அய்யங்கார் தர்மம் -சித்திரபுத்திரன்
கோவை ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தர்மத்தின் இரகசியம் ‘குடி அரசில்’ வெளியானதினால் ஸ்ரீமான் ஐயங்கார் முதல் பல பிராமணர் களுக்கும், அவரது தர்மத்தில் பங்கு கொண்ட – கொள்ள இருக்கும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள், பிரசாரகர்கள் என்போருக்கும் ஆத்திரங் கிளம்பிவிட்டது. தர்மத்தைப் பற்றி நமக்கு பொறாமையா? யார் தர்மம் செய்வ தாயிருந்தாலும், அது என்ன தர்மமாயிருந்தாலும், பொதுவாக உண்மைத் தர்மம் என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும் அதை வெறுக்க மாட்டார்கள். ஆனால் பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் ஒரு சூழ்ச்சிக்கு தர்மம் என்று பெயர் கொடுப்பதனால் அறிவுள்ளவன் – யோக்கியன் பொது ஜனங்கள் ஏமாறும்படி பார்த்துக் கொண்டிருக்கவே மாட்டான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பவன் கோழையும் சுயநலவாதியுமே ஆவான். கோவை ஜில்லாவில் உண்மையான தர்மம் செய்த பிரபுக்களில்லா மலில்லை. உதாரணமாக கோவைக்கடுத்த பீளமேடு என்னும் ஊரில் ஸ்ரீமான் கள் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அன் சன்ஸ் என்கிற பிரபல நாயுடு கன வான்கள்...