சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.06.2023 செவ்வாய் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

 

கலந்துரையாடல் கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

கொளத்தூர் நகர தலைவர் ராமமூர்த்தி கடவுள் – ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகர , நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் தீண்டாமை நிலவும் பகுதிகளின் பட்டியலை கணக்கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் வரும் 25.06.2023ம் தேதி பட்டியலை மாவட்ட கழகத்திற்கு சமர்பிப் பதாகவும் தெரிவித்தனர்.

 

மேலும் சேலம் மாநகரம் சார்பாக 25 தெருமுனைக் கூட்டங்களும், மேட்டூர் நகர கழகம் 30 தெருமுனைக் கூட்டங்களும், இளம்பிள்ளை -10, நங்கவள்ளி – 10, வனவாசி – 10, சிந்தாமணியூர் – 5, கொளத்தூர் – 10, காவலாண்டியூர் – 10 தெருமுனைக் கூட்டங்களை நடத்துவதாக பொறுப்பாளர்கள் உறுதியளித்தனர்.

 

மேலும் தெருமுனைக் கூட்டங்களை பறை முழக்கம், பாடல்கள், மந்திரமா? தந்திரமா? நிதழ்ச்சிகள் மூலம் நடத்துவதாகவும் கூறினர். மதியம் தோழர்கள் அனைவருக்கும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. மதிய உணவிற்கு பிறகு மீண்டும் கலந்துரையாடல் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

கலந்துரையாடல் கூட்டத்தின் நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் 76வது பிறந்த நாள் தோழர்கள் கொள்கை முழக்கங்களிட தலைவர் அவர்கள் குழந்தைகளுடன் கேக் வெட்டினார். அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களும், தோழர்களும் கழக தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்வில் ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.தென்காசி ஆனைகுளம் செல்வி – மாணிக்க வாசகம் ஆகியோரின் மகள் – வண்ணமதி, ஈரோடு மாவட்டம் அந்தியரைச் சார்ந்த சுலோச்சனா – ராஜீ மகன் சுந்தரராஜ் ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை கழக தலைவர் நடத்தி வைத்தார்.

 

நிகழ்வில் அறிஞர் அண்ணா சுயமரியாதை திருமண மையத்தைச் சார்ந்த வழக்கறிஞர் இரமேசு பெரியார் கலந்து கொண்டு கழக தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமது உரையில் “இந்தியாவில் நடந்த முதல் மனித உரிமைப் போராட்டம் வைக்கம் போராட்டமென்றும், அதற்காக பெரியார் இரண்டு முறை சிறை சென்று கடுங்காவல் தண்டனை பெற்றார் எனவும், ஜாதி அடையாளம் இல்லாத நாம் தீண்டாமை நடைபெறும் இடங்களை கணக்கெடுத்து முழுமையாக அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் தமது உரையில் குறிப்பிட்டார். 2023-ல் நமது இயக்கம் ஜாதி தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டுமென்றும், அதற்காக தோழர்கள் சிறை செல்லவும் தயாராக வேண்டும்” என்று தமது உரையில் குறிப்பிட்டார். மதிய உணவு ஏற்பாடுகளை மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின் செய்திருந்தார். சுதா நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

 

பெரியார் முழக்கம் 29062023 இதழ்

You may also like...