ஸ்ரீ காந்தியின் தந்திரம்
ராயல் கமிஷனைப் பற்றி ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயம் சொல்லியி ருப்பது மிகவும் தந்திரமானதாய் இருக்கின்றதே தவிர நேர்மையானதாக காணவில்லை.
அதாவது அசோசியேட் பிரசுக்கு சொன்னதாக காணப்படுவது என்ன வென்றால்.
தனது மனச்சாக்ஷி காங்கிரஸ் தலைவரிடத்தும் காங்கிரசிடமும் இருப்பதாகவும் சொல்லியிருப்பதோடு பஹிஷ்காரத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டதற்கு ஆதரிக்கிறேன் அல்லது இல்லை என்று சொல்லாமல் தந்திரமாய் பேசியிருக்கிறார். அதாவது காங்கிரஸ்காரர் சொல்லுவதற்கு மேல் நான் ஒன்றும் சொல்லுவதற்கில்லை என்று சொல்லி விட்டார். காங்கிரஸ் காரர்களின் தீர்மானத்தையாவது ஒப்புக்கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு அதை ஒப்புக் கொள்ளமுடியாது ஆயினும் எதிர்க்கமாட்டேன் என்று சொல்லி யிருக்கிறார். எனவே இவ்வார்த்தைகள் ஒரு பெரிய மகாத்மா என்றோ தலைவர் என்றோ பெரியவர் என்றோ சொல்லப்படுபவர் வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளா அல்லது ஒரு தந்திரக்காரர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகளா என்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டு கிறோம். எப்படி அவர் பேசியிருப்பதை பார்ப்பனப் பத்திரிகைகள் மகாத்மா காந்தியும் ராயல் கமிஷனை பஹிஷ்கரிக்கிறார் என்று தலையங்கமிட்டு எழுதி மக்களை ஏமாற்றுகின்றன, இதை ஸ்ரீமான் காந்தியவர்கள் அறிந்தே சும்மா இருக்கிறார்.
எனவே பாமர மக்களுக்கு எவ்வளவு ஆபத்து இருக்கின்றது என்ப தை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
குடி அரசு – கட்டுரை – 27.11.1927