7. இனி நம் கடன்!

தமிழர்களின் புத்தாண்டு நல்ல அறிகுறிகளோடு காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் தை பிறப்பதும், பொங்கல் வைப்பதும் வழக்கமாக நடைபெற்று வரக்கூடியதுதான் என்றாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆரிய இருளில் சிக்கித் தவித்துத் தன்னிலை மறந்து தாசி மக்களாய் – வேசிமக்களாய் வாழ்ந்த தமிழினம், அவ்விழிவைத் துடைத்துத், தம் மானிடத் தன்மையைப் பேணி, நல் வாழ்வு வாழ்வதற்கான ஊன்றுகோலைப் பெறுவதற்கு வழி பிறக்கவில்லை. இந்தப் புத்தாண்டைக் கருவியாகக்கொண்டு தந்தை பெரியாரவர்களால் தமிழ் மக்களுக்கு ஊன்றுகோல் கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் நல்ல அறிகுறி என்கிறோம்.

ஏய்க்கப் பிறந்தவன் பார்ப்பான் – ஏமாறப் பிறந்தவன் தமிழன் என்று பார்ப்பனர்கள் எழுதிவைத்துக் கொண்டிருப்பதை நடைமுறையில் வற்புறுத்திக் கொண்டிருந்தன சங்கராந்தி அதுபோன்ற மற்றவைகள். அதாவது தமிழனுக்கு உரியது, பெருமை தரக்கூடியது எதெது உண்டோ, அதெல்லாவற்றையும் உருவைமாற்றி, பெயரை மாற்றிச் சமஸ்கிருதக் கலப்பை – ஆரியக்கலப் பையுடையது போல ஆக்கிவிட்டார்கள் பார்ப்பனர்கள். ஏமாந்த இனம் அதை ஏற்றுக்கொண்டது. பொங்கல் சங்கராந்தியாக ஆனது.

சங்கராந்தியல்ல பொங்கல்தான்! தமிழன் பெருமை கொள்ளக் கூடிய ஒரே ஒரு பெருநாள், உழைப்பை உயர்வுபடுத்தும் நாள் பொங்கல் நாள்! இப்பொங்கல் நாள்தான் தமிழனின் புத்தாண்டுத் தொடக்க நாள்! என்றார் பெரியார் சென்ற இந்தி எதிர்ப்புப் போரில் எழுந்த தமிழ் எழுச்சியின்போது.

போராட்டத்தின் பின் விளைந்த இந்த ஆக்கம், நன்கு வேரூன்றி, இப்போது நன்கு தழைக்கவும் ஆரம்பித்துவிட்டது என்பதை எடுத்துக் காட்டுவதுதான் இந்தப்புத்தாண்டு முதல் வாரத்தில் சென்னையில் நடந்திருக்கும் வள்ளுவர் குறள் (தமிழர் நெறி விளக்க) மாநாடு.

பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களும் பேரறிஞர் ஏ.சக்கரவர்த்தி நயினார் அவர்களும் தலைவர்களாயிருந்து நடத்த – தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் வரவேற்க – நாவலர் பாரதியாரவர்கள் துவக்கிவைக்க வரலாற்றுச் சிறப்புடைய இம்மாநாட்டை, தமிழ் நாட்டின் தனிப் பெருந் தந்தை பெரியாரவர்கள் ஜனவரி 15, 16-ம் நாட்களில் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

இம் மாநாட்டிற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பல போக்குடைய மக்கள் வந்து நிரம்பினர். எண்ணிறந்த புலவர் பெருமக்கள் சேர்ந்தனர். கலைவாணர்களும், வழக்கறிஞர் களும், பெரிய அதிகாரிகளும் கூடினர். கட்சி வேற்றுமை, கருத்து மாறுபாடின்றிக் கூடி வெள்ளம்போல் தமிழர் கூட்டம் என்ற கவிஞரின் கனவை நினவாக்கி விட்டனர் இவை, அன்று அங்கு கூடியவர்கள் கண்டதும் கருதியதும்!

இன்றையத் தமிழறிஞர்களில், பொதுப் பணி செய்ய வேண்டுமென்கிற பொறுப்புணர்ச்சி யுடையவர்களில் பெரும்பாலோர் இந்த மாநாடு, உலகத்தில் நடந்திருக்கும் மாநாடுகளுக்குள்ளேயே மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது என்று கூறலாம். மாநாடு என்றாலே 5000-வார்த்தை 10000-வார்த்தைகொண்ட தீர்மானங்களை நிறைவேற்றி விட்டுக் கலைவதுதான் பெருமை என்று கருதப்பட்டு வந்த நிலையை மாற்றி இரண்டே இரண்டு தீர்மானங்களை மிகச் சுருங்கிய முறையில் இம் மாநாடு நிறைவேற்றி இருக்கிறது. ஒன்று, ஆண்டுதோறும் வள்ளுவர் குறள் மாநாடு நடத்துவது. மற்றொன்று, குறளுக்கு எளிய உண்மைவுரை ஒன்று காணத் தமிழறிஞர் குழு ஒன்றை அமைத்தது.

குறள் – 2000-ஆண்டுகளுக்கு முந்திய நூல்! குறளில் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் – எல்லா நாட்டவருக்கும், எல்லாக் காலத்தவர்க்கும், எந்தக் கொள்கையர்க்கும் ஏற்றவை! காலங்கடந்த நூல்! தமிழ் மறை! உலகிலுள்ள மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்! இவை, சென்ற சில ஆண்டுகளாகத் தமிழ்ப் புலவருலகம் குறளைப்பற்றி மக்களுக்கு கூறிவருவன.

இளம் புலவர்கள் ஆச்சரியப் படும்படியான குறளுக்குப் பெருமை தரும்படியான ஒரு விஷயத்தை நாம் இப்போது இங்கு குறிப்பிடுகிறோம். தமிழ்ப் புலவர்களால் ஏகோபித்த முறையில் பாராட்டக்கூடிய ஒரே ஒரு நூல் திருக்குறள் ஒன்றுதான். இது ஒன்றே திருக்குறளுக்கு எவ்வளவு பெருமை! ஏன்? கண்டனம் செய்வதே கற்ற புலமைக்கழகு என்று கருதிக் கொண்டிருந்தவர்களாலும் கூட திருக்குறள் கண்டிக்கப் படாமல் போற்றப்பட்டு வந்திருக்கிறது.

சமயச் சேற்றில் நின்று தமிழ்ப் பயிரை நடுவதே தாம் பெற்ற கல்வியின் பயன் என்று அறிவுக்கு வேலி போட்டு வந்தவர்களாலும்கூட அது பாராட்டப் பட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று நடமாடும் தமிழிலக்கியங்களுக்குள் தனக்கென்று ஒரு பாராட்டு நூலைப் பெற்ற நூல் குறளைத் தவிர வேறொன்றில்லை இப்படி, குறள் போற்றப்படுவதற்கு உண்மையான காரணம் அது எந்த மதத்தையும் தனக்கு அடிப்படையாகக் கொள்ளாததே.

எல்லாப் புலவர்களாலும் பாராட்டக் கூடியதாய், எல்லா நாட்டினராலும் ஏற்கக் கூடியதாய் உள்ள இந்த குறள், குறள் பிறந்த நாட்டிலேயே ஏன் பரவவில்லை? தமிழ் படித்த ஒரு சிறு கூட்டத்தார்களுக்கு இடையே மட்டும், அது ஏன் பரவவில்லை? அது ஏன் சிறைப்பட்டிருக்கவேண்டும்? சென்ற பத்தாண்டுகளாகத் தமிழர்களுக்கு விழிப்பு ஏற்பட்டுப் பெருகி, தமிழைப் படிக்க வேண்டும் என்கிற உணர்ச்சி? வழியும் இந்தக் காலத்தில்கூட – தமிழ் நூல் என்றாலே தாராளமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்கூட, குறள் ஏன் பொது மக்களிடையே பரவவில்லை?

குறளைப் போற்றும் புலவர் பெருமக்கள் முதலில் இதற்கு விடைகாண வேண்டும். குறள் முந்தியது என்றால், 2000-ம் வருஷங்களுக்கு முந்தியிருந்த தமிழ் நடை எதுவோ அந்த நடையில் தானே எழுதப்பட்டிருக்க முடியும். எளிய நடையி லென்றால் அப்போது எது எளிய நடை என்று எண்ணப்பட்டதோ அந்த நடையில் தானே எழுதப் பட்டிருக்கவேண்டும். இப்போது வசனநடை பெருகியிருக்கும் இந்தக் காலத்தோடு, அந்த நடையை ஒப்பிட்டால், இன்றைக்கும் குறள் நடையை எளிய நடையென்று சொல்லிவிட முடியுமா?

இதனால், இக்கால நடைக்கேற்ப எளிய முறையில் குறள் ரிப்பேர் செய்யப்படவேண்டும் என்பது நமது கருத்தல்ல. குறளை – குறள் கருத்தை மக்கள் உட்கொள்ள வேண்டுமென்றால், குறளை விளக்குபவர்கள் மக்களுக்கு விளங்க வைக்கவேண்டும் என்கிற உணர்ச்சியைக் கொள்ள வேண்டாமா? உணர்ச்சி கொண்டால் அதற்குத் தக்கபடி முதலில் தங்களைச் சரிசெய்து கொண்டு அதாவது பாமரமக்கள் பேசும் உயிர்த்தமிழையும் கைக்கொள்ள. இறங்கி வரவேண்டாமா? என்று தான் நாம் கேட்கிறோம். குறளை விளக்குகிறோம் என்றுகூறி, அந்த விளக்கம் குறளைக் காட்டிலும் கடுமையானதாய் அதாவது குறளைப் படித்தாலும் புரிந்து கொள்ளலாம் குறளுக்கு எழுதப்பட்டிருக்கும்.

உரையைப் படித்தால் அதுகூடப் புரியாதுபோலிருக்கே என்று சொல்லக்கூடிய விதத்தில் இருக்கலாமா? என்றுதான் நாம் கேட்கிறோம். குறள் மக்களிடையே பரவாததற்குக் காரணம் இது மட்டுமல்ல. இன்னொரு காரணமும் உண்டு. குறளுக்குப் பத்துப்பேருடைய உரை ஏற்பட்டிருக்கிறதே ஒருபெருமை என்று புலவர்கள் கூறுவார்கள். இன்று அந்தப் பத்துரைகளும் இல்லை. இரண்டு, மூன்றுபேருடைய உரைகள் காணப்படுகிறது என்றாலும், அதில் அய்யங்கார் பார்ப்பனராகிய பரிமேலழகர் என்பவருடைய உரைதான் சிறந்த உரையாக, ஒரே உரையாக இருந்து வருகிறது. பாக்கி உரைகள் எல்லாம் அழிந்து விட்டனவா? என்கிற கேள்வி ஒருபக்க மிருந்தாலும், குறளுக்கு இப்படிப் பத்து உரைகள் ஏற்பட்டதுதான், குறள் பொது மக்களிடமிருந்து செத்துவிட்டதற்கு மற்றொரு காரணமென்று நாம் கூறுகிறோம்.

இப்படி நாம் கூறும்போது, இலக்கியங்களின் வளர்ச்சி முறையை அறியாத நிலையில் நின்று இதைக் கூறவில்லை. ஒரு சிறந்த பழைய இலக்கிய மென்றால், காலத்திற்குக் காலம், அந்தந்தக் காலத்திற்கேற்ப அந்த இலக்கியம் மெருகிடப்படவேண்டியது தான் என்றாலும், அந்தக் கருத்தையே கொலை செய்யத் தக்க விதத்தில் திரித்துக்கூறி மெருகு பூசப்படலாமா? என்றுதான் நாம் கேட்கிறோம்.

பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு வந்தது கல்வித்துறை என்று சொல்லப்படும் நிலைமை வந்த பிறகு, தமிழனுக்குப் பெருமை தரக்கூடிய நூல்கள் எல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன என்கிற உண்மையை, இன்றையப் பார்ப்பனர்களின் நடத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது. வைதீகப் போக்குக் கொஞ்சமுமில்லாமல் மாட்டு நாக்கைத் தின்னும் பார்ப்பானாயிருந்தாலும், பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே என்று ஒரு பார்ப்பனரே பாடிய பாட்டைக்கேட்டால் மனம் பதைக்கின்றான்.

இந்த மாதிரியான தொடர் எடுக்கப்பட்டு அந்த இடங்களில் புள்ளிவைக்கப்படுவ தோடல்லாமல், இறந்துபோன தமிழனுக்குப் பெருமைதரும் வகையில், வ.உ.சி. என்று பெயர் குறிப்பிட்டிருந்தால் அது மாற்றப்படுகிறது என்பதும் சர்வ சாதாரணமாக 20ம் நூற்றாண்டிலும் நடை பெறுகிறது என்றால், தமிழனைக் கல்வித்துறையில் தலையெடுக்க வொட்டாமல் அடித்து வந்தகாலத்தில் எப்படியெல்லாம் உருமாற்றியிருக்கவேண்டும்……

குறள் ஆரம்பத்தையே குட்டிச்சுவராகி விட்டனர் பார்ப்பனர்களும் பண்டிதர்களுமென்றால் அதில் தவறில்லை. குறளில் கடவுள் வாழ்த்து என்பது எப்படி இடம் பெற முடியும் என்று நாம் பண்டிதர்களைக் கேட்கிறோம். இக்கேள்வி சுயமரியாதைக்காரர்கள் ? கடவுள் மேல் வெறுப்புக் கொண்டவர்கள் என்கிற முறையில் கேட்கப்படுவதில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறோம். திருக்குறள், இலக்கணத் தைப் பின்பற்றி எழுதப்பட்டதா? அல்லது இலக்கண நெறியைத் தாண்டி எழுதப்பட்டதா இலக்கணத் தைப் பின்பற்றிய தென்றால் குறளாசிரியரால் பின்பற்றப்பட்ட இலக்கணம் பவணந்தியாருடைய நன்னூலா? தொல்காப்பியருடைய தொல்காப்பியமா?

12ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது பவணந்தியாருடைய நன்னூல் என்றால், திருக்குறளுக்கு இலக்கணம் நன்னூலாயிருக்க முடியாதல்லவா? பின் தொல்காப்பியத்தைப் பின்பற்றியது குறள் என்றால், ஒருபுத்தகத்தைத் தொடங்குமுன் கடவுள் வாழ்த்து கூறவேண்டுமென்று தொல்காப்பியம் கூறுகிறதா? என்று கேட்கிறோம். மேலும், ஒரு நூல் எப்படி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றியும் தொல்காப்பியம் கூறுகிறதல்லவா? என்றும் கேட்கிறோம்.

ஆக நூலுக்கு இலக்கணம் கூறவந்த தொல்காப்பியர், நூலுக்கு முன்னால் ஏதோ ஒரு கடவுளை வாழ்த்தவேண்டுமென்று கூறவில்லையென்றால், குறள் தொல்காப்பிய இலக்கணத்தைப் பின்பற்றியதென்று சொல்ல முடியுமா? சரி, கடவுள் வாழ்த்து என்கிற தொடருக்கும் அந்த அதிகாரப் பொருளுக்கும் ஏதாவது தொடர்புண்டா? முதல் அதிகாரத்தில் உள்ள பத்துக்குறள்களில் எந்தக் குறளாவது கடவுளை வாழ்த்துவது என்கிற அர்த்தத்தில் இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? அடுத்தபடி, கடவுளால் படைக்கப்பட்டவன் என்று நம்புகிற ஒரு ஆஸ்திகன் ? அதாவது கடவுளை வணங்கி மோட்சமடைய வேண்டுமென்கிற ஆஸ்திகன் (பேராசைக்காரன்)

ஆக இருந்தாலும் கடவுள் வாழ்த்து என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்னாலும் பூஜிக்கத் தகுந்தவர்கள் பார்ப்பனர்கள் என்று பரமாத்மாவால் சொல்லப் பட்டிருப்பதற்கேற்பப், பார்ப்பனர்கள் கடவுளை வாழ்த்துவது என்பது பொருத்தமாயிருந்தாலும், அந்த வர்ணாச்சிரம முறைப்படி சூத்திரனான தமிழன் கடவுளை வாழ்த்த முடியாதே.

இதை ஏன் எப்படி எடுத்துக்காட்டுகிறோம் என்றால், ஆரியரின் வர்ணாச்சிரம முறைகளை மனதிலெண்ணி அதற்கேற்றபடி குறளுடைய கருத்துகள் என்று காட்டப்பட்டு விட்டது. அதிகாரப் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது குறள் வைப்புமுறை மாற்றப் பட்டிருக்கிறது. என்றெல்லாம் இன்று புலவர்களே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இப்படியெல்லாம் மாற்றித் திரித்துத்தான் சநாதன தருமத்தை வற்புறுத்த வந்த நூல் என்பதாகச் செய்து விட்டார்கள்.

ஆனால் மதம் பிடித்த பண்டிதசிகாமணிகளும் இதற்கு ஒத்துழைத்து வந்திருக்கிறார்கள் என்பதையும், அதே நேரத்தில், வள்ளுவர் செய்திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மறுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்று இரண்டுக்கும் வேறு பாட்டை எடுத்துக் காட்டியது போலச் சில புலவர்களாவது அந்தந்த காலங்களில் எடுத்துக் காட்டித்தான் வந்திருக்கின்றார்கள் என்றாலும், அந்த எடுத்துக் காட்டுகளால் பயன் ஒன்று ஏற்படுத்த முடியவில்லை என்பதையும் நாம் கூறித்தான் ஆகவேண்டும். ஆக திருக்குறள் என்பது மற்றொரு கீதை என்பது போன்ற உணர்ச்சி ஊட்டப் பட்டிருப்பதுதான் ? அந்த முறையில் நின்று அது விளக்கப் பட்டிருப்பதால்தான் அது இந்த நாட்டு மக்களிடையே வாழ முடியாமலிருந்து வருவதற்கு மற்றொரு காரணம் என்று கூறலாம்.

இந்த இரண்டு காரணங்களையும் எண்ணித்தான் குறள் மாநாட்டில் எளிய நடையில் உண்மையான உரைகாண வேண்டும் என்று முடிவு கட்டப்பட்டிருக்கிறது. இந்த உரை காண்பதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழு, தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களைத் தலைவராகக் கொண்டிருக் கிறது. வெளிப்படுத்தப்படும் உரை, பயன் விளைவிக்கத் தக்கதாயிருக்குமென்பது உறுதி என்றாலும், மிகவும் விரைவாக வெளிவரவேண்டுமென்பது நம் வேண்டுகோள்! திருக்குறளின் சீரிய கருத்துகள் திராவிடரிடையே பரவுவதற்குத், திராவிடச் செல்வர்கள் பெருந்துணையாய் நிற்கவேண்டியது அவர்கள் கடமை!

இதனால் குறளுடைய கருத்துகள் அத்தனையையும், இன்றைய மக்கள் மேற்கொள்ள வேண்டுமென்று நாம் கூறவரவில்லை. குறளாசிரியர் வாழ்ந்த காலம் வேறு ? நாம் வாழும் காலம் வேறு. அவர் காலத்தியச் சூழ்நிலைக்கும், இப்போதையச் சூழ் நிலைக்கும் எவ்வளவோ பெருத்த வித்தியாசங்களுண்டு.

தெய்வத்தைத் தொழாதவளாய், விடிந்து எழுந்தவுடன் கணவனைக் கும்பிடுகின்ற மனைவியொருத்தி மழையை நோக்கிப் பெய்க! என்றால் மழை பெய்யும் என்பதுபோல அறிவுக்கு நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்கள் குறளிலும் சிலவுண்டு என்பதை நாம் மறுக்க வில்லை.

இப்படி காலத்திற்கொவ்வாத கருத்துகள் சில, குறளில் இருக்கிறதென்றாலும், ஆரிய நெறில் சென்று, அவதிப்பட்டிருக்கும் திராவிடனுக்கு, அந்த அவதியைப்போக்கும் அருமருந்து ? நல்லபாதை யைக்  காட்டும் வழிகாட்டி திருக்குறள் என்பதைத் திராவிடன் உணரவேண்டும். நாட்டு நிலையுணர்ந்த நல் மருத்துவராம் தந்தை பெரியாரவர்களால், காலமறிந்து தரப்பட்டது இந்த ஊன்று கோல். இந்த ஊன்று கோலை ஊன்றி நடந்தால், ஆரியச் சேற்றில் அழுந்த வேண்டியதில்லை என்பதை நாடு உணர, நாம் பாடுபடவேண்டியதே இனி நம் கடன்!

குடி அரசு 22-01-1949

You may also like...