இந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி? விவாதங்கள் தொடங்கட்டும்!
இந்தியா இந்துக்களுக்கான தேசம் என்ற பெருமிதத்தோடு அதன் “பெருமைமிகு” பாரம்பர்யத்தை மீட்டெடுப்பதை அரசியல் முழக்கத்துடன் இணைப்பதே பா.ஜ.க. – சங்பரிவாரங்களின் அரசியலுக்கான அடித்தளம். அந்தக் கற்பிதங்களை உணர்வுகளாக்கி வாக்குகளாக மாற்றுவதில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
தேசப் பெருமையோடு தேசத்தின் பாதுகாப்பையும் சாதுர்யமாக பிணைத்துக் கொண்டுதான் பார்ப்பனியமும் தன்னைத் தொடர்ந்து ஆதிக்க சக்தியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘மனுசாஸ்திரம் வர்ணாஸ்ரமம்’ என்ற நஞ்சு – இந்த தேசக் கட்டமைப்புக்குள் எவரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் பதுங்கி நிற்கிறது.
பார்ப்பன கொடுங்கோன்மைக்கும் அதன் சமூக அரசியல் ஆதிக்கத்துக்கும் எதிராகப் போராடிய பெரியார், தேசிய எதிர்ப்பையும் அதில் ஏன் இணைத்தார் என்ற வரலாற்று உண்மை – இப்போது புரிந்திருக்கும். சமூக ஆய்வாளர்கள் பலரும் இப்போது இது குறித்து வெளிப்படையாக எழுதத் தொடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
“தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி என்றென்றும் அடிமைகளாக ஆக்கி வைத்துக் கொள்ளப் பார்ப்பனர் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது” – என்றார் பெரியார்.
வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் அவலம், பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரிகளால் சிறு குறு தொழில்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், சிறுபான்மை மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், படுகொலைகள், சமூகப் பதட்டம் போன்ற மக்கள் பிரச்சினைகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, இந்து தேசியத்தைப் பாதுகாக்கும் வலிமை மிக்க தலைவர் மோடி மட்டுமே என்ற எண்ண ஓட்டமே தேர்தலில் மேலோங்கி நின்றதற்குக் காரணம் என்ன? அதுவும் பகுத்தறிவு – சமூகநீதி சிந்தனைகள் விதைக்கப்படாத இந்தி பேசும் மாநிலத்தைச் சார்ந்தவர்களிடம் இந்த சிந்தனை ஒன்று மட்டுமே ஏன் அழுத்தமாக நின்றது? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களிடம் தாங்கள் ஏன் சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டவர்களாக்கப்பட்டோம் என்ற விழிப்புணர்வு உருவாகாமல் போனது ஏன்? ‘இந்து’ என்ற மத அடையாளத்துக்குள்ளேயே முகத்தைப் புதைத்துக் கொண்டு கிடப்பது ஏன்? இவை விவாதிக்கப்பட வேண்டும்.
திறந்த போட்டியில் முன்னேறிய சாதிப் பிரிவினருக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, பார்ப்பன உயர்ஜாதி ஓட்டுகளை உறுதிப்படுத்திக் கொண்ட பா.ஜ.க., தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களையும் தந்திரமாக திசை திருப்பி, ‘இந்து’ என்ற மாய வலைக்குள் அவர்களையும் சிக்க வைத்து தங்களை ஆதரவாளர்களாக்கிக் கொண்டது எப்படி? ஒரே நேரத்தில் ‘பூனைக்கும் எலிக்கும்’ காவலர்களாக அரங்கேறிய நாடகத்தில் இவர்களால் எப்படி வெற்றி பெற முடிந்தது? இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடினால் மீண்டும் பெரியாரியலுக்கே வரவேண்டியிருக்கிறது. ‘இந்து தேசியம்’ என்ற பார்ப்பன கொடுங்கோன்மையிலிருந்து மக்களை மீட்டெடுக்க விரும்பும் கட்சிகள் எதுவாக இருந்தாலும் அதற்கான ‘மாற்று’ எங்கே இருக்கிறது என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.
- இந்து மதம் என்பது வேதமதம் தான். அது ஒடுக்கப்பட்ட இந்து மக்களின் உரிமைகளைத் தடுத்து நிறுத்தும் பார்ப்பனிய கோட்பாடுகளைக் கொண்ட மதமே தவிர அந்த மக்களுக்கு உரிமைகளை வழங்கக் கூடியது அல்ல.
- எனவே உரிமை மறுக்கப்பட்டவர்களாக இருக்கும் ‘இந்து’ வெகு மக்களின் சமூக நீதி – சம உரிமைக்கான போராட்டக் களத்துக்கு அவர்களைத் தயார்படுத்த வேண்டும்.
- இந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல; பல்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் வர்த்தக நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு உபகண்டம். எனவே இங்கே ஒவ்வொரு மாநிலத்துக்குமான தன்னாட்சி உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.‘சுதந்திரப்’ போராட்டக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியே மாநிலங்களுக்கான தன்னாட்சியை வலியுறுத்தியது என்பது தான் வரலாறு.
தன்னாட்சி – சமூகநீதி – பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்ற கருத்துகளை மக்களிடம் விதைத்து இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை உருவாக்கி, ‘இந்து தேசியத்துக்குள்’ பதுங்கி நிற்கும் பார்ப்பனியத்தை தனிமைப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதங்களை தொடங்க வேண்டும்.
நிமிர்வோம் ஜுன் 2019 மாத இதழ்