பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேச்சு நீட் ஆதரவாளரின் புரட்டு வாதங்கள்
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக செப்.13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் கா. ரசினிகாந்த் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பிற்பகல் நிகழ்வில் பங்கேற்று பேசினார். அவரது உரையிலிருந்து: “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண், தனது 37ஆவது வயதில் உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல் தனக்கு மருத்துவ கல்லூரியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று வழக்கு தொடர்ந்தார். அரசியல் சட்ட நிர்ணய வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே வழக்கறிஞராக நின்று வாதிட்டபோது, “சென்னை மாகாண மக்கள், புதிய சகாப்தத்திற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கக் கூடாது”...