இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2) “நாடகங்களில் கருத்துகளே வேண்டும்; இசையைத் தவிர்க்க வேண்டும்” என்றார் பெரியார் முனைவர் வே. இராமசாமி
இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் நடத்திய கலகம் குறித்து முனைவர் வே. ராமசாமி எழுதிய நூலிலிருந்து இரண்டாம் பகுதி இது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்தில் பெரியாரின் தலைமை உரை. நாடகம் குறித்த அவரது ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்துக்கு தலைமையேற்று சென்னையில் பெரியார் பேசினார். பெரியார் தன் தலைமையுரையில், “….. இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது, நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும்தான் கருத வேண்டும். நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவும் தான்...