ஜாதி எதிர்ப்புக்கு தொலைநோக்குத் திட்டம் தேவை
பெரியார் கலைத்துப் போட்ட ஜாதி அமைப்பை – ஜாதிய சக்திகள், மறுகட்டுமானம் செய்து வரும் நிலையில், நாமோ, உடனடி எதிர்வினை யோடு நிறுத்திக் கொள்கிறோமே தவிர, நம்மிடம் தொலைநோக்குத் திட்டம் இல்லை எனும் ஆழமான சிந்தனையை கவலையோடு முன் வைக்கிறார், சூழலியல் எழுத்தாளர் நக்கீரன். அவரது பேட்டி:
நக்கீரன், மிக அரிதாகச் சூட்டப்படுகிற பெயர் அல்லவா?
“ஆமாம். இதைப் புனைபெயர் என்றே பலரும் நினைக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அழகான தமிழ்ப் பெயர்களோடு பௌத்த, சமண, மார்க்சிய ஆளுமைகளின் பெயர்களும் சூட்டப்பட்டிருக்கின்றன. இதில் எனக்கு உட்பட பலருக்கும் பெயர் சூட்டியவர் பெரியார். என் பெற்றோரின் திருமணமே அவருடைய தலைமையில்தான் நடந்தது. எழுத்துலகுக்கு வந்தபோது ‘நக்கீரன் கோபால்’ பிரபலமாக இருந்ததால், பலரும் பெயரை மாற்றுமாறு வற்புறுத்தினர். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன்”.
“எழுத்துலகுக்குள் வந்து சேர்ந்த கதையைச் சொல்லுங்கள்…”
“அய்ந்தாம் வகுப்பில் ‘கல்கண்டு’ பத்திரிகையின் ‘தமிழ்வாணன் கேள்வி பதில்’ பகுதிக்கு தபால் கார்டில் கேள்விகள் எழுதி அனுப்பியதே முதல் எழுத்து முயற்சி. ஆறாம் வகுப்பில் நாடகம் எழுதத் தொடங்கி, ஒரு நாடகக்குழு அமைத்து, எட்டாம், வகுப்பு வரை பத்து நாடகங்களுக்கும் மேல் அரங்கேற்றினேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து இதழ்களுக்குக் கதைகள் அனுப்பினேன். 12 ஆம் வகுப்பு முடிந்ததும், ‘ராகம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினேன். என்னுடைய 19 ஆம் வயதில், 1983 ஜூன் மாதத்தில் ‘சாவி’ இதழில் ‘மிஸ்டர் நம்பிக்கைத் துரோகம்’ என்ற முதல் சிறுகதை அச்சேறியது. அக்காலகட்டத்தில், அந்த வயதில் அச்சில் எழுத்தைக் காண்பது பெருமை யாக இருந்தது. பின்னர் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றதும் அங்கு வெளியான ‘தமிழ்நேசன்’,‘ தினமணி’, ‘மலேசிய நண்பன்’ நாளிதழ்களில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதை களும் கூடவே கவிதைகளும் எழுதினேன். போர்னியோவின் சண்டகான் நகரில் வசித்தபோது, அங்கிருந்த தமிழர்களுக்காக ‘பாலம்’ என்ற ஜெராக்ஸ் இதழை நடத்தினேன். அதுதான் போர்னியோவின் முதலும் கடைசியுமான ஒரே தமிழ் இதழாக இருக்கும். பின்னர், பெரிய இடைவெளிக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டில்தான் முழுமையாக எழுத்துலகில் நுழைந்தேன். அப்போது 40 வயதைக் கடந்திருந்தேன். தற்போது கிடைத்துள்ள பெயரைக் கருத்தில்கொண்டு அண்மையில் ஓர் எழுத்தாளர் என்னிடம் கேட்டார். ‘எப்படி நீங்கள் ஓவர் நைட்டுக்குள் புகழடைந்தீர்கள்?’ இதன் பின்னுள்ள 40 ஆண்டுக்காலக் கடும் வாசிப்பு அனுபவத்தை அவர் அறியவில்லை.”
“முழுநேர எழுத்தாளராக இயங்குவது என்று எப்போது எந்த ‘தைரியத்தில்’ தீர்மானம் செய்தீர்கள்?”
“வேறன்ன, மனைவிக்கு நிரந்தர அரசுப் பணி கிடைத்த தைரியத்தில்தான். என்னுடைய கனவுகளை அவர் அறிவார். அவருக்கு 2007 ஆம் ஆண்டில் பணி கிடைத்ததும், ‘இத்தனை நாள் நீங்கள் சுமந்த பொருளாதாரச் சுமையை இனி நான் சுமக்கிறேன், நீங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழத் தொடங்குங்கள்’ என்று அனுப்பி வைத்தார். தமிழில் முழுநேர எழுத்தாளர் என்பது வருமானமற்ற வெற்றுப் பகட்டு பணி என்பது அவருக்குத் தெரியாதா என்ன? சூழலியல் எழுத்துப் பணி என்பது ஒரு சமூகப் பணி என்பதை முழுமையாக உணர்ந்தே அவர் அதைத் தீர்மானித்தார்.”
“உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங் களேன்…”
“பொதுவாக நான் மிக அமைதியானவன். ஆனால், உள்ளுக்குள் ஒரு போராட்ட குணம் இருக்கும். அது என் தாத்தா, அப்பாவிடமிருந்து வந்தது. நான் அறிந்த தந்தை மிக அமைதியானவர். அவர் ஒரு முன்னாள் தொழிற்சங்கவாதி என்பது அவருடைய இறப்புக்குப் பின்னால்தான் அறிந்தேன். முன்பு சிங்கப்பூரில் கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு நாள் சம்பளமே வழங்கப்பட் டுள்ளது. இதனால், 1961இல் நாள் சம்பளத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பாக, அங்கு மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப் பட்டது. துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பல சங்கத்தினர் இணைந்திருந்த அப்போராட்டம் பல நாள்கள் தொடர்ந்ததால், சுத்தமான சிங்கப்பூர் நகரம் கழிவுகளால் திணறியது. பொதுப் போக்கு வரத்தும் முடங்கியது. இறுதியில், லீ குவான் இயூ தலைமையிலான அரசாங்கம் இறங்கி வந்து மாதச் சம்பளமும் இதரச் சலுகைகளும் வழங்க முன் வந்தது. வெற்றிகரமாகக் கூட்டமைப்பு பொதுச் செயலாளராக இருந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தவர் என் தந்தை டி.வீரையன். 30 வயதில் என் தந்தை செய்த சாதனை, என் தாத்தா செய்த சாதனை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, நான் ஒன்றுமே செய்யவில்லை என்று தான் தோன்றுகிறது. தற்போது அரசுப் பள்ளி ஆசிரியரான என் மனைவி மீனாவு டன் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வசித்து வருகிறேன். ஒரே மகள் ஓவியா, திருவனந்தபுரத்தில் எம்.பி.ஏ (டூரிசம் அண்ட் டிராவல்ஸ்) படித்து வருகிறார்.”
“ஒரு சில கட்டுரைகளுக்காக மிரட்டப் பட்டீர்கள். ஓர் எழுத்தாளராகப் பாதுகாப்பற்றிருப் பதாக நினைக்கிறீர்களா?”
“மீன் வளர்ப்பு முறைகேடுகளைப் பற்றி எழுதியபோது, ‘உன் வீடு எங்களுக்குத் தெரியும்’ என்று மிரட்டினார்கள். ‘வீட்டில் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன். வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தேன். கார்ப்பரேட் நிறுவனத் தயாரிப்பு ஒன்றினால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்துப் பேசியபோது, என் உடல்நலத்தைக் கவனித்துகொள்ளச் சொல்லி அன்பாகக் கட்டளையிட்டனர். அது உடல்நலம் குறித்தல்ல உயிர்நலம் குறித்து என்பதும் புரிந்தது. ‘புட்டிநீர்’ குறித்து ‘பால் அரசியல்’ குறித்துப் பேசியபோது இதுபோலவே தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. தடுப்பூசி விவகாரத்தில் நேரிலும்கூட நடந்தது. ஆனால், இதுவரை இது குறித்து நான் பொதுவெளியில் புகார் தெரிவித்த தில்லை. அதுவொரு விளம்பரத் தேடலாக அமைந்துவிடுமோ என்கிற கூச்சமும் ஒரு காரணம். இரண்டாவது, அந்தளவுக்கு ஒரு மதிப்புமிகு நபராக என்னை நான் கருதுவதில்லை. ஆனால் ஒன்று, மிரட்டியவர்கள் எவரும் தம் மாற்றுக் கருத்துகளைப் பொதுவெளியில் வைக்க முடிய வில்லை. அதுவே என் எழுத்தின் நம்பகத்தன்மை க்கு அடையாளம்.”
“காடோடி நாவலுக்குக் கிடைத்த அங்கீகாரம், வரவேற்பு குறித்துச் சொல்லுங்கள். சீனியர் எழுத்தாளர்களிடமிருந்து என்ன மாதிரியான எதிர்வினை வந்தது?”
‘காடோடி’க்கு முன்னர் வெளியான எனது ஏழு நூல்களுக்கும் எந்தவோர் இதழிலும் மதிப்புரை வந்தது கிடையாது. லாபி அரசியலை வெறுப்பவன் நான். அதனால் மதிப்புரைகள் வருவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஆனாலும் அந்நூல்கள் சென்னைப் புத்தகத் திருவிழாவில் விற்பனையின் ‘டாப் டென்’ பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றி ருக்கின்றன. ‘காடோடி’ நாவலை ஏனோ இதழ்கள் தாமாகவே முன்வந்து பாராட்டின. இலக்கிய எழுத்தாளர் களில், கோணங்கி, ‘கல்குதிரை’யில் மதிப்புரையும், ஆதவன் தீட்சண்யா ‘மணல்வீடு’ விருதுக்காக ஒரு கட்டுரையும் எழுதினார். எஸ்.ரா. பத்தாயிரத் துக்குப் பிறகான சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் தந்திருந்தார். தேவகி என்ற வாசகர் முழுநாவலையும் தன் குரலில் பதிவு செய்து ஆடியோவாக இணையத்தில் வெளியிட்டார். என் மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவை நூலில் இருந்தும் அவ்வாசகர் இன்றுவரை என்னோடு தொடர்பு கொண்டதில்லை. இந்த ஒரு நாவலுக்காக மட்டுமே ஏறக்குறைய நாற்பது கூட்டங்கள் நடந்துள்ளன. இதைவிட வேறென்ன ஓர் எழுத்தாளருக்குத் தேவை.”
“ஒரு புறம், சாதியும் மதமும் மிகவும் கூர்மையடைவதாக்கப்படுகிறது. மற்றொரு புறம், அதற்கு எதிராக முற்போக்குக் கருத்தாளர்கள் ஒன்றுதிரள்வதையும் பார்க்க முடிகிறது. உங்கள் பார்வையில், இந்தப் போக்குகளில் எது அதிக வலிமை கொண்டிருக்கிறது என்று கருதுகிறீர்கள்,”
“உறுதியாக சாதிய மதச் சக்திகள்தாம் வலிமையாக உள்ளன. நெடுங்காலமாக நாம் புத்தர், மார்க்ஸ், அம்பேத்கர்,பெரியார் போன்ற வர்களின் கருத்துக்கள் போதும் என்று சும்மா இருந்துவிட்டோம். ஆனால், அவர்கள் தொடர் தோல்விகளிலிருந்து பாடம் கற்று, தொலை நோக்குத் திட்டங்களோடு செயலாற்றி வந்துள்ளனர். இன்றைய அவர்களது செயற் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப் பட்டது. எனவேதான் பெரியார் கலைத்துப் போட்ட சாதி அமைப்பை அவர்களால் மறுகட்டு மானம் செய்ய முடிந்துள்ளது. அவர்களிடம் அடுத்த முப்பதாண்டுகளுக்குத் தேவையான திட்டங்கள்கூட கைவசம் இருக்கலாம். ஆனால் நாமோ, ஒரு ‘உடனடி’ எதிர்வினையை ஆற்றி விட்டு அந்த வெற்றிக்களிப்பில் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம். இனி அவ்வாறு இயங்க முடியாது. நாமும் தொலை நோக்கோடு செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.”
“உங்கள் சாதி மறுப்புக் கருத்து எங்கிருந்து உருவானது? அதைப் பற்றிச் சொல்லுங்கள்…”
“நான் என் குடும்பத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மூன்றாவது தலை முறை. என் ஒரே மகளுக்கும் அதையே அறிவுறுத் தியுள்ளேன். ஒரு முறை கொளத்தூர் மணி அவர்கள் தனது ‘ஆனந்த விகடன்’ பேட்டியில், ‘தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைச் சாவுக்குப் பறையடிக்கும் இழிவிலிருந்து முதன் முதலில் தடுத்து நிறுத்திய வரலாற்று நிகழ்வு, குத்தாலம் அருகேயுள்ள மாதிரிமங்கலம், காளி ஆகிய இரண்டு கிராமங்களில்தான் நடந்தது. ஆனால் அது குறித்த முறையான வரலாற்றுப் பதிவு இல்லை’ என வருத்தப்பட்டிருந்தார். இக்கிராமங்களில் மாதிரிமங்கலத்தில் தான் முதன்முதலில் சாவுக்குப் பறையடிக்கும் அவலம் நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணமாக இருந்தவர் என்.டி.சாமி எனும் பெரியாரின் தொண்டர். அது மட்டுமல்ல ஊருக்கு வெளியே இருந்த சேரியைக் கடும் எதிர்ப்புகளுக்கிடையே அக்காலத்திலேயே ஊருக்கு நடுவே குடியமர்த்தி யவர் அவர். வேறு எங்கும் காண முடியாதபடிக்கு இன்றும் அது ஊருக்கு நடுவேதான் அமைந் துள்ளது. நின்று கொண்டே தனிக் குவளையில் தேநீர் பருகும் கொடுமையைத் தடுக்க, சொந்தமாக தேநீர்க் கடை தொடங்கி தலித் மக்களை பெஞ்சில் அமரச் செய்து பொதுக் குவளையில் தேநீர் வழங்கினார். திராவிடர் கழகத்தினரும் தலித்து களும் மட்டுமே தேநீர் அருந்தியதால் நட்டத்தில் இயங்கினாலும், ஊர்மக்கள் அனைவரும் சமமாக அமர்ந்து தேநீர் அருந்தும் காலம் வரும் வரை அக்கடையைத் தொடர்ந்து நடத்தினார். இவரைப் பற்றிய விவரங்களை அறிந்திருக்கக் காரணம் அவர் என் தாய்வழி தாத்தா என்பதால்தான். அவரிட மிருந்தே சாதி மறுப்பு கருத்துக்கள் என்னுள் உருவாகின.”
“உங்களை மிகச் சுருக்கமாக எப்படி வரையறுக்கலாம்?”
“இயற்கையின் காதலன், சாதி மதம் வெறுக்கும் பொருள் முதல்வாதி.”
“தற்போது என்ன எழுதிக் கொண்டிருக் கிறீர்கள்? எதிர்காலத் திட்டம் என்ன?”
தற்போது ‘நீர் எழுத்து’ எனும் நூலை எழுதி முடித்துள்ளேன். சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை அனைத்துக் கோணங்களிலும் நீர் குறித்த ஆய்வு செய்துள்ளேன். இது தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுக்கால தண்ணீர் வரலாற்றின் ஆவணமாக விளங்கும். இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நிறைய வாசிக்கவும் யோசிக்க வும் ஓய்வு கிடைத்தது. மருத்துவமனையில் அன்பு பாராட்டிக் குவிந்த ஏராளமான வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் என் எழுத்தைத் தவிர வேறென்ன செய்துவிட்டேன்? இவர்களுக்காக மேலும் சிறப்பான எழுத்தைத் தருவதன் மூலம்தான் என் நன்றியைச் செலுத்த முடியும். இலக்கியம், சூழலியல் எழுத்துகளோடு இனி ‘பண்பாட்டுச் சூழலியல், ‘வரலாற்று நிலவியல்’ போன்ற புதிய துறைகளிலும் ஈடுபடலாம் என்றிருக்கிறேன். கல்விப் புலங்களில் உறங்கும் இவற்றைப் பொதுவெளிக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
‘நக்கீரன்’ – சுற்றுச் சூழல் ஆய்வாளர்
‘தடம்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டி
நிமிர்வோம் ஜுலை 2019 இதழ்