கள்ள மவுனத்திலிருந்தே உருவாகின்றன வெடிகுண்டுகள் ஸர்மிளா ஸெய்யித்
இலங்கை அய்.எஸ். குண்டுவெடிப்புப் பயங்கரவாதத்திலிருந்து பாடம் பெறுவார்களா?
அது 2002 என்று நினைவு. எங்கள் ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு, பிரச்சாரம் செய்யத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிட வில்லை. வீடு வீடாகச் சென்று ஆன்டனாக்களை உடைப்பது, சிடி விற்கும் கடை உரிமையாளர்களை எச்சரித்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.
அடுத்து, கறுப்பு ஹபாயாக்களையும் நீண்ட அங்கிகளையும் கொண்டு வந்து ‘இதுதான் இஸ்லாமிய உடை’ என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகப் படுததினார்கள். ‘எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்களெல்லாம் இதைத்தான் அணிகிறார்கள். இது எங்கள் கலாச்சாரம்’ என்று ஏற்பதற்குப் பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாது காப்பான கவுரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச் சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக் கழகம் செல்லும் மாணவி களும் கறுப்பு அங்கியை மட்டும்தான் கட்டாயமாக அணிய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜும்மாக் களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்படலானாது. இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமல்ல; இலங்கையில் பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இப்படித் தான் நடந்தது.
திடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வசூலாகி வந்தது. வெறும் நூறு இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடை யாகச் செலுத்தி நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்திரம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப் பட்டது. மதக் கல்வி அவசியமேயின்றி முன்னிறுத்தப் பட்டது. வியாபாரமானது, சில உலமாக்கள் சொத்துக்கள் சேர்த்தார்கள். அவ்வப்போது ஆடு, மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். இவர்களுக்குள் இந்தச் சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடீரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.
மதத்தின் பெயராலான இத்தகைய சின்னச் சின்ன அடிப்படைவாதச் செயல்பாடுகளின் ஊற்றுக் கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடு, மத பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்களை ‘மேலைத் தேயக் கைக்கூலிகள்’ என்றவர்கள், உண்மையை உரக்கப் பேசியோர் – எழுதியோரின் கழுத்துகள் நெரிக்கப்பட்டபோதும், சமூக ஊடகங்களிலும் வாழ்விலும் அவர்கள் அவ மானப்படுத்தப்பட்ட போதும் மௌனித்திருந்தவர்கள் கூட இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே! இப்போது வெள்ளம் தலைக்கு மேல், நாடகங்களின் அரங்குகளை மாற்ற வேண்டிய தருணம்.
இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிர வாதத்துக்கு எதிராக இன்று அழத் தொடங்கியிருக் (கிறோம்)றார்கள். ஆனால், ‘தீவிரவாதிகளுக்கு மத மில்லை, அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்’ என்பதோடு இனியும் தப்பிக்க முற்பட்டு விட முடியாது. இத்தகைய மதத் தீவிரவாதக் கருத்து களுக்கு எதிராகக் கடந்த காலங்களில் எதிர்வினை யாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள் கூடத் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன்.
சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாதக் கருத்துகளை ‘நமக்கென்ன!’ என்றும், ‘யாரோ ஒருவன் உளறுகிறான்!’ என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள் இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள்; தீவிர வாதிகளைக் கொல்ல வேண்டும் என்றால், முளை யிலேயே கிள்ளி எறிய வேண்டியதை, அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன் வரவில்லை என்றுதானே பொருள்! தேவைக்கு அதிகமாகச் சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது ஹபாயா, முகமூடிகள் வந்தபோது அதைக் கலாச்சார மாற்றம் என்பதாக அங்கீகரித்தவர்கள், அவற்றையெல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது அறிவு முரணில்லையா?
வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத் தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப் பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ள முடியும்?
இந்த உண்மைகள் கசப்பானவைதான்; மருந்துகள்போல, நோய் தீர விரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிக்கப்பட்டே ஆக வேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத் துங்கள். நோய்க் கூறுகளுக்குச் சிகிச்சை யளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெளிவு!
கட்டுரையாளர் : இலங்கை தமிழ் எழுத்தாளர்,
‘உம்மத்’ நாவலாசிரியர்
நன்றி: ‘தமிழ் இந்து’
நிமிர்வோம் மே 2019 மாத இதழ்