15. திருவள்ளூரில் காமராஜர்!

சென்ற ஒருவார காலமாகத் தோழர் காமராஜர் அவர்கள், செங்கற்பட்டு வட்டாரத்தில் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். சென்னை மேல்சபை உறுப்பினருள் ஒருவரான தோழர் முத்துரங்கனார் அவர்கள் காலஞ் சென்று விட்டதால் ஏற்பட்டிருக்கும் காலி ஸ்தானத்திற்கும், தோழர் சீனுவாசய்யர் என்கிற பேர் வழியை, எப்படியோ, எந்தக் காரணத்தினாலோ, காங்கிரஸ் சார்பில் நிறுத்திவைக்கப்பட்டு, அவரை ஆதரித்துப் பேசித்தீரவேண்டிய நிலையில் தோழர் காமராஜர் இருக்கிறார்.

எப்படியோ? எந்தக் காரணமோ? என்று ஏன் கூறுகிறோமென்றால், இந்தத் (துண்டு) விழுந்த இடத்துக்குக் காங்கிரஸ் சார்பாகவே நான் நிற்கிறேன் என்று தோழர்களான வேணுகோபால்ரெட்டி, ஆதிகேசவலு நாய்க்கர், மேயர் இராமசாமி நாயுடு ஆகிய மூன்று திராவிடர்கள், தனித்தனியே காங்கிரஸ் கமிட்டிக்கு விண்ணப்பம் போட்டிருந் திருக்கிறார்கள்; இந்த மூன்று பேரில் ஒருவர்கூட முத்துரங்கனார் இடத்துக்கு லாயக்கில்லை என்று தள்ளப்பட்டு, சீனுவாசய்யர்தான் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர் என்று காங்கிரஸ் தெரிந்தெடுத்திருக்கிறதே, இதை நினைக்கும் போதுதான் எப்படியோ? எந்தக் காரணமோ? என்று கூறவேண்டியதாயிருக்கிறது.

மேலும், இந்த சீனுவாசய்யர் என்கிற பேர்வழி, கோட்ஸேகுலம் என்பது மட்டுமல்லாமல், கோட்ஸே கொலை ஸ்தாபன அநுதாபி என்றும், காந்தியார் கொலைகேட்டு கற்கண்டு வழங்கிய கண்ணியவான் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கொலைக் கும்பல் அநுதாபியைத் தேர்ந் தெடுப்பதற்கு, இப்போதைய மந்திரிசபையிலுள்ள சில மந்திரிகள்கூட பொறுப்பாக இருந்தார்கள் என்று வேறு சொல்லப் படுகிறது. இவ்வளவும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேசப்படும் பேச்சுக்கள்! இந்த அநியாயமான ? படுமோசமான தெரிந்தெடுப்பு, மிக மிகக்கண்டிக்க வேண்டியது.

ஆனால்யார் கண்டிப்பது? இதைப் பற்றியார் பேசுவது? – இது காங்கிரஸ் வட்டாரத்தில் உள்ள, கடுகத்தனையாவது திராவிட உணர்ச்சியுடையவர்களின் திகில்!

திருச்சியில் தேவருக்குப் பதிலாக ஒரு அய்யர்! இன்று முதலியாருக்குப் பதிலாக ஒரு அய்யர்! ஆனால் தாத்தாச்சாரிக்குப் பதில் அவர் தம்பி! இது முறையா? கேட்கவேண்டும் மென்றுதான் நினைக்கிறார்கள்; எப்படிக் கேட்பது? – இது காங்கிரஸிலுள்ள உண்மைத் திராவிடர்களின் உள்ளத்திலுள்ள திண்டாட்டம்! ஒரு திராவிடர் இடத்துக்கு, மூன்று திராவிடர்கள் விண்ணப்பித்திருந்தும், அம்மூவரும் தள்ளப்பட்டு விட்டார்கள். அய்யருக்குள்ள எந்தத் தகுதி, எந்தயோக்கியதை இந்த மூவரில் ஒருவருக்குக்கூட இல்லாமல் போய்வி விட்டது? இதை மற்றவர்கள் எண்ண மறுத்தாலும், தள்ளப்பட்ட மூவராவது எண்ணித்தானே தீரவேண்டும். இருதயமில்லாத இயந்திரங்கள் என்று எப்படிக் கருத முடியும்? இந்த அபத்தத்தை ? காமராஜர் ஏதோ ஒன்றில் கொண்டிருக்கும் கரையற்ற காமவெறியால் விளைந்த விளைச்சலை – எடுத்துக்காட்டி, இது எந்தச் சதிவேலைக்காக? என்று கேட்டதினால்தான், பெரியாரவர்களையும் கழகத்தையும், பெரிதும் காய்ந்து கொண்டு வருகிறார் தோழர் காமராஜர்.

காங்கிரஸ் யாரைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும். காங்கிரஸில் யார்வேண்டுமானாலும் பதவி பெறுவார்கள் இந்தப் பெரியாருக்கென்ன? இன்னாரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் மென்று சொல்ல இவருக்கென்னயோக்கியதை? – இது காமராஜர் கேட்கும் கேள்வி.

காங்கிரசிலுள்ள திராவிடர்கள், எண்ணி எண்ணி மனங்குமுறினாலும் எடுத்துக்கூற – அதட்டிக்கேட்க அச்சங் கொண்டிருக்கும் போது நம்மை – நம் நடத்தையை அம்பலத்துக்குக் கொண்டுவருவதா? என்கிற ஒரே ஒரு பொச்சரிப்பைத் தவிர வேறு இதற்கு என்ன நியாயம் கூறமுடியும்?

காங்கிரஸ் ஒரு பார்ப்பனீயப் பண்ணை, மேலும் பனியாக்களின் கூட்டுப் பண்ணை என்பது நாம் இன்று நேற்றுக் கூறுவதல்ல. அதற்கான ஆதாரங்களையும், உண்மைகளையும் அதன் நடத்தைகளிலிருந்தே அவ்வப்போது எடுத்துக்காட்டிவருகிறோம். அந்த முறையில்தான் முதலி யாருக்குப் பதிலாகவும் ஒரு கோட்ஸேயா என்று கேட்கிறோம். இதைக் கேட்கும் போதுதான் பெரியாருக்கு என்ன உரிமை? என்று ஒலமிடுகிறார் காமராஜர்.

சட்டசபையைக் கைப்பற்றும் திட்டம், எங்களுக்கில்லை என்று நாம் வெட்ட வெளிச்சமாகக் கூறி, எந்தத் தேர்தலிலும் நாங்கள் ஈடுபடமாட்டோம் என்று நாம் சொல்லிவிட்ட போதிலும், காங்கிரஸ் பீடமேறிகள் நம்மைத்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். மன்றத்தில் இல்லாவிட்டாலும், மக்கள் முன்பு உள்ள பலமான எதிர்க்கட்சி என்று பேசுகிறார்கள்.

இது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் ஒரு அபேட்சகரைப் பற்றி, அவர் எப்படிப்பட்டவர்? எவ்வளவு தகுதியுடையவர்? என்பதை அந்தக் கட்சியானது மக்கள் முன்னால் கூறும்போது, எதிர்க் கட்சியென்பதினுடைய வேலை என்ன? இதை அறியக் கூடிய திறமைகூட நம் காமராஜருக்கு இல்லை என்றால் அது யாருடைய தவறு?

காங்கிரஸ் வளர்ச்சி – பார்ப்பனீய வளப்பம், காங்கிரஸ் ஆட்சி – பார்ப்பனீய ஆதிக்கம் என்று எடுத்துக்காட்டிவரும் நாம் – அதற்கு எடுத்துக் காட்டாக நடந்து வருகிற பல செயல்களையும் மக்கள் முன்பு விளக்கிவரும் நாம், முதலியாரின் இடத்துக்கும் முகத்தில் பிறந்தவர்தானா? என்று எப்படிக் கேட்காமல் இருக்க முடியும்? இதைக் கேட்பதுதானே – இந்த அக்கிரமத்தை  மக்களுக்கு எடுத்துக் காட்டுவதுதானே – காங்கிரஸ் என்பது பார்ப்பனீயத்தின் கண்ணியம் என்பதை, மக்கள் உணரச் செய்ய வேண்டுமென்பதுதானே, கழகத்தின் இப்போதைய வேலைத் திட்டங்களுள் ஒன்று, இதையுணரக் கூடிய உணர்வு கூட நம் காமராஜருக்கில்லை யென்றால் கழகத்தைப் பற்றிப் பேசவோ, கழகத் தலைவரைப் பற்றிப் பேசவோ இவருக்கென்ன யோக்கியதை? நாம் கேட்கவில்லை, அவரே எண்ணிப் பார்க்கட்டும்!

காங்கிரஸ் கமிட்டித் தலைவர் என்கிற பட்டுக் குஞ்சம் அவிழ்ந்து விடுமேயானால், தோழர் காமராஜரின் யோக்கியதை என்ன? என்பதை நாம் கேட்கவில்லை. அவர் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.  சிந்தனைக்குப் பிறகு கூறட்டும்; கழகத்தைத் தவிர வேறுயாருக்கு யோக்கியதை யுண்டென்று. தேர்தல் பிரச்சாரத்திலிறங்கித் திராவிடக்கழகத்தைத் திட்டிவரும் தோழர் காமராஜர், காங்கிரஸ் செய்து வரும் சேவைகளை ஞாபக மூட்டவே நான் இந்த சுற்றுப்பிரயாணத்தை மேற்கொண்டேன் என்று திருவள்ளூரில் கூறுகிறார்.

காங்கிரஸ் செய்திருக்கும் சேவையை ? ஏழை மக்களை உறிஞ்சியிருக்கும் உறிஞ்சலை, காமராஜர் ஞாபகமூட்டித்தானா மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்? எந்தெந்த வகையில் நாம் எதை எதை இழந்தோம் என்கிற அறிவு ? மஞ்சள் பெட்டியை நிரப்பியதால் வாழ்வுக்கே உலை வைத்துக்கொண்டோமே என்கிற சிந்தனை ? மக்களிடம் கிளர்ந்தெழுந்திருக்கும் இந்நேரத்தில்தான், தோழர் கூறுகிறார் காங்கிரசின் சேவையை ஞாபக மூட்டுவதற்காக வென்று. இருக்கட்டும்; காங்கிரசின் சேவை என்று காமராஜர் கூறுவது, எந்தக்காலத்து, எந்தக் காங்கரசின், எந்தச் சேவையை?

தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்களான மும்மணிகள் காலத்துக் காங்கரசின் சேவை யையா? விபீஷணக் கும்பல்கள் ஆழ்வார்களாக்கப்பட்டு, வேதியர்களின் ஆட்சிக்கு வித்தூன்றப்பட்ட காலத்துக் காங்கிரசின் சேவையையா? பனியாப் பார்ப்பனக் கூட்டு ஒப்பந்தத்தின் மீது ஏகாதிபத்தியம் கட்டப்பட்டுவரும் இந்தக்காலத்துக் காங்கரசின் சேவையையா?

முந்தியதைச் சொல்வதென்றால் ? மும்மணிகள் காலத்தை ஞாபகப்படுத்துவதென்றால், அது காமராஜருக்கு முடியாத வேலை மட்டுமல்ல; புரியாத வேலையுமாகும். எவ்வளவு கரடுமுரடான நிலத்திலே, ஆடாமல் அசையாமல் செல்ல, தார் ரஸ்தாபோடப் பட்டிருக்கிறது. என்பதை காரில் செல்லும் மைனர் எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? மைனர் நிலையிலுள்ள காமராஜர், மும்மணிகள் காலத்தை ஞாபகப்படுத்துவதென்றால் அது அவரால் முடியக்கூடிய வேலையா? ஆகவே அதை அவர் ஞாபகப் படுத்தமுடியாது என்பதால் விட்டு விடுவோம்.

விபீஷணக் கும்பல்கள் ஆழ்வார் களாக்கப்பட்ட காலத்தில், வேதியர்களின் ஏவலால் இந்நாட்டு வீரமறவர்கள் பலியாக்கப்பட்ட படலத்தில், சேவை செய்ய முடியாவிட்டாலும், இதைஇதை சாதிப்போம் என்று வர்ணித்ததை ? மக்கள் முன்னால் கூறிய வாக்குறுதிகளைத் தான் இவர் ஞாபகப்படுத்த முடியுமா? ஏழை மக்களுக்குத்தான் உறுதி கூறி வந்திருக்கிறோம். ஆனால் 19 ஆண்டுகளாகக் கூறிவருகிறோம்.

ஆகவே அதுதான் காலாவதியாகிவிட்டதே என்று கிருபளானி மத்திய சட்டசபையில் இந்த மாதம் 6ம் தேதி கூறியிருக்கிற ? காலாவதியான வாக்குறுதிகளைப் பற்றித்தான் இவர் எப்படி ஞாபகப்படுத்திவிட முடியும்?

வேதனைதரும் நினைவை ? ஏமாற்றப்பட்ட எத்து வேலையை, காமராஜர் விளக்குவார் என்றுதான் எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆகவே அதையும் விட்டு விடுவோம்!

பனியாப் பார்ப்பனக் கூட்டு ஒப்பந்தத்தின் மீது, ஏகாதிபத்தியம் எழுப்பி வரும் இக்காலத்தில்தான், காங்கிரசினால் உண்டான சேவை என்பதாகக் காமராஜர் எதைக்கூற முடியும்? இரவில் நிர்மாணமான ஏகாதி பத்தியத்திற்கு முதல் பலியாக, காந்தியார் படுகொலை செய்யப்பட்ட பாதகத்தை – நிர்வாகத்தினரின் ஏமாளித்தனத்தை ? பார்ப்பனீயத்தின் வெற்றி விழாவை, இவர் காங்கிரசின் சேவை என்பதாகக் கூறமுடியுமா?

ஏழை இந்தியாவின் பேரால், எத்தனையே கோடிக் கணக்கான பொருள்களை வாரி யிறைத்து, இந்தியாவைத் தவிர்த்த வெளி நாடுகளில் எல்லாம் இந்தியாவின் சுதந்தர மணத்தை வீசச் செய்திருப்பதை, இவர் காங்கரசின் சேவை என்று கூற முடியுமா? சியாங்கே – ஷேக்கையும் தோற்கடிக்கும் முறையில், சுற்றத்தினரையும், தன்னினத்தாரையுமே படாடோபமான பதவிகளுக் கெல்லாம் அமர்த்தி வரும், நேரு பார்ப்பனரின் நேர்மையற்ற நடத்தையைக் காங்கிரசின் சேவை என்று, இவர், கூற முடியுமா?

கடைத் தெருக்களிலும், மார்க்கட்டுகளிலும், மூலை முடுக்குகளிலும் எங்கு பார்த்தாலும், ஆட்சி நிர்வாகத்தின் லஞ்ச ஊழலைப்பற்றியே அனைவரும் பேசுகிற பேச்சை, இவர், காங்கிரசின் சேவை என்று கூற முடியுமா?

இப்படியாக நாம் கேட்கவில்லை; காங்கிரசின் தலைவராயிருந்த தோழர் கிருபளானி கேட்கிறார். இதற்கு நம் காமராஜர் என்ன பதில் கூறுவாரோ?

உண்மையிலேயே இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், எங்கேயாவது காமராஜர் காங்கிரஸ் சேவையைக் குறித்துப் பேசியிருக்கிறாரா? என்று பார்த்தால் ஒரு இடத்திலாவது அவர் அதைப் பற்றி பேசவில்லை. அது மட்டுமல்ல, இப்போது காங்கிரஸ் மந்திரிகளால் கொண்டு வரப்பட்டிருக்கும் மடநிர்வாக மசோதாவைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை, அப்படியிருந்தும், அவர் ஆரம்பிக்கிறார் நான் கரங்கிரசின் சேவையை ஞாபகப் படுத்துகிறேன் என்று ஒருவேலை திராவிடக்கழகத்தைத் திட்டுவதுதான் காங்கிரசின் சேவை என்று கருதிக் கொண்டிருக்கிறாரோ என்னமோ! அப்படிக் கருதுவாரானால் அவருக்காக நாம் இரங்குவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

நாயக்கரின் பார்ப்பனரல்லாதார் கூச்சல் எனக்குப் புரியவில்லை. அவருடைய கொள்கையே எனக்குப் பிடிபடவில்லை. இப்படிக் கூறுகிற காமராஜர், கழகத்தைக் குறை கூற மட்டும் எப்படி முடிகிறது? பார்ப்பனரல்லாதர் கூச்சலே (ஆமாம்! கூச்சல்) புரியாதவர், நாயக்கருடைய, கொள்கையே பிடிபடாதவர், நாயக்கருடைய கொள்கையைக் கண்டிக்கிறார்! ஆச்சரியம்! மனதுக்குப் பிடிபடாமல் அறிவுக்குப் புரியாமல் இருக்கிறது என்று அவரே கூறுகிறார். அப்படிப் பிடிபடாத ஒன்றை, புரியாத ஒன்றை, அவரே கண்டிக்கிறார். இதற்குப் பெயரென்ன? புரியாததை, புரியவில்லை என்று கூறுவதைக் கேட்டு வரவேற்கிறோம்; புரிய வைக்கவும் முயற்சிக்கிறோம். ஆனால் புரியாத ஒன்றைக் கண்டிக்க முன்வருகிற, புத்தித் திறமைக்கு என்ன செய்வது?

  1. சீனுவாசய்யருக்கெதிராக மேயர் ராமசாமி நாயுடுவைப்போட வேண்டுமென்கிறார் பெரியார். ஆனால் அன்று கார்ப்பரேஷன் தேர்தலில், அந்த ராமசாமி நாயுடுக் கெதிராக அவருடைய கட்சியினர் போட்டியிட்டதை அவர் தடுக்கவில்லை.
  2. ராஜாஜி காங்கிரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தபோது அவரைக் கண்டிப்பதில் என்னுடன் ஒத்துழைத்தார் இந்தச் சீனுவாசய்யர்! ஆனால் ஜப்பான்காரனைக் காரணமாகக் காட்டி, யுத்தத்துக்கு ஆதரவு தரவேண்டுமென்று, ராஜாஜியுடன் சேர்ந்து கொண்டு காங்கிரசுக்கு விரோதமாகப் பிரச்சாரம் செய்தார் இந்தப் பெரியார்
  3. ஒரு தடவை ஒமாந்தூராருக்கு எதிராக ஒரு பார்ப்பனர் போட்டியிட்டார். அப்பொழுது அந்தப் பார்ப்பனனை ஆதரித்தார் இந்தப் பெரியார்.

பெரியாரின் கொள்கை ? பார்ப்பனரல்லாதார் கூச்சல், புரியவில்லை என்று கூறும் காமராஜர், அதற்கு எடுத்துக் காட்டாக இந்த மூன்றையும்தான் கூறுகிறார். ஆனால் முடிவில், பெரியாருடைய வேலையே காங்கிரசின் செல்வாக்கைக் குலைப்பதுதான் என்று முடிக்கிறார்.

புரியவில்லை என்று கூறியது உண்மையா? காமராஜர் கட்டியிருக்கும் முடிவு உண்மையா? முன்னது உண்மையென்றால் பின்னது பொய்! பின்னது உண்மை என்றால் முன்னது பொய்! இப்படி முன்னுக்குப் பின் முரணாக ஏன் பேசவேண்டும்? அதுவும் ஒரே இடத்தில்? மக்கள் இதைக்கேட்க மாட்டார்கள் என்கிற அந்த மூட நம்பிக்கையே தவிர வேறு இதற்கு என்ன காரணம் கூறமுடியும்?

வடநாட்டு ஆதிக்கத்தையுடைய காங்கிரஸ் ஸ்தாபனம், தென்னாட்டில் வளரும் வரையிலும் ? அதன் ஆதிக்கம் நிலைத்திருக்கும் மட்டும், தென்னாட்டு மக்களுக்கு உய்வில்லை! வாழ்வில்லை! பார்ப்பனீயத்தின் பாதுகாப்புக்குரிய ஒரே ஒரு பெரிய ஸ்தாபனம் காங்கிரஸ் ஒன்றுதான். அது என்றைக்கு ஒழிகிறதோ ? அல்லது அந்தப் பார்ப்பனீயம் என்றைக்கு அதைவிட்டு ஒழிக்கப்படுகிறதோ, அது வரை திராவிடர்களுக்குச் சுதந்தரமில்லை, சுயேச்சையில்லைஅதுமட்டுமல்ல மனிதர்களாகக்கூட மதிக்கப்படமாட்டார்கள். ஆகவே பார்ப்பனீய அடிமையான காங்கிரஸ் பட்டொழியவேண்டும் என்பதுதான் காஞ்சிபுரத்தில் அன்று பெரியார் முழக்கிய முழக்கம்! அந்த முழக்கத்தின் எதிரொலிதான் சுயமரியாதை இயக்கம்! அந்த இயக்கத்தின் இன்றைய வளர்ச்சிதான் திராவிடக்கழகம்!

இந்தவுண்மையை அன்று ஒப்புக்கொள்ளாத தமிழ்ப் பெரியார் திரு.வி.க.அவர்கள், இன்றுவற்புறுத்திக் கூறுகிறார். நான் வளர்த்த காங்கிரஸ் என் காலத்திலேயே இறந்தொழிய வேண்டுமென்று. இவற்றை எண்ணிப் பார்க்கும் திறமை நம் காமராஜருக்கு இருக்குமானால், இந்த மூன்று நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டிருக்கவே மாட்டார். இது நிச்சயம்! ஏன் அவருடைய விவாதத்திற்கே அவை பல வீனத்தையுண்டாக்கும். அவர் கூறுவதைப் போல, அதாவது அவர் முடிவு கட்டுவதைப்போல, மேலாகப் பார்த்தால் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிற இந்த நிகழ்ச்சிகள் மூன்றும், காங்கிரஸ் இந்த நாட்டில் ? தென்னாட்டில் செல்வாக்குப் பெறக்கூடாது என்ற நோக்கத்தோடு செய்யப்பட்டதுதான் என்பதை அவரே ஒப்புக் கொள்ளும் போது ? புரிந்து கொண்டிருக்கும் போது, எனக்குப் புரியவில்லை ? பிடிபடவில்லை என்கிறார் என்றால் அவரைப் போன்ற ஒரு தோலிருக்கச் சுளை விழுங்கி வேறு யார் என்றுதானே கேட்கத் தோன்றும்.

ஆகவே, அவருக்குப் புரியும்படியாக – தெளிவாகும்படியாகச் சொல்லுகிறோம். இந்த நாட்டில் என்றைக்குப் பார்ப்பனீய அடிமையான காங்கிரஸ் ஒழிகிறதோ, அன்று தான் இந்தத் தென்னாட்டு மக்களுக்கு வாழ்வு என்று. மேலும் சொல்லுகிறோம்; இவ்வுண்மையை இன்று மட்டுமல்ல, அன்று காஞ்சியிலிருந்தே ஆரம்பித்து வெளிப் படையாகக் கூறி வந்திருக்கிறோம் என்று. இன்னும் சொல்லுகிறோம்; எங்களின் முயற்சி தகர்க்கப்பட்டு, நாங்கள் ஒடுக்கி ஒழிக்கப் பட்டாலும்கூட, வடநாட்டு ஆதிக்கக் காங்கிரசின் வாழ்வு ? தென்னாட்டு மக்களின் தாழ்வு என்று.

நிற்க, தோழர் காமராஜர் அவர்கள் இந்தச் சுற்றுப் பிரயாணத்தில், ஒன்றுக் கொன்று முரணாகப் பலவற்றை உளறிக் கொட்டியிருக்கிறார். அன்னிய ஆட்சியை ஆதரித்தவர்கள், புதுபணக்காரர்கள், பெரிய மிராசுதாரர்கள், மில் முதலாளிகள், கருப்புச்சட்டைக் காரர்கள், செஞ்சட்டைக்காரர்கள், லைசென்ஸ் பெறாத காங்கிரஸ்காரர்கள் ஆகிய இத்தனை பேரும் சேர்ந்த ? பிற்போக்காளிகளின் அய்க்கிய முன்னணிதான் ? இன்றையக் காங்கிரஸ் எதிர்ப்பு என்று திருவள்ளூரில் கூறும் இவர், மதுராந்தத்தில் அலறுகிறார் பெரியார் எதைத்தான், யாரைத்தான் கண்டிக்கவில்லை என்று!

தன்னைத் தவிர உலகத்தில் உள்ள எல்லோரையுமே கண்டித்து வெறுத்தொதுக்கும் பெரியார் என்று மதுராந்தகத்தில் முடிவு கட்டுகிறார் காமராஜர். காங்கரசைத் தவிர்த்து, மற்ற எல்லோரோடும் சேர்ந்து கொண்டு பிற்போக்காளிகளின் அய்க்கிய முன்னணியை அமைக்கிறார் பெரியார் என்று திருவள்ளூரில் முடிவுகட்டுகிறார் அவர்.

பணக்காரர்கள் எல்லாம் காங்கிரசில் புகுந்து கொண்டு விட்டார்கள் என்று பதைபதைக்கிறார் மதுராந்தகத்தில். பணக்காரர்கள் எல்லாம் பெரியாரோடு சேர்ந்து கொண்டு அய்க்கிய முன்னணி அமைக்கிறார்கள் என்கிறார் திருவள்ளூரில். பர்மாவின் கரீன்காரர்களைப் போலக் குழப்பம் செய்து, தனிராஜ்யத்தை ஸ்தாபிக்கப் பெரியார் முயலுகிறார் என்கிறார் திருவள்ளூரில்.

சில்லரைக் குழப்பங்களைச் செய்து கொண்டிருக்கிறார் நாயக்கர். பெரிய குழப்பங்கள் அவருக்குச் செய்யத்தெரியாது, தைரியமுமில்லை (அட! சூரப்புலியே) என்கிறார், பின்னால், அதே திருவள்ளூரில். இந்த உளறல்களைக் கேட்டு (அவரின் கெஜட்டாக இருக்கும் தினசரியில் பார்த்து,) அந்தோ! ஒரு திராவிடரின் மூளை ஒரு நாகராஜரின் கூட்டுறவால் இப்படியா சிதறடிக்கப்படவேண்டும்? என்று நம்மால் வருந்தாமல் இருக்கமுடியவில்லை. இந்த நேரத்தில் இதிகாச புராணங்களில் காணப்படும் வீர வம்சங்கள் எல்லாம், எப்படி வெந்தொழிந்து சாம்பலாகி, இழிவை நிலைநிறுத்திப் போய்விட்டன என்பதும் நம் நினைவுக்கு வராமல் இல்லை.

இன்னும் காமராஜரின் சரித்திரஞானம், அரசியல் திறமை ஆகியவற்றின் பல அசட்டுத் தனங்களை இங்கு நாம் எடுத்துக் காட்டாமல் நிறுத்திவைத்திருக்கிறோம். தேவைப்படுமானால் பிறகு பார்க்கலாம். ஆனால் முடிவாகக் காமராஜருக்கு வற்புறுத்திக் கூறுவது இதுதான்.

திராவிடக் கழகத்தின் உழைப்பு, பெரியாரின் தொண்டு, இல்லாவிட்டால், இவரைப் போன்ற அய்ந்தாம்தர, ஆறாந்தர ஆசாமிகள் எல்லாம்; எப்படிப் பெரிய அரசியல் மேதையாக ? நாட்டின் ராஷ்டிரபதியாக விளங்க முடியும்? இன்று சில பார்ப்பனர்களால் தூக்கிவைக்கப்படுகிறார் என்றால் அதற்கு உண்மையான காரணமென்ன? இதை எண்ணக்கூடிய புத்தியை எங்கேயோ வைத்துவிட்டு, சும்மா இருக்கிறீர்களா சுய ரூபத்தைக் காட்டட்டுமா என்பதுபோல வீண் மிரட்டல் மிரட்டுவதால் என்ன லாபம்? வேண்டுமானால் வேலையில் இறங்கட்டும்! விளைவை அநுபவிக்கட்டும்! ஆனால் ஆழந்தெரியாமல் காலை விடுகிறார் என்பதுதான் நம் எச்சரிக்கை!

குடி அரசு 12.03.1949

You may also like...