ஒற்றை ஆட்சி வழியாக வேத காலத்தை நிறுவ முயற்சி!
இந்தியா என்பது ஒரு தேசமாகவே உருவாகவில்லை. பல்வேறு பண்பாடு, மொழி, பேசும் மாநில மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டம். அரசியல் சட்டமே அப்படித்தான் கூறுகிறது. ஆனால் பெரும்பான்மை பலத்துடன் அதிகாரத்துக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி, இந்தியாவை ஒற்றை ஆட்சி நோக்கி வேகவேகமாக இழுத்துச் செல்வதற்கான சட்டங்களை அதிரடியாக அமுல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் ஒருமைப்பாடு என்பதன் அடித்தளம் மாநிலங்களின் தன்னாட்சியிலும் கூட்டாட்சி தத்துவத்திலும் தான் அடங்கியிருக்கிறது. அவைகள் தகர்க்கப்படும்போது இந்தியாவின் ஒருமைப்பாடும் வேகமாக தகரும் நிலைதான் உருவாகும் என்பதை பார்ப்பனியம் உணர மறுக்கிறது.
இனங்களின் அடையாளம், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அடையாளங்கள் அழிக்கப்படும் போதும் விடுதலைக்கான போராட்டங்களும் போர்களும் தொடங்கி விடும் என்பதுதான் வரலாறு கூறும் படிப்பினை. இந்தியாவிலே தனி மாநிலம் கோரி போராடிய நாகாக்கள், போடோக்கள் இரஷ்யாவிலிருந்து பிரிந்து போக போராடி வரும் செச்சென்ஸ் (ஊhநஉhநளே) மக்கள், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து போக போராடும் பலுசிஸ்தான், இந்தோனேசியாவிலிருந்து பிரிந்து போக விரும்பும் மேற்கு பப்புவா (றுநளவ ஞயயீரய) எத்தியோப்பியா, சோமாலி பகுதியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள போராடி வரும் ஒரோமோக்கள், சோமாலியர்கள், துருக்கியிலிருந்து விடுவித்துக் கொள்ளப் போராடும் குர்து இன மக்கள், ஜியார்ஜியாவிலிந்து விடுதலை கோரி போராடும் தெற்கு ஒசேஷியா (ளுடிரவா டீளநநவயை) மற்றும் அப்கார்ஷியா (ஹமொயணயை), சிங்கள பேரினவாதத்திலிருந்து விடுவித்துக் கொள்ளத் துடிக்கும் ஈழத் தமிழர்கள், காஷ்மீரிகள் நடத்தி வரும் போராட்டம் எல்லாவற்றுக்குமே அடிப்படை ஒரு இனத்தின் அடையாளத்தை அழித்து உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சி முறையைத் திணிப்பதுதான். கியூபெக், ஸ்காட்லேண்ட் மாநிலங்களின் மக்களும் தங்களின் அடையாளம், உரிமைகள் மறுக்கப்படுவதற்காகவே முறையே கனடா, பிரிட்டன் நாடுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள போராடி வருகிறார்கள். ஒரு தேசம் ஒற்றுமையாக ஒருமைப்பாட்டோடு உருவாக வேண்டுமானால் அத்தேசத்தில் அடங்கியுள்ள பல்வேறு இனமக்களின் சுயாட்சி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே தலைசிறந்த அரசியல் ஆய்வாளர்கள் அழுத்தமாக வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒரு அரசாக இருந்தாலும் சரி; சமூகமாக இருந்தாலும் சரி; மற்ற சமூகத்தவர்களை பாதிப்புக்கோ, இழிவுக்கோ உட்படுத்தக் கூடாது. தாங்களே கடவுளால் சமூகத்தை அடக்கி ஆள பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று ‘பிராமணர்’ என்ற சமூகம் இங்கே பல நூறு ஆண்டுகளாகக் கூறிக் கொண்டு அதை உறுதிப்படுத்தி வருகிறது. ஒரு நாட்டின் அரசியல் சட்டம், குடிமக்கள் அனைவரும் சமம் என்று கூறினாலும் அதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் தங்களின் ‘ஆகம விதிகளுக்கு’ உண்டு என்கிறார்கள். நீதிமன்றங்களே அதற்கு பணிந்து போகின்றன. மற்றொரு புறம் சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்திக் கொண்டு அதுவே ‘தர்மம்’ என்று பேசும் ‘மனுதர்மம்’ அரசியல் சட்டங்களுக்கு சவால் விடுகிறது. அரசியல் சட்டம் உருவாக்கிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துக் கொண்ட பா.ஜ.க. இப்போது என்ன செய்கிறது?
அரசியல் சட்ட அமைப்பின் வழியாகக் கைப்பற்றிய அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து, ‘மனுதர்ம’ ஆட்சியான இராமராஜ்யத்தை நிறுவத் துடிக்கிறது.
முதற்கட்டமாக இந்தியாவை ஒற்றை ஆட்சி அதிகாரக் கட்டமைப்புக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது அவர்களின் முன்னுரிமைத் திட்டம். அந்த நோக்கத்தோடு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரமற்றவைகளாக்கப்படு கின்றன. அதற்கான சட்டங்கள் வேகவேகமாக அதிரடியாக வந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆபத்துகளை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? மாநிலங்களின் முழுமையான உரிமைக்கான சுயஆட்சி உரிமைகளை வலியுறுத்தி, அதை மக்கள் இயக்கமாக்க வேண்டும். தமிழ் நாட்டை வடவர் மயமாக்கி சமஸ்கிருதம், இந்தி, பார்ப்பனிய வேத கலாச்சார மரபுகளை திணிக்கிறார்கள். இவற்றிற்கு எதிரான இயக்கத்தை மாநில சுயாட்சி முழக்கங்களோடு இணைக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமே இதற்காக வழிகாட்டும் மாநிலமாக இப்போது இருக்கிறது!
நிமிர்வோம் ஆகஸ்ட் 2019 மாத இதழ்