ஆகமம் தெரிந்தால் போதும்; ஜாதி ஒரு தடையல்ல ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் • சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு

அர்ச்சகர் பதவி மதம் தொடர்பானது அல்ல, அவர் நடத்தும் பூஜை, சடங்குகள் தான் மதம் தொடர்பானது. முறையாக ஆகமம் தெரிந்த எந்த ஜாதியினரும் ஆகமக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை (ஜுன் 26) வழங்கியுள்ளது.

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரி அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து கோயில் பரம்பரை அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாரம்பரிய முறையில் தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் பழக்கவழக்கங்களை மாற்றக்கூடாது என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் சில முக்கிய கருத்துகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆகம கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பவர்கள் ஆகமங்களையும் சடங்குகளையும் தெரிந்திருந்தால் போதும், அவர்களுக்கு ஜாதியோ, பரம்பரையோ ஒரு தடையாக இருக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சேஷம்மாள் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதி சுட்டிக்காட்டி இருக்கிறார்.  அர்ச்சகர் பதவி என்பது மதம் தொடர்பானது அல்ல, அது வேலை தொடர்பானது. அவர் செய்யும் சடங்குகள் தான் மதம் தொடர்பானது, எனவே  அர்ச்சகர் பதவிக்கு ஆகமத்தை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை,  அவர் செய்யும் சடங்குகளுக்கு மட்டும்தான் ஆகமங்கள் பொருந்தும் என்று நீதிபதி சுட்டிக்காட்டி இருக்கிறார்.

2002ஆம் ஆண்டு கேரளாவில் ஆதித்யா திருவாங்கூர் எதிர் தேவஸ்வம் போர்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிற தீர்ப்பையும்  நீதிபதி சுட்டிக்காட்டி இருக்கிறார். ஒரு ஆகம கோயிலில் பிராமணரோ அல்லது மலையாள பிராமணரோ அர்ச்சகராக இருந்தால் அவர்கள் மட்டும்தான் தொடர்ச்சியாக அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் ் என்பதன் பொருள் பிராமணர் அல்லாதவர் அர்ச்சகர்களாக ஆகக் கூடாது என்பது அல்ல, அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு, வேதம் படிப்பதற்கு தடை போடப்பட்டது, வேதம் ஓதுவதற்கு தடை போடப்பட்டது, பூணூல் அணிவதற்கு தடை போடப்பட்டது, பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உரிமை இருந்த காரணத்தினால் தான்  பிராமணர்களாக இருப்பவர்கள் மட்டும்தான் அர்ச்சகராக முடிந்தது.  எனவே இப்பொழுது அதற்கு உரிய தகுதி படைத்த பிராமணரல்லாதார் வந்து விட்ட காரணத்தினால் பிராமணர்கள் மட்டுமே   அர்ச்சகர்களாக இருக்க முடியும் என்ற வாதத்தை  ஏற்க முடியாது என்று 2002 ஆம் ஆண்டு கேரளா ஆதித்யா  வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆகமக் கோயில்கள் எவை என்பதை வரையறுக்க வேண்டும் என்று ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற அமர்வு அறிவித்திருந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, அந்த குழுவின் அறிக்கை வருகின்ற வரை  காத்திருக்க வேண்டும் என்ற வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை, அதுவரை அர்ச்சகர் நியமனத்திற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை,  சொல்லப்போனால் அந்த ஆகமக் குழு நியமனத்தை எதிர்த்து நீதிமன்றங்களில்  வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.  எனவே ஆகமக் குழுவின் அறிக்கைக்காக காத்திருக்காமல் இப்போதே அறநிலையத்துறை அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக் காட்டி இருக்கிறது. இது மிகச் சிறப்பான வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு.

பெரியார் முழக்கம் 29062023 இதழ்

 

You may also like...