பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேச்சு நீட் ஆதரவாளரின் புரட்டு வாதங்கள்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக செப்.13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் கா. ரசினிகாந்த் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பிற்பகல் நிகழ்வில் பங்கேற்று பேசினார். அவரது உரையிலிருந்து:

“வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண், தனது 37ஆவது வயதில் உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல் தனக்கு மருத்துவ கல்லூரியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று வழக்கு தொடர்ந்தார். அரசியல் சட்ட நிர்ணய வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே வழக்கறிஞராக நின்று வாதிட்டபோது, “சென்னை மாகாண மக்கள், புதிய சகாப்தத்திற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கக் கூடாது” என்று வாதிட்டார். அதே குரலில்தான் இப்போது நீட் தேர்விலும், பார்ப்பன மேட்டுக்குடி பிரிவினர் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்த நீட் வேண்டும் என்கிறார்கள். நீட் தேர்வில் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஊடகங்களில் பா.ஜ.க.வினர் வாதிடுகிறார்கள். அந்த 69 சதவீத இடஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் உண்மையான சமூக நீதிக்கு தகுதியானவர்களா? வேறு மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் வாழ்ந்ததாக போலி சான்றிதழ் தந்து சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வுக்குப் பிறகு ஓராண்டு நீட் தேர்வுக்கான பயிற்சிகளை மட்டுமே பெற்று தேர்ச்சி பெற்றவர்களே இப்போது மருத்துவ சேர்க்கையில் அதிகம் இடம் பிடித்திருக்கிறார்கள். ‘பிளஸ் டூ’ தேர்வை முடித்து விட்டு உடனே நீட் தேர்வை எழுதும் மாணவர்களையும் ஓராண்டு காலம் நீட் தேர்வுக்கான பயிற்சியை மட்டுமே பெற்று தேர்வு எழுதுகிறவர்களையும் சமபோட்டியில் நிறுத்தலாமா?

நாமக்கல், இராசிபுரம் போன்ற கல்வி தொழிற்சாலைகளில் பயிற்சி தரப்படும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது, உண்மைதான். நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் 11ஆம் வகுப்பு பாடங்களை நிறுத்திவிட்டு 12ஆம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்களை வழக்கம்போல் தயார் செய்தார்கள். இனி அடுத்த ஆண்டுகளில் இந்த ‘கல்வி தொழிற்சாலைகள்’ விழித்துக் கொண்டு நீட் தேர்வு பயிற்சிகளை மட்டுமே வழங்கி, மீண்டும் தங்களின் கல்வி வணிகத்தைக் கொழிக்கச் செய்துவிடும். அரசு பள்ளிகளில் படித்த 4 மாணவர்கள் மட்டுமே இப்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடிந்திருக்கிறது. இனி அடுத்த ஆண்டு ஒரு அரசுப் பள்ளி மாணவர்கூட மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாத நிலை உருவாகிவிடும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறது. கடந்த  காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் நுழையவில்லை என்பது உண்மைதான். அதைக் காரணம் காட்டி, ‘நீட்’டை நியாயப்படுத்தக் கூடாது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தகுதியை உயர்த்த வேண்டும். இதுதான் சமூகநீதி. அதற்கான முயற்சிகளில் இப்போது தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இறங்கியிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி. நீட் தேர்வுமுறை தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முறையில் படித்து வரும் மாணவர்களுக்கு முற்றிலும் அன்னியமானது என்ற உண்மையை மறைத்து, நீட் தேர்வுக்கு ஆதரவான வாதங்களை முன் வைத்து பார்ப்பனிய மேட்டுக்குடிப் பிரிவினர் குழப்பி வருகிறார்கள்.

கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் குலைத்துவிட்டது என்று சொன்னால் அப்படி கிராமப்புற மாணவர்களுக்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? என்றும், நீட் வந்த பிறகுதான் கிராமப் புற மாணவர்கள் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றும் ஊடகங்களில் பா.ஜ.க. பார்ப்பனர்கள் வாதிடுகிறார்கள். அவர்களுக்கு சமூக நீதி வரலாற்றை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது-

“1967-68ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருந்தபோது மாவட்ட அளவில் இடஒதுக்கீடு முறையை தி.மு.க. ஆட்சி கொண்டு வந்தது. தர்மபுரி உள்ளிட்ட பின் தங்கிய மாவட்டங்களிலிருந்து படிக்க வரும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைய முடிந்தது. இதை எதிர்த்து ஒரு தனி மனிதர் (ராஜேந்திரன்) தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம்  மாவட்ட வாரி இடஒதுக்கீட்டை நீக்கிவிட்டது.

பின்பு 1970-71இல் அலகு முறையில் (ருnவை ளுலளவநஅ) இடஒதுக்கீடு முறையை தி.மு.க. ஆட்சி கொண்டு வந்தது. சென்னை அதன் சுற்றுப்புற மருத்துவக் கல்லூரிகள் ஒரு அலகாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் தனித்தனி அலகாகவும் கருதப்பட்டு, அந்தந்த கல்லூரியின் அலகுகளுக்கு உட்பட்டபகுதியில் உள்ளவர்களே அந்தந்த மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற முறையை உருவாக்கி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 41 சதவீத இடஒதுக்கீடு முறையும்கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பெரிய கருப்பன் என்ற ஒருவர் வழக்குப் போட்டார். உயர்நீதிமன்றம் அதையும் ரத்து செய்தது. பிறகு 1996ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கிராமப்புற மாணவர்களுக்கு தனியே 15 சதவீத இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. தி.மு.க.வின் திட்டம் என்றாலே அதை ஒழிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த ஜெயலலிதா, 2001இல் ஆட்சிக்கு வந்தவுடன், நேர்மாறாக 15 சதவீத கிராமப்புற இடஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயர்த்தினார். அதையும் உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. அப்போது ஊழல் வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வராக பதவிக்கு வந்த ஓ. பன்னீர்செல்வம், தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தாரே தவிர, எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

முதல் தலைமுறையாக பட்டப் படிப்பு படிக்க வரும் குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு, ‘ஓ.சி., பி.சி., எம்.பி.சி., எஸ்.சி.’ என்று அனைத்துப் பிரிவினருக்கும் ‘கட் ஆப்’ மதிப்பெண்ணோடு 5 மதிப்பெண் கூடுதலாக வழங்கும் ஒரு அருமையான திட்டத்தை முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார். அதையும் உயர்நீதிமன்றம் நீக்கம் செய்துவிட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நுழைவுத்தேர்வு முறையை ஜெயலலிதா ரத்து செய்தார். தி.மு.க. ஆட்சி நுழைவுத் தேர்வு ரத்தை சட்டமாக்கியது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மதிப்பெண் மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் நேர்முக தேர்வு முறை அமுலில் இருந்தது. நேர்முக தேர்வில் சமூகநீதியில் நம்பிக்கையுள்ள கல்வியாளர்கள் இடம் பெற்றிருந்தனர். கிராமப்புறத்திலிருந்து முதல் தலைமுறையாக படிக்க வரும் மாணவர்கள் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் குறைவு என்ற சமூகநீதிப் பார்வையில் நேர்முகத் தேர்வு வழியாக அவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண் போட்டு உயர்கல்வியில் நுழைய வழி வகுக்கப்பட்டது. நேர்முகத் தேர்வுக் குழுவுக்கு 150 வரை மதிப்பெண் போடும் உரிமை இருந்தது. இராஜ கோபாலாச்சாரி முதல்வராக வந்த பிறகு இந்த மதிப்பெண் வரம்பை 50ஆக குறைத்தார். காமராசர்  முதல்வர் பதவிக்கு வந்தவுடன் இந்த மதிப்பெண் வரம்பை 150ஆக உயர்த்தினார்.

இப்படி சமூகநீதி பார்ப்பன சக்திகள் அவர்களின் அதிகார மய்யமான உயர்நீதிமன்றம், உச்சநீதிமனறங்களின் தடைகளைத் தாண்டித்தான் தமிழ்நாடு அதை செயல்படுத்துவதில் உறுதிகாட்டி வந்திருக்கிறது.

50 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிலும் சமூக நீதியை பரவலாக்குவதற்காகவே உள் இடஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டன. பட்டியல் இனப் பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 69 சதவீத இடஒதுக்கீடு நீட் தேர்வில் பாதிக்கப்படவில்லை என்று வறட்டுத்தனமாக மட்டையடியாக பேசும் பா.ஜ.க.வினர், எண்ணிக்கைக்குள் அடங்கியிருக்கும் சமூகநீதிப் பகிர்வுகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நாம் அவர்களுக்கு தரும் பதில்.

நமக்கான கல்வி உரிமை கல்வி கொள்கைகளை நாமே உருவாக்கிக் கொள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரும் ஒற்றை முழக்கத்தையே நாம் முன்னெடுக்க வேண்டும். அதுவே அனிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்” என்றார் விடுதலை இராசேந்திரன்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பேசுகையில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, மீடியாக்கள் நீட் தேர்வை ஆதரிக்கும் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு முக்கியத்துவம் தருவதைக் கண்டித்துப் பேசினார்.

காலை நிகழ்வில் தி.க. தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி, மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் பங்கேற்றுப் பேசினர்.

பெரியார் முழக்கம் 21092017 இதழ்

You may also like...