அயோத்தி இராமன் கோயில் – பாபர் மசூதி – வரலாறுகள் கூறுவது என்ன? கே.என். பணிக்கர்
மோடி மீண்டும் பிரதமரானதைத் தொடர்ந்து அயோத்தியில் ‘இராமன்’ கோயில் கட்டும் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்கள். முதற்கட்டமாக தேர்தல் முடிவுக்குப் பிறகு உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அயோத்தியில் இராமன் சிலையை நிறுவியிருக்கிறார்.
அயோத்தியில் இராமன் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாப்ரி மசூதி கட்டப்பட்டதா? இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தி இந்த அயோத்தி தானா? என்பது குறித்து அடுக்கடுக்கான வரலாற்றுச் சான்றுகள் வழியாகக் கேள்விகள் எழுந்து நிற்கின்றன.
அயோத்தி, இராமன் பிறந்த இடம் தானா? இந்தக் கேள்வி இது தொடர்பான வேறொன்றையும் எழுப்புகிறது. இன்றைய அயோத்தி இராமாயணத்தில் குறிப்பிடப்படும் அயோத்திதானா?
இராமனுடைய கதை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் ‘ராமகதா’வில் சொல்லப்பட்டன. இந்த ‘இராம கதா’ இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. இந்த இராமனின் கதை நிகழ்ச்சிகளை பின்னாளில் ‘இராமாயணம்’ என்ற பெயரில் மிக நீண்ட இதிகாசமாக வால்மீகி எழுதினார். இது முழுவதும் கவிதைகளாக, செய்யுள்களாக இருந்தது. இதனாலேயே இதில் கூறப்பட்ட பாத்திரங்கள், இடங்கள் உள்பட பெரும்பாலானவை கற்பனையாக இருக்கக் கூடும். எனவே இதில் வரக்கூடிய பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் அல்லது இடங்களை வேறு ஆதாரச் சான்று இல்லாமல் வரலாற்றாளர் ஒப்புக் கொள்ள முடியாது. இச்சான்றும் வரலாற்றாளர் களால் அதிக நம்பிக்கைக்குரியன என்று கருதப் படும் ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டிருக்க வேண்டும். பெரும்பாலும் வரலாற்றுச் சான்றுகள், பரவலான நம்பிக்கைகளுடன் முரண்படுகின்றன.
வால்மீகி இராமாயணத்தின்படி, அயோத்தி மன்னன் இராமன் ‘திரேதாயுக’த்தில் பிறந்தான். திரேதாயுகம் என்பது கலியுகத்திற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்புள்ள காலம். கலியுகம் கி.மு. 3102ஆம் ஆண்டில் ஆரம்ப மானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
- இன்றைய அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் இராமன் பிறந்த ‘திரேதாயுகத்தில்’ மனிதர்கள் வாழ்ந்ததற்கான அகழ்வாய்வுச் சான்றுகள் எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் குடியேற்றங்கள் நிகழ்ந்த ஆரம்ப காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டாக இருப்பது தான் சாத்தியம். இந்தப் பகுதியில் நடத்தப் பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகள் மிகச் சாதாரண பொருளியல் வாழ்க்கையைச் சுட்டுகின்றன. இது வால்மீகி இராமாயணத்தில் வர்ணிக்கப்பட் டுள்ளதைவிட மிகவும் புராதனமானது.
- நகர்ப்புறச் சூழலில் அமைந்துள்ள பெரு மளவிலான கட்டடங்கள், அரண்மனை களைப் பற்றி இராமாயணத்தில் பரவலாகப் பல குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் இத்தகைய நகர்ப்புறக் கட்டட வளாகங்கள் பற்றிய விவரிப்புகள், கி.மு. 8ஆம் நூற்றாண்டு குறித்த அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் உறுதி செய்யவில்லை.
- அயோத்தியின் அமைவிடம் குறித்தும் ஒரு சர்ச்சை உண்டு. கோசல நாட்டின் பெரிய நகரங்களாக ஷரவஸ்தி, சாகேதம் ஆகியவற்றைத்தான் ஆரம்பக்கால பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றனவே தவிர அயோத்தியைக் குறிப்பிடவில்லை. கோசலத்தின் தலைநகர் சாகேதம் என ஜைன நூல்களும் குறிப்பிடுகின்றன. அயோத்தி என்ற ஒன்றைப் பற்றி மிகக் குறைந்த குறிப்புகளே காணப்படுகின்றன. அந்த அயோத்தியும் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. இன்றைய அயோத்தியின் அமைவிடமான சரயு நதிப் பகுதியில் அது அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட வில்லை.
- குப்த அரசன் ஒருவன் சாகேதம் என்ற நகருக்கு அயோத்தி என்று பெயர் மாற்றினான். ஸ்கந்த குப்தன் என்ற அரசன், கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தன்னுடைய இருப்பிடத்தை சாகேதம் நகருக்கு மாற்றிக் கொண்டு அதை அயோத்தி என்று அழைத்தான். இவன் தனக்கு விக்கிரமாதித்தன் என்று பெயர் சூட்டிக் கொண்டு, அதனை தான் வெளியிட்ட தங்க நாணயங்களிலும் பொறித்தான். இவ்வாறு இதிகாசக் கவிதையின் கற்பனையாக இருந்திருக்கக் கூடிய அயோத்தி பிற்காலத்தில் சாகேதம் நகரோடு இனங்கண்டு கொள்ளப்பட்டது. இதனால் குப்த அரசன், இராமனின் பக்தன் என்று கூறுவதாகக் கருதிவிட வேண்டிய அவசியம் இல்லை. சாகேதத்தை அயோத்தி என்று பெயர் மாற்றுவதன் மூலம், இராமன் பிறந்த வமிசமாகச் சொல்லப்படும் சூரிய வமிசத்து அரச பரம்பரையைத் தன்னுடைய தாக்குவதன் வாயிலாகத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ள முயன்றான்.
- ஏழாவது நூற்றாண்டுக்குப் பிறகு வந்த நூல்களில் அயோத்தி பற்றி வலுவான குறிப்புகள் உள்ளன. கி.பி. முதல் ஆயிரமாண்டு மற்றும் இரண்டாம் ஆயிரமாண்டின் முற்பகுதி காலத்திய புராணங்கள், இராமாயணத்தைப் பின்பற்றி அயோத்தியை கோசல நாட்டின் தலைநகரம் என்றே குறிப்பிடுகின்றன. ‘விஷ்ணுதர்மோத்தர மகாபுராணம் 1.240.2)
- ஒரு வகையில், அயோத்தியின் உள்ளூர் பாரம்பரியக் கதை, அயோத்தியின் ஆரம்பம் பற்றிய தெளிவற்ற வரலாற்றினை அங்கீகரிக்கின்றது. திரேதாயுதத்திற்குப் பிறகு அயோத்தி மறைந்து விட்டது. அதனை மீண்டும் விக்கிரமாதித்தன் கண்டு பிடித்தான் என்பதுதான் அந்தக் கதை. மறைந்து போன அயோத்தியைத் தேடி அலைந்த விக்கிரமாதித்தன், தீர்த்த அரசன் எனப்பட்ட ‘பிரயாக’ என்பவரைச் சந்தித்தான். அயோத்தியைப் பற்றி அறிந்திருந்த அவர், அவனுக்கு அதைக் காண்பித்தார். அந்த இடத்தைக் குறித்து வைத்தான். ஆனால் பின்னர் இதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் அவன் ஒரு சந்நியாசியைச் சந்தித்தான். அவர் அவனிடம் ஒரு பசுவையும் கன்றையும் மேயவிடுமாறு கூறினார். அந்தக் கன்று ஜென்மபூமிக்கு வரும்போது அதனுடைய மடியிலிருந்து பால் சுரக்கும் என்று கூறினார். சந்நியாசியின் யோசனையை அரசன் கடைபிடித்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில், கன்றின் மடியி லிருந்து பால் சுரக்கத் தொடங்கிய போது பண்டைய அயோத்தியின் அமைவிடம் அதுதான் என்ற முடிவுக்கு அரசன் வந்தான் என்கிறது அந்தக் கதை.
பண்டைய புனிதமான மரபுவழிக் கதை என்று போற்றப்படுகிற அயோத்தியை ‘மீண்டும் கண்டுபிடித்த’ கதையானது. ஒரு குறிப்பிட்ட மத ரீதியான புனிதத் தன்மையை, அப்படியில்லாத ஒரு நகருக்கு ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். இந்தக் கட்டுக்கதைகளிலும்கூட அந்த அமை விடங்கள் ஒன்றையொன்று ஒத்தவை என்பதற்கான வழிமுறை உறுதியற்றதாகவும் தன்னிச்சையானதாகவும் தோன்றுகின்றது.
இன்றைய அயோத்தி, ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் சாகேதம் என்று வழங்கப்பட்டிருக்குமாயின் வால்மீகியின் இராமாயணத்தில் வரும் அயோத்தி கற்பனையான தாகும். அப்படியானால் இன்றைய அயோத்தியில் இராம் ஜென்மபூமியை அடையாளங் காண்பதென்பது நம்பிக்கையின்பாற்பட்டதே தவிர வரலாற்றுச் சான்றின்பாற்பட்டதல்ல.
இராம ஜென்மபூமியின் உத்தேசமான அமைவிடம் பற்றிய வரலாற்றுப்பூர்வமான உறுதியற்ற தன்மையும் புத்தருடைய பிறப்பிடத் தின் வரலாற்றுப் பூர்வமான உறுதியற்ற தன்மையும் புத்தருடைய பிறப்பிடத்தின் வரலாற்று உறுதித் தன்மையும் ஒன்றோடொன்று முரண்படுகின்றன. புத்தர் மறைந்து இரு நூற்றாண்டுகளுக்குப் பின், லும்பினி என்ற கிராமமானது புத்தர் பிறந்த இடமாகும் என்று, அவரது நினைவாக அங்கு கல்வெட்டு ஒன்றை மௌரிய அசோகர் நிறுவினார். இந்த விஷயத்திலும், அந்தக் கிராமத்திற்கு அருகில் புத்தர் பிறந்தார் என்று மட்டும்தான் அந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. துல்லியமாக இந்த இடம் என்று கல்வெட்டு குறிப்பிட முயற்சிக்கக் கூட இல்லை.
- அயோத்தி அனைத்து மதத்தினரின் ‘புனிதத்தலம்’
இராம வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு மதங்களுக்கும் புனிதத் தலமாக அயோத்தி இருந்து வந்திருக்கிறது.
1) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுகள் மற்றும் இதற்குப் பிந்தைய காலத்தியவை கூட அயோத்தி மக்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. ஆனால் அந்த இடத்தை இராமருடைய வழிபாட்டுடன் இணைத்து அவற்றில் ஒன்றுகூடக் குறிப்பிடவில்லை. (எப்பிகிராஃபிகா இண்டிகா 10 பக்.72; 15 பக். 143; 1 பக். 14)
2) பிக்குகளின் மடங்கள், ஸ்தூபிகள் மற்றும் ஒரு சில பௌத்தமல்லாத கட்டடங்களும் அமைந்திருந்த அந்த இடம், பௌத்தத்தின் ஒரு முக்கிய தலமாகும் என்று அயோத்தியைப் பற்றி யுவாங்சுவாங் எழுதுகிறார். புத்தர் சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படும் அயோத்தி, பௌத்தர்களுக்கு ஒரு புனித தலமாகும்.
3) ஜைன யாத்ரீக ஸ்தலமாகவும் அயோத்தி இருக்கிறது. ஜைனர்களைப் பொருத்தவரை, அது முதலாம் மற்றும் நான்காம் ஜைன தீர்த்தங்கரர்கள் பிறந்த இடமாகும். கி.மு.
4-3ஆம் நூற்றாண்டைய அகழ்வாய்வில் கண்டுபிடித்த சாம்பல் நிறமான, மண்கதையாலான ஜைன உருவமானது, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பழைய ஜைன உருவங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
4) கிபி. பதினொன்றாம் நூற்றாண்டைய நூல்கள் அயோத்தியில் கோபதரு தீர்த்தம் என்ற இடத்தைக் குறிப்பிடுகின்றனவே தவிர, இராமனுடைய ஜென்மபூமியுடனான தொடர்புகள் எதையும் பற்றிக் குறிப்பிடவில்லை.
5) பதிமூன்றாம் நூந்நாண்டிலிருந்துதான் இராம வழிபாடானது பரவி இருப்பதாகத் தெரிகிறது. இராமநந்தி சமயப் பிரிவின் மெதுவான தோற்றத்தோடும் இந்தியில் இராமன் கதை எழுதப்பட்டதோடும் இராம வழிபாடு அடித்தளத்தைப் பெற்றது.
15-16ஆம் நூற்றாண்டுகளில்கூட இராம நந்திகள் அயோத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறி யிருக்கவில்லை. இராமர் வழிபாட்டை விட சைவ சமயமே மிக முக்கியமானதாக யிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டி லிருந்து தான் இராமநந்தி சாதுக்கள் இங்கு பெருமளவில் குடியேறியிருப்பதாக நமக்குத் தெரிய வருகிறது. அதற்குப் பின் வந்த நூற்றாண்டுகளில்தான் அவர்களது கோயில்களில் பலவற்றை அயோத்தியில் அவர்கள் கட்டினார்கள்.
- இராமர் கோயில் இடிப்புக்கு
வரலாற்றுச் சான்று இல்லை
முன்னர் ஒரு கோயில் அமைந்திருந்த நிலத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்கிற கருதுகோளுக்கு ஆதரவான வரலாற்றுச் சான்று எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை.
1) பாபருக்காக ஒரு மசூதி நிறுவப்பட்டது என்பதைக் குறிக்க, மசூதியினுடைய கதவின் இரு பக்கங்களிலும் பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதில் இருக்கும் வரிகளைத் தவிர, வேறெந்த மூலச் சான்றும் அங்கு கிடையாது. பாபர் நாமாவை முதன்முதலில் மொழி பெயர்த்த திருமதி பெவரிட்ஜ், மேற்சொன்ன பாரசீக மொழியிலான வரிகளையும், அவற்றின் மொழி பெயர்ப்பையும் அந்த நூலில் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளார். அதன் முக்கியப் பகுதி பின்வருமாறு:
“விண்ணுலகத்தை எட்டும் வகையில், நீதியை நிலைநாட்டிய பேரரசர் பாபரின் ஆணைப்படி நல்லிதையம் படைத்த மீர் பாகி என்பவர், தேவ தூதர்கள் வந்திறங்கும் இடமாக இதைக் கட்டினார். பவத் (புவத்) கெயிர் பாகி (இந்நற்செயல் நீடித்து நிலைக்கட்டும்) (பாபர் நாமா, ஏ.எஃப் பெவரிட்ஜ் மொழி பெயர்ப்பு 1922, ஐஐ, பக். டஒஒஎiகைக)
பாபர் அவையின் அறிஞரான மீர் பாகி என்பவர் இந்த மசூதியைக் கட்டியதாக மட்டுமே அந்தக் கல்வெட்டு கூறுகிறது. ஒரு கோயில் இருந்த இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாக இதில்வரும் எந்த வரியும் கூறவில்லை. அயோத்தியிலுள்ள எந்தக் கோயிலையும் இடித்ததாக பாபர் நாமாவில் எந்தக் குறிப்பும் இல்லை.
2) அயின்-இ-அக்பரியானது, “திரேதாயுகத்தில், ஆன்மிக ஆற்றலும் அரச பதவியும் கொண்ட இராமச்சந்திரனின் இருப்பிடமாக அயோத்தி இருந்தது” என்று குறிப்பிடுகிறது. ஆனால், இராமன் கோயில் இருந்த இடத்தில், இந்நூலாசிரியரின் பாட்டனாரை ஆதரித்ததவரால் மசூதி அமைக்கப்பட்டது பற்றி குறிப்பெதுவும் இதில் காணப்படவில்லை
3) அக்பரின் சமகாலத்தவரும் இராம பக்தரும் அயோத்தியில் குடியிருந்தவருமான துளசிதாஸ், இராம ஜென்மபூமி இருந்த இடத்திலிருந்து இந்துக் கோயிலை இடித்ததாகக் கூறவில்லை. தீவிர இராம பக்ரான இந்தியில் இராமாயணத்தை எழுதிய துளசிதாஸ், தனது காலத்தில் கோயில் இடிக்கப்பட்டிருக்குமானால், வெகுண்டு எழுத்திருக்க மாட்டாரா?
4) இந்தக் கதை 19ஆம் நூற்றாண்டில்தான் பரவியது. அச்சமயம்தான் இந்தக் கதை, அரசாங்கப் பதிவேடுகளிலும் இடம் பெறுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிகால பதிவேடுகளில் கோயில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் கதை, வரலாற்றுப்பூர்வமான உண்மைகளை ஆராயாமல் அப்படியே கூறப்பட்டுள்ளது என்று அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. (ஆதாரம் பி. கார்நேகி-ஹிஸ்டாரிகல் ஸ்கெட்ச் ஆஃப் பைஸாபாத் தாசில், பைஸாபாத் ஜில்லா, லக்னோ, 1870; ஹெச்.ஆர். நெவில், பைஸாபாத் மாவட்ட கெஜட், அலாகாபாத், 1905)
மேலே கூறப்பட்டுள்ள மொழி பெயர்க்கப் பட்ட பகுதிக்கு எழுதியுள்ள ஓர் அடிக்குறிப்பில், இக்கதையில் தனக்குள்ள நம்பிக்கையை திருமதி பெவரிட்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
முஸ்லிமான பாபர், “பழைய இந்துக் கோயிலின் மேன்மையினாலும், புனிதத்தினாலும் ஈர்க்கப்பட்டு”, “குறைந்தபட்சம் ஒரு பகுதி” கோயிலையாவது இடித்துவிட்டுத்தான் மசூதியை எழுப்பியிருப்பார் என்று திருமதி பெவரிட்ஜ் என்ற ஆய்வாளர் அனுமானத்தின் அடிப்படை யில் கூறுகிறார். அவருடைய வாதம் ஏற்கத்தக்கது அல்ல. “அதாவது பாபர், முகமது நபியைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் ஆகையால் அவர் வேறு எந்த மதத்தையும் சகிக்கும் தன்மை இல்லாதவர். ஆகவே, கோயிலுக்குப் பதிலாக மசூதியைக் கட்டுவதை ஒரு கடமையாகவும் பயனுள்ள தாகவும் கருதியிருப்பார்” என்பதே அந்த வாதம். இது மிகவும் கேள்விக்குரிய ஓர் அனுமானமாகும்; ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவரின் தன்மையும் நடத்தையும் இப்படித்தான் இருக்கும் எனப் பொதுமைப்படுத்தும் முறையிலிnருந்தே இந்த அனுமானம் உண்டாகியிருக்கிறது. ஒரு கோயில் இருந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது என்ற தனது கூற்றுக்கு எந்த வரலாற்றுச் சான்றையும் திருமதி பெவரிட்ஜ் கொடுக்கவில்லை. உண்மையில் பிற மதங்களின் வழிபடும் இடங்களைக் குறித்த பாபர் அரசின் கொள்கைகள், திருமதி பெவரிட்ஜின் ஊகத்தை சிறிதும் நியாயப்படுத்தும் வகையில் இல்லை.
இந்தியாவை ஒன்றுக்கொன்று பகையுணர் வுள்ள பல சமயப் பிரிவினரைக் கொண்ட ஒரு நாடாகக் கருதி சித்தரித்துக் கொண்டிருந்தன. பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு, இத்தகைய கதைகள் சுயச்சான்றுகள் கொண்டவையாகத் தோன்றி யிருக்கலாம். ஆனால் வரலாற்றாளர்களோ எதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக் கிறது. ஒவ்வொரு வரலாற்றுக் கூற்றின் நம்பகத் தன்மையையும் அதன் ஆதார மூலங்களையும் கூர்ந்து ஆராய வேண்டியிருக்கிறது.
ஒரு கோயிலை இடித்து அவ்விடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதற்குச் சான்று இல்லை என்பது ஒருபுறமிருக்க, அம்மசூதி, மத்திய கால வரலாற்று மூலங்களின்படி இஸ்லாமிய மதரீதியிலோ அல்லது பண்பாட்டு ரீதியிலோ பெரிய மகத்துவம் கொண்ட ஒன்றாக முஸ்லிம்களால் கருதப்படவில்லை.
இஸ்லாமிய மன்னர்கள் இயல்பாகவே எப்போதும் இந்துக்களின் புண்ணியத் தலங்களுக்கு எதிராக நடந்து கொண்டனர் என்பதும் ஊகங்களே தவிர, வரலாற்றுச் சான்றுபூர்வமானதல்ல.
- முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு, அயோத்தி ஒரு புண்ணியத்தலமாக வளர்வதற்கு மிகவும் முக்கியமாக இருந்தது. காயஸ்தர்களது ஒத்துழைப்பைச் சார்ந்து நவாப் அரசு செயல்பட்டது என்றும் அவர்களது இராணுவத்தில் சைவ நாகர்களின் செல்வாக்கு அதிகமிருந்தது என்றும், சமீபகால ஆராய்ச்சிகளிலிருந்து தெரிகிறது. கோயில்களுக்கு ஆதரவு கொடுப்பதும், தானங்கள் அளிப்பதும் நவாப் ஆட்சியதிகாரத்தைச் செலுத்தும் முறையோடு ஒன்றிணைந்த பகுதியாக இருந்தன. நவாப் சப்தர்ஜங்கின் திவான், அயோத்தியில் பல கோயில்களைக் கட்டியும், பழுது பார்த்து சீர் செய்தும் உள்ளார். அயோத்தியில் அனுமான் மலை யில் கோயில் கட்ட சப்தர்ஜங், “நிர்வாண ஆக்கார”வுக்கு இடம் வழங்கினார். அனுமான் மலையில் கோட்டை போலமைந்த கோயிலைக் கட்ட அசஃப் உத்தௌலாவின் திவான் உதவி செய்துள்ளார். இந்து சந்நியாசிகளால் நடத்தப்பட்ட மதச் சடங்குகளுக்கு, நவாபின் சபையிலுள்ள முஸ்லிம் அதிகாரிகள் பல தானங்கள் வழங்கியுள்ள செய்திகளை பண்டாக்களின் பதிவேடு களில் காணலாம்.
2) இந்து-முஸ்லிம் சச்சரவுகளின்போது முஸ்லிம் அரசர்கள் முஸ்லிம்களையே எப்போதும் ஆதரிக்கவில்லை. அனுமான் கோயிலைப் பற்றி அயோத்தியில் 1855இல் சன்னி முஸ்லிம்களுக்கும் நாக சாதுக் களுக்குமிடையே ஒரு சச்சரவு ஏற்பட்ட போது, உறுதியான, இறுதியான நடவடிக்கை ஒன்றை வாஜித் அலி ஷா எடுத்தார். மாவட்ட அதிகாரி ஆகா அலி கான், முக்கியமான இந்து நில உரிமையாளர் ராஜா மான்சிங், பிரிட்டிஷ் கம்பெனியாரின் சேனைக்குப் பொறுப்பாளராயிருந்த இங்கிலாந்து அதிகாரிகள் ஆகியோர டங்கிய முத்தரப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தார். பேச்சுவார்த்தை மூலமான உடன்பாடு, வகுப்புவாதம் உருவாவதைத் தடுக்கத் தவறியபோது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, முஸ்லிம் தலைவர்களின் ஆதரவை வாஜித் அலி ஷா திரட்டினார். முஸ்லிம் வகுப்புவாத சக்திகளின் தலைவரான மௌலவி அமீர் அலியின் சொத்துகளைப் பறிமுதல் செய்தார். அமீர் அலியினால் வழி நடத்தப்பட்ட சன்னி முஸ்லிம் பிரிவினரை ஒடுக்க இறுதியாக இராணுவத்தை வரவழைத்தார்; இதில் முன்னூறிலிருந்து நானூறு பேர் வரைக் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், இந்துக்களுக்கும் முஸ்லிம் களுக்கும் இடையே சச்சரவுகளே இல்லை என்பதல்ல; எந்த ஒரு மதத்திலும் ஒரே வகுப்பினராகவும் இல்லை. ஒரு வகுப்பினரிடையே உள்ள பிரிவுகளுக்கும் குழுக்களுக்கும் இடையே பகைமை இருந்தபோதே, வெவ்வேறு வகுப்பினரிடையே ஒற்றுமையும் இருந்தது.
இந்து மற்றும் முஸ்லிம் வகுப்புவாத சக்தி களின் கோரிக்கைகளுக்கு வரலாற்று அங்கீகாரம் கிடையாது என்பதை மேற்கண்ட வரலாற்றுச் சான்றின் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு புனித தலம் என்ற வகையில் அயோத்தியின் தனித்தன்மை, பல நூற்றாண்டுகளாக மாறிக் கொண்டே வந்திருக்கிறது. பல மதங்களின் வரலாற்றுடனும் அது பிணைக்கப்பட்டுள்ளது. பல வகுப்பினர்கள் அவரவர்க்குச் சொந்தமான புனிதத் தன்மையை அதற்கு வழங்கியுள்ளனர். அந்த நகரம் தமக்கு மட்டுமேயான புனிதத் தலம் என்று எந்தவொரு வகுப்பும் உரிமை கோர முடியாது.
எந்த ஒரு சமுதாயமும் வரலாறுகளை தனக்குரிமையாக்கி பெருமையடைவது ஒரு தொடர் நிகழ்வாகவே இருக்கிறது. இந்தியா பல்வேறு மதம், கலாச்சாரங்களைக் கொண்ட நாடு. இப்படி ஒரு நாட்டில் இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைக்கும் வகுப்புவாதக் கண்ணோட்டத்தோடு, ‘இந்து’ பாரம்பரியப் பெருமையை முன்னிறுத்தத் தொடங்கினால், நாடு – மதக் கலவரத்திலேயே மூழ்கிப் போய் சமூக ஒருங் கிணைவையும் முன்னேற்றத்தையும் சிதைத்து விடும்.
(கே.என்.பணிக்கர், இந்தியாவின் தலைசிறந்த வரலாற்று அறிஞர். புதுடெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்று ஆய்வு மய்யத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ‘வகுப்புவாத அச்சுறுத்தலும் மதச்சார்பின்மை சவால்களும்’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளது இக்கட்டுரை.)
நிமிர்வோம் ஜுன் 2019 மாத இதழ்