அய்யங்கார் தர்மம் -சித்திரபுத்திரன்
கோவை ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் தர்மத்தின் இரகசியம் ‘குடி அரசில்’ வெளியானதினால் ஸ்ரீமான் ஐயங்கார் முதல் பல பிராமணர் களுக்கும், அவரது தர்மத்தில் பங்கு கொண்ட – கொள்ள இருக்கும் சில பிராமணரல்லாத பத்திராதிபர்கள், பிரசாரகர்கள் என்போருக்கும் ஆத்திரங் கிளம்பிவிட்டது. தர்மத்தைப் பற்றி நமக்கு பொறாமையா? யார் தர்மம் செய்வ தாயிருந்தாலும், அது என்ன தர்மமாயிருந்தாலும், பொதுவாக உண்மைத் தர்மம் என்றாலே அதை வரவேற்பார்களே தவிர எவரும் அதை வெறுக்க மாட்டார்கள். ஆனால் பொது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் ஒரு சூழ்ச்சிக்கு தர்மம் என்று பெயர் கொடுப்பதனால் அறிவுள்ளவன் – யோக்கியன் பொது ஜனங்கள் ஏமாறும்படி பார்த்துக் கொண்டிருக்கவே மாட்டான். அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பவன் கோழையும் சுயநலவாதியுமே ஆவான்.
கோவை ஜில்லாவில் உண்மையான தர்மம் செய்த பிரபுக்களில்லா மலில்லை. உதாரணமாக கோவைக்கடுத்த பீளமேடு என்னும் ஊரில் ஸ்ரீமான் கள் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அன் சன்ஸ் என்கிற பிரபல நாயுடு கன வான்கள் குடும்பம் இருந்து வருகிறது. அவர்கள் தக்க செல்வமுள்ளவர்கள். 20 லட்ச ரூபாய் மூலதனமுள்ள ஒரு பெரிய நூல் மில்லை நிர்வகித்து வருகிறார்கள். இவர்கள் பொதுஜன உபகாரத்தில் இறங்கினார்கள். 30, 40 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டினார்கள். அதற்கு பதினாயிரக்கணக்கான பூமி விட்டார்கள். மாணவர்களுக்கு விடுதி (ஹாஸ்டல்) ஏற்படுத்தினார்கள். இளைஞர்கள் விவசாயமும் கைத்தொழிலும் கற்க ஒரு தொழிற்சாலை யேற்பாடு செய்தார்கள். இதற்காக தங்கள் குடும்ப சொத்தில் ஒரு பாகத்தையும் தங்களுக்கு மில்லில் வரும் வருஷவாரி வரும்படியில் ஒரு பாகத்தையும் இத்தர்மத்திற்கு எழுதி வைத்தார்கள். இப்பொழுதும் கோய முத்தூருக்கு யார் போனாலும் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். இதில் இரகசியம் ஒன்றுமில்லை. இந்த தர்மம் தாலூகா, ஜில்லா போர்டு எலெக்ஷ னுக்காகவோ சட்டசபை எலெக்ஷனுக்காகவோ அவர்கள் செய்ய வில்லை.
இத்தர்மம் செய்ததைக் கூலி கொடுத்து ஆள் வைத்து விளம்பரப் படுத்தவில்லை. அவர்களது தர்மமும் தானாகவே வருஷக்கணக்காய் நாளுக்கு நாள் விருத்தியாகிக் கொண்டே வருகிறது. சமீபத்தில் சென்னிமலை வேட்டுவபாளையம் பூசாரி என்கிற ஒரு பக்தர் பதினாயிரக்கணக்கான ரூபாய் பெறுமான சொத்தை தர்ம சாசனம் எழுதி அந்நியர் கையிலேயே ஒப்புவித்து விட்டார். அதற்கு ஒரு விளம்பரமும் அவர் செய்யவேயில்லை.
இவற்றைவிட வெகு சமீபத்திலுள்ள கொடுமுடியில் ஸ்ரீமான் பெரியண்ணஞ் செட்டியார் என்கிற ஒரு கனவான் சில நாட்களுக்கு முன் 15,000 ரூபாய் பெறுமானமுள்ள பூமியும், 8000 ரூபாய்க்கு கட்டடமும் கட்டிக் கொடுத்து, இப்போது மறுபடியும் 50,000 ரூபாய்க்கு மேல் பெறும்படியான சொத்துக்களை கொடுமுடி சங்கர வித்தியாசாலை என்கிற பள்ளிக்கூடத்திற்கு செட்டில்மெண்டு மூலம் எழுதி வைத்து சுவாதீனமும் செய்து விட்டார். மேற்கொண்டு ரொக்கப் பணமாக 12,000 ரூபாய் ஸ்கூல் பண்டுக்குக் கொடுத்து மிருக்கிறார். இவர் எவ்வித திறப்புவிழாவும் அங்குரார்ப்பண விழாவும் செய்யவில்லை; விளம்பரமும் செய்யவில்லை. பத்திரிகைக்காரருக்குப் பணங்கொடுத்துப் போடச் சொல்லவுமில்லை. மகாத்மா காந்தி, பண்டித நேரு, ஸ்ரீமதி சரோஜனி முதலிய பெரியார்களுக்குத் தனது தர்மப் பெருமையை எழுதவுமில்லை. இப்படியெல்லாமிருக்க, கேவலம், ஒரு சட்டசபை ஓட்டுப் பெற – எதிர் அபேக்ஷகரைத் தோற்கடிக்க – இவ்வளவு தந்திரங்களும் மந்திரங்களும் செய்தால் செய்தவர் மிகப் பெரியவராய்ப் போய் விடுகிறார். அதை வெளியில் எடுத்துச் சொல்லுபவர் அயோக்கியர்களாய்ப் போய்விடு கிறார்கள் என்றால் மக்கள் நிலையை என்ன வென்று சொல்லுவது.
ஸ்ரீமான் ஐயங்காரைப்போல் தைரியமாய் தர்ம விளம்பரம் செய்ய எவராவது பின் வாங்கினால் அவர்கள் தோல்வியுற வேண்டியதா? இந்த தைரியத்திற்காக மாத்திரம் ஐயங்கார் வெற்றியுறவேண்டியதா? சட்டசபை மெம்பராவதற்கு இந்த தைரியம்தானா யோக்கியதை? ஸ்ரீமான் ஐயங்கார் இவ்வளவு விளம்பரம் ஏன் செய்ய வேண்டும் இவரும் இரண்டு தடவை-ஆறு வருஷகாலம் – சட்டசபைப் பதவியை அடைந்து அனுபவித்தாய் விட்டது; இனி வேறொருவர்தான் அனுபவிக்கட்டுமே; யார் வீட்டு சொத்து. இந்த ஜில்லாவில் 60,000 ஓட்டர்கள் இருந்தால் சுமார் 3,000 ஓட்டர்கள்கூட பிராமணர்கள் இருக்க மாட்டார்கள். 57,000 பிராமணரல்லாத ஓட்டர்கள் இருக்கும் ஒரு ஸ்தானத்திற்கு 3,000 ஓட்டுள்ள பிராமணர் எத்தனை தடவை அந்தப் பதவியை அனுபவிப்பது? ஆறு வருஷம் பார்த்தது போதுமென்று இவர் ஏன் கௌரவமாய் விலகிவிடக் கூடாது? கோயமுத்தூர் ஜில்லாவில் சட்டசபைப் பதவியை அனுபவிக்க இவரைவிட வேறு நபர்கள் இல்லையா? கேவலம் இந்தப் பதவி பெற இவ்வளவு தந்திரம் செய்து 57,000 பேரையும் ஏமாற்றி சட்டசபைக்குப் போகிறவர், போனபின் இவரால் ஜனங்கள் என்ன பலன் அடைய முடியும்? இம்மாதிரி பேராசையுள்ளவர்கள் எவ்வளவு காலத் திற்கு ஜனங்களை ஏமாற்ற முடியும். ஸ்ரீமான் ஐயங்கார் விளம்பரமும் வெற்றி யும் ஏதாவது சாமர்த்தியத்தையும், சக்தியையும், தேச பக்தியையும், நாணயத் தையும், தகுதியையும் பொறுத்திருக்கிறதா? ஸ்ரீமான் ஐயங்கார் பணத்தையும், தந்திரத்தையும், விளம்பரத்தையும் பிராமணரல்லாதார் சமூகத் துரோகத் தையும் அவர்களது முட்டாள்தனத்தையும் தானே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதை உத்தேசித்துத்தானே அனுபவசாலிகள், அரசியலில் பணத் திமிரும், தந்திரமும், சூழ்ச்சி விளம்பரமும், சமூகத் துரோகமும், அறியாமையால் நேரும் நஷ்டமும், ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட வேண்டும் என்று கதறுகிறார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டிருந்தால் ஸ்ரீமான் ஐயங்கார் 6 வருஷம் அனுபவித்துவிட்டு இன்னும் 3 வருஷத்திற்கு இவ்வளவு விளம்பரம் செய்வாரா? முதலாவது, ஒரு வருஷத்திற்காவது இவருக்கு முறை வருமா? 30 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் செலவு செய்தாலும் கிடைத்து விடுமா? 2 லக்ஷமல்ல, 10 லக்ஷம் என்று தர்ம விளம்பரம் செய்தாலும் ஆகி விடுமா? கோயமுத்தூர் ஜில்லாவானது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஜில்லா. ஸ்ரீமான் ஐயங்காரைப் போல் எத்தனையோ பணக்காரரும், பட்டக்காரரும், ஜமீன்தாரரும், சக்தியுள்ளவர்களும், அவரைவிட தகுதியும் உரிமை யுமுள்ளவர்களுமிருக்க ஐயங்காரே அடிக்கடி வரவேண்டுமென்பது “வேதக் கட்டளையா, சாஸ்திர சம்மதமா? மனுதர்மமா?” இந்த ஒரு சிறு பதவியே பிராமணரல்லாதார் 100-க்கு 97 பேர் உள்ள சமூகத்தை இவ்வளவு மோசம் செய்யுமானால் இன்னும் பெரிய பதவிகள் – சுயராஜ்யப் பரிபாலனம் போன்ற ராஜா மந்திரிப் பதவிகள் – இன்னும் எவ்வளவு மோசத்தை விளைவிக்காது? தவிரவும் இந்த நியாயமான சங்கதியை நாம் எழுதும் போதே ஸ்ரீமான் ஐயங்காருக்கும் அவரது சிஷ்யக் கோடிகளுக்கும் சிப்பந்தி கோடிகளுக்கும் இவ்வளவு ஆத்திரமும் கோபமும் மனவருத்தமும் வருமானால், தமிழ் நாட்டிற்கே ஏன் – இந்தியா தேசத்திற்கே ராகு கேதுகள் போல் இருக்கும் பிராமணப் பத்திரிகைகளும், பிராமணப் பிரசாரகர்களும், அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட பிராமணரல்லாத பிரசாரகர்களும் உண்மைக்கு விரோத மாய் இரவும் பகலும் பிராமணரல்லாதார் மீது பொய்யும், பித்தலாட்டங்களும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்கின்றார்களே, அதனால் பிராமணரல் லாதார்களுக்கு எவ்வளவு சங்கடமும், ஆத்திரமும், கோபமும் வராது? “குடி அரசு” போன்ற பத்திரிகையாவது சுமார் 10 பிராமண சந்தாதாரர் களைக்கூட உடைத்தானதாயிருக்காது. அதிலும் 7 பேர் கௌரவ சந்தாதாரர் களாயிருப்பார்கள். ‘சுயராஜ்யா’, ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிகைகள் பிராமணரல்லாதார் பணத்திலேயே நடக்கிறது. பிராமணரல்லாதார் தங்கள் பணத்தையே கொடுத்து தங்கள் சமூகத்தையே பாழாக்குவதற்கு உடந்தையா யிருப்பது போல் அவைகளுக்கு சந்தாதாரர்களாயிருக்கிறார்கள். இதைக் கேட்பவர்களுக்கு எவ்வளவு மனவேதனை ஏற்படும். ஒவ்வொரு நாளும் இந்தப் பத்திரிகைகளில் பிராமணரல்லாதார்களைப்பற்றி எழுதும் பொய்யும் புளுகும் கணக்கு வழக்கில்லை. அதைக் கவனிக்கவோ, திருத்தவோ, கோபப் படவோ, ஆத்திரப்படவோ ஆளில்லை. ‘குடி அரசு’ உண்மையை- தன் மனதிற்கு உண்மையென்று பட்டதை எழுதினால் இதற்கு – இவ்வளவு அடா துடியா?
ஸ்ரீமான் ஐயங்காருக்குத்தான் பணமிருக்கிறது; பத்திரிகைகள் இருக்கின்றன; பணம் வாங்கிக் கொண்டு பேசவும் எழுதவும் ஆளுகள் இருக்கிறார்கள். இதனால் எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் தாராளமாய்ப் பெரிய மனிதராய் விடுகிறார். இவைகள் இல்லாதவர்கள் கதி என்ன ஆவது? எவ்வளவு யோக்கியர்களாயிருந்தாலும், தேசபக்தர்களாயிருந்தாலும் அவர்கள் யோக்கியதை வெளிவருவதற்கில்லை. வெளிவராவிட்டாலும் அவசியமில்லை; அவர்களுடைய தொண்டு தேசத்திற்குப் பிரயோஜனமில் லாததோடு அயோக்கியர்கள் செய்கையும் அயோக்கியத்தனமும் உலகத்தில் மதிக்கப்பட்டு மலிந்து போகிறதே என்பதுதான் நமது உண்மையான சங்கடம். அல்லாமலும் தென்னாட்டில் தென்னாட்டாரின் பிரதிநிதிகள் ஸ்ரீமான்கள் சென்னை ஏ.ரெங்கசாமி ஐயங்கார், எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி ஐயர், எம்.கே. ஆச்சாரியார், கோவை சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார், கும்ப கோணம் சக்கிரவர்த்தி ஐயங்கார் ஆகிய இவர்கள்தானா? இவர்களைவிட யோக்கியர்களும் தேச பக்தர்களும் வேறு எவரும் நமது நாட்டில் இல்லையா? இவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுகிறவர்களும் எழுதுகிறவர் களுந்தானா ‘தேசத் தொண்டர்’, ‘தேச பக்தர்’. இவர்களுக்கு எப்படி இந்தப் பதவி வந்தது? பணமும் பத்திரிகையும் தங்கள் கைவசமிருப்பதோடு, யோக்கி யமற்ற வழியில் செலவிடுவதும் எழுதுவதுமான குணத்தினால்தானா அல்லவா?
தமிழ்நாட்டின் சார்பாக சபர்மதி ராஜி ஒப்பந்தத்திற்குப் போயிருப்பவர் கள் எத்தனை பேர்? ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரெங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி ஐயர் ஆகிய இவர்கள் செய்துவரும் ராஜியை ஒப்புக் கொள்ள வாவது இவர்களை யோக்கியர்கள் என்று சொல்லவாவது தமிழ் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள். இவர்களைத் தலைவர்கள் என்று சொல்லும் நமது ஸ்ரீமான் திரு.வி.கலியாணசுந்தர முதலியாரையே சத்தியமாய்க் கேட்ப் போம். இவர்கள் தலைவர்களா? இவர்களை யோக்கியர்கள் என்று அவர் கருதுகிறாரா? இவர்கள் சொற்படி நடக்க தயாராயிருக்கிறாரா? ஒன்றிற்கு மில்லை. இப்படியிருக்க இவர்கள் எப்படித் தலைவர்கள் ஆகிறார்கள்? பணமும் ஆளும் பத்திரிகையும் தான் காரணம். அநேக யோக்கியர்களும் உண்மை தேசபக்தர்களும் அவர்களது இன்றியமையாத தொண்டும் தேசத்திற்கு உபயோகப்படாமல் ஏன் மறைந்து கிடக்கிறது. பணமும் ஆளும் பத்திரிகையும் இல்லாததால்தான். ஆதலால் பாமர ஜனங்கள் ஓட்டர்கள் இவ்விளம்பரங்களை நம்பி ஏமாறாமலும் அநாவசியமாய் அந்நியரை வைகி றார்கள் என்று நினைத்து நம்மீது அவசரப்பட்டு ஆத்திரப்படாமலும் உண்மையை அறியும்படி வேண்டுகிறோம்.
குடி அரசு – கட்டுரை – 09.05.1926