வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்
மீத்தேன் திட்ட செயல்பாட்டுக்கான அனுமதியை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால் காவிரி டெல்டாவில் போராட்டங்கள் அடங்கியிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற இன்னொரு வடிவில் இயற்கை எரிவாயு எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் பெயர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என நெடுவாசல் பகுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த திட்டம் மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இப்போது மோடி அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி 760 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் படிந்துள்ள மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எரிவாயுவை வெளிக்கொணரும் வகையில் காவிரிப் படுகையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அளித்திருந்தது மத்திய அரசு. பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு ரத்து செய்தது.
இதைத் தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் அடி ஆழத்தில் உள்ள பூமிப் பாறைகளின் இடுக்கில் உள்ள ஷேல் கேஸ் எனப்படும் பாறைப்படிம எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு உரிமம் வழங்கியது. இத்திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் சார்பில் வழக்கும் தொடரப்பட்ட நிலையில் அப்பணியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், இந்த தொழிலில் முதலீடுகளை அதிக அளவில் கவரும் நோக்கத்துடன் கடந்த 10.03.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஹைட்ரோ கார்பன் ((Hydro Carbon Exploration and Licensing Policy – Help) என்ற கொள்கை திட்டத்தை அறிவித்தார். அதில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஏற்கனவே கடைபிடித்து வந்த விதிமுறை களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி பூமிக்கு அடியில் எந்த வடிவத்தில் ஹைட்ரோ கார்பன் இருந்தாலும் அதனை வெளிக் கொணர ஒரே ஒரு உரிமம் பெற்றால் போதும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த சலுகை அதில் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் மற்றும் புதுச்சேரி பிரதேசம் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பின்னணியில் பார்த்தால் ஏற்கனவே ரத்து செய்வதாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள மீத்தேன் ஷேல் கேஸ் திட்டத்தையும் செயல்படுத்த இந்த நிறுவனமோ அல்லது இதைச் சார்ந்த நிறுவனங்களோ சமயம் பார்த்து நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட லாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான அடி ஆழத்தில் உள்ள தண்ணீரை வெளி யேற்றி எடுக்கப்படும் மீத்தேன் ஷேல் கேஸ் திட்டங் களால் மக்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் உள்ளிட்ட அச்சத்தைப் போக்க மத்திய அரசு ஆக்கப் பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக ஹைட்ரோ கார்பனுக்கு என தனிக் கொள்கையை புகுத்தி நாடு முழுவதும் 31 இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் முதற்கட்டமாக நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதிகளில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதால் மக்கள் போராட்டங்கள் வலுத்தது.
புதுச்சேரி பிரதேசம், காரைக்காலில் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக அறிவித் துள்ளார். ஆனால் தமிழகத்தில் இப்போது வரை இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடத் தயாராக இல்லை. இத்திட்டத்திற்கு முழுமையாக பொது மக்களிடமோ, விவசாயிகளிடமோ கருத்து கேட்காமல் அனுமதிப்பதன் மூலம் ஏற்கனவே உள்ள மீத்தேன் ஷேல் கேஸ் திட்டங்களை கொல்லைப்புற வழியாக நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் பொது மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்காத வகையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
மக்களின் நீண்ட கால வாழ்வு மற்றும் ஆரோக்கியமான மேம்பாட்டிற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் வியாபார நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இல்லாமல் தங்களைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை மக்கள் அனுபவிக்கும் உரிமையில் கைவைக்காமல் இருக்க வேண்டும். மக்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த திட்டம் தொடரப்படுமேயானால் இன்றைய தலைமுறைகளின் உரிமைகள் மட்டுமல்ல; எதிர்கால தலைமுறைகளின் உரிமைகளும் பறிக்கப்பட்டு இயற்கை நீதிக்கு புறம்பானதாக ஆகிவிடும். நெடுவாசல், காரைக்கால் பகுதி மக்கள் மட்டுமல்ல; தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடாது என்பதுதான்.
மோடி ஆட்சி நீடித்தால் இந்த ஆபத்துகள் தொடரவே செய்யும்.
நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்