பாட்னா கூட்டம் காலத்தின் தேவை
2024 தேர்தலை கூட்டாக சந்திப்பது என்று பாட்னாவில் கூடிய 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பது ஒரு வரலாற்று திருப்பமாகும். காலத்தின் அறைகூவலை சந்திப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தக் கூட்டத்தில் பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற இருக்கிறது, அடுத்த தொடர் நடவடிக்கைகள் குறித்து அதில் முடிவெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து இப்பொழுதே அலறத் தொடங்கி இருக்கிறது. போட்டோ ஷுட் நடத்துகிறார்கள் என்று அமித் ஷா கூறியிருப்பது இறுமாப்பையும் ஆணவத்தையும் காட்டுகிறது. வருகிற தேர்தலில் இதற்கு மக்கள் நிச்சயம் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பல ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வருவது முறையானது அல்ல என்று அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார். எந்த மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்காக இருக்கிறதோ, அந்த மாநில கட்சியின் தலைமையின் கீழ் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி அமையும் போது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்று சொன்னால் பொது வேட்பாளரை நிறுத்தலாம் அல்லது தொகுதி உடன்பாடுகளை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிற கருத்துக்கள் தான் மிகவும் குழப்பத்தை உருவாக்குவதாக இருக்கின்றன. ஒரு பிரச்சனையை எப்படி அணுகுவது என்பதில் அவருக்கு உள்ள தடுமாற்றத்தைத் தான் காட்டுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிறகு அந்த ஆட்சியை செயல்பட விடாமல் தொடர்ந்து ஆளுநர்களை வைத்து முட்டுக்கட்டை போட்டு வந்தது ஒன்றிய பாஜக ஆட்சி. உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு உரிமைகள் உண்டு என்று தீர்ப்பு வழங்கியதற்குப் பிறகு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிக்கிற செயல்பாட்டில் ஒன்றிய பாஜக ஆட்சி இறங்கியிருக்கிறது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைவர்கள், மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் கெஜ்ரிவால். இப்போது காங்கிரஸ் கட்சி இதில் கருத்து தெரிவிக்கவில்லை என்ற ஒரு பிரச்சனையை கெஜ்ரிவால் எழுப்புகிறார். இதில் முதன்மையான பிரச்சனை எது என்பதை நாம் கவனித்தாக வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சிதான் ஆம் ஆத்மியின் அதிகாரத்தைப் பறித்தது, ஆளுநரை வைத்து மிரட்டியது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கின்ற வகையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. எனவே முதலில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும், அதற்குப் பிறகுதான் ஏனைய பிரச்சினைகளைப் பற்றி நாம் சிந்திக்க முடியும். எதிர்க்கட்சிகள் ஒன்றான காங்கிரஸ் கட்சி இதில் கருத்து கூறவில்லை என்பதற்காக எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன் என்று சொல்வது தவறான முடிவேயாகும். எது பிரதான முரண்பாடு என்பதில் குழம்பி போய் நிற்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
இது பாஜக ஆட்சிக்கு மறைமுகமாக வலிமை சேர்க்கின்ற ஒரு முயற்சி என்பதையும் நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து முரண் இருந்தாலும் ஒன்றிய பாஜக ஆட்சியை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாட்னா கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சரும் கலந்து இருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும் கலந்து இருக்கிறார். இந்த அணுகுமுறையை கெஜ்ரிவால் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்,
பெரியார் முழக்கம் 29062023 இதழ்