செம்மொழித் தமிழ் மீது நஞ்சு கக்கும் நாகசாமி (2) – ஒ. சுந்தரம்

‘மனுநீதி’ கூறும் ‘தர்ம’த்துக்கும் – வள்ளுவர் கூறும் ‘அறம்’ என்ற கருத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார், நாவலர் நெடுஞ்செழியன்.   அவற்றில் சிலவற்றைக் காண்போம்:

1)            எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும்; பிறப்பைப் பொறுத்து ஏற்றத் தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள். 972) என்று கூறுவது வள்ளுவரின் ‘அறம்’. ஆனால்,

“பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்.” (மனு. த.சா. அத்தி.1, சுலோகம் (100) என்றும்,

“சூத்திரன் பிராமணனைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு. த.சா. அத்தி.8, சுலோகம் : 270) என்றும் கூறுவது மனுவின் தருமமாகும்.

2)            ‘ஒருவர் தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், தாம் மட்டும் தனியாக இருந்து, உண்ணுதல் என்பது, வறுமையால் இரத்தலைக் காட்டிலும் கொடிது ஆகும்’ எனும் கருத்துப்பட

“இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.     (குறள் – 229)

– என்று கூறுவது வள்ளுவரின் ‘அறம்’ ஆகும்.

“சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும்,

ஹோமம்

பண்ணிய மிச்சத்தையுங்கூட கொடுக்கலா காது.”                   – (மனு. த.சா. அ.4, சுலோ.8)

என்று கூறுவது ‘மனு’வின் ‘தருமமாகும்’.

3)            ‘குற்றம் இன்னதென்று ஆராய்ந்து பார்த்து, யார் பக்கமும் சாயாமல், நடுவுநிலைமை பொருந்துமாறு நின்ற, யாரிடத்திலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து, அதற்கு ஏற்றபடி, நீதி வழங்குவதே, அரசனது செங்கோல் முறையாகும்’ என்றும் கருத்துப்பட,

“ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து                                          யார்மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை”                 (குறள் 541)

என்று கூறுவது வள்ளுவரின் ‘அறம்’ ஆகும்.

“பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக. ஆனால், பிராமணன் சூத்திர னுடைய பொருளை, அவன் விருப்பப்படி, கொள்ளையிடலாம்” (மனு. த.சா. அ.9, சு. 24)

என்று கூறுவது மனுவின் ‘தருமம்’ ஆகும் என்றும் நாவலர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த மண்ணின் மைந்தர்களை, வந்தேறி ஆரியப் பார்ப்பனர்கள், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு வரை, ‘மனுதர்மத்தின்’ படியே அதிகாரம் செலுத்தி, மக்களைக் கொன்றொழித்தும், சொத்துக்களை சூறையாடியதும், ‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ வழங்கி வேட்டையாடிச் செழித்துக் கொழுத்துப் போயிருந்துள்ளனர்.

பின்னர், ஆங்கிலேயர்கள் நாடு முழுவதற்குமான பொதுவான குற்றவியல் சட்டங்களைப் பிறப்பித்து, ‘குற்றங்கள் எவையானாலும் அனைவருக்கும் தண்டனை’ எனக் கொண்டு வந்த பின்னரே, திராவிட மக்கள் மீதான கொடுமைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆக, நாகசாமி துணைக்கு அழைக்கின்ற, வருணாசிரம, வடமொழிப் பற்றாளரான பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதத் துவங்கும்போதே, எடுத்த எடுப்பிலேயே, திருக்குறள் கூறும்,

“அறமாவது, மனுமுதலிய நூல்களில் விதித்தன

செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம்”

என்கிறார்.

அதாவது, நாவலர் சுட்டிக்காட்டியுள்ளாரே அந்த வகையான, ‘குலத்துக்கு ஒரு நீதி’ சொல்லும் ‘மனுதருமமே’ அறம் என்கிறார். இது எத்தகைய ‘வருணாசிரமத்தனம்?’ அந்த ‘வருணபேதம்’ கற்பிக்கும் அறத்தையே ‘அறம்’ என நிறுவுக எனக் கூறிடும் பரிமேலழகரின் வருணாசிரம, சனாதனப் பேர்வழியாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார் நாகசாமி. நல்ல வேளையாக, பரிமேலழகரைத் தனக்கு துணையாக அழைத்ததால், நாகசாமிகளை, அடையாளம் காட்டிடும் நமது பணி இலகுவானதாகிவிட்டது.

நாகசாமிகளுக்குத் தெரியாமல் இல்லை; தெரிந்தேதான் செய்கிறார்கள் ‘திருக்குறள்’ சாஸ்திரங்களின் தழுவல் எனும் திரிபுவாதத்தைக் கொஞ்சம்கூட கூச்சப்படாமல்!

‘அறம்’ என்பது பற்றி ஆய்வாளர் வி.இ. குகநாதன் குறிப்பிடுகையில், அறத்திற்கு ஓரள விற்கு நிகரான சொல் – நுவாiஉள என்னும் ‘கிரேக்கச் சொல்’ பொருத்தமாயிருக்கும் என்கிறார்.

‘தர்மம்’ எனும் வடசொல்லுக்கு இணை யாக ‘அறத்தைக்’ கூறுவது தவறானது என்கிறார்.

‘தர்மம்’ என்பது, எமக்கு எது தேவையோ, அதுவே ‘தர்மமாகும்’. அதனால்தான் மனுஸ் மிருதிகளான மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்களே தவிர, ‘மனு அறம்’ என அழைக்க மாட்டார்கள்; ஏனெனில், ‘அவாளுக்கு’ நா கூசிடும் என்கிறார்.

பரிமேலழகரோடு நிறுத்தாமல், தனது திருக்குறள் திரிபுவாதத்திற்கு அறிஞர் உ.வே.சா. வையும் துணைக்கு அழைக்கின்றார் நாகசாமி.

சங்க இலக்கிய நூல்களைத் தேடி எடுத்துப் பதிப்பித்த பெருமைக்கு உரிய உ.வே.சாவும், தனது இனப்பற்றின் காரணமாக சங்க இலக்கிய நூற்களைப் பதிப்பிக்கும்போது, ஆங்காங்கு பார்ப்பனருக்குப் பெருமை ஏற்படுத்தும் விதமாக, பாடல்களிலே, இடைபுகுந்து ‘பொடி’ வைத்திருப்பதை ‘ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள்’ எனும் நூலில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

திரு. நாகசாமி, இந்த நூல் மட்டுமின்றி, கடந்த 2012இல் ‘ஆசைசடிச டிக கூயஅடை யனே ளுயளேமசவை’ எனும் நூலையும், ‘கூயஅடை சூயனர டுயனே டிக ஏநனயள’ என்றும் இரண்டு நூல்களை வெளியிட்டு, ‘தமிழ்நாடு என்று ஒன்று இல்லவே இல்லை, இது வேதங்களின் நாடு’ எனவும், ‘பிராமி’ என்பது பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ‘அள்ளி’விட்டிருக்கின்றார். இதற்கான கல்வெட்டு ஆதாரங்களோ, தொல்லியல் சான்றுகளோ இல்லை என்பதுதான் வேடிக்கை. ‘பிராமணர்’ – ‘பிராமி’ என உச்சரிப்புகள் ஒத்து வருவதால் இது பிராமணர்கள் கண்டுபிடித்தது எனக் கூறுவது கேட்டு அறிஞர் உலகம் நகைக்கவே செய்கிறது. என்றாலும், ‘அவாள்’ இதற்கெல்லாம் கூச்சப்படுவதில்லை.

‘பிராமி’ எனும் பண்டைய எழுத்து வடிவ முறையை ‘பிராமணர்கள்’ கண்டுபிடித்தார்கள் எனில், அது உண்மை எனில், அவர்கள் ஏன் தங்கள் வேத மொழியான சமஸ்கிருதத்திற்குத் தனியாக வடிவெழுத்துக்களைக் கண்டுபிடிக்க வில்லை எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவிலேதான் எழுதிப் படிக்கப்படுகிறது. சமஸ்கிருதத்திற்குச் சொந்த மில்லாத எழுத்து வடிவம் அவை.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத் திற்குத் தமிழ்நாட்டில் ‘கிரந்தம்’ என்ற தமிழ் எழுத்துகள் உள்ளடக்கிய எழுத்து வடிவம், தமிழ் சிவாச்சாரியர்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்குப் ‘பல்லவ கிரந்தம்’ என்றே பெயர்.

அதற்குப்பின், பல நூற்றாண்டுகளுக்குப் பின், இந்தி மொழி உருவாகிய பின், வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் ‘தேவநாகரி’! இன்று மக்கள் அன்றாடம் பேசிப் பயன் பெற முடியாத வழக்கொழிந்த மொழியாக சமஸ்கிருதம் ஆகியுள்ளது.

இது இவ்வாறிருக்க, ஹண்டர் மற்றும் ரேமெண்ட் என்ற ஆங்கிலேய அறிஞர்கள் ‘பிராமி’ எழுத்து முறை முற்றிலும் இந்தியாவி லிருந்தே தோன்றியது எனவும், அது சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

சில தமிழ்  அறிஞர்கள், ‘பிராமி’ என்பது தமிழர்களது எழுத்து முறையென்றும், அதையே கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோகர் மாற்றம் செய்து பிராகிருத மொழியை எழுதக் கூடிய எழுத்து முறையாக உருவாக்கினார் எனக் கருதுகின்றனர். மேலும், அவர்கள் ‘பிராமி’யைத் ‘தமிழி’ என அழைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். பெரும்பாலும், கல்வெட்டுகளிலும், சமய நூல்களை எழுதவுமே இந்த எழுத்து முறை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. (விக்கி பீடியா)

முதன்முதலில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  எழுத்து வடிவம் கொண்ட ‘தமிழி’யை, வடமொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதற்காக, ‘பிராமி’ எனும் சமஸ்கிருதச் சொல்லை ஒட்டு சேர்த்து ‘தமிழ் பிராமி’ என ஆக்கிவிட்டனர் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கருத்துக்கு ஆதாரமாக, அசோகரது காலமான கி.மு. 3ஆவது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ எனும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட சமண நூலில் பட்டியல் இடப்பட்ட 18 வகையான எழுத்து வடிவங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

அவை : 1. பாம்பி,  2. யவனானி,

  1. தோசபுரியா, 4. கரோத்தி, 5. புக்கரசரியா,
  2. போகவையா, 7. பகாரியா, 8. உயமித்ரகரியா,
  3. அக்கரபுட்டியா, 10. தவனானியா, 11. கிணிகையா, 12. அங்காலிவி, 13. கணிதாவிலி, 14. காந்தவயவிலி, 15. ஆடம்சாலிவி, 16. மகாசனி, 17. தமிழி,
  4. பொலிம்னி ஆகும்.

இந்தப் பட்டியலில் எங்கும் ‘பிராமி’ என்று எந்த எழுத்து வகையும் குறிக்கப்படவில்லை. எனவே, அசோகர் ‘பிராகிருத மொழியை’ எழுதிட ‘தமிழி’ வடிவெழுத்துக்களையே பயன் படுத்தினார். இந்த ‘தமிழியே’ தமிழ் ஆகும் என அறிஞர்கள் நிறுவுகின்றனர். மேலும், இப் பட்டியலை வடநாட்டினரே தயாரித்துள்ளதால் ‘தமிழி’யை முதலில் வைக்காது, 17ஆவதாகப் பட்டியலிட்டுள்ளதாகவும் கருதுகின்றனர். (‘தெய்வமுரசு’ ஆன்மிக மாத இதழ், டிச. 2012 – யாழ் இணையம்)

கடந்த 28.10.2012 அன்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு, ‘ஞடிளாசநன றiவா கூயஅடை க்ஷசயாஅi ளுஉசiயீவ குடிரனே in டீஅயn’ – ‘ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச் சில்லில் தமிழ் பிராமி எழுத்துகள்’ எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக் கிறது.

அக்கட்டுரையில் ‘முhடிச சுடிசi’ எனும் ஓமன் நாட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டுச் சில்லில் ‘தமிழ் பிராமி’ எழுத்துக்கள் கீறப்பட்டுள்ளதாகவும், அதில் “ணந்iதைகீரன்” என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

‘தமிழ் பிராமி’ எழுத்துகள், மத்திய தரைக்கடலின் மேற்குப் பகுதியான எகிப்து முதல் கிழக்குப் பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் வரை பல்வேறு இடங்களில் பரவிக் கிடக்கின்றன. (தமிழ் அண்டம் – இணையம்)

நிறைவாக, ‘தமிழி’ அல்லது ‘தமிழ்ப் பிராமி’ என்னும் எழுத்து வடிவம் பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்பட்ட ‘ஒலிப்பியல்’ எழுத்து முறைமையே ஆகும்.

தமிழ்ப் பிராமி வடிவெழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டுபிடிக்கப் பட்டன.

தற்போதைய தென்னிந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ்நாடு, கேரளம், இலங்கை, எகிப்து, தாய்லாந்து போன்ற இடங்களில் ‘தமிழ் பிராமி’ வடிவ எழுத்துக்கள் காணக் கிடைப்பது, பண்டைத் தமிழர்கள் நிலமெங்கும் பரந்து சென்று செம்மாந்து வாழ்ந்திருந்த பெருமையையே காட்டி நிற்கிறது.

திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், பல வெளிநாட்டுத் தமிழறிஞர் பெருமக்களும், ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ள ‘தமிழி அல்லது தமிழ் பிராமி’ வடிவெழுத்துக்களையும்கூட ‘பிராமி-பிராமணர்களால் கண்டுபிடிக்கப்பட்டது’ என நாக்கூசாது நாகசாமி கூறுவது என்பது, அவரது மனப்பிறழ்ச்சியோ என்ற அய்யம் நமக்கு ஏற்படுகிறது.

தமிழ்ச் செம்மொழி இலக்கியங்கள் குறித்தும், தமிழ்மொழியின் தொன்மை குறித்தும், அதன் ஆதார மையங்கள் குறித்தும் தொடர்ந்து அவதூறான, கற்பனை கலந்த, கட்டுக் கதைகளைப் பரப்பி வரும் இந்த நபரைத்தான் ‘தமிழ்ச் செம்மொழி ஆய்வுக்கான குடியரசுத் தலைவர் விருதுக்கானவர்களைத் தேர்வு செய்யும் குழுவில்’ மத்திய பா.ஜ.க. அரசு உறுப்பினராக்கவுள்ளது.

இந்தச் செயலானது வடவாரியப் பண்பாட்டுப் படையெடுப்பை, தமிழ் இனத்தின் மீது, காவி மதவாத அரசு மறைமுகமாக நடத்துவதையே காட்டுவதாக அமைந்துள்ளது.

திரு. நாகசாமியின் நூல்களுக்கு மறுப்புத் தெரிவித்து (7.11.2018இல்) நடத்தப்பட்ட கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்கள், ‘நாகசாமி தனிப்பட்ட நபரல்ல; அவர் ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி; பலகோடி ரூபாய்களை இதற்காக ஒதுக்கி, தமிழ் இனத்திற்கு, மொழிக்கு எதிராகப் பரப்புரை செய்திட இவர் களமிறக்கப்பட் டுள்ளார்’ என்பதாகத் தெரிவித்த கருத்துகள் ஊன்றி உணரத்தக்கவையாகும்.

காஞ்சி சங்கரமடத்திற்கும், நாகசாமிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை (குமுதம் லைஃப், 27.12.2017), குமுதம் இதழை ஆதாரமாகக் காட்டி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஆற்றிய உரையில், தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, ‘ஆனந்த விகடன்’ மணியன், அவரை வற்புறுத்தி, காஞ்சி பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியைச் சந்திக்க அழைத்துச் சென்றதையும், அப்போது சங்கராச்சாரி, முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அப்போது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டு, தொல்லியல் துறையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நாகசாமியை மன்னித்து விடுமாறு கோரிக்கை வைத்ததையும், அது கேட்டு எம்.ஜி.ஆர். அதிர்ச்சியடைந்து, சரியென ஆமோதித்து வந்ததையும் போட்டுடைத்து, நாகசாமியின் வலைப்பின்னல் (நெட்வொர்க்) என்ன என்பதை அம்பலப்படுத்தினார். இவற்றையெல்லாம் நாம் மனதில் கொண்டுதான் நாகசாமிகளை எதிர்கொள்ள வேண்டும்.

இத்தகைய பார்ப்பன ஆதிக்க அதிகார வர்க்கத்தின் கைப்பிள்ளையாக இருந்ததாலேயே ‘பத்மபூசன்’ விருதையும் பெற்று , இன்று செம்மொழித் தமிழ் இலக்கியங்களைச் சிறுமைப்படுத்திடும் வகையில் நூல்களை வெளியிட்டு, செம்மொழி விருதுக்கான தேர்வுக் குழுவிலும் அங்கம் வகிக்கும் வாய்ப்பையும் பெற்று, இவர் தமிழருக்குக் கேடு செய்ய முனைந்துள்ளார்.

‘நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையில், பதவிகளில் அமர வைக்கப்பட்டள்ள காவி, மதவாத, ஆர்.எஸ்.எஸ். நாகசாமிகளைக் களையெடுக்க, மக்கள் அணியமாக வேண்டும்.

(நிறைவு)

நிமிர்வோம் மே 2019 மாத இதழ்

You may also like...