடியவில்லை என்றும், காங்கிரசிலுள்ளவர்களின் நடத்தை பெரிதும் தனக்கு பிடிக்க வில்லை என்றும், காங்கிரசின் நன்மைக்கு ஆகவே காங்கிரசை விட்டு விலகி இருக்க வேண்டியதாக இருக்கிறது என்றும், அந்தப்படி விலகி இருப்பது என்பதுகூட சாதாரணமாய் இல்லாமல் காங்கிரசில் ஒரு நாலு அணா மெம்பராகக்கூட இல்லாமல் விலகி இருக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டு விலகிக் கொண்டவர்.

தோழர் ஜவஹர்லால் அவர்களுக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதென்றாலோ, அவர் இன்று தலைமை வகிக்கும் “இந்திய தேசிய காங்கிரசைப் பற்றியே” காங்கிரசு முதலாளிமார்களின் அடிமைக் கூட்ட மென்றும், ஏகாதிபத்தியங்களின் ஒற்றர்கள் கூட்டமென்றும் கூறும் வெளிநாட்டு அபேதவாத ஸ்தாபனங்களில் அங்கத்தினரும், ரஷ்ய தேசத்தின் சுதந்திரத்துக்கு டால்ஸ்டாய் எப்படி முட்டுக்கட்டையாய் இருந்தாரோ அது போல் இந்தியாவின் உண்மைச் சுதந்திரத்துக்கு “மலைபோல் ஒரு எருது படுத்திருக்கிறதே” என்று சொன்னமாதிரி பெரியதொரு தடையாயும் முட்டுக் கட்டையாயும் காந்தியார் இருந்து வருகிறார் என்று சொல்லும்படியான பொது உடமை ஸ்தாபனங்களின் போர்வையைப் போர்த்திக் கொண்டுமிருப்பவர். மற்றும் இவர் காந்தியாருக்கு எழுதிய கடிதங்களிலும் நேரில் பேசியவைகளிலும், இருவருக்கும் பெரிய விளம்பரம் கிடைக்க சாதனமாய் இருந்த வார்த்தைகளைப் பற்றி எவரும் அறியாததல்ல.

அதாவது “காங்கிரஸ் இந்திய ஏழை மக்களுக்கும், பாட்டாளி மக்களுக்கும் இதுவரை யாதொரு நன்மையும் செய்யவில்லை.”

“காங்கிரஸ் ஏழை விவசாயிகளையும், ஏழைத்தொழிலாளர்களையும் வஞ்சித்து வந்திருக்கிறது.”

“காங்கிரஸ் பயனற்றதும் முற்போக்குக்குத் தடையானதுமான ஜாதி மதங்களுக்கு ஆக்கமும் பந்தோபஸ்தும் அளித்து வந்திருக்கிறது.”

“இவை மாத்திரமல்லாமல் காங்கிரசானது பூமியுடைய ஜமீன்தாரர் களுக்கும் பணமுடைய முதலாளிகளுக்கும் ஒரு காப்பு ஸ்தாபனமாக இருந்து ஊழியம் புரிந்து வந்திருக்கிறது” என்றெல்லாம் பட்டவர்த்தனமாய்ச் சொல்லி அதன் மூலமே ஒப்பற்ற வீரர் ஆனவர்.

மற்றப்படி தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களோ, யார் யாரோ “தடுத்தும் கெஞ்சிக் கேட்டும்” இணங்காமல் ஒரே கோபமாய் காங்கிரசிலிருந்து அதாவது காங்கிரஸ் வேலைகளில் இருந்து விலகி ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னவர்.

இம்மூன்று முக்கியஸ்தர்கள் கதி இப்படி இருக்க,

மற்ற உப நடிகர்களில் முக்கியமானவரும் பல பார்ட்டில் சிறந்தவருமான தோழர் சத்தியமூர்த்தியாரைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அப்படிச் சொல்வதானாலும் எவ்வளவு குறைவாய்ச் சொல்லலாமோ அதுவே நன்மையாகும். அவருடைய தியாகமும் அவருடைய நாணயமும், அவருடைய ஒழுக்கமும், அவருடைய பேச்சும், அவருடைய உள்நடத்தையும், அவருடைய வெளி நடத்தையும் முதலாகியவைகளில் எதற்குத்தான் வருணனை வேண்டும் என்றோ அதிகப்படுத்திக் கூற இடமிருக்கிறதென்றோ சொல்ல முடியாது. அப்படிப்பட்டவர்தான் இன்று இந்த காங்கிரஸ் கபட நாடகம் என்னும் ஏமாற்றுந் திருவிழாவுக்கு ஒரு இரசமான பாத்திரராய் விளங்குகிறார்.

இதுபோலவே மற்ற அநேக நடிகர்களைப்பற்றி சொல்லவேண்டியது அவ்வளவு அவசியம் என்று தோன்றவில்லை.

இந்த நாடகம் பார்க்க வரும் நாடகப் பிரியர்களோ, அல்லது நாடக அபிமானிகளோ, அல்லது நாடக பக்தர்களோ ஆகிய தேசாபிமானிகள், தேசீயவாதிகள், தேசபக்தர்கள் என்பவர்களின் மேன்மைகளைப் பற்றியும் ஞானங்களைப்பற்றியும் நாம் விவரிக்க வேண்டுமானால் அவர்கள் நம் ஆழ்வராதிகள் நாயன்மார்கள் போன்ற அதாவது பக்தி ஒன்றே மோக்ஷ சாதனம் என்றும், பக்திக்கு ஆக எதையும் செய்யலாம் என்றும் உறுதி கொண்டிருக்கிறவர்களாவார்கள் என்று சொல்லுவதே போதுமானதாகும்.

ஆகவே இப்படிப்பட்ட முக்கிய நடிகர்கள் என்னும் தலைவர்களும், ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற காங்கிரஸ் பக்தர்களும் பல லட்சக் கணக்கான ரூபாய் செலவில் அடிக்கடி இதுபோலவே கூடி செய்த காரியம் என்ன? செய்யப்போகும் காரியம் என்ன? என்பதுதான் நாம் இப்போது கவனிக்க வேண்டியது என்னும் ஆசையாலேயே இதை எழுதுகிறோம்.

இந்நிலையில் இவர்கள் எல்லாம் இதுவரையில் செய்ததைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம். ஏனெனில் அதைப்பற்றி காங்கிரஸ்காரர்களே தங்களால் தேசத்துக்கு இதுவரை எந்த நன்மையும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லுவதில்லை. ஏதாவது சொல்லுவதானால் ஏதோ “ஒரு உணர்ச்சியை உண்டாக்கி விட்டு இருக்கிறோம்” என்று மாத்திரமே சொல்லி விடுகிறார்களே ஒழிய காரியம் எதையும் எடுத்துக் காட்டுவ தில்லை. மற்றபடி வேறு எதைச் சொன்னாலும் அதாவது ஜெயிலுக்குப் போனோம், அடிபட்டோம் என்றெல்லாம் சொன்னால் உடனே அதனால் ஏற்படும் பயன் என்ன? என்றும் அப்படியெல்லாம் செய்ததை இப்பொழுது தப்பிதம் என்று உணர்ந்து அவற்றைக் கைவிட்டு விட்டு ராஜபக்திக்கும், ராஜ சேவைக்கும் பிரமாணம் செய்துவிட்டு போட்டி போட வந்துவிட்டீர்களே என்றும் பொது மக்கள் கேள்வி கேட்பதால் அதைப்பற்றியும் அதாவது தங்கள் “தியாகத்தைப்” பற்றியும் பேசாமல் இருக்கிறார்கள். ஆதலால் காங்கிரசு என்ன செய்தது என்ற கேள்வியில் நாம் பிரவேசிக்கவில்லை.

ஆனால் இப்போது இனி என்ன செய்யப்போகின்றது என்பதை கவனிப்போம். இதை அறிய வேண்டுமானால் இதற்காக அதிகமாய்ச் சிந்தித்துப்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்றே சொல்லுவோம்.

ஏனென்றால் காங்கிரசின் லக்ஷ்யமாக இன்று மூன்றே மூன்று விஷயங்கள் தான் இருக்கின்றன.

அவையாவன:

  1. சீர்திருத்தத்தை என்ன செய்வது?
  2. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை என்ன செய்வது?
  3. பதவிகளை என்ன செய்வது?

என்பவைகளேயாகும்.

இம்மூன்றைப் பற்றியும் காங்கிரஸ் அபிப்பிராயம் என்ன என்பது பற்றி யாரையும் ஜோசியம் கேட்க வேண்டியதில்லை.

சீர்திருத்தத்தை உடைப்பது என்ற கொள்கை காங்கிரசுக்கு எலக்ஷன் பிரசாரத்துக்கு ஒரு சாதகமாய் இருந்தது என்பது தவிர, மற்றபடி அதை அடியோடு கை விட்டாகி விட்டது எப்படி என்றால் எலக்ஷன் பிரசாரத்தின் போது “நாங்கள் சீர்திருத்தத்தை உடைத்து சுக்கலாக்கி அழித்து விடுகிறோம்; எங்களுக்கு ஓட்டுக்கொடுங்கள்; எங்களுக்கும் சர்க்காருக்கும் பெரியதொரு யுத்தம் நடக்கப்போகிறது; மற்றபடி உள்நாட்டு விவகாரத்தைப் பற்றி கவனிக்காதீர்கள்” என்றும் சொல்லி ஓட்டுப் பெற்றார்கள். எலக்ஷன் முடித்து வெற்றி ஏற்பட்ட பிறகு சீர்திருத்தத்தை என்ன செய்வது என்பது அடியோடு கைவிடப்பட்டு விட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் “ஜஸ்டிஸ் கட்சியார் சீர்திருத்தத்தை ஏற்று நடத்தி விடுவார்கள் ஆனதால் அவர்கள் அதிகாரம் கைப்பற்றாதபடி செய்ய நாம் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

அடுத்த இரண்டாவது விஷயமாகிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை அல்லது வகுப்பு தீர்ப்பு என்பது பற்றி காங்கிரஸ் நிலைமை தந்திரத்திலேயே தான் இருந்து வருகிறது.

எப்படி எனில் இப்போது இந்திய அரசியல் என்னும் சீட்டாட்டத்திற்கு முஸ்லீம்களே துருப்பு சீட்டாக இருந்து வருகிறார்கள். அவர்கள் சர்க்காருடன் சேர்ந்தால் சர்க்காருக்கு வெற்றியும், காங்கிரசுடன் சேர்ந்தால் காங்கிரசுக்கு வெற்றியும் என்கின்ற நிலையில் சர்க்காரே அவர்களை ஆக்கி வைத்திருப்பதால் முஸ்லீம்களின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமையில் காங்கிரசு மூச்சுவிட முடியாமல் போய்விட்டது.

அன்றியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையானது சென்னை மாகாணத்தை பொருத்தவரைதான் பார்ப்பனர்களுக்கு ஆக்ஷேபகரமுடைய தாகவும், பார்ப்பன ஆதிக்கத்தை ஆட்டிவிடத்தக்கதாகவும் இருப்பதால் சென்னை மாகாண வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை மாத்திரமே “அது தேசீயத்துக்கு விரோத” மென்றும் மற்ற மாகாண வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை “ஒற்றுமையை உத்தேசித்து அனுமதித்துத் தொலைக்க வேண்டிய” தென்றும், “அனுமதிக்காவிட்டாலும் ஆக்ஷேபிக்காமலாவது இருக்க வேண்டும்” என்றும் சொல்லப்பட்டு விட்டது. அதற்கு ஏற்பவே இந்திய சட்டசபையில் அதைப் பற்றிய பேச்சே இந்த ஒன்றரை வருஷ காலமாக எழவில்லை. ஆகையால் வகுப்புவாரி முறையை ஒழிப்பது என்பதும் கைவிடப்பட்ட காரியமேயாகும். அது மாத்திரமல்லாமல் அதை தடுக்க இனி சுலபத்தில் எவராலும் முடியாது என்பதும் உறுதியான விஷயமாய்விட்டது.

மூன்றாவதான பதவி ஏற்பதா வேண்டாமா என்கின்ற பிரச்சினையில் காங்கிரசுக்காரர்களுக்குள் சந்தேகம் ஒன்றும் கிடையாது. ஏனெனில் பதவி ஏற்பது என்கின்ற விஷயத்தில் காங்கிரஸ் பதவி ஏற்காவிட்டால் பிற்போக்காளர்கள் (ஜஸ்டிஸ் கட்சியாளர்கள்) பதவி ஏற்று தீமை செய்து விடுவார்கள் என்று சாக்குச் சொல்லி பதவி ஏற்பதாகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் முடிவு செய்து கொண்டார். அதற்கு காந்தியாரையும் சரிப்படுத்திக் கொண்டார். ஆனால் அதை பெயரளவுக்கு முடிவு செய்யாமல் மறைவாய் வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன வென்றாலோ கிடைக்குமா கிடைக்காதா என்பது 100க்கு 90 பாகம் சந்தேகப்பட வேண்டியதாகவே இருப்பதால்தான்.

ஆதலால் அதை மூடி வைத்து மக்களை ஏமாற்ற வேண்டியதாய் இருக்கிறது. தவிரவும் நம் நாட்டு மக்களின் முட்டாள் தனமானது ஒரு விஷயம் அசாத்தியமானது என்று தெரிந்தாலும் தீவிரமான, தியாகமான, கலகம், அடிதடி, கிளர்ச்சி ஆனதான காரியங்களைச் சொன்னால் தான் பாமர மக்கள் படியும்படியான நிலையில் இருப்பதால் ஓட்டுப் பெறும் வரையில் தீவிர கொள்கைகளைப் பேச வேண்டியது அவசியமாகிவிட்டது.

அதை உத்தேசித்தே மக்களை ஏமாற்ற இது சமயம் சிறிதாவது தீவிரமான கொள்கைகளைத் தேடிப் பிடித்து சொல்ல வேண்டியிருக்கிறது என்றாலும் அதையும் முடிவாய்ச் சொல்லி விட்டால் சென்னை மாகாணத்தில் கஷ்டம் ஏற்படுமாதலால் பதவி ஏற்பது என்பதைச் சென்னை மாகாண காங்கிரசு மகாநாடுகளில் அனுகூலமாக தீர்மானித்துக் கொண்டும் இந்திய காங்கிரசில் மாத்திரம் சந்தேகமாக வைத்துக்கொண்டும் மக்களை ஏமாற்ற வேண்டி இருக்கிறது. ஆகையால் பதவி ஏற்பு விஷயம் இப்போது முடிவு செய்ய வேண்டியதில்லை என்றுதான் காங்கிரசு முடிவு செய்யப்போகிறது.

இதற்காகவே அதிதீவிரவாதி என்று விளம்பரம் பெற்ற தோழர் ஜவகர்லாலை காங்கிரசுக்கு தலைவராக்கி உண்மையாகவே தங்களை அதி தீவிரவாதிகள் என்று நினைத்துக்கொண்டோ, அல்லது அதிதீவிர வாதிகள் என்று சொல்லப்படுவதில் வீரர் ஆகலாம் என்று கருதிக்கொண்டோ இருக்கிற பைத்தியக்காரர்களையும், விளம்பரப் பிரியர்களையும் ஏய்ப்பதற்காகவே அவரை தலைவராக்கி வைத்து இருக்கிறார் நமது ஆச்சாரியார்.

பண்டிதருக்கு தான் புத்தகத்தில் படித்திருக்கும் சில கொள்கையைப் பேசத்தான் தெரியும் என்பதோடு காரியத்தில் காந்தியார் சொல்படி நடப்பதைவிட வேறு வழியும் தெரியாது; கதியும் இல்லை.

ஆகையால் வந்த காசுக்கு வட்டம் இல்லை என்கின்ற முறையில் எட்டின பதவியை பெற்று கிடைத்த விளம்பரத்தை அடைந்து விடுவதோடு அவர் காரியம் முடியப்போகிறது.

ஆகவே இந்தக் காரியங்களால் இந்த ஏமாற்றும் திருவிழாக்களால் கபட நாடகங்களால் இந்திய நாட்டுக்கோ, அல்லது இந்தியாவின் 100க்கு 75 பாகமாகிய ஏழைப் பாட்டாளி மக்களுக்கோ ஏற்படும் லாபம் என்ன என்பதுதான் யோசிக்கத்தக்கதாகும்.

அதிதீவிரக் கொள்கைகளைப்பற்றி பேசுவது நாகரீகமாய் போய்விட்டது. காரியத்தில் காங்கிரசில் உள்ள சமதர்மக்காரர்கள் என்ன செய்தார்கள், அல்லது என்ன செய்கிறார்கள் என்றாவது எவரும் கவனிப்பதில்லை.

காங்கிரஸ் சமதர்மக்காரர்கள் இன்று காங்கிரசிலிருக்கும் கராச்சி தீர்மானத்தை அறியாதவர்கள் என்றாவது சொல்லிவிட முடியுமா என்று பார்த்தால் எல்லாம் தெரிந்தேதான் காங்கிரசின் பெயரைச் சொல்லிக்கொண்டு காங்கிரசின் நிழலில் இருக்கிறார்கள்.

காங்கிரசின் நிழலில் இருக்கும் இப்படிப்பட்ட சமதர்மக்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பவர்களைப் பரிகாசம் செய்கிறார்கள் என்றால் அவர்களது சமதர்ம ஞானம் எவ்வளவு என்பதற்கு அது ஒன்றே அளவு கருவி என்னலாம்.

ஜஸ்டிஸ் கட்சியார் வேறு ஒன்றும் செய்யவில்லையானாலும் சமூக வாழ்வில் சமதர்ம சட்டம் இயற்றியுள்ளார்கள். மத இயலிலும் கோவில் சட்டம், சீர்திருத்தச் சம்மந்தமான சட்டம் இயற்றியுள்ளார்கள். பொருளாதாரத் துறையிலும் ஒரு அளவுக்காவது பறிமுதல் சட்டம் இயற்றினார்கள். இவற்றால் பெரியதொரு லாபம் இல்லை என்றாலும் இக் கொள்கைகள் ஜஸ்டிஸ் கட்சியாரால் ஒப்புக்கொள்ளப்பட்டு ஆதரிக்கவும் படுகிறது என்பதாகவாவது ஆகிவிடவில்லையா என்பதே நமது பிரச்சினை. இவைகளை யெல்லாம் மதிக்காவிட்டாலும்கூட காங்கிரசை விட எந்த வகையில் ஜஸ்டிஸ்கட்சி மோசம் என்று சொல்லிவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்கு நிற்பதில்லையா? தேர்தலில் வெற்றிபெற்று விட்டால் மந்திரி பதவிகள் வகிக்க சம்மதிக்கமாட்டார்களா? மந்திரி பதவி கிடைத்தால் சம்பளம் பெறமாட்டார்களா? அப் பதவிகளில் அதிகாரம் இருந்தால் தங்கள் வகுப்பாருக்கும் அல்லது கட்சியாருக்கும் உத்தியோகம் பங்கிட மாட்டார்களா என்பவைகளைக் கவனித்தால் இரு கட்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லக்கூடும் என்பது விளங்கவில்லை.

ஆகவே காங்கிரஸ் என்பதும் இன்று லக்னோவில் கூடும் கூட்டமும் ஏமாற்றுந் திருவிழா அல்லது கபட நாடகம் என்பதல்லாமல் வேறு இல்லை என்பதும் அதன் முக்கியஸ்தர்களான தோழர்கள் காந்தியார், ஆச்சாரியார், பண்டிதர் ஆகிய மூவர்களும் இந்த ஏமாற்றுந் திருவிழாவான நாடகத்துக்கு கதை ஆசிரியர் சூத்திரதார், முக்கிய பாத்திரம் ஆகியவை ஆனவர்களே தவிர வேறில்லை என்பதுமே நமதபிப்பிராயம்.

இதை ஆக்ஷேபிக்கிறவர்கள் “நீ மாத்திரம் யோக்கியமாய் வாழ்கின்றாயா?” என்று நம்மை கேள்வி கேட்டு விடுவதன் மூலம் திருப்தி அடையாமல் நாம் மேலே எழுதியவற்றில் எது பிசகு? எந்த வாக்கியம் ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்டது? என்பதை நடுநிலையில் இருந்து பார்த்து முடிவு செய்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.

குடி அரசு தலையங்கம் 12.04.1936

You may also like...