பெரியார் – ஃபிரெட்ரிக் டக்ளஸ் அடிமை சுதந்திரத்துக்கு எதிராக விடுதலைக் குரல்
1947, ஆகஸ்ட் 15 அன்று ‘சுதந்திரம்’ அறிவிக்கப்பட்டபோது அதைத் துக்க நாள் என்று அறிவித்தார் பெரியார். அதேபோல் அமெரிக்காவில் கறுப்பர் மக்களின் உரிமைக்குப் போராடிய ஃபிரடரிக் டக்ளஸ் 1776இல் அமெரிக்கா சுதந்திரம் பெற்றபோது அது கறுப்பர் இன மக்களுக்கு விடுதலை நாள் அல்ல என்று பேசினார். அவரது உரை பிற்காலத்தில் கறுப்பர் இன உரிமைப் போராட்டத்துக்கு வித்திட்டது. 1947ஆம் ஆண்டு பெரியார் விடுத்த அறிக்கையையும் பிரடரிக் டக்ளஸ் உரையையும் இளைய சமுதாயத்தின் வரலாற்றுப் புரிதலுக்காக ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது. “பிரிட்டிஷ்-பனியா-பார்ப்பனர் ஒப்பந்த நாள் – பெரியார் அறிக்கை: ஆகஸ்ட் 15-ந் தேதி சுயராஜ்யத்தைப் பற்றி ஏதேதோ கூறப்படுகிறது. பூரண சுயராஜ்யம் என்றும், அதற்காகக் கொண்டாட்டமென்றும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படுவதற்கில்லை; வேண்டு மானால் தன்மானமுள்ள காங்கிரஸ் திராவிடர்கள் அன்று வெட்கித் தலைகுனிய வேண்டும்; ஏன்? 1929ஆம் ஆண்டிலே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த அர்த்தத்தில் தீர்மானிக் கப்பட்டதோ...