அமலாக்கத்துறை பாஜகவின் தொண்டர் படையா?
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் அமலாக்கத்துறை நுழைந்து இருக்கிறது. இவைகளெல்லாம் எப்படி நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி அதிமுகவிலோ, பாஜகவிலோ இருந்திருந்தால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாய்ந்திருக்காது. அவர் திமுகவில் சேர்ந்து குறிப்பாக கோவை மண்டலத்தில் பாஜக ஆதிக்கத்தை தகர்த்துவிட்டார் என்ற ஒரே ஆத்திரத்தின் காரணமாக அவர் பழிவாங்கப்படுகிறார். செந்தில்பாலாஜி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறியும் அவரை அமைச்சர் என்ற நிலையில் இருந்தும் கூட நள்ளிரவில் அவரை ஏன் கைது செய்கிறார்கள்?
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி பணம் வாங்கினார் என்பது குற்றசாட்டு. ஊழல் நடந்தது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில். எடப்பாடி பழனிசாமி இப்போது ஊழல் அமைச்சர் என்று கூறுவதன் மூலம் ஜெயலலிதாவையும் சேர்த்து அவமானப்படுத்துகிறார். அண்ணாமலை ஜெயலலிதாவை ஊழல் முதலமைச்சர் என்று கூறியதற்கு பொங்கி எழுந்த அ.இ.அ.தி.மு.க வினர் இப்போது அவர்களே ஜெயலலிதா ஆட்சியில் ஊழல் செய்த செந்தில் பாலாஜியைக் கைது செய்வதில் என்ன தவறு என்று என் சொல்லி தங்களது புரட்சித் தலைவி மீது சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை இதற்கான ஆவணங்களை சேகரிப்பதற்காகத்தான் தலைமைச் செயலகம் வந்ததாக கூறுகிறது. 2021 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கைத் தொடர வேண்டும் என்று கூறி அதற்கான முழு ஆவணங்களையும் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றமும் இந்த விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே ஆவணங்களை சேகரித்து வைத்ததற்கு பிறகு புதிதாக என்ன ஆவணங்களை சேகரிக்க போகிறார்கள்? இப்போது செந்தில் பாலாஜியிடம் கேட்டிருக்கிற கேள்விகள் எல்லாம் இப்போது யார் யாரிடம் தொடர்பு இருக்கிறது? என்று திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எதாவது பிரச்சனைகள் கிடைக்குமா என்பதை தோண்டி எடுப்பதற்காகத்தான் இந்த விசாரணையை இவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதுவரை பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஒரு பாஜகவினர் வீட்டில் கூட அமலாக்கத்துறையோ வருமானவரித்துறையோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததில்லை. இதில் பச்சையாக ஒரு சார்பாக அரசு இயந்திரத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான ஒரு உதாரணம்.
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசின் முன் அனுமதி பெற்று தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இது ஏற்கனவே எடுத்திருக்க வேண்டிய ஒரு முடிவு, ஏற்கனவே பல மாநிலங்களில் இத்தகைய முடிவுகளை எடுத்திருக்கின்றனர். இப்போது எடுக்கப்பட்டிருக்கிற முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.
ஊழல் வழக்கைப் பற்றி விசாரிப்பதற்கோ, தண்டனை வழங்குவதற்கோ யாரும் தடை போட முடியாது. அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடிக்கு உள்ளாக்க முறைகேடாக பயன்படுத்தும் போது தான் கடுமையான எதிர்ப்புகள் எழுகின்றன. தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, புலனாய்வுத்துறை, ஆளுநர், உள்துறை அமைச்சர் என்று பல அதிகார மையங்கள் பாஜக தொண்டர் படைகளாக களத்தில் இறக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை செயல்பட விடாமல் முடக்குவதற்கு துடிக்கிறார்கள். மக்களைத் திரட்டி இந்த அடக்குமுறை சட்டங்களை, சர்வாதிகாரத்தை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவது ஒன்றுதான் இதற்கு சரியான பாடமாக இருக்க முடியும்.
பெரியார் முழக்கம் 22062023 இதழ்