வரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள் – ம. கி. எட்வின் பிரபாகரன்
‘நாடார் வரலாறு கருப்பா? காவியா?’ என்ற நூலை சமூக வரலாற்றுச் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய். தடைகள் எதிர்ப்புகளைக் கடந்து நீதிமன்ற அனுமதி பெற்று வந்திருக்கும் இந்த நூல் நாடார் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சமூக வரலாறுகளை விவரிக்கிறது.
இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டோர் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். இடுப்பில் குடம் வைத்துக்கொள்ளக்கூடாது; நகைகள் அணியக்கூடாது; ஆதிக்கவாதிகள் புதிதாக கோயில் கட்டினால், அதில் ஒடுக்கப்பட்டோர் குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட வேண்டும்; தலைப்பாகை அணியக்கூடாது; மீசை வைத்துக் கொள்ளக்கூடாது; ஓட்டு வீடுகளை கட்ட தடை; கோயிலுக்குள் நுழைய தடை; மார்பை மறைக்கத் தடை என்று இன்னும் எவ்வளவோ கொடுமைகளை ஒடுக்கப்பட்டோர் சந்தித்துள்ளனர். “ஆதிக்கவாதிகள், ஒடுக்கப்பட்டோர்” போன்ற பதங்கள் துல்லியமில்லாதவை. ஒடுக்கப்பட்டோருள் ஆதிக்கவாதிகளும் உண்டு; ஆதிக்கவாதிகளுள் ஒடுக்கப்பட்டோரும் உண்டு. நாடார்களும் மேலே கண்ட ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகினர்; பிறரை ஒடுக்கவும் செய்தனர். 1931இல் திருவிதாங்கூர் சமஸ்தான ஒடுக்கப்பட்டோர் (னுநயீசநளளநன ஊடயளளநள) பட்டியலில் “நாடார்” பெயர் உள்ளது. ஆனால், 1936இல் வெளியிடப்பட்ட பட்டியல் ஜாதியினர் (ளுஉhநனரடநன ஊயளவநள) பட்டியலில் பெயரில்லை. ஹிந்துத்துவமும், சனாதனதர்மமும், ராம ராஜ்ஜியமும் நாடார்களை அடிமைகளாக்கின. ஆனால், இன்றைய நிலை என்ன? எந்த கொள்கைகள் தங்களை அடிமைகளாக்கியதோ, அதே கொள்கைகளை முன்னிறுத்தும் இயக்கங்களில், கட்சிகளில், கணிசமான எண்ணிக்கையில் நாடார்கள் பலர் உள்ளனர்.
இந்த சூழலில் தான், நாடார்களை காவி பார்ப்பனியப் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்புணர்வோடு, “நாடார் வரலாறு கறுப்பா? காவியா?” என்ற நூலை பல தடைகளைக் கடந்து, வழக்கறிஞர் லஜபதி ராய் கொண்டு வந்துள்ளார். மதுரை தமிழ்ச் சங்க அரங்கில், வெளியீட்டு விழா நடைபெறவிருந்த நிலையில், பாஜகவின் தூண்டுதலால், கடைசி நேரத்தில் அரங்கம் மறுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தடையை உடைத்து, அதே அரங்கில் வெளியீட்டு விழாவை நடத்திக் காட்டினார் லஜபதி ராய். இத்தகைய நூல்களை நாடார்கள் கணிசமாக வாழும் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் பரப்ப வேண்டியது நம் கடமை.
“இஸ்லாமிய – கிறிஸ்தவ சமூகத்தினருட னும், பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடனும் நிற்க வேண்டிய நாடார்களின் எண்ண ஓட்டத்தில், இந்து வலதுசாரி சிந்தனை மிகுதியாக இருப்பதை சமீப காலமாக முகநூலிலும், பிற சமூக ஊடகங்களிலும் காண முடிகிறது. இந் நிலையில் கடந்த இருநூறு ஆண்டு கால வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசிய மாகிறது” – என்று இந்நூலை எழுதியதன் நோக்கம் குறித்து லஜபதிராய் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். நாடார்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளைப் பற்றி விளக்கும் இந்நூலைப் பற்றியும், நூலில் எடுத்தாளப்பட்டிருக்கும் பொருளைப் பற்றியும் ஆராய்வோம்.
யார் இந்த முத்துக்குட்டி?
எத்தனையோ ஒடுக்குமுறைகளை நாடார்கள் சந்தித்திருந்தாலும், மிகவும் வியப்புக் குள்ளாக்குவது மொழி சார்ந்த ஒடுக்குமுறைகளே! ஆதிக்கவாதிகள் “சாப்பாடு சாப்பிட்டேன்” என்று பேசலாம். ஆனால், ஒடுக்கப்பட்டோர், “கஞ்சி குடித்தேன்” என்று தான் கூற வேண்டும். அதே போன்று, பெயர் வைப்பதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஹிந்து கடவுளர் பெயர்களை வைக்க அனுமதி மறுக்கப் பட்டது. அதனால் தான் அய்யா வைகுண்டரின் பெற்றோரால், தாங்கள் விரும்பிய பெயரை அவருக்கு வைக்க முடியவில்லை. பெருமாள் “முத்துக்குட்டி” ஆனார். ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்த அய்யா வைகுண்டர், “கோயிலுக்கு காணிக்கை செலுத்தாதீர், காவடி எடுக்காதீர், ஊட்டுப்புரை தராதீர், குருபூஜை நடத்தாதீர், விலங்குகளை நரபலியிடாதீர், உருவங் களை வழிபடாதீர், மாட்டைக் கும்பிடாதீர்” என்று ஒரு பகுத்தறிவாளரைப் போல பிரச்சாரம் செய்தார் அந்த ஆன்மீகவாதி! இதனால் கிறிஸ்தவ போதகர்களின் எதிர்ப்பையும், சனாதனவாதி களின் எதிர்ப்பையும் சந்தித்தார். அவரைப் பின்பற்றுவோர் அய்யா வழியினர் எனப்பட்டனர். ஆனால், இன்றைய நிலை என்ன? எந்த வைகுண்டர் ஹிந்துத்துவத்தை எதிர்த்தாரோ, அவரை கடவுளின் அவதாரமாக அய்யா வழியினர் பார்க்கின்றனரேயன்றி, ஒரு சனாதன எதிர்ப்பாளராக பார்ப்பதில்லை. இதன் விளைவு, அய்யா வழியினரிலும், வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாகி விட்டனர். இது வைகுண்டருக்கு செய்யும் துரோகமாகும். வைகுண்டரை அவதாரமாக பார்க்காமல், மத சீர்திருத்தவாதியாகப் பார்க்கும் பக்குவத்தை அய்யாவழியினர் அடைய வேண்டும்.
தோள் சீலை கலகம்
தோழர் லஜபதிராய், வரலாற்றில் பதிவான பல போராட்டங்களைப் பற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளார். அவற்றுள் முக்கியமானது
தோள் சீலை கலகம் (1812 –மற்றும் 1859 ஆண்டுகளில்). தெற்கு கேரளமும் (எர்ணாகுளம் மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை), கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பகுதியும் இணைந்தது திருவிதாங்கூர் சமஸ்தானமாகும். நாடார், ஈழவர், பறையர், புலையர், குழுவர், சாம்பவர், வள்ளுவர் சமூக பெண்கள், தங்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்காத கொடூரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்தது. பார்ப்பனர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் மட்டுமே மார்பை மறைக்கும் உரிமை வழங்கப் பட்டிருந்தது. நாடார்களில் பெரும்பான்மை யானோருக்கு இந்த உரிமை வழங்கப்படவில்லை. எனினும், குமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் பகுதியில் வாழ்ந்த சில நாடார் குடும்பங்களுக்கு மட்டும் மார்பை மறைக்கும் உரிமை வழங்கப் பட்டிருந்தது. இவர்கள் மற்ற நாடார்களுக்கு இவ்வுரிமையை பெற்றுத்தர போராடவில்லை. மாறாக, இவ்வுரிமை தங்களுக்கும், பார்ப்பனர் களுக்கும், வெள்ளாளர்களுக்கும் மட்டுமே இருக்க ஆதரவளித்தனர்; வரலாற்று துரோகமிழைத்தனர்.
தோள் சீலை அணிய உரிமை கேட்டு நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்கள் பலனில்லாமல் போயின. வெள்ளைக்காரர் – பார்ப்பனர் கூட்டு நிர்வாகம், ராம ராஜ்ஜிய மாகவே இருந்தது. இதன் விளைவாக பல நாடார்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினர். போராட்டங்கள் தொடர்ந்தன. 1812இல் கிறிஸ்தவ நாடார் பெண்களுக்கு மட்டும் மார்பை மறைக்க கேணல் மன்றோ அனுமதி வழங்கினார். ஆனால், முரட்டுத் துணியாலான தோள் சீலை அணிய அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 1814இல் திருவிதாங்கூர் மன்னரும் சாதாரண துணியாலான தோள் சீலை அணிய அனுமதி வழங்கினார். கிறிஸ்தவ நாடார்களுக்கு அரைகுறை அனுமதி வழங்கியதையடுத்து, ஹிந்து நாடார்களும் உரிமைக் கேட்டு போராடினர். பலர் பத்தாண்டுகள் போராடியதன் விளைவாக, 1855இல் சாதாரண தோள் சீலை அணிய அனுமதி வழங்கப்பட்டது. இதன் விளைவாக, 1858இல் மிகப் பெரிய கலவரத்தை ஆதிக்கவாதிகள் நடத்தினர். அதன் பின், தொடர் போராட்டங் களின் விளைவாக, 1859இல் முரட்டுத் துணியால் தோள் சீலை செய்துகொள்ள முக்குவர்களும், அவர்களைத் தொடர்ந்து நாடார்களும் அனுமதிக்கப்பட்டனர். ஈழவர்களுக்கு 1864-இலும், அவர்களைத் தொடர்ந்து பறையர்களுக்கும், புலையர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. நாடார்கள் மிகுதியாக வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 55ரூ பேர் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு இத்தகைய அடக்குமுறைகள் தான் காரணம். ரொட்டி துண்டுக்காக எந்த பாவாடையும் மதம் மாறவில்லை. நாடார் பெண்கள் மேலாடை அணியக் காரணமே இந்த பாவாடைகள் தான்.
கழுகுமலை கலவரம்
1855இல் எட்டையபுரத்துத் தெருக்களில், நாடார்கள் ஊர்வலம் நடத்த அனுமதி மறுத்து, நீதிமன்றமே உத்தரவிட்டது. இதன் விளைவாக எண்ணற்றோர் மதம் மாறினர். அவ்வூரில் நடந்த தேர் திருவிழாவில், ஜாதி கலவரம் ஏற்பட்டு,
7 நாடார்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாக, எட்டைய புரத்து ஜமீனின் பார்ப்பன மேலாளரும், அவரது இரு அடியாட்களும் கொல்லப்பட்டனர். 1884இல் மூக்கன் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்தார். ஆலய ஊழியர்கள் அவரை அடித்து வெளி யேற்றினர். ஊழியர்களின் செயலை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மூக்கனுக்கு தோல்வியே மிஞ்சியது. ஹிந்துமத சனாதன தர்மத்தின்படி, நாடார்கள் கோயிலுக்குள் நுழைய உரிமையில்லை என்று மதுரை இரண்டாம் வகுப்பு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 160 ஆண்டுகளுக்கு முன், வெள்ளைக்காரன் நீதியும் மனுநீதியாகவே இருந்தது.
கமுதி ஆலய நுழைவு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள், நாடார்கள் நுழைய நீண்ட காலமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 1855இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தோள் சீலை உரிமையைப் பெற்றிருந்த அதே வேளையில், கமுதி கோயிலுக்குள் நுழையும் உரிமையை நாடார்கள் கோரினர். கோயில் அறங்காவலரான மன்னர் பாஸ்கர சேதுபதி, அனுமதிக்க மறுத்துவிட்டார். இதே பாஸ்கர சேதுபதி தான், 1893இல் விவேகானந்தர் பார்ப்பன மதப் பெருமைகளைப் பேச, சிகாகோ செல்லும்போது, அவருக்கு நிதி உதவி அளித்தார். எந்த மத பெருமைகளை அமெரிக்காவில் விவேகானந்தர் பேசிகொண்டு இருந்தாரோ, அதே மதத்தால், பெரும்பான்மை மக்கள் இங்கே அடிமைகளாக ஆக்கப்பட் டிருந்தனர். 1897இல் நாடார்கள் கோயில் நுழைவுப் போரட்டத்தை நடத்தினர். ஆத்திரமடைந்த பாஸ்கர சேதுபதி வழக்கு தொடர்ந்தார்.
20.07.1899இல் வழக்கின் தீர்ப்பு வந்தது. நாடார்கள் கோயிலுக்குள் நுழைய நீதிபதி வரதராவ் தடை விதித்தார். தீர்ப்பில் தெளிவாக, ஹிந்துமதம் ஏற்றத்தாழ்வுகளை ஆதரிக்கிறது என்று நீதிபதியே சொல்லும் அளவுக்கு, ஆங்கிலேயர் ஆட்சி, ராம ராஜ்ஜியத்துக்கு அனுசரணையாக இருந்தது. பல மத அறிஞர்கள் சாட்சி கூற அழைக்கப்பட் டிருந்தனர். அவர்களுள் ஒரு முக்கியமான நபரின் சாட்சி தான், இந்தத் தீர்ப்பை வழங்க தூண்டு கோலாக இருந்ததாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் உ.வே. சாமிநாதைய்யர். இன்னா ரெல்லாம் கோயிலுக்குள் நுழையலாம்; இன்னா ரெல்லாம் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று சாட்சி சொன்னவர் தமிழ் தாத்தாவாம். கோயிலுக்குள் நுழைய தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், சம்ப்ரோக்ஷணம் என்னும் தீட்டு கழிக்கும் சடங்குகளையும் செய்ய 500 ரூபாய் வழங்குமாறும் வரதராவ் உத்தரவிட்டார். அதன்பின், பாஸ்கர சேதுபதியுடன், நாடார் சமூகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 30,000 பணம் கொடுப்பதாகவும், முன்பணமாக 5,000 கொடுப்பதாகவும், நாடார்கள் ஒப்புக் கொண்டதையடுத்து, கோயிலில் நுழைய அனுமதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாஸ்கர சேதுபதி. ஆனால், கலவரங்கள் ஏற்படலாம் என்ற மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையையடுத்து, ஒப்பந்தத்தை இரத்து செய்தார் சேதுபதி. தீர்ப்பை எதிர்த்து, இலண்டன் தலைமை நீதிமன்றத்தில் (டுடினேடிn ஞசiஎல ஊடிரnஉடை) நாடார்கள் 45,000 ரூபாய் செலவு செய்து வழக்கை நடத்தினர். அப்போதும் தீர்ப்பு, சனாதனவாதி களுக்கு சாதகமாகவே வந்தது.
ஒரு பவுன் தங்கம் 18 ரூபாயாக இருந்த காலகட்டத்தில், 45,000 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகையாகும். (இன்றைய மதிப்பில் பல கோடிகள்). இவ்வளவு பணம் செலவு செய்தும், கோயிலுக்குள் நுழைய விடவில்லை. எனவே, ஜாதியம் என்பது வர்க்க பிரச்சனையல்ல என்பது தெளிவாகிறது. அனைத்து சிக்கல்களுக்கும் வர்க்க போராட்டமே தீர்வு என்னும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களின் வாதமும் தவிடு பொடி யாகிறது. பிறகு, 1936இல் தான், அனைவரையும் கோயிலுக்குள் அனுமதிக்கும் “ஆலயப் பிரவேச உரிமை” சட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், 1939இல் அரசு ஆதரவோடு வைத்தியநாத அய்யர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்தைத்தான், முக்கிய போராட்டமாக சங் பரிவாரங்கள் போலியாக சித்தரிக்கின்றனர். சட்டம் வருவதற்கு முன்பே நடந்த பல வீரம் செறிந்த போராட்டங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. இன்றும்
கமுதி கோயிலில், நாடார்கள் நுழைந்த மேற்கு வாசல் மூடப்பட்டு தான் இருக்கிறது. இந்த இழிவைப்பற்றி சிந்திக்காமல், பல இளைஞர்கள் ஹிந்துத்துவ கொள்கைகளுக்கு உடன்படுவது வெட்கக்கேடு.
சிவகாசி தாக்குதல்கள்
சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் நுழையவே உரிமை வழங்கப்படாத நிலையில்,
1895 இல் கோயில் அறங்காவலர் பதவியை கேட்டு, நாடார்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் ஒடுக்கப்பட்டோர் (நாடார், கள்ளர், தாழ்த்தப்பட் டோர்) மீது ஆத்திரம் கொண்ட ஆதிக்கவாதிகள் (வெள்ளாளர், நாயக்கர், செட்டியார், மறவர்), 1899இல் நாடார்கள் வசிக்கும் பகுதியில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தினர். 700 வீடுகள் தீக்கிரையாக்கி சேதப்படுத்தப்பட்டன. ஆதிக்க வாதிகள் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். நாடார்கள் தரப்பில் 27 பேர் மரணமடைந்தனர். ஆதிக்கவாதிகள் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகமானதால், தாக்குதலை நிறுத்திவிட்டு பின்வாங்கினர். இந்த தாக்குதல் ஹிந்து நாடார்கள் மீது தான் நடந்ததேயன்றி, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தாக்கப்பட வில்லை. பல ஹிந்துக்களுக்கு, தாக்குதலின் போது பாதுகாப்பு கொடுத்து காபாற்றியதே மாற்று மதத்தினர் தான். இதனால், கலவரத்துக்குப் பின் பெருமளவில் ஒடுக்கப்பட்டோர் மதம் மாறினர். கலவரத்தில் ஈடுபட்ட 2000 ஆதிக்கவாதிகள் கைது செய்ய்யப்பட்டனர். 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட மறவர் சமூகத்தை சேர்ந்த ஒருவர், பத்திரிக்கையாளரிடம் கொடுத்த பேட்டியில், “நாடார்களை கோயிலுக்குள் அனுமதித்தால், பள்ளர் மற்றும் கள்ளர் சமூகத்தினரும் கோயில் நுழைவு உரிமையை கேட்பார்கள்” என்று சொன்னது 17.09.1899 ஆயனசயள ஆயடை இதழில் பதிவாகியுள்ளது. இன்று தேவர் சமூகம் என்றும், நாங்களெல்லாம் ஒன்று தானென்றும் கூறிக்கொள்பவர்களும், தங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை கற்பித்துக் கொண்ட வரலாற்றை இந்த செய்திக்குறிப்பில் அறிய முடிகிறது. கலவரத்தை தலைமையேற்று நடத்திய வெள்ளையத்தேவரை, இரு அருந்ததியர் இளைஞர்கள் கொலை செய்ததாக ஒரு நாட்டுப்புறப்பாடல் கூறுகிறது. நா. வானமலை தொகுத்த “தமிழ்நாட்டுப் பாடல்கள்” நூலில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. சிவகாசி ஒடுக்கப்பட்டோரின் கோயில் நுழைவுக்குப் பின், ஆதிக்கவாதிகள் நகரை விட்டே வெளியேறினர்.
சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சி
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலைய பெருமாள் கோயிலுக்குள், நாடார், ஈழவர், பறையர், புலையர், குறவர் ஆகியோர் நுழையக்கூடாது என்று தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. 1916இல் திருவிதாங்கூர் மன்னரின் அரசவையில், மலையாளக் கவிஞர் குமாரன் ஆசான், அனைவரையும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்குமாறு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இதன் விளைவாக மக்கள் போராட ஆரம்பித்தனர். 31.01.1926 குடிஅரசு இதழில், சுசீந்திரம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம் சமத்துவத்தை நிலை நாட்டுவது தான் என்றும், பொதுமக்களின் சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் இடைஞ்சலாக இருப்பவர்கள், அங்குள்ள நம்பூதிரி பார்ப்பனர்களைவிட அங்குள்ள கோயில் சோற்றைச் சாப்பிடவும், பிழைக்கவும் சென்றுள்ள தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தான் என்றும் பெரியார் எழுதினார். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஈ. நாயுடு, கோவிந்த ராஜன் ஆகியோர் முன்னின்று மிகப் பெரிய மக்கள் திரள் போராட்டங்களை நடத்தினர். கடுமையானப் போராட்டங்களின் விளைவாக கோயில் தெருக்களில் நடக்கும் உரிமையை திருவிதாங்கூர் மன்னர் வழங்கினார்.
சுயமரியாதை இயக்கம் அதோடு நிற்கவில்லை. கோயிலுக்குள்ளும் நுழைய 50,222 பேரிடம் கையெழுத்து / கைநாட்டு வாங்கி, அதை திவான் சி. பி. ராமசாமி அய்யரிடம் கொடுத்தார் எம்.ஈ. நாயுடு. தொடர்ச்சியான எதிர்ப்புகளை சமாளிக்க முடியாத திருவிதாங்கூர் அரசு பணிந்தது. அதன் விளைவு தான் ஆலய பிரவேச சட்டம் (1936). 1933இல் கோயில் நுழைவை எதிர்த்த அதே திவான் சி. பி. ராமசாமி அய்யர் தான், 1936இல் ஆலய பிரவேச உரிமை சட்டத்தை நடை முறைப்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒட்டுமொத்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் அனைத்து கோயில்களிலும் அனைவரும் நுழையலாம் என்ற உத்தரவை பிறப்பிக்க முக்கிய காரணமாக இருந்தவை சுயமரியாதை இயக்கம் போன்ற இயக்கங்களும், மதமாற்றங்களும், அரசியல் சமூகச் சூழலுமேயாகும். இவ்வாறாக, போராட்டங்களினூடாக, ஒடுக்கப்பட்டோர் அனைவரும் வளர்ந்தனர். எந்த ஆதிக்கவாதிகள் (வெள்ளாளர், பிள்ளை, பார்ப்பனர், நாயர்) அமைப்பும், ஹிந்து மத அமைப்பும் கோயில் நுழைவுக்காக போராடவில்லை. மாறாக, எதிர்க்கத்தான் செய்தனர். இறுதிவரை ஒடுக்கப் பட்டோருக்கு பக்கபலமாக இருந்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கமே!
வைக்கம் போராட்டம்
கேரள வைக்கம் கோயில் தெருக்களில் நடக்க ஒடுக்கப்பட்டவர்கள் (நாடார் உட்பட) அனுமதிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து 30.03.1924 முதல், பல போராட்டங்களை மக்கள் நடத்தினர். கடுமையான ஒடுக்குமுறைகளை போராட்டக்காரர்கள் சந்தித்தனர். 6 மாதம் முதல் 19 மாதங்கள் வரை பலரும் சிறை தண்டனை பெற்றனர். போராட்டத்தை வழிநடத்த, பெரியாரை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு போராட்டத் தலைவர்கள் அழைத்தனர். கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், குரு நீலகண்டன் நம்பூதிரி ஆகியோர் பெரியாருக்கு அழைப்பு விடுத்து கடிதங்கள் எழுதினர். பெரியார் தலைமை தாங்கி போராளிகளை வழிநடத்தி சென்றார்.
“வைக்கம் தெருக்களில் பன்றியும் நாயும், பூனையும், எலியும் நடக்கலாம். ஆனால், ஒரு ஹிந்துவை இன்னொரு ஹிந்து, ‘வீதியில் நடக்காதே’ என்று சொல்வதைப் பார்த்துக் கொண்டு மனித உடல் தரித்திருக்கும் ஒரு ஜீவன் எப்படி சகித்துக்கொள்ள இயலும்?” என்று கொதித்தெழுந்தார். ஓராண்டு தொடர் போராட்டங்கள் நடந்தன. பெரியார் கைது செய்யப்பட்டார். சிறையில் பெரியார் சந்தித்த கொடுமைகள் ஏராளம்.
“கால்களில் விலங்குச்சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் ஒரு குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை, இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கின்றார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு ஒரு நாளைக்கு வேலை செய்வானோ, அது போல் இருமடங்கு வேலை செய்கிறார்.” என்று கேசவ மேனன் பதிவு செய்துள்ளார். பெரியார் சாக வேண்டி, சத்ரு சம்ஹார யாகத்தை நம்பூதிரிகள் நடத்தினர். ஆனால், பெரியாருக்குப் பதிலாக திருவிதாங்கூர் மன்னர் இறந்து போனார். அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த மருமகள் லக்ஷ்மி பாய், சிறைக் கைதிகளை விடுதலை செய்ததோடு, வைக்கம் தெருக்களில் அனைவரும் நுழைய அனுமதி யளித்து உத்தரவிட்டார். பெரியார் தலைமையில் 29.11.1925இல் வைக்கம் வெற்றிவிழா கொண்டாடப் பட்டது.
ஒடுக்கப்பட்டோர் (நாடார் உட்பட) பக்கம் நின்றது யார்? ஹிந்துத்துவவாதிகளா? பெரியாரா? இதை ஹிந்து முன்னணியில் இருக்கும் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள், சமத்துவத்தை விரும்புவோர் சிந்திக்க வேண்டாமா? பெரியார் இருந்தவரை குமரி மாவட்டத்தில், எந்த மதக் கலவரங்களும் நடக்கவில்லை. 1978க்கு முன்புவரை அகஸ்தீஸ்வரம் பகுதியில், கிறிஸ்தவ கலைக் குழுக்கள் ஹிந்து வீடுகளுக்கு சென்று அன்பளிப்புகளை வாங்கி வந்தனர். மத வொற்றுமை தழைத்தோங்கியது. ஆனால், ஒற்றுமை நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட வெறுப்பு பிரசாரங்களின் விளைவாக, 7.11.1978 அன்று, குமரி மாவட்டத்தின் முதல் மதக்கலவரம் அகஸ்தீஸ்வரத்தில் நடந்தது. கிறிஸ்தவ கோயிலும், அய்யாவழி கோயிலும் தாக்குதலுக்கு உள்ளாயின. கடலோர கிராமங்களில் கத்தோலிக்க மீனவர்களும், நாடார்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். ஜாதிக்கலப்பு, மதக்கலப்பு திருமணங்கள் சர்வசாதாரணமாக நடந்து வந்தன. இங்கும் ஆர். எஸ். எஸ். வெறுப்பு பிரச்சாரங்களின் விளைவாக கலவரம் மூண்டது. 22-3-1981 முதல்
22-3-1982 வரை நீடித்த இந்த தொடர் மோதல்கள் “மண்டைக்காடு கலவரங்கள்” என்று அறியப்படு கிறது. “ஹிந்து ஓட்டு ஹிந்துவுக்கே” என்ற முழக்கம் வலுப்பெற்று, பாஜக வளர்ந்ததற்கும், பாஜகவின் ஆதரவாளர் கூட்டமாக நாடார்கள் சிலர் மாறியதற்கும் இத்தகைய தொடர் கலவரங்கள் முக்கிய காரணமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் தோள் சீலை கலகம் பற்றியோ, கோயில் நுழைவுப் போராட்டங்கள் பற்றியோ எந்த ஒரு புரிதலும் இவர்களுக்கு இல்லை.
நீதிபதி வேணுகோபால் ஆணையத்தின் அறிக்கை
அடித்தட்டு மக்களாக இருக்கும் உழைக்கும் நாடார்களை, மேல்தட்டு நிலவுடைமை நாடார்கள் சிந்திக்க விடுவதில்லை. நிலவுடைமை நாடார்கள் தான் தோள் சீலை கலகத்தின்போது துரோகமிழைத்தவர்கள். நம் முன்னோர் நடத்திய தோள் சீலை கலகத்தை எதிர்த்த துரோகிகளின் வாரிசுகள் அல்லவா இவர்கள்!” என்ற வரலாற்றறிவு எளிய மக்களுக்கு இல்லாததால், மிக சுலபமாக காவிமயமாகிவிட்டனர். 17.08.1982இல் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி வேணுகோபால், மண்டைக்காடு கலவரம் தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை அளித்தார். அந்த அறிக்கையில் இருந்து சில குறிப்புகள்.
- கிறிஸ்தவர்களுக்கும் – இஸ்லாமியருக்கும் எதிராக ஏற்படும் வெறுப்பு சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும். அது வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை, இந்தியாவுக்குள் அகதிகளாக கொண்டு வரும்
- புதிய இந்தியாவை உருவாக்க கிறிஸ்தவ இறைபணியாளர்களின் பங்களிப்பை நாம் புறந்தள்ள இயலாது. அவர்களுடைய பணம், தொண்டு ஆகியவை எண்ணற்ற கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை இந்நாட்டிற்கு அளித்துள்ளன.
- கத்தோலிக்க தேவாலயங்களில் மெழுகு வர்த்திக்கு பதில் எண்ணெய் விளக்குகளை பயன்படுத்துகின்றனர். இந்திய கிறிஸ்தவர்கள் கிட்டதட்ட, இந்து சமூக கிறிஸ்தவர்களாகவே வாழ்கின்றனர்.
- ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஹிந்து மறுமலர்ச்சி சித்தாந்தம், இந்நாட்டை மாட்டு சாண காலகட்டத்திற்கு பின்னோக்கி தள்ளிவிடும். நகர் வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் புதிய எண்ணங்களுக்கு வழிவகுக்கும். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கொள்கை மனிதநேயத்தையோ, அறிவியல் சார்ந்த எண்ணங்களையோ, ஆராய்ச்சி மனப்பாங்கையோ ஏற்படுத்தாது.
நீதியரசர் வேணுகோபாலின் ஆய்வு முடிவுகள் மிகவும் துல்லியமாக மதவாதத்தையும், அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கின்றன. இவ்வாறாக எண்ணற்ற தகவல்களின் தொகுப்பாக வந்திருக்கும் “நாடார் வரலாறு கறுப்பா? காவியா?” என்ற இந்த நூலை படித்து, ஜாதிய எண்ணங்கொண்டோர் மத்தியில் பரப்புவது நம் கடமையாகும். இது நாடார் வரலாறு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அனைத்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின், பிற்படுத்தப்பட்டவர் களின் உண்மை வரலாறு இது தான். ஆண்ட பரம்பரை வரலாறுகள் அனைத்தும் ஆதாரமற்ற கட்டுக்கதைகளின் தொகுப்புகள். ஜாதி ஒழிப்புக்கான ஒரு வலிமையான காகித ஆயுதத்தை தயாரித்து தந்த தோழர் லஜபதி ராய் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்று ஒடுக்கப்பட்டோர் பெருமளவில் வளர்ந் துள்ளனர். அந்த வளர்ச்சி பொருளாதாரத் துறையிலும், அதிகாரத்திலும், கணிசமாக இருந்தாலும், அறிவுத்தளத்தில் விழுந்த குழியிலேயே மீண்டும் விழும் நிலை ஏற்பட் டுள்ளது. எந்த மதம் தங்களை ஒடுக்கியதோ அதையே பின்பற்றுகின்றனர். பக்தி மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து போயுள்ளனர். தங்களை ஒதுக்கி வைத்த பார்ப்பனர்களை வைத்து புரோகிதம் செய்கின்றனர். பார்ப்பனர்களை வைத்து திருமணத்தை நடத்துவதென்பது, பார்ப்பனர்களைத் தங்களை விட உயர்வானவர் களாக பார்க்கும் அடிமை மனநிலையே ஆகும். ஒரு ஒடுக்கப்பட்டவர் தமிழில் திருமணம் நடத்தி வைத்தால், அந்த திருமணம் விளங்காதா என்ன? திருமணம் நடத்தி வைக்கும் தகுதி பார்ப்பனரைத் தவிர யாருக்கும் இல்லையா? இந்திய துணைக் கண்டத்துக்குள் நுழைந்த ஆரியர்களின் ஒவ்வொரு பெரிய குடும்பமும் ஒரு மாட்டுக் கொட்டிலோடு (கோத்திரம்) தொடர்புபடுத்தப் பட்டு பெயரிடப்பட்டது. அதை அப்படியே பின்பற்றி ஒடுக்கப்பட்டோரும் தங்களுக்குள் கோத்திரங்களை உருவாக்கிக்கொண்டு, தானும் உயர்ந்த ஜாதி தான் என்று காட்டிக் கொள் கின்றனர். தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள கேவலம் மாட்டுக்கொட்டிலின் பெயர் தான் கிடைத்ததா? இதில் என்ன பெருமை இருக்கிறது?
தங்களை ஒடுக்கிய சனாதன தர்மத்தை எதிர்த்த, பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு இழிவான க்ஷத்திரிய பட்டம் எதற்கு? ராமராஜ்ஜியம் நடத்திய சேர சோழ பாண்டியனின் வாரிசு நான் தான் என்று ஆண்ட பரம்பரை பெருமை பேசுவதில் என்ன சிறப்பு இருக்கிறது? மன்னர் காலத்தில் விமானம் உண்டா? பேருந்து வசதிகள் உண்டா? செயற்கைக் கோள் உண்டா? இவை எதுவுமே இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவனுடைய வாரிசாக ஒருவன் இருந்தாலென்ன? இல்லாவிட்டா லென்ன? இதனால் இன்றைய மக்களுக்கு எள்ளளவேனும் பயனுண்டா? தற்காலத்தில் பெருமையான வாழ்வை வாழாதவர்களுக்கு தானே பழம்பெருமை தேவைப்படும். எவனோ ஒரு காட்டுமிராண்டி மன்னனுடைய வாரிசு நான் தான் என்று கணிப்பொறியில் எழுதும் படித்த முட்டாள்கள் இதை சிந்திக்க வேண்டாமா? நம்முடைய முன்னோருக்கு கணிப்பொறி என்றால், என்னவென்றாவது தெரியுமா? சேர மன்னனின் வாரிசுகள் இன்றும் கேரளத்தில் இருக்கும்போது, தமிழ்நாட்டில் இருக்கும் நாம் சேரனின் வாரிசு என்று கூறிக் கொள்வது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா! சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் பந்தளம் மன்னர்கள் பாண்டிய வம்சத்தினராக தங்களைக் கூறிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் நாங்கள் பண்டிய வம்சம் என்று சில ஜாதியினர் உரிமை கோருகிறார்கள். இந்த இரண்டு வகை ஜாதிப் பிரிவினரும் பாண்டிய வம்சம் என்ற உணர்வோடு திருமண உறவை வைத்துக் கொள்வார்களா? அப்படி இல்லையென்றால் இங்கிருப்பவர்கள் எப்படி பாண்டியர்கள்? இங்கிருப்பவர்கள் பெண் கேட்டால், பந்தளம் பாண்டிய மன்னன் கொடுத்து விடுவானா? குலோத்துங்க சோழனின் மகளை தெலுங்கு சாளுக்கிய மன்னன் மணம்முடித்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? தெலுங்கனுக்கும் தமிழச்சிக்கும் பிறந்தவர்களே பிற்கால சோழர்களாக இருக்கும்போது, சோழனின் வாரிசு என்று இன்று கூறிக்கொள்பவர்கள், தங்களை ஜாதிக் கலப்பினத்தவர் என்று ஏற்றுக் கொள்ளத் தயாரா? குலோத்துங்கனைப் போலவே, ஜாதிக் கலப்பு திருமணங்களை முன்னின்று நடத்தி வைக்கத் தயாரா? ஆணவப் படுகொலைகள் சமூகத்தின் அவமான சின்னங்கள் இல்லையா?
தூய்மையான ரத்தம் என்று ஒன்று உண்டா? டீ சூநபயவiஎந இரத்த வகையை சேர்ந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற, அதே ஜாதியை சேர்ந்த பிற இரத்த வகையினரால் முடியுமா? ஆனால், வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த டீ சூநபயவiஎந இரத்த வகையினரால், அந்த உயிரை காக்க முடியுமே! ஒரு உயிரைக் காப்பதற்குக்கூட இரத்த வகையே போதுமானதாக இருக்கும்போது, ஜாதி எதற்கு? தூய்மையான இரத்தம் எங்கே இருக்கிறது? கடவுளைப் போல ஜாதியும் கற்பனையே! கடவுள் உண்டு என்று எப்படி நிரூபிக்க முடியாதோ, அதே போல ஜாதி என்று ஒன்று உண்டு என்பதையும் நிரூபிக்க முடியாது.
ஒடுக்கப்பட்டதால், அந்த ஒடுக்குமுறையால் ஏற்பட்ட பாதிப்பை சரிகட்டி, இடஒதுக்கீட்டை நிலைநாட்டுவதற்கு மட்டுமே ஜாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி, ஜாதிச் சான்றிதழில் அச்சிடப்பட் டிருக்கும் பெயருக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை உணர்ந்து, சுயஜாதியை மறுத்த இளைஞர்களால் மட்டுமே இந்த மண்ணில் ஜாதி ஒழிப்பு சாத்தியப்படும்.
(‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் நிகழ்த்திய நூல் மதிப்பீடு உரை) கட்டுரையாளர் – பெரியாரிஸ்ட்
நிமிர்வோம் ஜுலை 2019 இதழ்