இசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2) “நாடகங்களில் கருத்துகளே வேண்டும்; இசையைத் தவிர்க்க வேண்டும்” என்றார் பெரியார் முனைவர் வே. இராமசாமி
இசை நாடகத் துறையில் பெரியார் இயக்கம் நடத்திய கலகம் குறித்து முனைவர் வே. ராமசாமி எழுதிய நூலிலிருந்து இரண்டாம் பகுதி இது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்தில் பெரியாரின் தலைமை உரை. நாடகம் குறித்த அவரது ஆழமான சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, குத்தூசி குருசாமி இரணியனாக நடித்த நாடகத்துக்கு தலைமையேற்று சென்னையில் பெரியார் பேசினார்.
பெரியார் தன் தலைமையுரையில்,
“….. இங்கு சங்கீத வித்வான்களே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது, நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில் திருப்பப்பட்டு விட்டது என்றும்தான் கருத வேண்டும். நாடகம் நடிக்கப்படும் கதைகள் விஷயமும், தற்கால உணர்ச்சிக்கும் தேவைக்கும் சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரச்சாரம் செய்யவும், மூட நம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண்ணடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும் அவைகளைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப் படுகின்றதே ஒழிய வேறில்லை… இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியாதையும் சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது.
இரணியன் கதையில்வீர ரசம், சூட்சித் திறம், சுயமரியாதை ஆகியவைகள் விளங்கினதோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும் இருந்தது. ஆனால்சில விஷயங்களில் தலை கீழ் மாறு தலாகவும் கடின வார்த்தையாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்து தான் தீரும். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்குப் பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப்பம் ஏற்படும். அப்படி இல்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக்காது…. நிற்க, இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்குக் கற்பித்த (இயக்கிய) தஞ்சைத் தோழர் டி.என்.நடராஜன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத் தக்கது. அவர் 20 வருஷமாய்ப் பொதுநலச் சேவை யில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்கும் சென்றவர்.
அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் ‘சீர்திருத்த நாடக சங்க’த்தார் சார்பாய்ச் சூட்டுகிறேன். … நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கவுரவித் ததற்கும் நாடகப் பாத்திரர்களுக்கும் சபை யாருக்கும் ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி செலுத்துகிறேன்’ (பகுத்தறிவு வார இதழ், 16.9.1934) என்று பழைமைக்கு எதிரான கலகக் குரலை, நாடக அரங்கேற்றத்தில் முன்வைக்கிறார். இது தான் திராவிட இயக்க நாடக நிகழ்த்தல் பற்றி, ஒரு நாடக அரங்கேற்றத்தின்போது வழங்கப்பட்ட முதல் விமர்சனப் பதிவாய் இருக்கிறது.
அதன்பின், இந்நாடகத்தின் இரண்டாவது நிகழ்வு ஆறு மாதங்கள் கழித்து, ‘ஜெ.என். ராம நாதன் ஞாபகார்த்த நிதிக்காக, கனம் மந்திரி பி.டி.ராஜன் அவர்கள் ஆதரவிலும் முன்னிலை யிலும் சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தார்
20.3.1935 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை இராயல் தியேட்டரில் நடித்திருக் கிறார்கள். இதில் இரணியனாக நடித்தவர்
எஸ். குருசாமி, பி.ஏ., (குத்தூசி குருசாமி), பிரகலாத னாக நடித்தவர் கே.எம். பாலசுப்பிரமணியம், பி.ஏ., பி.எல்.; கங்காதரன் டி. சம்பந்தம்; சேனாதிபதி
எஸ். ரங்கநாதன்; கஜகேது டி.என். ராமன்; ரிஷி
சி. தங்கராஜ்; லீலாவதி கே. கிருஷ்ணசாமி; சித்ரபானு எம்.எஸ். முத்து. டிக்கட்டு விலை ரூபா 2, 1, அணா 8, 4, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அரை சார்ஜ். நாடக தினத்தன்று காலை 10 மணி முதல் கொட்டகையில் டிக்கட்டுகள் கிடைக்கும்’ என்பதாக விளம்பரம் செய்திருந்தனர். (குடிஅரசு, 03.03.1935)
‘இரணியன்’ நாடகத்தின் மூன்றாவது நிகழ்வு, இரண்டாவது நிகழ்விற்குப் பின் 1ஙு ஆண்டுகள் கழித்து, 1936, ஜூலை 4 இல் வாணியம் பாடிக்கு அடுத்த அம்பலூரில் அம்பலூர் நடன விலாசத்தில் பாரதி சபையாரால் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தலைமையில் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்னும் சரித்திரத்தை தோழர் எஸ்.எ.அர்ஜூனன் அவர்கள் உபாத்திமையின் கீழ் நடத்திக் காட்டியுள்ளார்கள். அம்பலூரில் நடன விலாசத்தில் சேலம் ஜில்லா போர்டு மெம்பரும், துவரப் பள்ளி ஜமீந்தாருமான தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ‘நமது முன்னேற்றம்’ என்பது பற்றிப் பேசியிருக்கிறார். அதற்கான அறிவிப்பில், ‘தோழர்கள் ஊ.புஅ. சௌந்திரபாண்டியன், சி.டி. நாயகம், வி.வி. ராமசாமி, பொன்னம்பலம் முதலியவர்களும் வரக்கூடும். நாடகத்திற்கு மாத்திரம் டிக்கெட்டுகள் உண்டு. ஆன போதிலும் வெளியூர்களிலிருந்து வருபவர்களுக்குச் சாப்பாடு வசதி செய்து கொடுக்கப்படும். சுற்றுப் பக்கப் பிரமுகர்கள் யாவரும் வந்து கேட்டுக் களிக்க வேண்டுகிறேன்’ என்று எஸ். அர்ஜூனன்/அம்பலூர்/11.6.1936 என்று விளம்பரப்பட்டுள்ளது. இந்த நாடகத்திற்கான விளம்பரம், 14.6.1936, 21.6.1936, 28.6.1936 என்று மூன்று வாரங்களாகத் தொடர்ந்து ‘குடிஅரசு’ இதழ்களில் பெரிய அளவில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
அம்பலூரில் நடந்த இந்நாடக முடிவில் பெரியார் பேசும் போது, ‘இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜூனன் வெகு வீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன். நாடகங்கள் எல்லாம் குறைந்தது 2 மணி நேரத்தில் முடிவுபெற வேண்டும். மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்து போகிறது; உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டு விதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப் பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பிப்பது. வசனரூபமாய்க் காண்பதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள். பல உபந்யாசங்கள் செய்வதை விட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும் வீரத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணியன் நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால்அதைப் பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாகத் திருத்தி உபயோகப் படுத்திக் கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
இந்தப் பழைய நாடகங்கள் மக்களை மூடர் களாகவும், அர்த்தமற்ற கொள்கை உடையவர் களாகவும் செய்து இருக்கின்றன. நாடகத்தின் மூலம் அறிவு வளர இடமிருக்கின்றது. ஆகையால் நாடகங்களைப் புதிய முறையிலே திருத்தி மக்களுக்குப் பயன்படும்படிச் செய்ய நாடகாசிரியர்கள் முன்வர வேண்டும். வெறும் சங்கீதமும் பாட்டும் வேண்டியதில்லை. கருத்து இருந்தால் போதும். இந்த நாடகம் சென்னையில் இரண்டு முறை காண்பிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இதுவே மூன்றாவது முறை. இனி இம்மாதிரி நாடகங்களை நாடெங்கும் நடத்தினால், மக்கள் உணர்ச்சி பெற்று மூட நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற கொள்கைகளை யும் உடைத்தெறிவார்கள். தோழர் அர்ஜூனன் தலைமையில் நடந்த இந்த நாடகத்தை தான் பாராட்டுகிறேன்’ என்று பேசியிருக்கிறார். (குடிஅரசு – 19.07.1936 பக்.5)
நாடகம் அரங்கேறி இரண்டரை ஆண்டு களில் மூன்றாவது நிகழ்வை மட்டுமே சந்தித் திருந்த இந்த நாடகத்தின் வீச்சு 1948இல் வேறு விதமாயிருந்தது, தடையைச் சந்திக்க வேண்டி யிருந்தது என்பதை வரலாறு சுட்டிக்காட்டியிருக் கிறது. அதாவது திராவிட இயக்கத்தின் வளர்ச்சியின் விகிதத்தை! இது, நாடகக் கலையில் திராவிட இயக்கத்தின் முதற்கலகம்! இதற்கான வித்து 1934இல் கலகக்காரர் தோழர் பெரியாரின் தலைமையில் நடைபெற்று இருக்கிறது.
அந்த வகையில் இன்னுமே குறிப்பிட வேண்டிய மிக முக்கிய ஒன்று, 25.8.1935 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் பக்.15இல் திரு அ.இரத்தின சபாபதி எழுதியிருக்கிற ‘நாடக மேடைகள் நமக்குப் பயன்பட வேண்டுமானால்..?’ எனும் கட்டுரையாகும். கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கு அமைப்பின் ஒரு பகுதியாக நாடகங்கள் அமைய வேண்டியதன் தேவையை ஒரு வேலைத் திட்டமாகவே அக் கட்டுரையானது கூறிச் சென்றிருக்கிறது. அக்கட்டுரையின் முக்கியப் பகுதிகளை அப்படியே தருவதுகூட தவறில்லை என்று கருதுகிறேன். அது ஒரு பதிவு! கட்டுரை இப்படிச் செல்கிறது:-
‘தமிழ்நாட்டில் நாடக மேடைகள் என்ன கருத்துடன் யாரால் ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் சரி, அதன் தற்கால நிலைமை எவ்வாறிருந்தாலும் சரி, சீர்திருத்தவாதிகளாகிய நாம், நாடக மேடைகளைக் கைப்பற்றி நமது கொள்கைகளை நாடகங்கள் ரூபமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதும் அதனால் பெரும் பயன் விளையுமென்பதும் நம்மவர்களிற் சிலருக்கு வெகுநாட்களாகவே இருந்து வரும் அபிப்பிராயங்களாகும். எந்தக் கொள்கையைப் பொது மக்களிடையில் பரப்ப வேண்டுமானாலும், அதற்குப் பிரச்சாரம் அவசியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அம்மாதிரி பிரச்சாரம் செய்வதற்கான வசதிகள் அல்லது மார்க்கங்கள், பொதுக் கூட்டங்களில் பிரசங்கங்கள் செய்தல்; துண்டுப் பிரசுரங்கள் பல வழங்குதல், பத்திரிகைகள் வெளியிடுதல்; நாடகங்கள், சினிமாக்கள் முதலியவைகளில் கொள்கைகளைப் புகுத்துதல் முதலியனவேயாம். இவற்றுள் துண்டு பிரசுரங்கள், மேடைப் பிரசங்கங்கள், பத்திரிகைகள் முதலிய எல்லாவற்றையும்விட நாடகங்கள், சினிமாக்கள் முதலியவற்றின் மூலமாய், கொள்கைகளை மக்களிடையே பரப்புவது பெரிதும் சுலபமானதும், கோரும் நோக்கத்தை விரைவில் திருப்திகரமான முறையில் கிடைக்கச் செய்யும் சாதனமாகுமென்பதை நம்மவர் ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறார்களென்றா லுங்கூட, நடைமுறையில் கொண்டுவருவதில் போதிய அளவு சிரத்தை எடுத்துக் கொள்ள வில்லை என்பதுதான் எனது அபிப்ராயம். நான் இவ்வாறு துணிந்து வெளிப்படையாகக் கூறுவதற்காகத் தோழர்கள் என்னை மன்னிப்பார் களாக. நமது கொள்கைகளைப் பொது மக்களிடையே பரப்புவதற்கு நாம் தமிழ் நாடகமேடையைக் கைப்பற்ற வேண்டுமென்னும் கருத்தை நான் பலமுறைப் பொதுக் கூட்டங் களிலும், தனித்தனி நபர்களிடத்திலும் பேசியிருக் கிறேன். பத்திரிக்கைகளிலும் பலமுறை எழுதியிருக்கிறேன்.
என்னைப் பொருத்தமட்டில் தனிப்பட்ட முறையில் இவ்வகையில் ஏதோ முயற்சி செய்தே னென்றாலுங்கூட அம்முயற்சிகள் நல்ல பயனை யளிக்கவில்லை. காரணம் நம் இயக்கத் தோழர்கள் இத்துறையில் செயலாற்ற முன்வராததேயாம் என்றாலும், சென்னை, தங்கவயல் போன்ற இரண்டோரிடங்களில் சீர்திருத்த ஸ்தாபனங்கள் அமைத்து ஓரளவிற்குத் தொண்டாற்றி வருவது சற்று ஆறுதலளிக்கிறது. இப்பொழுது நாகப் பட்டினத்திலும் திருச்சியிலும் நம் தோழர்கள் சீர்திருத்த நாடக சபைகள் அமைத்துத் தொண் டாற்ற வேண்டுமென்று தீர்மானித்திருப்பது, இன்னும் சற்று உற்சாக மூட்டுவதாக இருக்கிறது. நாகை, திருச்சி நண்பர்களைப் பின்பற்றி மற்ற இடங்களிலும் வசதிகள் வாய்க்கப் பெற்றுள்ள நண்பர்கள் சீர்திருத்த நாடகங்கள் பல நடத்த முற்படுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நாம் இவ்வாறு நாடகமேடைகளைக் கைப்பற்றுவோமானால், நாம் இரண்டு காரியங்களை ஏக காலத்தில் வெற்றிகரமாகச் செய்யக் கூடும் என்பதைத் தோழர்கள் கவனிக்க வேண்டும்.
முதலாவது; சீர்திருத்த நாடகங்களை நாம் நடத்த முற்படுவதோடு, தற்காலம் நடைபெறும் நாடகக் கதைகளிலும் அறிவிற்குப் பொருந்தாத வற்றை அவ்வப்போது நாம் கண்டிப்பதால், அக்கதைகளுக்கு ஒரு பலத்த எதிரிடையான அபிப்ராயத்தைப் பொது மக்களிடையில், சிறப்பாகப் படித்தவர்களிடையில் உண்டு பண்ணக்கூடும். இரண்டாவது; நம் கொள்கைகள் கொண்ட நாடகங்களை நடத்துவதால் வெகு எளிதாகப் பாமர மக்களுக்கும் கொள்கைகளை விளங்க வைக்கலாம்; நடிப்புக் கலையும் சீர்படும். நமது கொள்கைகள் கொண்ட நாடகங்களுக்கு நாட்டில் ஆதரவு கிடைக்காதென்று யாரும் பயப்பட வேண்டியதில்லை. இது சீர்திருத்தக் காலம். நாம் நாடகங்களை நடத்தினாலும் நடத்தா விட்டாலும் தற்கால உலகம் என்னவோ சீர்திருத்தத்தையும் நாகரீகத்தையும் நோக்கித் தான் போய்க் கொண்டிருக்கும்.
இனி வருங்கால உலகமும் இம்முறையில் இன்னும் வேகமாகச் செல்லுமே தவிர, இராம ராஜ்ய காலத்திற்குத் திரும்பிச் செல்லுமென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமாகும். எனவே இன்றைக்கு நம் நாடகங்களுக்கு வரவேற் பில்லாததுபோல் தோன்றினாலும் எதிர்காலத்தில் நமக்கு நல்ல ஆதரவு கிடைப்பது திண்ணம். இதனை மனதில் வைத்துக் கொண்டு நாம் வேலை செய்வோம். இவ்வழியாகவே நாம் சென்று கொண்டிருப்போமானால், சினிமா உலகமும் நம்மிடம் வந்தே தீரும். இப்பொழுதே சந்து பொந்துகளிலுள்ள புராணக் கதைகளை யெல்லாம் கட்டிப் பிடித்திழுத்து வந்து பேசும்படக் காட்சிகளைக் குட்டிச் சுவராக்கித் தீர்த்து விட்டார்கள். பாவம்! குசேல முனிவர் கூட இனி பேசும்படத் திரையில் வந்து, தனது உடம்பிலுள்ள எலும்புகளையெல்லாம் ‘எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று காட்டிக் கொண்டு நிற்கப் போகிறார்.
இனி படக்காட்சிகளுக்குப் புதிய நாவல்களைத்தான் தேட வேண்டும் என்னும் அவசியம் வெளிப்பட்டு, அவ்வாறே நாவல்களும் பேசும் படக்காட்சிகளாக மாறி வருகின்றன. ஆதலின் இதனையே நாம் ஏற்ற சமயமாகப் பயன்படுத்திக் கொண்டு சீர்திருத்த நாடகங்கள் பலவாகப் பெருக்கி நடத்த முற்படுவோம். இந்த நாடகங்களையும் தயவுசெய்து பாடல்களாக ஆக்கிவிடாதீர்கள். மூச்சு விடக்கூட இடமில்லாமல் பாட்டுகள் பாடினால் அதற்கும் பெயர்தான் நாடகம் என்ற எண்ணம் இருக்கிறதே; அது தொழில் நடிகர்களிடம் மட்டுமல்லாமல், அமெச்சூர் நடிகர்களிடமும் தொத்திக் கொண்டிருக்கிறது. அத்தொத்து நோய்க்கு நாமும் இடந்தர வேண்டாம். நம்முடைய முயற்சியில் ‘உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடியாக நாடகமேடையை அமைப்போம்’.
முடிவாக, தோழர்களுக்கு விஷயத்தைக் கூறி இதனை முடிக்கிறேன். நாட்டின் பற்பல இடங் களிலும் தனித்தனியாக நாடக ஸ்தாபனங்களை நாம் அமைத்துக் கொண்டாலும்கூட நமக்கென்று ‘ஒரு பொது சீர்திருத்த நாடக ஸ்தாபனம்’ வேண்டும். அது நல்ல முறையில் ஆரம்பிக்கப்படல் வேண்டும். அதன்மூலம் நல்ல கவர்ச்சிகரமான சீர்திருத்த நாடகங்களை எழுதி வெளியிட வேண்டும். அந்நாடகங்களுக்கு இன்றியமையாத உடைகளையும், சீன்களையும் இன்னோரன்ன பிறவற்றையும் தயார் செய்ய வேண்டும். இம்முயற்சியில் வெற்றி பெறும் நாடகங்கள் பின்னர் பேசும் படக்காட்சிகளாக மாறி உலவ ஏதுவுண்டாகும். இதற்கான ஒரு மத்திய ஸ்தாபனத்தைக் கூட்டுறவு முறையில் (லிமிடெட் கம்பெனியாக) அமைத்து நடத்தலாமென்று எண்ணுகிறேன்.
பத்து ரூபாய்கள் கொண்ட பங்குகளாக 1000 பங்குகள் சேர்த்து அதனை மூலதனமாக வைத்து தக்க முறையில் நடத்து வோமானால், நமக்கு நல்ல பயன் ஏற்படுமென்பது நிச்சயம். இதனைத் தமிழர் நாட்டிலுள்ள நம் பொறுப்புள்ள தோழர்கள் கவனிக்க வேண்டு கிறேன்’ – ‘இரணியன்’ நாடகத் தலைமையுரையில் பெரியார் பேசியதன் விரிவாக்கமாயும் வேலைத் திட்டமாயும் இது அமைந்திருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
அங்கங்கு பல குழுக்கள் சீர்திருத்த நாடகங்களைத் தொடர்ச்சியாய் நிகழ்த்தியுள்ள பதிவுகள் குடிஅரசு இதழ்களில் காணப்படு கின்றன. புதுவைக்கடுத்த முத்தியால்பேட்டையில் 27.1.1935 அன்று ஞாயிற்றுக் கிழமை இரவு 9.30 மணிக்கு ‘பாலாமணி அல்லது பார்ப்பன விதவை’ என்னும் சுயமரியாதை நாடகம் நடத்தப்பட் டிருக்கிறது. அதற்கு, ஆண்களும் பெண்களுமாக சுமார் 300 பேர் விஜயஞ் செய்திருந்ததாகவும் இதை ஏற்பாடு செய்த தோழர்கள் எஸ்.கே. கோவிந்தசாமி, கே. நடேசன், ஆறுமுகம் என்பதாகவும் குறிக்கப்பட்டுள்ளது (குடிஅரசு, 10.02.1935, பக்.18).
தோழர் ஈ.வெ.ராமசாமி தலைமையில், ‘ஆனந்த கிருஷ்ணன் அல்லது ஆருயிர்க் காதலர்’ எனும் சீர்திருத்த நாடகம், காரைக்ககுடி ஷண்முக விலாஸ் எலெக்ட்ரிக் தியேட்டரில் 01.05.1935 புதன் கிழமை இரவு 10.30 மணிக்கு ஆனந்த நாடக சபையின் ஆதரவில் நடைபெறும். இந்நாடகத் திற்கு தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தலைமை வகிக்க அன்புடன் இசைந்துள்ளார்கள் (குடிஅரசு, 28.04.1935, பக்.15) என்பதாயும், தலைமையேற்றுப் பேசுகையில், ‘இத்தகைய நாடகங்களே இனி நம் நாட்டில் அதிகம் பரவ வேண்டுமென்றும் பொது ஜனங்களும் இத்தகைய நாடகங்களை அவசியம் ஆதரிக்க வேண்டுமென்றும்’ விரிவாகப் பேசியிருக்கிறார் அவர்! நடிகர்களுக்கு நண்பர்கள் மோதிரங்கள் பரிசளித்திருக்கிறார்கள்.
பிறகு தோழர் எஸ். நீலாவதி, தோழர் அ.பொன்னம்பலம் ஆகியோர் தங்கள் அபிப்பிராயங்களைக் கூற, நன்றி கூறலுடன் விடியற்காலை 3.30 மணிக்கு நாடகம் இனிது முடிவடைந்தது (குடிஅரசு, 05.05.1935, பக்.5) என்பதாயும் பதிவுகள் உள்ளன. அதேபோல் ‘மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலைக் கட்டிட நிதிக்கு, மேற்படி, வாசக சாலை மாணவர்களால், 23.6.1935 அன்று மதுரை தாலுக்கா ஜில்லா முன்சீப் எஸ். நடராஜ நாடார், பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் ‘காதலின் வெற்றி’ என்ற சீர்திருத்த நாடகம் மதுரை எட்வர்ட் ஹாலில் நடத்தப்பட்டிருக்கிறது (குடிஅரசு, 23.6.1935, பக்.15). ட
நிமிர்வோம் ஆகஸ்ட் 2019 மாத இதழ்