சனாதனத்திற்கு எட்டு வாரம் கெடு!

 

சனாதனம் பற்றி எட்டு வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி போட்டு இருக்கிறது. அப்படி ஒரு வளையத்துக்குள் ஆளுநரை சிக்க வைத்தவர் த.பெ.தி.க துணைத் தலைவர், மூத்த பெரியாரியலாளர் நமது வழக்கறிஞர் துரைசாமி.

 

ஆளுநர் அதற்கு என்ன பதில் சொல்வார், ‘நீதிபதி அவர்களே! சனாதனத்திற்கு காலவறையறைகளே கிடையாது என்று எங்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் கூறிவிட்டார், அதைத்தான் நானும் கூறினேன். காலத்தால் வரையறுக்க முடியாத சனாதனத்துக்கு எட்டு வாரங்கள் கெடு விதிக்கலாமா? ’பிராமணியம் கூறுவதைத் தான் நான் பேசுகிறேன். என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குகிறீர்கள்? இது நியாயமா? சனாதன தர்மமா? என்று பதில் கூறுவாரா? நமக்கு தெரியாது.

 

ஆனாலும் எங்கள் துரைசாமி சார் அப்போதும் விடமாட்டார் அடுத்து ஒரு தகவலை அதிரடியாக கேட்பார் ’உலகம் தோன்றிய போது சனாதனம் தோன்றி விட்டது என்று கோல்வக்கர் கூறுவதை நீங்கள் ஏற்கிறீர்களா? பெரும் வெடிப்பில் எரிமலைகள் மோதி நெருப்பைக் கக்க உலகம் தோன்றியது என்று அறிவியல் கூறுகிறது. எரிமலை வெடித்துக் கொண்டிருக்கும் போதே ’பிராமணன் தான் உயர்ந்தவன்; பிராமணனை மட்டும் வணங்கு என்று எரிமலை ஓங்கார கூச்சலிட்டதா? சனாதனத்துக்கு ஜே; பாரத மாதாவுக்கு ஜே என்று அலறியதா? பதில் கூறுங்கள்’ என்று அடுத்த தகவலுக்கு நோட்டீஸ் அனுப்புவார்.

 

”அய்யா நான் ஓய்வு பெற்ற சாதாரண ஐபிஎஸ் அதிகாரி அமித்ஷா, மோடி தரும் அதிகாரத்தால் அவர்களை மலை போல நம்பி வரம்பு மீறி பேசிவருகிறேன், என்னை நாகலாந்து மக்கள் விரட்டி அடித்தது போல் தமிழ்நாட்டில் இருந்தும் ஓட வைத்து விடாதீர்கள். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எனது ’கதி மோட்சம்’, ’எனக்கே தெரியாது” என்று ஆளுநர் பதிலளிப்பாரா? அதுவும் நமக்கு தெரியாது.

 

சனாதனம் என்றால் வர்ணாசிரமம் அதாவது பிராமணனே உயர்ந்தவன் என்று கூறுகிறார் வேத மரபின் அத்தாரிட்டி காஞ்சி  சங்கராச்சாரி.

 

”ஆரியர்களே இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்களுக்கான தர்மமே சனாதனம்”, இது ஆர்.எஸ்.எஸ் கோல்வாக்கர் தரும் விளக்கம்.

 

”என்றென்றும் மாற்றவே முடியாது நிலையானது அதுவே சனாதனம்” இது வேத பண்டிதர்கள் தரும் வியாக்கியானம். ஆளுநரே இதில் நீங்கள் பேசும் சனாதானம் எது?” என்று வழக்கறிஞர் அடுத்த நோட்டீஸை அனுப்புவார்.

 

“ஆளை விடுங்கய்யா; இப்படி எல்லாம் புரட்டி எடுக்காதீர்கள் பிறகு நான் மோடி அமித்ஷாவிடம் போய் தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து எனக்கு விதிவிலக்கு தரக் கோரி சட்ட திருத்தம் கொண்டு வந்துவிடுவேன்.” என்று மிரட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

”தாராளமாக செய்யுங்கள் அதனால் என்ன? அதை எதிர்த்து நீதிமன்றம் போவோமில்ல என்பார் எங்கள் வழக்கறிஞர் துரைசாமி.

 

”நீங்கள் போகக்கூடிய ஆட்கள் தான் பெரியார் தொண்டர்களல்லவா? தமிழ்நாட்டில் சனாதனம் பேசினால் எவ்வளவு சிக்கி சீரழிய வேண்டும் என்ற உண்மை இப்போதுதான் புரிகிறது. ஏதோ   உ.பி,   பீகார் மாநிலங்களைப் போல் தமிழ்நாட்டையும் நினைத்து இப்படி எல்லாம் பேசி விட்டேன்” என்று அப்போதுதான் இவரது மண்டையில் உறைக்கும். ஆமாம் இந்த தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு எதிராக சமூகப் போராட்டமும் நடக்கும், சட்டப் போராட்டங்களும் நடக்கும், பெரியார் படையின் ’துரைசாமிகள்’ சட்ட புத்தகங்கள் என்ற வாளை ஏந்தி களத்தில் தயாராக நிற்பார்கள்! நிற்கிறார்கள்!

 

கோடங்குடி மாரிமுத்து

பெரியார் முழக்கம் 22062023 இதழ்

You may also like...