ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே தற்கால அரசியல் முறைக்கு ஏற்ற தென்றும், வகுப்புப் பூசலும் சமயச் சண்டையும் கிளம்பாமலிருப்பதற்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நல்குவதே ஏற்ற மருந்தென்றும் அறிஞர் பலரும் கூறுகின்றனர்.

சென்ற ஏப்ரல் மாதம் 10 – ² பெங்களூர் முனிசிபல் சபையார் இத்தகைய சிறந்ததொரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அச்சபையில் இனி எவரேனும் ஓர் எஞ்சினீர் நியமனஞ் செய்யப்படுவாரெனின் அவர் பிராமணரல்லாதவராயிருத்தல் வேண்டுமென தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டு பல பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கிடையே நிறைவேறியது. மற்ற நகரசபைகளுக்கெல்லாம் ஓர் வழி காட்டியாய் நடந்து கொண்ட பெங்களூர் நகரசபையைப் போற்றுகிறோம். நம் நாட்டிலுள்ள இதர முனிசிபல் சபை, ஜில்லா போர்டு போன்ற ஸ்தல ஸ்தாபனங்களும் பெங்களூர் நகரசபையைப் போன்று உத்தியோகம் நியமிப்பதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கையாடினால் பெரிதும் நலம் பயக்குமென்று கூறுகிறோம்.

நாட்டிலே தற்காலம் வகுப்புப் பகை வளர்ந்து வருவதற்குக் காரணம் சமூக வாரியாக உத்தியோகம் நல்கப்படவில்லை என்பது பற்றியேயாகும். ஆதலால், தற்காலம் குடிமக்கள் கையிலிருக்கக் கூடிய ஸ்தல ஸ்தாபனங்கள் அனைத்தும் பெங்களூர் முனிசிபல் சபை போன்று சமூக வாரியாக உத்தி யோகம் நல்கி சகலரும் ஒத்து வாழ வழி தேடுமென நம்புகிறோம்.

குடி அரசு – செய்தி விளக்கம் – 02.05.1926

You may also like...

Leave a Reply