பார்ப்பனிய பயங்கரவாத அமைப்புகளின் கதை – துரை
கலவரங்கள் படுகொலைகளுக்குப் பயிற்சி தரும் மதவெறிப் பள்ளிகள் மோடி ஆட்சியில் தங்குதடையின்றி செயல்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை எங்கேனும் குண்டு வெடிப்போ, மத கலவரமோ நடக்கும் போதெல்லாம் அவை தீவிரவாதச் செயல்கள் என்ற அடிப்படையில் மட்டும் நோக்கப்படுவதில்லை. மாறாக எடுத்த எடுப்பிலே இஸ்லாமிய தீவிரவாதம் என்று முத்திரை குத்தப்படுகிறது. குண்டு வெடிப்புகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மட்டுமே நடத்தப்படுகின்றன என்பது முழு உண்மை அல்ல. ஏனெனில் இந்தியாவில் நிகழும் பல்வேறு குண்டு வெடிப்பு, கலவரச் செயல்களில் பின்னணியில் இங்குள்ள சங்பரிவார அமைப்புகளின் பங்கு கணிசமான முறையில் உள்ளது என்பதே உண்மை. சற்றேறக்குறைய 600க்கும் அதிகமான அமைப்புகளாக, சமூகத்தின் பல்வேறு மட்டங் களிலும், கல்வி அமைப்புகளாக, கலாச்சார அமைப்புகளாக, ஆன்மிக அமைப்புகளாக இயங்கும் சங்பரிவாரங்கள் என்பவை இப்படியான வகுப்புவாதச் செயல்களை தொடர்ந்து நடத்தி வருவதில் இன்றளவும் முயன்று வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒரு சில அமைப்புகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். ஏனெனில் தேசபக்தி என்ற பெயரில் இந்து தீவிரவாதம் என்பது எப்படி தங்குதடையின்றி இந்த நாட்டைக் கூறு போடுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியமானது.
சனாதன் சன்ஸ்தா
1991 ஆம் ஆண்டு சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பு முறையாக தன்னை பதிவு செய்து கொண்டது “சனாதன் பாரதிய சன்ஸ்கிருதி சன்ஸ்தா” என்ற பெயரில் தொண்டு நிறுவனமாகவே பதிவு செய்து கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. அப்போது அதன் நோக்கமாக அவர்கள் வைத்தது மக்களிடையே ஆன்மிக விஞ்ஞானத்தை பரப்புவது என்பதுதான்.
இந்த அமைப்பைப் பற்றி 2010இல் சேவா காவல்துறை வழங்கிய அறிக்கை என்னவென்றால், “சனாதன சன்ஸ்தா என்ற அமைப்பு தற்போது தீவிரவாத செயல்களை ஊக்கப்படுத்தும் ஒரு அமைப்பாக உள்ளது. மேலும் தொடர்ந்து இவ்வகையான செயல்களை மாநிலத்தில் நாம் அனுமதிக்கும் பட்சத்தில் இந்த நாட்டின் மத நல்லிணக்கத்திற்கும், மக்களின் உயிர், உடைமை களுக்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும்.”
மேலும் தியான வகுப்பு முகாம்கள் என்ற பெயரில் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளின் முக்கிய நிகழ்வாக தற்காப்புப் பயிற்சியை நடத்துகிறார்கள். தற்காப்புப் பயிற்சி என்பது வேறல்ல துப்பாக்கி சுடும் பயிற்சி என்பதே. இதை அவர்கள் யாருக்கு எதிராக நடத்துகிறார்கள் என்றால், பகுத்தறிவாளர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யாரெல்லாம் இந்துக் களுக்கு எதிரிகளாக அவர்கள் கருதுவோரைத் தான் பல்வேறு வகுப்புவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சனாதன சன்ஸ்தா அமைப்புதான். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களின் கொலைகளில் தொடர்புடைய முக்கிய அமைப்பாக இருந்து வருகிறது.
பஜ்ரங் தள் (Bajrang Dal)
1984இல் விசுவஹிந்து பரிஷத்தில் (vhp) இளைஞர் போராளி குழு என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்புதான் பஜ்ரங் தள். இதன் முதல் நோக்கமாக அப்போது அயோத்தியா இயக்கம் என்ற பெயரில் இந்து இளைஞர்களை ஒருங்கிணைத்து பாபர் மசூதி இடிப்புக்கு தயார்படுத்துவதாகவே இருந்தது. தற்போது மங்களூரில் ஈஸ்வரி மேன் பவர் என்ற பெயரில் சரண் பாம்ப்வெல் என்பவரின் தலைமையில் வேலையில்லா இளைஞர்களைத் திரட்டி இந்துத்துவ இயக்கங்களின் கள வேலை களுக்கு ஆட்களைத் திரட்டும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மங்களூரில் உள்ள பல்வேறு வணிக வளாகங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பணியாற்றும் பாதுகாவலர் களில் பெரும்பாலானோர் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான். பல்வேறு கலவரங்களின்போது சிறுபான்மையினரின் குறிப்பாக, முஸ்லிம்களின் கடைகளையும் வீடு களையும் அடையாளம் கண்டு தாக்குதல்களில் ஈடுபடுவதற்கு இது அவர்களுக்கு பெரும் வசதியாக இருக்கிறது. 1992இல் டிசம்பர் 6ஆம் நாள் பாபர் மசூதி இடிப்பில் நகரம் சார்ந்த இளைஞர்களை அயோத்தி நோக்கி நகர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தது. மற்றும் சங்பரி வாரங்களின் முன்னணி அமைப்பாகவும் இருந்தது பஜ்ரங் தள். அதேபோல 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்திலும் பஜ்ரங் தள் அமைப்பின் செயல்பாடுகள் முக்கியமானதாக பல்வேறு காவல்துறை விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த அமைப்பைச் சார்ந்த பாபு பஜ்ரங்கி என்பவரின் வாக்கு மூலமாக “எவ்வளவுக்கு எவ்வளவு முஸ்லிம்களைக் கொல்ல முடியுமோ, அத்தனை பேரை கொல்ல வேண்டும் என்பதே எங்களுக்கு இட்ட கட்டளை” என்று கூறியது காவல்துறையின் அறிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. மேலும் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், இதன் தொண்டர் களுக்கு பயிற்சி அளிப்பதில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும், புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்களும் இருப்பதுதான். 24 ஆகஸ்ட் 2008 அன்று பஜ்ரங் தள் அமைப்பைச் சார்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் புபேந்தர் சிங் என்ற இருவரும் கான்பூரில் வெடி பொருட்கள் தயாரிக்கும்போது நடந்த விபத்தில் இறந்து போனதாக கான்பூர் காவல்துறையால் அறிவிக்கப் பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து விசாரித்த உத்திரபிரதேச சிறப்பு புலனாய்வுத் துறை தெரிவித்த செய்திகள் உண்மையில் பஜ்ரங் தள் அமைப்பு எத்தகைய ஆபத்தானது என்பதை அம்பலப்படுத்தியது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 3 கிலோ லெட் ஆக்ஸைட், 500 கிராம் ரெட் லெட், 1 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், 11 கையெறி குண்டுகள் இன்னும் பேட்டரி முதலானவை காவல்துறையால் கைப்பற்றப் பட்டன. இதில் மிக முக்கியமான செய்தி என்ன வென்றால் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகள் அப்படியே இந்திய இராணுவத்தில் பயன்படுத்தப்படும் குண்டுகளை வடிவத்திலும் அளவிலும் ஒத்திருந்தன என்பதுதான்.
ஒருபுறம் வேலை வாய்ப்பின்மை பெருகி வரும் சூழலில் அந்த இளைஞர்களை தேசபக்தி என்ற பெயரால் மூளைச் சலவை செய்து இப்படியான பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து அரங்கேற்றி வரும் வேலையை செய்வதில் முதன்மை அமைப்பாக பஜ்ரங் தள் இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஹிந்து யுவவாகினி (Hindu Yuva Vahini)
தற்போதை உத்திரப்பிரதேச முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையில் இயங்கும் அமைப்புதான் ஹிந்து யுவவாகினி. மதக் கலவரங்கள் கோரக்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மிகவும் சகஜமாகிப் போனது, ஹிந்து யுவவாகினி 2002இல் உருவாக்கப்பட்டப் பிறகு, 2002க்கும் 2007க்கும் இடையே சற்றேறக்குறைய 22 பெரிய அளவிலான கலவரங்கள் நடந்தேறியுள்ளன. 1998இல் முதன் முறையாக கோரக்பூர் தொகுதியில் தேர்ந்தெடுக் கப்பட்டது முதல் கடைசியாக முதல்வர் ஆன வரையிலும் யோகி ஆதித்யநாத்தின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் ஒரு வகுப்புவாதக் கலவரங்களின் சாட்சி உள்ளது. யோகி ஆதித்யநாத் மீது பதியப்பட்ட பல்வேறு வழக்குகளும் யோகி முதலமைச்சரான பின் வாபஸ் பெறப்பட்டுள்ளன. தொடர்ந்து ஹிந்து யுவவாகினி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உத்திர பிரதேசத்தில் அறிவிக்கப் படாத காவல் துறையைப் போல செயல்பட்டுக் கொண் டுள்ளனர். முஸ்லிம் மக்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டி கலவரம் செய்யும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அபினவ் பாரத் (Abhinav Bharat)
முதன்முதலாக, இந்த அமைப்பு 1905ஆம் ஆண்டு சாவர்க்கரால் புனேயில் தொடங்கப் பட்டது. ஆரம்பம் முதலே சர்ச்சைக் குரிய அமைப்பாக விளக்கிய அபினவ் பாரத் 1906ஆம் ஆண்டு சாவர்க்கர் (காந்தி கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்) இலண்டன் சென்ற பிறகு அவரது சகோதரர் பாபாராவ் என்பவரால் பொறுப்பேற்று நடத்தப்பட்டது. 1909ஆம் ஆண்டு வெடிகுண்டு தயாரிக்கும் சில தொழிற்சாலை களையும், இரகசிய ஆயுதக் கிடங்குகளையும் நடத்தி வந்ததாக ஆங்கில அரசால் கண்டு பிடிக்கப்பட்டு, பாபாராவ் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார். சுதத்திரத்திற்குப் பிறகு செயலற்றுக் கிடந்த இந்த அமைப்பை மீண்டும் 2006ஆம் ஆண்டு ஹிமானி என்பவரால் மகாராஷ்டிராவில் மீண்டும் தொடங்கி இருக்கிறார்கள். இவர் வேறு யாருமல்ல காந்தியடிகள் கொலை வழக்கில் சிக்கிய கோபால் கோட்சேயின் மகள்; சவார்க்கரின் தம்பி மருமகள்.
இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் இந்திய நாட்டை வேத தர்மத்தின் அடிப்படை யிலே மாற்றவேண்டும். ஸ்மிருதிகள்தான் இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டமாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
2008இல் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பின் பின்னணியில் இருந்து செயல்பட்ட அமைப்பு அபினவ் பாரத் மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறையின் மூளையாக இருந்து செயல்பட்டதாக புரோகித் என்ற அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவரை அடையாளம் காட்டியது மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படை (ஹவேi-கூநசசடிசளைவ ளுளூரயன). இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் இந்த புரோகித் வேறு யாருமல்ல இராணுவத்திலே லெப்டினட் கர்னல் என்ற உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி. வெளிப்படையாக இவர் பேசிய பேச்சுக்கள் இன்றைக்கும் பதிவில் உள்ளது. அதாவது “இந்து இராஷ்டிரத்தை அமைப்பதில், இடையூறு செய்யும் எவரும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, மாறாக அவர்கள் தயவுதாட்சண்யம் இன்றி கொல்லப்படுவார்கள்” என்று அறிவித்தார்.
தொடர்ந்து மாலேகான் குண்டு வெடிப்பைப் பற்றி விசாரணை செய்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புத் துறையின் தலைவராக இருந்த ஹேமந் கர்கரே என்ற அதிகாரியின் அறிக்கைகள் பல்வேறு மர்மங்களை வெளிக்கொண்டு வந்தன. அதன்படி அதுவரை நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு களுக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் காரணம் என்று கருதப்பட்ட பல்வேறு சம்பவங்களுக்கும் பின்னால் இருந்து செயல்பட்டது. அபினவ் பாரத் போன்ற இந்துத்துவ இயக்கங்கள் என்பது அம்பலமானது. மேலும் இந்த இந்துத்துவ இயக்கங்களின் செயல்பாடுகளில் கணிசமான பங்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளான லெப்டினட் கர்னல் புரோகித், மேஜர் ரமேஷ் உபத்யாயாத்லால் போன்ற பலருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் இந்த விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வந்த ஏ.டி.எஸ். அதிகாரி ஹேமந்த் கர்கரே 2008 நவம்பரில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதாகும். அவர் யாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது இன்று வரை தொடரும் மர்மம். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார் என்று பொத்தம் பொதுவாகவே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. 2011இல் மாலேகான் குண்டு வெடிப்பு பற்றிய விசாரணையை மகாராஷ்டிர ஏ.டி.எஸ்.இல் இருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்த மகாராஷ்டிர சிறப்பு அரசு வழக்கறிஞர் ரோகினி சலியன் என்பவர் முக்கியமானவர். இந்த வழக்கைப் பற்றிய பல்வேறு விவரங்களை ஏ.டி.எஸ். அதிகாரியான ஹேமந்த் கர்கரேயுடன் இணைந்து அறிந்து வைத்திருந்தவர். அவர் 2015 ஜூன் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்: “2014இல் மோடி அரசாங்கம் பதவியேற்றது முதல், தேசிய புலனாய்வு அமைப்பில் (nயை) இருந்து இந்த வழக்கில் தீவிரமாக இயங்க வேண்டாம் என்று எனக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டது”.
போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் (Bonsala Military School)
1996ஆம் ஆண்டு நாக்பூரில் தொடங்கப் பட்டது இந்தப் பள்ளி. இதன் முக்கிய நோக்கம், மாணவர்களுக்கு இராணுவத்தில் சேர்வதற்கான தேர்வுகளுக்கு சிறப்பாக அவர்களை பிரத்யேக முறையில் தயார்படுத்துவதுதான். ஆனால் உள்ளே நடப்பது மாணவர்களிடையே தேசபக்தி என்ற பெயரில் அப்பட்டமாக ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களைப் பரப்பி இந்துத்துவ அரசியலுக்கு அவர்களை தயார்படுத்துவதுதான். மேலும் பல்வேறு இந்துத்துவ இயக்கங்களுக்கான பயிற்சி முகாம்களும் இங்கே தொடர்ந்து நடத்தப் படுகின்றன. இவற்றில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும், புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்களும் கொடுக்கும் ஆயுதப் பயிற்சியும் அடங்கும். நாம் ஏற்கெனவே பார்த்த அபினவ் பாரத் அமைப்புத் தொடர்புடைய 2008 மாலேகான் குண்டு வெடிப்பின் பெரும்பான்மை திட்டங்கள் அனைத்தும் இங்கே இருந்து தான் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்று மகாராஷ்டிர ஏ.டி.எஸ்.இல் வாக்குமூலம் அளித்தார், குண்டு வெடிப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ரமேஷ் உபத்யாயா. இதுபோன்ற பள்ளிகளை எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது இந்த அமைப்பு. இப்படியான திட்டம் உருவாக்க மூளையாக இருந்தவர் ஆர்.எஸ்.எஸ்.யை தோற்றுவித்த ஹெட்கேவரின் குருவான டாக்டர் பி.எஸ். மூஞ்சே. அவர்தான் 1937இல் நாசிக்கில் இப்படியான ஒரு பள்ளியை முதன்முதலில் தொடங்கியவர். இதற்கு மூஞ்சேவுக்கு தூண்டு கோலாக இருந்தது, இத்தாலியில் இருந்த முசோலினியின் பாசிசப் பயிற்சி பள்ளிகள் தான் என்று அவருடைய நாட்குறிப்பில் அவரே குறிப்பிட்டுள்ளார். எனவே அதேபோல் இந்தியாவில் சனாதன தர்மத்தை நிலைநாட்ட இப்படியான பள்ளிகளை நாடெங்கும் தொடங்க வேண்டும் என்பதே அவரின் திட்டமாக இருந்தது. 2008 மாலேகான் குண்டு வெடிப்பில் மகாராஷ்டிர ஏ.டிஎஸ். விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்ட போன்சாவா மிலிட்டரி ஸ்கூல், 2014க்குப் பிறகு எந்த பிரச்சினைகளும் இன்றி இன்றளவும் இயங்கி வருகிறது. தொடர்ந்து இந்துத்துவ இயக்கங்களின் பயிற்சி வகுப்புகளும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவை மட்டுமல்ல, கேரளாவில் இந்து ஐக்கிய வேதி, பஞ்சாப்பில் ராஷ்ட்ரிய சீக் சங்கத், கர்நாடகாவில் ராம் சேனா என்பதாக ஒவ்வொரு மாநிலங்களிலும் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆன்மிக இயக்கம் என்ற பெயரிலோ அல்லது கலாச்சார இயக்கம் என்ற பெயரிலோ நிறுவி வகுப்புவாத, மதவாத, சாதியவாத வன்முறைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றன சங்பரிவார அமைப்புகள். வெறுமனே பேட்டரி வாங்கியதில் உதவினார் என்ற குற்றச்சாட்டிடன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள், பேரறிவாளன் உள்பட்டோர். ஆனால் கிலோ கணக்கில் வெடி மருந்துகள், குண்டுகள் என்ற கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும், குறைந்தபட்சம் அந்த அமைப்புகள்கூட தடை செய்யப்படவில்லை. கண்துடைப்பாக நடத்தப்பட்ட ஓராண்டு வழக்கு களும் 2014க்குப் பின் வாபஸ் பெறப்பட்டுள்ளன அல்லது கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தீவிரவாதம் என்றாலே முஸ்லிம்களை நோக்கி விரல் நீட்டும் இந்திய ஊடகங்களும், திரைப்படங்களும் ஒரு போதும் நம் நாட்டிற்குள்ளே செயல்படும் இதுபோன்ற பார்ப்பனிய இந்துத்துவ இயக்கங்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். ஒரு புறம் வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி அதன் பயனாய் மன உளைச்சல் அடையும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இளைஞர்களை மூளைச் சலவை செய்து வகுப்புவாத செயல்களில் இறக்கிவிடும் வேலையை இந்துத்துவ இயக்கங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன. குறைந்தபட்சம் இதில் கீழ்மட்டங்களில் களத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் இந்த இயக்கங்களால் பயன் பெற்றார்களா என்றால், அதுவும் இல்லை. இவை அத்தனையும் யாருடைய நலனுக்காக செயல்படுகிறது என்றால், எந்த சந்தேகமும் இல்லாமல் பார்ப்பன நலன் என்பதே விடையாக இருக்கும்.
(சென்னையில் திராவிடர் விடுதலைக்க கழகம் நடத்திய ‘வரலாற்றில் பார்ப்பனிய வன்முறை’ கருத்தரங்கில்
நிகழ்த்திய உரை)
தகவல்களுக்கு ஆதாரம் :
Book: Shadow Armies (Fringe Organisations and
Foot Soldiers of Hindutuva)
by : Dhirendra K. Jha
நிமிர்வோம் மே 2019 மாத இதழ்