29. திராவிடர் கழகமே தொழிலாளர் ஸ்தாபனம் அறியாமையால் அந்தோ! படுமோசம். பொன்மலையில் பெரியார்
22-05-1949-ம் நாளில் பொன்மலை திராவிட வாலிபர்கழக 8-வது ஆண்டு விழாவில் மத்திய திராவிடர் கழகத் தலைவர் தோழர் தி.பொ.வேதாசலம் தலைமையில் பெரியார் ஆற்றிய பேருரை. பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது குறித்துப் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். மற்றும் என்னைப் பெருமைப்படுத்தி வாழ்த்துரைகள் வழங்கிய தொழிற் சங்சங்களுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியறி தலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பெருமைப்படுகிறேன் தொழிலாளர் நிறைந்த இப்பகுதியிலே திராவிட வாலிபர்கழகம் 8-ஆண்டுகளாக வேலை செய்து வருவதையறிந்து நான் பெருமைப் படுகிறேன். காரணம் என்ன? தொழிலாளருக்கு உள்ளபடியே பாடுபடும் ஸ்தாபனம் திராவிடர் கழகம் ஒன்றுதான் என்பதுவேயாகும். மற்ற ஸ்தாபனங்கள் தொழிலாளர்க்கும். முதலாளிக்கும் இடையேயிருந்து தங்கள் தங்கள் நலனைச் சாதித்துக் கொள்பவைகள் என்பதே எனது அழுத்தந்திருந்தமான எண்ணமாகும். இவ்வபிப்பிராயம் இன்று நேற்றல்ல எனக்கு ஏற்பட்டது கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தக் கருத்து எனக்கு இருந்துவருகிறது. இன்றைய நிலையில்...
