பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (8) வைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன் சிறையில் வேலை செய்தார் பெரியார்
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.
(கடந்த இதழில் வெளியான பெரியார் உரையின் தொடர்ச்சி.)
ஈரோட்டிலே நான் தேவஸ்தானக் கமிட்டித் தலைவனாக இருந்த போது, நான் ஊரில் இல்லாத ஒரு நாளில் தோழர்கள் பொன்னம்பலமும், குருசாமியும், இப்போது காங்கிரசுக்காரர்களாக இருக்கும் ஈசுவரனும், எங்கள் ஆபிசிலே வேலை செய்கிற இரு ஆதி திராவிடரை விபூதிப் பூசச் சொல்லிப் பூசி, கோயில் உள்ளே அழைத்துச் சென்றவுடன் பக்தர்களெல்லாரும் சத்தம் போட்டுக் கோயிலுக்குள் இவர்கள் உள்ளே சென்ற தும், அவர்களை உள்ளே விட்டு வெளிக் கதவுகளைப் பூட்டி விட்டார்கள். அது குறித்து வழக்கும் போட் டார்கள்! சாமி தீட்டாய் போச்சு என்று வாதாடி தண்டிக்கச் செய்தார்கள்! பிறகு ஹைக்கோர்ட்டிலே அதற்கு எதிராகத் தீர்ப்புக் கிடைத்தது.
ஆனால், இந்தியாவிலேயே முதன்முதலில் சுசீந்திரம் கோயிலில்தான் கோயில் நுழைவுக்கென்று கிளர்ச்சி தொடங்கப்பட்டது. அந்தக் காலத்திலே கோட்டயத்திலே என் தலைமையில் ஒரு சுயமரியாதை மகாநாடு போட்டார்கள். அதில் சாதி ஒழிப்பு சம்பந்தமாகவும், கோயில் நுழைவு உரிமை சம்பந்தமாகவும் பலவிதத் தீர்மானங்களையும் போட்டார்கள்.
அடுத்து, எர்ணாகுளத்தில் ஒரு மாநாடு என் தலைமையில் கூட்டப்பட்டது. அதில் ஜாதி ஒழிப்புக்காக ஜாதியில்லாத மதமாகிய இஸ்லாம் மதத்தில் இந்துக்கள் சேர்ந்து விடுவது என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டு வரப்பட்டது. சில செல்வாக்குக்கு உட்பட்டவர்கள் கிருஸ்தவ மதத்தில் சேருவது என்று திருத்தம் கொண்டு வந்தார்கள். மாஜி மந்திரி அய்யப்பன் அவர்கள் இஸ்லாம் மதத்திற்குப் போய் சேருவது என்பதை விருப்பப்பட்ட மதத்தில் சேர்ந்து கொள்ளலாம் என்று திருத்திப் போட வேண்டுமென்று சொல்லி ஏகமனதாய் நிறைவேறச் செய்தார்.
இஸ்லாத்தில் சேருவது என்ற தீர்மானம் வந்த அன்றைக்கே அய்ம்பது பேர்களாவது முஸ்லிமாகி விட்டார்கள். பிறகு வெளியிலும் பலர் மதம் மாறி விட்டார்கள். இது ஒரு பெரிய கலக்கு கலக்கிவிட்டது.
இப்படி முஸ்லிமான ஓர் ஆள் (அவர் புலையர் வகுப்பைச் சேர்ந்தவர்) ஆலப்புழையில் ஒரு நாயர் கடையில் கடை மீது ஏறிச் சாமான் கேட்டார் என்பதை வைத்துக் கொண்டு (கடைக்கார நாயர்) ஓங்கி அடித்தான்! அவர் சத்தம் போடவே நாயர்களும் ஓடி வந்தார்கள். சாயபுக்களும் ஓடி வந்து பலமான அடிதடி சண்டை நடந்தது. ஒருவர் செத்து விட்டார். இந்த மாதிரி இந்து-முஸ்லிம் கலவரம் வலுத்தவுடன் மேலே எல்லாம் தந்தி கொடுத்தார்கள். அப்போது திவானாக இருந்த சர் சி.பி. இராமசாமி அய்யர் இதை இந்து-முஸ்லிம் சச்சரவு என்று சொல்லிக் கொள்ளாமல், முதலாளி – தொழிலாளி சண்டை என்று சொல்லி அடக்கிவிட்டார்கள்.
பிறகு, மன்னருக்கு சி.பி. இராமசாமி, ஈழவர் புலையர்களெல்லோரும் துலுக்கராக மாறிக் கொண்டிருக்கிறார்கள்; இதற்கு மருந்து கோயிலைத் திறந்து விட்டுவிட வேண்டியதுதான் என்று மனு போட்டார்கள். அப்போது ஆயுசு ஓமம் நடந்து கொண்டிருக்கிறது. ராஜாவும் இதைக் கேட்டு ஒப்புக் கொண்டு பிறந்த நாளுக்கு ஏதாவது நல்ல சேதி ஆண்டுதோறும் சொல்லுவதில் இந்த ஆண்டு ராஜா பிறந்த நாள் செய்தியாக கோயில் எல்லா இந்துக் களுக்கும் திறந்து விடப்படும் என்று அறிவித்தார். இப்படித்தான் அங்கு ஆலயப்பிரவேச உரிமை கிடைத்தது.
இதற்கப்புறம்தான் ஆச்சாரியார் முழங்கினார். அதற்குப் பிறகு தான் காந்தியாரும் மற்றவர்களும் மாறினார்கள். இந்தக் காரியம் எல்லாம் காந்தியால் தான் நடந்தன என்பதெல்லாம் வெறும் பித்தலாட்ட மாகும். காந்தி தீண்டாதார் என்ற மக்களுக்கும், ஆதி திராவிட மக்களுக்கும் ஒடிந்த ஊசியளவுக்குக்கூட அவர்களது இழிவு நீங்கப் பாடுபடவில்லை என்று டாக்டர் அம்பேத்கர் எழுதி யுள்ளார். காங்கிரசும் காந்தியும் தீண்டாதவர்களுக்கச் செய்தது என்ன? (றுhயவ ஊடிபேசநளள யனே ழுயனோi hயஎந னடிநே வடி ரவேடிரஉhயடெந) என்னும் புத்தகத்தைப் பார்த்தால் தெரியும்.
வைக்கம் போராட்டம் குறித்து பெரியாரே விளக்கிய வரலாற்று உரை இது. இந்த உரையில் பெரியார் சிறையில் தான் சந்தித்த அடக்குமுறைகள் குறித்து எதையும் பதிவு செய்யவில்லை. அடக்கு முறைகளை எப்போதுமே வரவேற்கக் கூடிய தலைவர் பெரியார். அதன் வழியாக தனது கொள்கைகள் பரவும் என்ற உறுதியான பார்வை அவரிடம் இருந்தது. ‘சுயவலி’களை சுயமரியாதைக்கான போராட்டத்தின் அடித்தள மாக்கியதே அவரது தனித்துவம். திரு.வி.க. தனது வாழ்க்கைக் குறிப்புகளில் வைக்கம் போராட்டம் குறித்து பெருமையுடன் பதிவு செய்கிறார். வைக்கம் வீரர் என்ற பட்டத்தை பெரியாருக்கு சூட்டியதும் திரு.வி.க. தான்.
வைக்கத்தில் போராட்டத்தைத் தொடங்கிய முன்னணி தலைவர்களில் ஒருவர் கேசவமேனன். போராட்டம் தொடங்கிய முதல்நாளான 30.3.1924 அன்று தடை செய்யப்பட்ட வீதிகள் வழியாக போராட்டக்காரர்களுக்கு தலைமையேற்று வழி நடத்திச் சென்ற மூன்று தலைவர்களில் கே.பி. கேசவமேனனும் ஒருவர். டி.கே. மாதவன், கேளப்ப நாயனார் ஆகியோர் மற்ற இரண்டு தலைவர்கள். கேசவ மேனன் மலையாளத்தில் எழுதிய தனது சுயசரிதையில் பெரியார் வைக்கம் போராட்டத்தில் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எத்தகைய அடக்குமுறைகளைச் சந்தித்தார் என்பதை இவ்வாறு பதிவு செய்கிறார்:
“With fetters on his legs, a convitc’s cap on his head, a loin cloth reaching down his knee and a wooden number plate around his neck, E.V. Ramaswamy is working with muderers and dacoits. He is doing double the work that is generally done by a convict. This sacrifice of a caste Hindu for the freedom of the untouchbles of Kerala gave us new life. The noble mission of this great movement has prompted him to sacrifice his all.
Is there not anybody here with the maturity, magnanmity, experience, enthusiasm and patriotism that E.V.R. has? Are they not ashamed of themselves when they see this grat leader who has come to suffer for the sake of the people of this state? Is it not time for the elderly and experienced people of Kerala to rise from their easy chairs?
கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங் காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைக்காரர்களோடும், கொள்ளைக் காரர்களோடும் வேலை செய்து கொண் டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அதுபோல் இருமடங்கு வேலை செய்கிறார்.
ஒரு ‘சாதி இந்து’ என்று சொல்லக்கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத்தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காக செய்த தியாகம் நமக்கு புதுவாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப் பற்று, உற்சாகம், அனுபவம், பெருந் தன்மை, பெரும் பக்குவம் இவைகளெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காகத் தாம் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே – அதைப் பார்த்து இந்த மாநில மக்களாக இருக்கிற யாருக்குமே வெட்கமேற்பட வில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவ மிக்க தலைவர்கள் தங்கள் சாய்வு நாற்காலி யைத் தூக்கியெறிந்துவிட்டு தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வர வேண்டாமா?”
– கே.பி. கேசவமேனன்
தன் வரலாறு
பெரியார் வைக்கத்தில் போராடியது தீண்டப் படாத மக்களுக்காக அல்ல என்றும், ‘ஈழவர்’ என்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் பேராடினார் என்றும் பெரியார் எதிர்ப்பாளர்கள் உள்நோக்கத் தோடு குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். தீண்டமைக்கு உள்ளாகிற எந்த ஜாதியினராக இருந்தாலும் அவர்கள் ‘தீண்டப்படாதவர்கள்’ என்ற அடிப்படை உண்மையை மறைத்துவிட்டு அது ‘ஈழவர்களுக்கான தீண்டாமை’ என்று தீண்டாமைக்குள் ‘ஜாதிய ஆய்வு’ நடத்தியவர்களுக்கு கே.பி. கேசவமேனன் எழுதியுள்ள இந்த வரிகளே சரியான பதிலடியைத் தருகிறது.
பெரியார் தான்அனுபவித்த இந்த அடக்கு முறைகளைப் பற்றி எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாத நிலையில் கேசவமேனன் வழியாகவே நாம் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
பெரியார் முழக்கம் 14022019 இதழ்