பாதுகாப்புத் துறையிலும் படுதோல்விகள்
பிப் 19, 2019 – The HIndu நாளிதழில் பாதுகாப்புத்துறை ஆய்வறிஞர் ஹாப்பி மோன் ஜேகப் தரும் சில முக்கிய தகவல்கள்:
- நம் இந்திய ஜவான்கள் 40 பேர்களைக் கொன்ற இந்தத் தற்கொலைத் தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் – ஏ- முஹம்மட் (JeM) தீவிரவாதி அடில் அஹமட் தர் (22) எனும் இளைஞன் பாக் தீவிரவாதி அல்ல. அவன் உள்ளூர் காஷ்மீரி. பயன்படுத்தப்பட்ட வாகனமும் உள்ளூர் வாகனமே. காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் இந்திய அரசு, இராணுவம் ஆகியவற்றின் மீதான வெறுப்பு இன்று அதிகரித் துள்ளது. கடந்த நாலரை ஆண்டுகளில் இந்த அந்நியப் படல் அதிகரித்துள்ளது கவனத்துக்குரியது.
- காங்கிரஸ் ஆட்சியின்போது 2013ல் உள்ளூர் இளைஞர்களில் வெறும் 6 பேர்கள் மட்டுமே தீவிரவாதப் பாதையை நோக்கிச் சென்றனர். அடுத்த நான்காண்டுகளில், அதாவது 2018ல் இந்த எண்ணிக்கை 200 ஐ எட்டியது.
- நரேந்திர மோடி அரசு அதிகாரத்திற்கு வந்த இந்த நாலரை ஆண்டுகளில் தாக்குதல் நிறுத்த மீறல்கள் (Ceasefire Violations) 5 மடங்குகள் அதிகரித்துள்ளன.
- எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகள் இரண்டு மடங்குகளுக்கு மேல் அதிகரித்துள்ளன.
- தீவிரவாத அடிப்படையிலான வன்முறைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
- இப்படிச் சூழ்நிலை மோசமாகிக் கொண்டே போனாலும் பா.ஜ.க அரசு அதிருப்தியாளர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் தொடர முயற்சிக்கவில்லை.
- பா.ஜ.க + PDP அரசின் அணுகல்முறை மென்மையான பிரிவினைவாதக் குரல்களை ஒடுக்கி அவற்றின் இடத்தை இத்தகைய வன்முறைச் செயல்பாடுகள் ஈடுசெய்ய வழிவகுத்தது.
- இந்த அரசின் முரட்டுத்தனமான அணுகல்முறைகள் (aggressive tactics) காஷ்மீர வெகுஜன மனநிலையை இந்தியாவிற்கு எதிராகத் திருப்புவதற்குக் காரணமாயின.
- இன்று அனைத்துக் கட்சிகளும் தேசம் முழுக்கவும் இந்திய அரசின் பின்னால் நிற்கிற போதும் மோடி அரசு தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளின் போது தங்களது முந்தைய அணுகல்முறை ஒரு தோல்வி என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
- இறுதியாக, பாஜக அரசின் உளவுத்துறை படுதோல்வி அடைந்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே கவனத்துக்கு உரியவனாக இருந்த இந்த உள்ளூர் இளைஞன் ஒரு வாகனம் நிறைய கொடும் வெடிமருந்துகளுடன் ஒரு தேசிய நெடுஞ்சாலையில் இப்படியான ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வருவதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டான்? CRPF வீரர்களை ஏற்றிச் சென்ற 78 வாகனங்களும் ஒரே தொடராகச் (convey) செல்ல ஏன் அனுமதிக்கப்பட்டன?
ஜேக்கப்பின் இந்தக் கேள்விகள் மிக அடிப்படை யானவை. மத்தியில் இப்போது நாங்கள் ஆள்கிறோம். காங்கிரசல்ல. கிழித்துவிடுவோம் என்றெல்லாம் அமித்ஷாவும் மற்றவர்களும் தொங்கிப்போன மீசையை முறுக்குவதற்கு முன்னால் மக்கள் முன் பதில் சொல்ல வேண்டும்!
பேராசிரியர் அ. மார்க்ஸ், இணையத்தில் எழுதியது
நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்