காத்திருக்கும் கோட்சே கூட்டம்! புரட்சிக் கவிஞர்
1.3.1948இல் ‘குயில்’ ஏட்டில் எழுதிய கவிதை
பெருநிலையில் இருக்கின்றீர் காமராசப்
பெருந்தகையீர்! உம்பெருமை அவர்கள் கண்ணில்
கருவேலின் முள்போல உறுத்தும், நீவீர்
கடுகளவும் அஞ்சாதே கோட்சே கூட்டம்
திரைமறைவில் நோக்கத்தை வைத்திருக்கும்
வெளிப்புரத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த
விரிவுதனை நீர் அறிவீர் அஞ்சவேண்டா;
கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும்
ஏழைக்கும் செல்வனுக்கும் பன்மதத்தார்
எல்லார்க்கும் எதிலும் நலம்புரிய எண்ணி
வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல்
மார்பு பிளந்தார்; காமராசரே, எம்
தோழரே! திராவிடரே உமது மேன்மை
தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்!
ஆழ்ந்திதனை எண்ணிடுக கோட்சே கூட்டத்
ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை!
வரலாற்றுக் குறிப்பு: ……………. காந்தியை கோட்சே சுட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் முதல்வராக இருந்த ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) மற்றும் காமராசர் ஆகிய இருவருக்கும் சேர்த்து – புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை இது. காமராசர் மீதான பகுதியை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளோம். புரட்சிக் கவிஞர் எச்சரித்தபடியே 18 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் காமராசர் தங்கியிருந்த வீட்டுக்கு தீ வைத்து வெறியாட்டம் போட்டது கோட்சே கூட்டம். காமராசர் – உதவியாளர் உதவியுடன் தப்பினார்.
நிமிர்வோம் ஜுலை 2019 இதழ்