பிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’

இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து ஒற்றை தேசம்; ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கத் துடிக்கிறார்கள் பா.ஜ.க. – பார்ப்பன பரிவாரங்கள். இந்தியா எப்போதும் ஒரே நாடாக இருந்தது இல்லை என்பதே வரலாறு.

மௌரியப் பேரரசு, கி.மு. நான்காம் நூற்றாண்டில் மகதத்திலிருந்து நர்மதை நதிக்கரை வரையில் தனது ஆதிக்கத்தைப் பரப்பியது. கலிங்கம் நீங்கலாகத் தக்காணத்தில் மற்ற பெரும் பகுதியைப் பிந்துசாரன் தன்னாட்சிக்குக் கொண்டு வந்தான். அசோகன் கலிங்கத்தை வென்றான். ஆக, தமிழகத்தின் மூவேந்தர் ஆட்சியைத் தவிர இந்தியத் துணைத் கண்டத்திலிருந்த எல்லாத் தனி நாட்டுப் பகுதிகளும் மௌரியர்களால் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. ஆனால் அரசியல் விற்பன்னர்களான மௌரியர்கள், தங்களது பேரரசை நிலை நாட்டியவுடன், தமது மைய அரசின் கீழ் சில இன்றியமையா அதிகாரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, அந்தந்த தனி நிலப் பகுதிகள் தன்னாட்சியை இழக்காத நிலையில் மத்தியத்தின் மேலாட்சியை மட்டும் நிறுவினர். தனி நாடுகளின் சுதந்திரத்திற்கும், மொழி, பண்பாடுகளுக்கும் எவ்வகையிலும் ஊறு நேரா வண்ணம் மௌரியர்களின் ஆட்சி நடைபெற்றது. பிற்காலக் கூட்டாட்சித் தத்துவத்தின் மூல மாதிரியாக மௌரியர்களின் மைய ஆட்சி விளங்கிற்று.

மௌரியப் பேரரசும் கனிஷ்கர் அரசும் வீழ்ந்த பின்னர் 400 ஆண்டுகள் கழித்து, குப்தப் பேரரசு தோன்றியது. இடைப்பட்ட நான்கு நூற்றாண்டுகளில் வட இந்தியா முழுவதும் பல நாடுகளின் தனியாட்சிகளே நிலவின.

குப்தர்களின் நிர்வாக ஆட்சியும், ஏறத்தாழ மௌரியர்களின் ஆட்சியைப் போன்றதே. இந்தியாவின் மற்ற தனிப் பகுதிகள் அதனதன் தனித் தன்மையை அரசியல் கலாச்சார ரீதியில் இழக்கவில்லை.

6ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குப்தர்கள் ஆட்சி வீழ்ந்த பின்னர், 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுப்பெற்ற ஹர்சவர்த்தனர் காலம் வரை, ஏறத்தாழ 100 ஆண்டுகளில் வடஇந்தியாவில் மீண்டும் தனி நாடுகள் தான் தனி அரசுகளோடு கோலோச்சின.

கி.பி. 647இல் ஹர்சவர்த்தனரின் பேரரசு வீழ்ந்த பின்னர், கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட முகமதியர் ஆதிக்கம் வரை, ஏறத்தாழ 550 ஆண்டுகள் வடஇந்திய வரலாற்றில் வேறு எந்தப் பேரரசும் தோன்றாத காரணத்தால் பல சிற்றரசுகள் தனியாட்சி செய்து வந்தன. அவைகளிடையே ஒருமை நிலையேதும் உண்டாகவில்லை. பின்னர் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 16ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, சுமார் 300 ஆண்டுகள் டெல்லி சுல்தான்களின் ஆட்சி வட இந்தியா முழுவதும் –  அவ்வப்போது தக்காணத் திலும் – நடந்து வந்தது அலாவுதீன் கில்ஜி, முகம்மது பின் துக்ளக் ஆகியோர் காலங்களில் தென்னகம் வரையும் அவர்கள் பேரரசு பரவியிருந்தது. துக்ளக் வம்ச முடிவில், வடஇந்தியா மற்றும் தக்காணப் பகுதிகளில், பேரரசுக்குக் கீழ் ஆங்காங்கே இருந்த ஆளுநர்கள்,  அந்தந்தப் பகுதிகளில் தனி ஆட்சிகளுக்கு வழிகோலினர்.

கி.மு. 300 முதல் கி.பி. 1500 வரை மொத்தம் 1800 ஆண்டுகளின் வடஇந்திய வரலாற்றை நாம் ஆய்வு செய்தால் மௌரியப் பேரரசும் கனிஷ்கர் ஆட்சியும் குப்தப் பேரரசும் ஹர்ஷவர்த்தனர் ஆட்சியும் டெல்லி சுல்தான்களும் அலாவுதீன் கில்ஜி மற்றும் முகமது பின் துக்ளக்கும் கோலோச்சிய ஏறத்தாழ 800 ஆண்டுகள் நீங்கலாக மீதி ஓராயிரம் ஆண்டுகளுக்கு வடஇந்தியாவில் பல நாடுகளின் வரலாறுகள் மட்டுமே எஞ்சி நின்றன. வட இந்தியா முழுவதற்குமான ஒரே சரித்திரம், ஓராயிரம் ஆண்டுகளுக்கு உருவாக வில்லை. எனவே இந்தியா ஒரே நாடு என்ற தத்துவம் வடபுலத்திற்குக் கூடப் பொருந்துவ தில்லை என்பது கண்கூடு.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தக்காணம் தலைதூக்கியது. (தக்காணம் என்பது மராட்டியம், ஒரிசா, ஆந்திரா, கருநாடகப் பகுதிகளைக் கொண்ட பிரதேசம்) பேரரசுகள் ஏதுமின்றி வடஇந்தியா காரிருளில் கலங்கிய போது மராத்தியத்தை மையமாகக் கொண்ட தக்காணப் பேரரசுகள் மலர்ந்தன. முழுத் தக்காணத்தையும் வடபுலத்தின் ஒரு பகுதியையும் சாதவாகனர் என்ற ஆந்திரர்கள் கைப்பற்றி, ஒரு  பேரரசை உருவக்கி, ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் பேராட்சி செய்தனர். கலிங்கம் என்ற ஒரிசாவில், வன்மை மிக்க காரவேலன் கலிங்கப் பேரரசை உருவாக்கிப் புகழோடு ஆண்டான். கலிங்கம் வடபுலத்தின் பேரரசு களுக்குப் பணிய மறுத்தது. அசோகன் கலிங்கத்தை வென்றான். ஆனால் கலிங்கப்போர் அசோகனை வென்றுவிட்டது.

சாதவாகனர்களின் ஆந்திர சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர், தக்காணத்தின் தனிநாட்டுப் பகுதிகளில் தனித்தனி அரசுகள் அவ்வப்போது தோன்றி வலிவு பெற்றுப் பேராட்சி நடாத்தின. மராத்தியத்தில் வாதாபியைத் தலைநகராகக் கொண்ட சாளுக்கியரும், ஆந்திரத்தில் வெங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச் சாளுக்கியரும், பின்னர் இராஷ்டிரகூடர்களும், கர்நாடகத்தில் கங்கர்களும் கடம்பர்களும், ஒரிசாவில் கங்கர்களும் தனித்தனி அரசு கண்டனர். இவ்வரசுகள் கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து 13ஆம் நூற்றாண்டு வரை, தக்காண வரலாற்றை ஒளி பெறச் செய்தன. இவர்களுடைய காலங்களில் தென்னகத்தோடு ஏற்பட்ட கலைத் தொடர்பால், தக்காணத்திலும் திராவிடர் கலை தழைத் தோங்கியது. கன்னட மொழியும், ஒரியா மொழியும், மராத்தி மற்றும் களிதெலுங்கும் சிறப்பாக வளர்ச்சியுற்றன.

சாளுக்கியரின் ஆட்சிக்குப் பின்னிட்டு ஒய்சாளப் பேரரசு கர்நாடகத்தில் சிறந்து விளங்கி, கன்னட மொழியையும் சிற்பம், சித்திரம் போன்ற கலைகளையும் சிறக்கச் செய்தது.

ஆனால், கி.பி. 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வட இந்தியாவிலிருந்து வந்த முகமதியரின் படையெடுப்பு, இந்தப் பேரரசுகளை நிலைகுலையச் செய்தது. இதனால் தக்காணத்தின் வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்று உருவாயிற்று. 14ஆம் நூற்றாண்டில், தக்காணப் பகுதியின் வரலாற்றிலேயே முதன்முறையாக முகமதியர் மதம் வேர் விட்டது. கர்நாடகத்தின் வடபகுதியை யும் மராட்டியத்தின் பெரும் பகுதியையும் ஆந்திரத்தின் தற்போதைய தெலுங்கானாப் பகுதியையும் உள்ளடக்கிய தக்காணத்தின் வடபகுதி, பீசப்பூர் சுல்தானின் ஆளுகைக்குள் வந்தது.

முகம்மதியரின் அரசியல் ஆதிக்கம் மற்றும் மத ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த, விசய நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தக்காணத்தின் தென் பகுதியை உள்ளடக்கிய விசய நகரப் பேரரசு உருவாயிற்று. கர்நாடகம், ஆந்திரா இவைகளின் தென் பகுதிகளை மையமாகக் கொண்ட விசயநகரப் பேரரசு தென்னகத்தின் பெரும் பகுதியைத் தன் வயப்படுத்திக் கொண் டிருந்தது.

முதல் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 1500 ஆண்டுகளின் தக்காண வரலாற்றைப் பகுத்துப் பார்த்தால், தக்காணத்திற் கென்று ஒரு முழுமையான வரலாறு அமைய வில்லை என்பது தெளிவாகும். தக்காணத்திலிருந்த தனி நாடுகளின் தனித் தனி வரலாறுகளின் தொகுப்பே தக்காணத்தின் வரலாறாகத் திகழ் கிறது. தனித்த தேசிய இனங்களின் திறம்பட்ட வளர்ச்சிக்கும் அதனதன் மொழி, கலை, கலச்சார வளர்ச்சிக்கும் அந்தந்தப் பகுதி வரலாறுகள் எப்படித் துணை நின்றன என்பதை முதல் பதினைந்து நூற்றாண்டுத் தக்காண நாடுகளின் வரலாறு நமக்குத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

தமிழகத்தின் வரலாறு – தமிழ் மொழியின் வரலாறு ஆகும். தமிழ் தோன்றிய காலம், சரித்திரத்தில் வரையறுக்கப்படவில்லை. ஆக, தென்னகத்தின் வரலாறு மிகத் தொன்மையானது. மூவேந்தர்கள் பண்டு தொட்டு ஆண்டு வந்தனர் எனச் செப்புகின்றன. தமிழ் மன்னர்களை, மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் வென்றனர். ஏறத்தாழ இருநூறு ஆண்டுக்கால, களப்பிரர்களின் ஆட்சி நடந்தது. பின்னர் மதுரையில் பாண்டியர்களும், காஞ்சியில் பல்லவர்களும் அரியணை ஏறினர். பல்லவர்கள் சாளுக்கியப் பேரரசின் தலைநகரான வாதாபி வரைச் சென்று, சாளுக்கியரை வெற்றி கண்டனர். குகைக் கோயில்களும் சிற்பங்களும் ஓவியமும் நுண்கலைகளும், சைவ-வைணவ சமயங்களும் தோன்றின.

ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்கள் தலைதூக்கி, பல்லவர்களையும் பாண்டியர்களையும் வெற்றி கொண்டு, சோழப் பேரரசை நிறுவினர். இராசராச சோழனும் அவன் மைந்தன் இராசேந்திரனும் சோழப் பேரரசை நிறுவினான்.

14ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகமதியரின் படையெடுப்பு நடந்தது.

1500 ஆண்டுகளின் தென்னக வரலாற்றை நாம் ஆய்வு செய்தால் வடபுலத்துப் பேரரசுகள் என்றுமே தென்னகத்தைத் தன்னகப்படுத்த வில்லை என்பது புலனாகும்.

ஆகவே, நில நூலின் சிறப்பியல்புகளும் வரலாற்றுச் சான்றுகளும், பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் தனி நாடுகளின் பல மொழி களும் பல தேசிய இனங்களும் அவைகளின் தனித்த வரலாறுகளும் இன்னோரன்ன பலவும், ‘இந்தியா’, ‘ஒரு நாடு’ அல்ல என்பதையும், அது ஒரு துணைக் கண்டமே என்பதையும் ஐயந் திரிபற நிலைநாட்டுகின்றன.

முதலில் ‘அகில இந்தியா’ எது என்பதைப் பார்ப்போம். ‘அகில இந்தியா’ என்று குறிப்பிடப்படக் கூடிய ஒரு பெருநிலப் பரப்பு, ஆதியில் எந்தெந்தப் பகுதிகளைக் கொண் டிருந்தது? அதற்கு புராண, இதிகாச மூலங்களைத் தவிர வேறு சான்றுகள் ஏதேனும் உண்டா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர் இட்ட பெயர். எனவே அகில இந்தியாவிற்கு வரலாற்று விளக்கம் கூறிட இயலாது.

‘பரதகண்டம்’ என்ற புண்ணிய பூமிக்கு எல்லைகள் எவை? இந்துக்கள் வாழ்ந்த ‘இந்துஸ்தானம்’ எங்கு தொடங்கி எதில் முடிவடைகிறது? அங்கம், வங்கம், கலிங்கம் எனத் தொடங்கி 56 தேசங்களைக் கொண்ட இந்தியப் பகுதி எது? இன்றைய ஆப்கானிஸ்தானம் வரையும், இரஷ்ய நாட்டின் தென் பகுதி வரையுமே பரந்து நின்ற நிலப்பகுதியா பரதகண்டம்? அல்லது தமிழகம் நீங்கலாக மௌரியப் பேரரசின் ஆளுகையிலிருந்த நிலப்பகுதிதான் புனித இந்துஸ்தானமா? அல்லது ஒரு காலப் பகுதியில் நர்மதை நதிக்கும் வடக்கே முகம்மதியர்களால் ஆளப்பட்ட நிலப்பரப்பிற்குப் பெயர் தான் புனித இந்துஸ்தானமா?

வெள்ளையன் வெற்றிமேல் வெற்றியைக் குவித்து, இன்றைய ஆப்கானிஸ்தானத்தின் பாதிப் பகுதி வரையும் தன் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்தினானே, அந்தப் பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் நமது அகண்ட இந்தியாவா? கி.பி. 1824ஆம் ஆண்டு தொடங்கி, கி.பி.1866ஆம் ஆண்டிற்குள் ஏறத்தாழ 42 ஆண்டுகளில், இன்றைய பர்மா நாட்டில் போர்கள் பலவற்றை நடாத்தி அந்தப் பகுதியையும் வென்று, அதனை யும் கல்கத்தாவுடன் சேர்த்து ஆங்கிலேயன் ஆண்டானே, அந்தப் பர்மா நாட்டையும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதிதான் எனக் கூறலாமா?

கி.பி.1798ஆம் ஆண்டில் வெள்ளையனின் காலடியில் வீழ்ந்துபட்ட இன்றைய இலங்கை நாடும், ஒரு மாவட்டம் என்ற தகுதியில்கூட அல்ல – ஒரு வட்டம் என்ற அடிப்படையில் தமிழகத்தின் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரால் (கலெக்டர்) ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு – வெள்ளையனின் பேரரசால் இந்தியாவுடன் சேர்த்து அண்மைக்காலம் வரையும் ஆட்சி செய்யப்பட்டு வந்ததே, அந்த இலங்கையையும் சேர்த்து இந்திய நாடு எனக் கணக்கிட்டுக் கொள்ளலாமா? அல்லது பர்மா தனித் தொதுங்கிய பின்னர் – இலங்கை தனி நாடான பின்னர் – பாக்கிஸ்தானம் பிரிந்து சென்ற பின்னர் – எஞ்சி நிற்கிறதே இன்றைய ‘இந்தியா எனப்படும் பாரதம்’ – அதுதான் உண்மையான அகில இந்தியாவா? எது அகண்ட பாரதம்?

வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பலப்பல பேரரசுகள் தோன்றியபோதும் – பின்னர் வீழ்ந்த போதும் – தென்கிழக்கு ஆசியப் பகுதியி லிருந்த பல தனித்தனி நாடுகளது எல்லைக் கோடுகள் அவ்வப்போது மாறிக் கொண்டே வந்துள்ளன என்பதுதான் வரலாறு காட்டும் உண்மையேயன்றி, ‘பாரதம்’ என்ற ஒரே ‘அகண்ட இந்தியா’ என்றுமே இருந்ததில்லை.

அகில இந்தியா இல்லையெனில், இன்றைய ஒருமைப்பாடு எவ்வகையில் தோன்றிற்று?

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான மொகலாயப் பேரரசு, இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக வென்று, தமிழகம் நீங்கலாக, மற்ற எல்லாப் பகுதிகளையும் தன்னகத்தே ஆட்கொண்டு விட்டது. மொகலாயப் பேரரசர்களில் தலை சிறந்தவரான அக்பர் ஒரு வலிமையான மைய அரசின் மூலமாக, இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியை ஒற்றுமைப்படுத்த முயன்றார். வாள் முனையாலும் அரச தந்திரத்தாலும் அவர் ஓரளவு  அதில் வெற்றியும் கண்டார். மொகலாயர் களின் கடைசிப் பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் மத்திய அரசினுடைய ஒருமுக வல்லாட்சி முழுமை பெற்றது; ஆனால் முடிவும் பெற்றது.

இந்தியச் சரித்திரத்திலேயே இந்தியா முழுவதற்குமான ஒற்றையாட்சியை முதன் முதலாக உருவாக்கி அதில் ஓரளவு வெற்றியும் கண்டு, பின்னர் இயற்கையான தொழில், இன, தேசிய உணர்வுகள் கிளர்ந்தெழுந்ததால் ‘அகில இந்தியாவை’ நிலை நாட்டுவதில் தோல்வியைத் தழுவிக் கொண்டவர்களும் முகலாயர்களே.

மொகாலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில்தான். முஸ்லிம்  அல்லாத எல்லோரை யும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ்கிருத சுலோகங்களையும், வேதங்களையும் பார்ப் பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போது தான்.

அப்போதும் தமிழ்நாடு மொகலாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்துவிட்டது. அதன் பிறகு 66 ஆண்டுகளுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப்பட்ட நாள் 31.12.1600. இந்திய அரசர்களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். கி.பி. 1612இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப் பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னையிலும் (1640), பம்பாயிலும் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.

வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார்களா? இந்தக் கம்பெனி வெறும் கையுடன் வந்துவிடவில்லை. தனக்காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்திலுள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி, தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரங்கசீப் மரணமடைந்தார் (கி.பி.1707).  பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர் களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது.

ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி. 1749). தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தியாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றிகளைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.

அப்போது இலங்கை ஒரு மாவட்டமாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர்வாக அலுவலகமே தமிழ்நாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ்தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’தான். இப்போதுள்ள வடகிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டுகால வரலாற்றில் – தனித்தனிப் பகுதிகளாக நிலவிய தேசங்களை – துப்பாக்கி முனையில் மிரட்டி – ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.

மாநில சுயாட்சி முழக்கங்கள்

அதிகாரங்களை இந்தியர்களுக்குப் பகிர்ந் தளிக்க ஆங்கிலேயர் ஆட்சி முன்வந்த போது, காங்கிரஸ் கட்சி மாநில சுயாட்சி முழக்கங்களை முன்வைக்கத் தவறவில்லை. பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுதான் இந்தியா என்றும், மொழி வழி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்றும் அந்தக் காலகட்டங்களில் காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது. 1935ஆம் ஆண்டு, இந்தியாவுக்கான அரசியல் சட்டம் ஒன்றை, பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கி இலண்டன் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியது. (இந்தச் சட்டத்தின் பெரும் பகுதிகள் பின்னால் உருவாக்கப்பட்ட இந்திய  அரசியல் சட்டத்தில் அப்படியே சேர்க்கப் பட்டன) அப்போது, மாநில சுயாட்சியோடு கூடிய கூட்டாட்சியை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கமிட்டி  பம்பாயில் கூடி தீர் மானம் நிறைவேற்றியது என்பது வரலாறு (1942).

இப்படி மாநில சுயாட்சிக்குக் குரல் கொடுத்த காங்கிரஸ் – அரசியல் சட்டத்தில், அதைப் புறக்கணித்தது ஏன்? மய்ய அரசிடமே அதிகாரங்களைக் குவிக்கச் செய்தது ஏன்? பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து போனதால், மேலும் பிரிவினைகள் ஏற்படாமல்  தடுப்பதற்கே, வலிமையான மத்திய அரசை உருவாக்க விரும்பினார்கள். அந்த உள்நோக்கத்துடனேயே மாநில உரிமைகள் குறைக்கப்பட்டன என்று பல்வேறு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த நிழலைத்தான் ‘அகில இந்திய ஒற்றுமை’ எனக் கூறுகின்றனர். உண்மையில் அது ஒருமைப்பாடல்ல; ஒற்றுமையைப் போன்ற ஒரு வெறும் மாயத் தோற்றமே; அது செயற்கை யானதும் மிக்க பலவீனமானதுமாகும். நில நூலாலும், நெடிய வரலாற்றாலும், தனித்த மொழிகளாலும், பண்பாட்டாலும் உருவாக்கப் பட்டதும், பேணி வளர்க்கப்பட்டதுமான தனித் தேசிய இனங்கள் ஒரு வலிமையான மத்திய அரசின் ஆட்சியால் ஒன்றோடொன்று கலந்து விட்டதெனக் கருதுவதும் அதன் வழி உண்மையான அகில இந்திய ஒற்றுமை மலர்ந்து விட்டதெனக் கொள்வதும் பேதமையிலும் பேதமை.

‘இராவணன்’

நிமிர்வோம் ஜுலை 2019 இதழ்

You may also like...