14. கோபால் மத்தாய் கூட்டுத்திருப்பணி!

எதனால் வந்தது என்று புரிந்து கொள்ள முடியாமலும், தலைவர்களால் புரியவைக்கவும் முடியாத நிலையில், அர்த்தராத்திரியில் வந்து புகுந்த சுயராஜ்ஜியம், இன்று நாட்டைப் பெரும் அலங்கோலப்படுத்தி விட்டது. இந்தச் சுயராஜ்ஜியம், பார்ப்பனச் சுயராஜ்ஜியமே தவிர, பாட்டாளி மக்களுக்குச் சுயராஜ்ஜியமல்ல என்று நாம்விளக்கிய போது தூற்றப்பட்டோம். பாடுபடாத புளியேப்பக்காரர்கள் பவுசோடும் படாடோபத்தோடும் வாழத்தான் இந்தச் சுய ஆட்சி, பாதை அமைக்குமே தவிர, பாடுபட்டுழைத்துழைத்துப் பசியினால் வாடும் பசியேப்பக் காரர்களின் பசியைப் போக்க வழிவகுக்காது என்று கூறியபோது நாம் பழித்துப் பேசப்பட்டோம். உழைக்காத கும்பல் உடல் மினுப்புக் குன்றாமலிருக்க, தொந்தி வாடாதிருக்கத்தான், இந்த உத்தமர்களின் சுய ஆட்சி உருவாகி இருக்கிறதே தவிர, ஒட்டிய வயிற்றோடு உழைத்துருக்குலையுமினம் ஒரு அங்குல அளவுகூட முன்னேற, இது உதவி செய்யாது என்று நாம் உரைத்த போது, அதை உணர மறுத்தார்கள் நாட்டு மக்கள். வேதியர்களின் ஆசீர்வாதத்தோடு விளக்கம் தெரியாமல் நுழைந்த சுய ஆட்சிக்குக்காரணம், வெள்ளையர் – பனியாக்கள் கூட்டுச்சதி என்று நாம் விளம்பினோம், ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் இந்நாட்டு மக்கள். தொழிலாளியின் துயர் போக்க அல்ல, பெருக்குவதற்கே இது துணைநிற்கும் என்று சொன்னோம், – பல முறை வற்புறுத்திச் சென்றோம், துர்ப்புத்திக்காரர்கள் என்கிற பட்டம் தான் நமக்கு.

இன்றைய நிலை என்ன? கோபால் மத்தாய்கள் அதைவற் புறுத்துகிறார்கள், கேளுங்கள், சென்னை மாகாண நிதிமந்திரி தோழர் கோபால் ரெட்டி அவர்கள். மத்திய அரசாங்க நிதி மந்திரி தோழர் ஜான் மத்தாய் அவர்கள். மாகாணச் செலவைச் சரிக்கட்ட வரவுக்கு மேல் 4 கோடி ரூபாய் வேண்டுமென்கிறார் முந்தியவர்.

மத்திய அரசாங்கச் செலவைச் சரிக்கட்ட வரவுக்குமேல் 15 கோடி ரூபாய் வேண்டுமென்கிறார் பிந்தியவர். வந்து கொண்டிருக்கும் வரவு 52 கோடி என்கிறார் முந்தியவர்; 308 கோடி என்கிறார் பிந்தியவர். 52 கோடிக்கு மேலும் 4 கோடி; 308 கோடிக்கு மேலும் 15 கோடி! பிந்தியவரையும் மிஞ்சிவிடுகிறார் முந்தியவர்! நமது மாகாண சர்க்கார் நடப்பதற்கு வருஷமொன்றுக்கு 56 கோடி ரூபாய் வேண்டுமாம்! நமது மத்திய சர்க்கார் நடப்பதற்கு 323 கோடி ரூபாய் வேண்டுமாம்!

மாகாண சர்க்காரின் வருஷவருமானத்தில் பெரும் பகுதியை அதன் நிர்வாகமே விழுங்கி விடுகிறது. மத்திய சர்க்காரின் வருமானத்தில் பெரும் பகுதியை பட்டாளம் விழுங்கி விடுகிறது. (308 கோடி வருமானத்தில் இராணுவச் செலவு 157 கோடி)  இரத்தத்தைப் பிழிந்து உடலை வாட்டி உழைத்து, உழைப்பைச் செல்வமாக்கிய பிறகுதான், அந்தச் செல்வத்தை மறைமுகமாக ? தந்திரமாக – வஞ்சனையாக அபகரிக்க முயற்சிக்கிறார்கள் பலர். இந்த முயற்சியில் தோல்வி அடைபவர் பலர் என்றாலும் சிலர் வெற்றி பெற்று விடுகின்றனர்.

இப்படி போட்டியிடும் எல்லோரையும் ஆதரித்து, அவர்களுக்குத் தேவையானபோது உதவியளித்துப் பின் வெற்றி பெற்ற கூட்டத்தாரிடமிருந்து ஒரு பங்கை நிர்ணயித்து, அதை வாங்கித் தன் நிர்வாகத்தை நடத்துவதுதான் தனியுடைமை இருந்துவரும் (முதலாளித்துவ) நாட்டின் அரசாங்கப் பொதுவிதி.

நம்முடைய நாடு, தனியுடையமைக் கொள்கையையுடைய நாடாக இருந்த போதிலும், உழைப்பை இழிவு என்றே மதஆதி பத்தியக்காரர்கள் ஆயிரமாயிரமாண்டுகளாகப் போதித்து வந்த காரணத்தினாலும், அந்த மதஆதிக்கக்காரர்கள் வழியே அரசாங்கம் சென்று கொண்டிருந்ததாலும், உழைப்புக்கு மதிப்பின்றிப்போய், மிகமிக மலிவாகக் கிடைக்கக்கூடிய சரக்கு உழைப்பு என்ற நிலைமை வந்து விட்டதால், மக்களின் வாழ்க்கைத்தரம் உயராத நிலையில் வந்து புகுந்த வெள்ளை ஏகாதிபத்தியம், தன் வாணிபத்துக்கு இந்தநாட்டைச் சந்தையாக உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற திட்டத்தால்.

இந்த நாட்டில் வணிகர்கள் என்பவர்கள் வெறும் தரகுக்காரர்களாய் – கமிஷன் ஏஜண்டுகளாய் இருந்து வந்தார்களே தவிர – இருந்துவர முடிந்ததே தவிர வணிக வேந்தர்களாக – வாணிபத் துறையில் தன்னரசு ஓச்சுபவர்களாக ஆக முடியவில்லை. அதாவது பெருங்கொள்ளை – கொழுத்தலாபம் அடிக்கமுடியவில்லை.

வெறும் தரகுக்காரர்களாய் இருந்த வியாபாரிகள், அரசாங்க நடப்புக்கு வேண்டிய சிறு பகுதியைக்கூட வரி என்ற பெயரால் கொடுக்க முடியாத காரணத்தினால்தான், நாட்டின் பொது நலத்தில் – வளத்தில் கவனம் செலுத்த முடியாத, அக்கரைகாட்டத் தேவையில்லாத வெள்ளை ஏகாதிபத்தியம் இந்த நாட்டிலுள்ள ஏழைமக்கள் எல்லோரையும் பாதிக்கத்தகுந்த முறையில், மறைமுக வரியைப் பெரிதாக விஸ்தரிக்கவேண்டி ஏற்பட்டது.

தொழில் வளமின்றி, வியாபாரத் தனியுரிமை பறிக்கப் பட்டுவிட்ட காரணத்தால், எவ்வளவுதான் வரிகளைப் போட்டாலும் அந்த வருமான மெல்லாம் வெள்ளையானைகளுக்கே கட்டுபடியாகாத நிலையில், நாட்டின் நலத்திற்காக, அறிவு, சுகாதாரம் போன்ற மக்கள் நலத்திற்காக வெள்ளை அரசாங்கம் என்ன செய்துவிட முடியும்?

இந்த நிலையைத்தான் நமது காங்கிரஸ் தோழர்கள் மக்கள் முன்பு  விளக்கினார்கள். வெள்ளையனின் கொடுங்கோன்மையை வரிச் சுமையைப் புட்டுப் புட்டுக் கூறினார்கள். இந்த நாடு சுயராஜ்ஜியம் பெற்றால், ஏழைக்கு வரி என்பது இருக்குமா? என்று கேட்டார்கள், நிற்க,  இன்று சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகோ, பனியாப், பார்ப்பன ஆதிக்கக் காங்கிரஸ் சர்க்கார், தன்சுயரூபத்தை வெளிப்படையாகவே காட்டித்தீர வேண்டியதாயிற்று. இதை நாம் கூறியபோது ஒப்புக் கொள்ளாதவர்களாய், சென்னையில் பேசிய இரும்புத் தலையர், நேற்று, இது முதலாளிகள் ராஜ்ஜியம் என்பது முழுப் பொய் என்று முழக்கியிருந்தாலும் கூட, இன்று கோபால் மத்தாய்களின் கூட்டுத் திருப்பணி, இதை வெட்ட வெளிச்சமாக்கிவிடுமென்றே நம்புகிறோம்.

வந்துகொண்டிருக்கும் வருமானங்களில் பெரும் பகுதி, வெள்ளையன் வகுத்த வழியில், அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது என்பதையும், அவன் வகுத்த வழியிலேயே மக்களின் பொது நலத்திற்கான வழிகள் மிகமிக ஒடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது, மறைக்கவும் முடியாது, அதாவது அரசாங்கத்திற்கான வருமானங்களில் பெரும் பகுதியை ஏழை மக்கள் -நடுத்தர மக்களே இப்போது வளர்ந்திருக்கும் நிலைக்கும் கொடுத்து வருகின்றார்கள் என்பதோடு, வரி கொடுப்பதற்குப் பிரதிபலனாக எந்தெந்த சௌகரியத்தை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் எதிர்பார்க்க வேண்டுமோ – அரசாங்கம் செய்யவேண்டுமோ அந்த நிலை, அன்றைய வெள்ளையன் காலத்தைப் போலவே இன்றும் குறுக்கப் பட்டுத்தானிருக்கிறது.

தொழில் பெருக்கமில்லாத நாட்டில் – இயற்கைச் செல்வங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நாட்டில் – அடிமை நாடாயிருந்து சுதந்தரமாக மாறிய நாட்டில் இந்த வரிச்சுமை பெருகித்தான் ஆகவேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் பெருகும் வரிச்சுமை, பெரும் நிர்மாணத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக – மக்கள் நலத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் வளர்ந் தோங்குவதற்காக என்றில்லாத நிலையில் மேலும் மேலும் ஏழைகளை – நடுத்தர மக்களை ஒடுக்கும் வகையில் பெருக்கிக்கொண்டு போகலாமா? அதேநேரத்தில் முதலாளிகளை உண்டாக்குவதற்காக – அவர்களைச் செழிப்பாக வளர்ப்பதற்காக அவர்கள் கையிலிருக்கும் சிறுபாரத்தையும் வாங்கி, வரிச்சுமை தாங்காத மக்கள் தலையில் ஏற்றிக் கொண்டே போகலாமா?

இரண்டு நிதி மந்திரிகளும் துண்டுவிழும் தொகையை எப்படிச் சரிக்கட்டுகிறார்கள் என்பதைப் பாருங்கள். மாகாண நிதியை சரிக்கட்ட

  1. தேங்காய், எண்ணெய்வித்துக்கள், கரும்பு, மிளகாய், காப்பிக் கொட்டை, ரப்பர், உருளைக்கிழங்கு, மிளகு, மஞ்சள், வாழைப்பழம், முதலியவைகளுக்கு இதுவரை, முதல் விற்பனையில் அதாவது விவசாயி வியாபாரிக்கு விற்கும்போது கொள்முதல்வரி இல்லாதிருந்தது. இனி விவசாயிவிற்கும்போது அதற்குக் கொள்முதல் வரி.
  2. வேர்க்கடலை முந்திரிப் பருப்பு இவைகளுக்கு முன்பேவரியுண்டு, இந்த வரி இனிமேல் ஒன்றுக்கு ஒன்றரையாக்கப்படும்.
  3. தேயிலைக்கு வரியுண்டு, அதன் ஏற்றுமதிக்கு வரியில்லாமலிருக்கிறது. இனி ஏற்றுமதிக்கும் வரி விதிக்கப்படும்.
  4. பருத்திக்கு வரி இல்லை, இனிமேல் அதற்கு வரியுண்டு.
  5. பஸ் கட்டணங்களில் ரூபாய்க்கு அரைக்கால் வரி. லாரிகளுக்கும் வரி. வீட்டு வரி வாங்கும் ஸ்தல ஸ்தாபனங்களிடமிருந்து ரூபாய்க்கு அரைக்கால்வரி. மின்சாரத் திற்குப் பிரத்தியேக வரி.
  6. விளம்பரங்கள், வார்த்தைப் போட்டிப் பந்தயங்கள், காப்பி ஹோட்டல்கள், சினிமாக் கொட்டகைகள் மீது ஒரு புது வரி. யுத்தகாலச் சொத்து விற்பனை மீது வரி.

இப்படி விதிக்கப்படும். வரிகளால், என் நிதியைச் சரிக்கட்டுவேன் என்கிறார் தோழர் கோபால் ரெட்டியவர்கள்.

மத்திய அரசாங்க நிதியைச் சரிக்கட்ட, 1. கார்டு முக்காலணா கவர் இரண்டணா. 2. பாக்கு இறக்குமதி வரி ஒன்றுக்கு ஒன்றரை. 3. கயிறு, மண்பாண்டம், பீங்கான், செயற்கைப் பட்டுக்களுக்கு ஒன்றுக்கு இரண்டுபங்கு சர்சார்ஜ். 4. பத்திரிக்கைக் காகிதம் தவிரமற்றெல்லாக் காகிதங்களுக்கும் அதிக வரி. 5. ஸ்டேஷனரிப் பொருள்கள், கண்ணாடி, கத்தி முதலியவைகளுக்கு அதிக வரி. 6. மேஜை, நாற்காலி, புகைப்படக் கருவிகள் கைக் கெடியாரங்களுக்கு அதிகத் தீர்வை. 7. மில் துணிகளுக்கு எதிர் வரிவேறு போடப்படும். 8. சர்க்கரைப் பொருளுக்கு வரியுயரும்.

இப்படிப் புது வரிகள் பல உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறதே, பழைய வரிகள் ஏதேனும் போய்விடுமா என்று கேட்கிறீர்களா? ஆம்! குறைக்கிறேன். ஆனால் அதுவேறு இனத்திற்காக – எங்களை வாழவைக்கும் இனத்திற்திற்காக என்கிறார் மத்திய நிதிமந்திரி.  1. ஒரு மூலதனத்தின் மீது வியாபாரிக்குக் கிடைக்கும் லாபத்தில் வரிக் கட்டவேண்டு மென்றிருக்கிறதே அந்த வரியை வியாபாரிகள் கட்ட வேண்டியதில்லை. 2. வியாபாரிக்கு 10,000 ரூபாய் வருமானம் வந்தால் அந்த வருமானத்திற்குக் காலணா வீதம் வரி என்று குறைக்கப் பட்டிருக்கிறது. 3. வருமான வரி 1 அணாவாக இருப்பது இனி முக்காலணா. 2 அணாவாக இருப்பது 13/4  அணா. 4. அமிரி வரியில்    1/2 அணாக்குறைவு. 5. எண்ணெய் வித்துக்கள், தாவர எண்ணெய் ஏற்றுமதிக்கு, ஏற்றுமதி வரி இருந்ததே, அது இனி ரத்துச் செய்யப்படும். 6.விமானப் பெட்ரோல்மீது இருக்கும் வரி இனிமேல் பாதியாகக் குறைக்கப்படும்.

இப்படி வியாபாரிகளுக்குச் சலுகை காட்டி, ஏழை நடுத்தர மக்களைக் கசக்கிப் பிழிவதால் என் நிதியைச் சரிக்கட்டி விடுவேன் என்கிறார் தோழர் ஜான் மத்தாய் அவர்கள். மாகாண நிதி மந்திரியின் புதுவரிகளில், யுத்தகாலச் சொத்து விற்பனை வரி என்கிற ஒன்று தவிர, எஞ்சிய எல்லாம் யாரைப் பாதிக்கக்கூடியன? மத்திய நிதி மந்திரியின் புதுவரியில் நூற்றுக்கு நூறு யாரைப் பாதிக்கும்? இப்படி ஏழைகளையும் நடுத்தர மக்களையும் மேலும் மேலும் கசக்கிப்பிழிந்து, பிழிந்தெடுக்கப்பட்ட ரத்தத்தை நிர்வாகமும், பட்டாளமும்தான் பருகவேண்டும்? விவசாய வருமானத்திற்கு வரி விதித்தால் 4 கோடிக்கு மேலும் வரிகிடைக்கும் என்கிற உண்மையை நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கும் மாகாணநிதி மந்திரி, மிராசுதாரர்களைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை என்கிறார்.

வியாபாரிகளுக்கு, இருக்கும் வரியைக்கூட நான் குறைத்துவிடுகிறேன் என்கிறார் மத்திய நிதிமந்திரி. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு, எங்கெங்கே இடம் பாக்கியிருக்கிறது என்பதைப் பார்த்துப் பார்த்து, ஏழை மக்கள் தலையிலே சளைக்காமல் கை வைக்கிறார்கள்.  ஆக, இந்த இருவர்களின் வரவு செலவுத் திட்டத்தால் வெளியாகும் உண்மை என்ன? ஏகாதிபத்தியத்திற்குத் தூண்கள் வணிக வேந்தர்கள்! நிலச்சுவான்தாரர்கள்! மடாலயங்கள்!

இம்மூன்று வகையினரும் செழிப்புடன் வளர்ந்தால்தான், இவர்களுக்குப் பாதுகாப்பாக ஏழைகளின் குருதியால் அரண் எழுப்பினால்தான், ஏகாதிபத்தியக் கோட்டை வலுப்பெற்றிருக்கும். ஏகாதிபத்தியம் செழிக்க வேண்டுமானால், வியாபாரிகள் கொள்ளையடிப்பதற்கு முழு லைசன்ஸ் கொடுத்துவிடவேண்டும்! மிராசுதாரர்களின் மெருகு கலைந்துவிடக்கூடாது! மடாலயங்களில் மக்களுழைப்பு குவிந்துகொண்டே இருக்கவேண்டும்! இதில் கை வைத்தால் ஏகாதிபத்தியம் சரிந்துவிடும்! இவற்றைத் தவிர, கோபால் மத்தாய்களின் திருப்பணி வேறு எந்த உண்மையைக் காட்டுகிறது?

குடி அரசு, தலையங்கம்  05.03.1949

You may also like...