2. நாடெங்கும் அடக்குமுறை எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டம்

சாந்தமும் சமாதானமும் அமைதியும் ஒழுங்குமான முறையில் சுருக்கமான ஊர்வலம் கொண்ட பொதுக் கூட்டத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப் படவேண்டு மென்று திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி, தீர்மானித்திருக்கிறது. அன்று மேற்கண்ட நடவடிக்கைகள் நடத்துவதில் மக்களுக்கும் காங்கிரஸ் காரர்களுக்கும் போலீசு அதிகாரிகளுக்கும் சிறிதுகூட அதிருப்தி ஏற்படாமல் ஒழுங்குக்கும், போலீசு அதிகாரிகளுக்கும் கட்டுப்பட்டு நடந்துகொண்டு கொண்டாட வேண்டும். தமிழ் நாட்டில் கட்டாய இந்தி ஒழிக தமிழ் வாழ்க திராவிடநாடு திராவிடருக்கே அடக்குமுறை ஒழிக! என்பதைத்தவிர வேறு ஒலிகள் கண்டிப்பாக, கண்டிப்பாக வேண்டாம்.

ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

குடி அரசு 01.01.1949

12-நாள் பாடம். கும்பகோணம் உரிமைப் போராட்டம் 19-12-1948ல் தொடங்கி 30-12-1948ம் நாளோடு 12 நாட்கள் நடந்து முடிந்திருக்கின்றது. இப்போராட்டம் பேச்சுரிமையைப் பிடுங்கும் விதத்தில், சர்க்கார் பல ஊர்களிலும் 144 போட்டு, கழகத்தின் அமைதியான போக்கிற்கு, சமாதான முறையில் செய்துவரும் போராட்டத்திற்கு, மறைமுகமாக அழிவையுண்டாக்க முயற்சிக்கிறார்கள் என்று அறிந்ததினாலேயே, அதை நாம் எதிர்க்கிறோம் என்று காட்ட – பிரஜாவுரிமையை நிலை நாட்டத் தொடங்கப்பட்டதாகும். இப்போது கழகத்தின் காரியக்கமிட்டி 28தேதியோடு நிறுத்திக்கொள்வதென முடிவு செய்திருக்கிறது. ஏன்?

இந்த ஏன் என்பது எங்கெங்கிருந்துதான் கிளம்புகிறது என்பதற்கு ஒருவரையறையே சொல்ல முடியாது. சுருக்கமாக இவ்வுரிமைப் போராட்டத் தொடக்கத்தையறிந்த இந்நாட்டினர் எல்லோருமே, அவர்கள் எந்தக் கட்சியினராயிருந்தாலும் ? எக்கட்சியுமில்லாதவர் களாயிருந்தாலும் ஏன் என்று கேட்கின்றனர். அந்த அளவுக்குப் போராட்டத்தைப்பற்றி நாட்டில் அக்கரை கொண்டிருக்கிறார்கள்.

சட்ட மறுப்புச் செய்வதற்கு முன்னாலேயே, சட்டத்தை மீறுவதால்  நமக்கு எப்படி எப்படித் தொந்தரவு உண்டாகும் என்பதை நாம் முன்கூட்டியே அறியாதவர்களல்ல. சிறையை நிரப்பி வைத்துக் கொண்டிருக்கும் சர்க்கார் – சிறைச் சாலையைப் பெருக்குங்கள், பெருக்குங்கள் என்று நாம் அடிக்கடி கூறிவந்ததை யேற்று அதற்குச் செவி சாய்க்காத சர்க்கார், இப்போது நாம் தடையை மீறினால் சிறைக்கனுப்ப முடியாதென்பதையும், நிச்சயமாகக் கால்கையை ஒடித்தோ, உயிரைப் போக்கியோ தான் தண்டனை கொடுக்க முடியும் என்பதையும், நேற்று ஓமந்தூரார் சொல்வதற்கு முன்னாலேயே நாம் ஒவ்வொருவரும் அறிந்தேயிருக்கின்றோம். அறிந்தே காரியத்தில் ஈடுபட்டோம். அப்படியிருக்க 12-நாளில் ஏன் இந்த முடிவு? தொண்டர்கள் சோர்ந்து திகைத்து விட்டார்களா? தலைவர்கள் ஒடி ஒளிந்து கொண்டார்களா? கூலிப்பட்டாளத்திற்கு வாய்க்கரிசி போட முடியவில்லையா?

போலீசாரின் மிருகவெறி எந்த அளவுக்கு உயர்ந்ததோ, இனி எந்த அளவுக்கு உயருமென்று கற்பனை செய்ய முடியுமோ அந்த அளவிலும் கூட தொண்டர்கள் தம் மனவுறுதி குலையார் என்பதையும், மனமகிழ்ச்சியோடு முகமலர்ச்சியுடனே எந்தக்கொடுமையையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்பதையும் அதிகாரிகளின் ரிப்போர்ட் அறிவிக்கும். ஒடி ஒளியும் தலைவர்கள் கழகத்தில் ஒருவருமே இல்லை என்பதை நாடு அறியும். கூலிக்குப்படை திரட்டவேண்டிய நிலையில், ஆசை வார்த்தை காட்டி போட்டுவரக் கழகத்திற்கு வளமும் இல்லை; நமக்கு அந்த அடிபடும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று எரிச்சல் கொள்ளும் போர் மறவர்களே கழகத்தில் நிரம்பியிருக்கின்றனர், கழகச் செயலுக்கு நம்முடைய பொருட் காணிக்கை எவ்வளவு என்று கேட்கும் தொண்டர்கள் தான் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள். இதை அரசாங்கம் மட்டுமல்ல, நம்மை எந்த விதத்தில் குறைசொல்லலாம் எனக் காத்துக்கொண்டு, நம்மை எதிரியாகக் கருதியிருக்கும் ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் அறிவார்கள். அதனால்தான் இந்த ஏன் என்கிற கேள்வி இவ்வளவு மும்முரமாக உயிர்ப்போடு, பெருமூச்சோடு, சந்தேகத்தோடு கேட்கப்படுகிறது.

பெரியாரவர்களின் கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அதாவது இந்த நாட்டில் எந்த விதமான கலவரமோ, கேடோ உண்டாகுமானால், அவற்றால் திராவிட சமுதாயந்தான் நஷ்டமடைய முடியுமேதவிர, திராவிட சமுதாயத்தின் எதிரிகளுக்கு ஒருசிறு துரும்பளவுகூட நஷ்டமில்லை என்பதோடு.

திராவிடனுடைய ஒவ்வொரு சிறுநஷ்டமும் திராவிட எதிரிகளுக்கு ஒன்றுக்குப் பத்தாக லாபமாகத்தான் ஆகிவந்திருக்கின்றது என்பதையுணர்ந்தவர்களும், சட்ட மறுப்புப் போரில் சர்க்கார் கையாண்டு வந்த முறைகள் நாளுக்கு நாள் மாறி வந்திருப்பதைச் சேர்த்தெண்ணுபவர்களும் நிச்சயமாக ஏன் என்று கேட்கமாட்டார்கள்.

அதிகார வர்க்கத்தின் சார்பாய்மிருகவெறிவளர்ந் தோங்குமானால் நாளுக்கு நாள் எல்லை காட்டமுடியாத அளவுக்கு விரிந்துகொண்டே போகுமானால், அதனுடைய முடிவு அதாவது அதனுடைய அழிவு எப்படி  நிறைவேறும் என்பதைச் சரித்திரம் சொல்லுகிறது. பல நாடுகளில் இன்றும் பார்த்து வருகிறோம். அந்தமாதிரி பொதுமக்களையும், மிருகவுணர்ச்சிக்கு எதிராக மிருகவுணர்ச்சி கொள்ளத் தூண்ட வேண்டுமென்பது, அவ்வுணர்ச்சியை நாட்டில் வளர்த்து வரவேண்டுமென்பது கழகத்தின் திட்டமல்ல என்பதையும், ஆரம்பத்தில் மந்திரியின் உத்திரவைப் பெற்று மனஞ்சலிக்கும் வரை அடித்து வந்த அதிகாரிகள், பிறகு அப்போக்கை அறவே கைவிட்டு விட்டார்கள் என்றால் அதில் மந்திரிகளுடைய தலையீடு எவ்வளவு? மந்திரிகளுக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும் சேர்த்து எண்ணுபவர்களுக்கு உண்மையிலேயே ஏன் என்கிற எண்ணம் உண்டாக முடியுமா? என்பது சந்தேகமே.

மந்திரிகளின் மனமாற்றத்தை எடுத்துக்காட்டி, நம்முடைய லட்சியம் நாட்டில் சட்டமறுப் புணர்ச்சியைப் பெருக்குவதல்லவே, ஏன் இதை இந்த அளவில் நிறுத்தி, மந்திரிகளுக்கு மேலும் நல்ல நாகரீகமான போக்கு வளரும்படியாய் நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று பெரியாரவர்கள் வற்புறுத்திக் கூறியதின்மீதே காரியக்கமிட்டி, ஏதும் பதில் கூற வகையற்று இந்த முடிவைச் செய்திருக்கிறது. இந்த முடிவு பெரியாரவர்களுடைய பெருந்தன்மைக்கு ? அறப்போரில் அவர்களுக்குள்ள ஈடுபாட்டுக்கு – நாட்டு மக்களின் நலத்தில் கொண்டிருக்கும் அக்கரைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பெரியாரவர்களுடைய இப்பெருங்குணத்தை உட்கொள்ள முடியாத நம் இளைஞர்கள், இம்முடிவைக் கேட்டுப் பெரும் கலக்கமடைவார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் அறப்போரின் இறுதி முடிவும் அதன் நடப்பும் அமைதியான முறையிலேயே இருக்கவேண்டும் என்பதிலே கருத்தைச் செலுத்தவார்களானால், இச்சந்தர்ப்பம் மந்திரிகளின் மனமாற்றத்தின் வளர்ச்சிக்காகமட்டுமல்ல.

நம்முடைய உள்ளத்தையும் எஃகு ஆக்கிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் என்றே கருதவேண்டிய வர்களாவார்கள் என்பதை வற்புறுத்திக் கூறுகிறோம்.

குடந்தைப் போராட்டம் தொடங்கிய பிறகுதான் வேலூரில் 144! விழுப்புரத்தில் 144! கல்லக்குறிச்சியில் 144! …….. என்று மற்றொருபுறம் செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. இவைகளை எண்ணும் போது மந்திரிகள் மனமாற்றம் நிலையானதுதானா? 12 நாள் பாடமும் அதன்பின், போரை நிறுத்தியிருக்கும் போக்கும் பயனைத்தரவில்லையா?

இதை எண்ணவேண்டியவர்கள் இன்றைய ஆளவந்தார்கள். ஆனால் நம்மைப் பொறுத்த வரையிலும் இந்த 12 நாள் பாடமும் பெரும் பயனைத் தந்திருக்கிறது. இந்தச் சட்டமறுப்புப் போராட்டம் எங்களுக்கு ஒரு பாலபாடமே என்றாலும் இதில் நூற்றுக்கு நூறு வெற்றியில்லையா என்கிறார்கள் நம் போர் மறவர்கள். இந்த வெற்றி நம் கருத்துப்படி ஒரு அச்சாரமே. பாக்கிவிலையை இன்றோ நாளையோ நாம் கொடுத்தேயாக வேண்டியவர்கள் இன்று நம் மந்திரிகள். ஆதலால் இந்த 12-நாள் பாடத்தையும்யார்தான் மறந்துவிட முடியும்?

குடி அரசு 01.01.1949

You may also like...