மோடியின் ஆணவமும் – ஜெட்லியின் திறமையின்மையும்
பொருளாதாரத் துறையில் மோடி அரசின் தோல்விகள் : அவர்களே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்ட வேடிக்கை.
பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும் இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார்.
தனக்குப் பதவி அளிக்காமல் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போன அருண்ஜேட்லிக்கு நிதித்துறை மட்டுமின்றி மேலும் மூன்று துறைகளின் பொறுப்பை (ஆக மொத்தம் 4 துறைகள்) அளித்த கடுப்பில் சின்ஹா இதை எல்லாம பேசியபோதும் அவர் வைத்த விமர்சனங்கள் முற்றிலும் சரியானவை. பொருளாதாரம் போன்ற முக்கியமான துறையின் அமைச்சருக்கு மேலும் இரண்டு மூன்று துறைகளின் பொறுப்பை அளிப்பது என்பதெல்லாம் மோடியின் எதேசாதிகாரத் தன்மைக்கு மட்டுமல்லாமல் திறமை இன்மைக்கும் சான்றாக அமைந்தது.
மோடி அரசின் திறமை இன்மை மற்றும் பொருளாதாரத் துறையில் அடைந்த பின்னடைவு ஆகியவற்றிற்கு மேலும் சில எடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.
40 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய டெலிகாம் துறை கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது என 2018ஆம் ஆண்டு பொருளாதார சர்வே (Economic Survey 2018) படம் பிடித்துக் காட்டியது. அதன் கடன் சுமையின் அளவு சுமார் 7 லட்சம் கோடி எனச் சொல்லப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. டெலிகாம் நிறுவனங்கள் மூடப்படுவதும், ஓடோபோனும், ஐடியாவும் இணைக்கப்பட்டதும் இந்த ஆட்குறைப்புக்குக் காரணமாய் இருந்தன.
உற்பத்தித் திறன் குறைந்த காலாவதியாகிப் போன எந்திரங்களுடன் கூடிய ‘டெக்ஸ்டைல்’ துறையில் ஜன 2018ல் ஏற்றுமதி வீழ்ச்சி ஆண்டுக்குப் 13 சத அளவு தொடங்கியது. எஃகு இரும்புத் துறைதான் கார்பொரேட்களின் அதிக அளவு வாராக் கடனுக்குக் காரணமாகியது என்கிறது IBC. ஒரு 45 வாராக் கடன்களில் மட்டும் 57,000 கோடி ரூபாய் முடங்கி உள்ளது.சீனா, தென் கொரியா, உக்ரேன் முதலான நாடுகளிலிருந்து இங்கு இறக்குமதியாகும் இரும்பு உள்நாட்டு உற்பத்தியைப் பெரிய அளவு பாதித்தது.
தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொருத்த மட்டில் 2016ல் தொடங்கப்பட்ட 40 சத தொழில்கள் தோல்வி அடைந்தன. 2017ம் ஆண்டின் முதல் பாதியில் தொடங்கப்பட்ட 53ரூ சிறு முயற்சிகளும் வீழ்ந்தன.
MSME எனப்படும் மிகச் சிறிய, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைதான் (Micro, Small & Medium enterprises) மோடி அரசின் பண மதிப்பீட்டு நீக்கம் மற்றும் GST கொள்கையால் பெரிதும் பாதிக்கப் பட்டது. ரிசர்வ் வங்கியின் Mint Street அறிக்கையின்படி (2018 ஆகஸ்ட்) இந்தத் தொழில்களில் கடன் வரவுகள் மேலும் குறையத் தொடங்கின. இன்னொரு பக்கம் GST வரி ஏற்றுமதிகளைப் பெரிய அளவில் பாதித்தது. இந்தத் துறையில் 6.3 கோடி நிறுவனங்கள் உள்ளன. 11.1 கோடிப் பேர் வேலை செய்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GST) 30 சதம் இதன் மூலமே உற்பத்தியாகிறது. 43ரூ உற்பத்தியும் இதன் மூலம்தான். மொத்த ஏற்றுமதியிலும் 40 சதம் இதன் மூலம்தான். நோட்டுகளைச் செல்லாமலாக்கியதன் மூலமும் GST வரிவிதிப்பின் மூலமும் இவை எல்லாமும் பெரிய அளவில் பாதிப்பிற்கு உள்ளானதோடு அதிக அளவு வேலை இழப்பிற்கும் காரணமாகியது..
சமீப காலங்களில் மோடி தலைமையில் இந்த அமைச்சரவை அமைந்தபோதுதான் உலக அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்து மிகச் சாதகமான பொருளாதாரச் சூழல் அமைந்தது. மன்மோகன் அரசு இருந்த காலத்தில் உலக அளவில் பொருளாதாரப் பின்னடைவு (recession) ஏற்பட்டபோது (2008) அது இந்தியாவை பெரிய அளவில் தாக்காது தடுக்கப் பட்டது. ஆனால் ஓரளவு சாதகமான பின்புலம் அமைந்தும் இந்தியா பொருளாதாரத் துறையில் தோல்வி அடைந்துள்ளதற்கு மோடியின் திமிர், அருண்ஜேட்லியின் திறமையின்மை ஆகியவை காரணமாக இருந்தன.
யஷ்வந்த் சின்ஹா மட்டுமல்ல பாஜகவின் இன்னொரு கூட்டணிக் கட்சியான சிவசேனாவும் இதை ஒட்டிக் கடுமையாக மோடி அரசைத் தாக்கியது.
முன்னதாக தம் ஆட்சியில் GDP வளர்ச்சி 5.7 சதம் என நரேந்திர மோடி சொன்ன போது மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் அது வெறும் 3.7 சதம்தான் என்பதை நிறுவினர். அதைச் சுட்டிக் காட்டிய சிவசேனா இப்போது அதையே யஷ்வந்த் சொல்கிறாரே என்ன சொல்கிறாய் எனக் கேட்டது. ஆது மட்டுமல்ல “விகாஸ்” என நீ பெருமை அடித்துக் கொண்டாயே அதைப் பைத்தியக்காரத் தனம் என அப்போது ராகுல் சொன்னதல்லவா இப்போது உண்மை ஆகிவிட்டது என்றும் சிவசேனா மோடிக்கு சவால் விட்டது.
“உனது பண மதிப்பு நீக்கம் பொருளாதாரத்தை மேல் நோக்காமல் கீழ் நோக்கியல்லவா தள்ளியது. அதனால் உற்பத்தி குறைந்தது. பணவீக்கம் எகிறியது. காஸ், டீசல் எல்லாம் விலை கூடியது. வேலை வாய்ப்புகள் குறைந்தன. முதலீடுகள் சரிந்தன. வங்கித் துறை தத்தளிக்கிறது.
நாங்கள் ஒராண்டுக்கு முன்னால் இதைச் சொன்ன போது துரோகி என்றீர்களே, இப்போது என்ன சொல்கிறீர்கள்?” – என சிவசேனா மடக்கியபோது,
நரேந்திர மோடி வழக்கம்போல மௌனம் காத்தார்.
நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்