Category: குடி அரசு 1932

வைதீகர்களின் முட்டுக்கட்டை 0

வைதீகர்களின் முட்டுக்கட்டை

உலகமெங்கும், ‘சுதந்திரம்’ ‘சமத்துவம்’, ‘சகோதரத்துவம்’, ‘விடுதலை’ என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சி யினால், மதக் கோட்டைகளும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணாசிரம தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவுக் குண்டு களால் அடியோடு பெயர்த் தெறியப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதீகப்  பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளையும், பழய பஞ்சாங்கக் கட்டுகளையும், சாத்திரக் குப்பைகளையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக்கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதீகப்பிடுங்கல்களின் போக்கையும், மனப் பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20-6-32 ல் தஞ்சை ஜில்லா திருவிடமருதூரில் கூடிய...

மன்னார்குடி மகாநாடு 0

மன்னார்குடி மகாநாடு

  தஞ்சை ஜில்லாவின் இரண்டாவது சுயமரியாதை மகாநாடு, சென்ற 18, 19-6-32 சனி, ஞாயிறுகளில் மன்னார்குடியில் நடைபெற்றது. அம்மகா நாட்டு டன் தொண்டர் மகாநாடும் நடைபெற்றது. தஞ்சை ஜில்லாவின் முதலாவது மகாநாடு சென்ற ஆண்டில் தரங்கம்பாடியில் நடைபெற்றபின் சென்ற ஆண்டி லேயே நன்னிலம் தாலூக்கா மகாநாடு நன்னிலத்திலும் நாகப்பட்டிணம் தாலூக்கா மகாநாடு நாகப்பட்டிணத்திலும், சென்னை மாகாணச் சுய மரியாதைத் தொண்டர் மகாநாடு திருவாரூரிலும் நடை பெற்றன. இன்னும் பல பொதுக்கூட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு தஞ்சை ஜில்லா வில் பல சுயமரியாதை மகாநாடுகளும், அடிக்கடி பல ஊர்களில் பல பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டிருக்கும் நமது வைதீக எதிரிகளில் பலர் தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கம் ஆதரவற்று மாண்டு போய் விட்டதென்று கனவு கண்டு கொண்டும், அக்கனவை உண்மையென்று அறியாமையால் நம்பிப் புரளி பண்ணிக் கொண்டும் இருந்தனர். இத்தகைய அறிவற்றோர்க்கு மன்னார்குடி மகாநாடு நல்ல புத்தி கற்பித்திருக்கும்...

பாராட்டுகின்றோம் 0

பாராட்டுகின்றோம்

  எவ்வளவுதான் பழமை விரும்பிகளும், வைதீகர்களும், வர்ணாசிரமி களும் தங்கள் சுயநலத்தையும், கொள்கைகளையும், பிடிவாதத்தையும் நிலைநாட்ட பகீரதப் பிரயத்தனப் பட்டபோதிலும், எவ்வகை சூட்சிகள் செய்ய முற்பட்டபோதிலும், எவ்வகை மறைமுகமான எதிர்ப்புகள் உண்டாக்கி வைத்த போதிலும் நடைபெறுகின்ற சம்பவங்கள் அவர்களது மனமுவந்த எண்ணங்களையும் ஆகாயக் கோட்டைகளையும் தவிடு பொடியாக்குவதன்றி நேர்விரோதமாகவுமிருக்கின்றன. இது காலச் சக்கரத்தின் வேகமேயன்றி பிறிதொன்றில்லை. உலகம் தினம் தினம் நிமிஷத்திற்கு நிமிஷம் முற்போக் கடைந்து கொண்டு நவீன மயமாகிக் கொண்டு வருவதுடன் ஒவ்வொரு நாளும்  நடைபெறும் அதியற்புத செயல்களினின்று பழமையை மறந்து விடுங்கள்! பழமையை மறந்து விடுங்கள்! என்று அறை கூவியழைப்பதை போன்றிருக்கிறது. இதற்கு உதாரணம் வேண்டுமாயின் இவ்வாரம் நமதியக்கத் தோழர் விருதுநகர் திரு வி. வி. ராமசாமி அவர்கள் ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தான கமிட்டி ஆலோசனை போர்டின் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தியே போதுமானதாகும். அன்பர் திரு. ராமசாமி அவர்கள் நாடார் என்று வழங்கப்படும் குலத்தவராவர். நாடார் குலத்தவர்கள்...

அரசாங்கமும், சமூக சீர்திருத்தமும் 0

அரசாங்கமும், சமூக சீர்திருத்தமும்

  மைசூர் சமஸ்தான சட்டசபைத் கூட்டத்தின் முடிவில், திவான் சர். மிர்ஸா இஸ்மாயில் அவர்கள் செய்த பிரசங்கத்தில், “இந்தியாவில் சமுதாய சீர்திருத்தங்கள் சம்பந்தமான சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். முதலில் பொது ஜனங்களிடம் சீர்திருத்தம் உண்டாக வேண்டும்.  இதனால் தான் எளிதில் சமுதாயச் சீர்திருத்தம் உண்டாகும். இவ்வாறு பொது ஜனங்களிடம் சீர்திருத்த உணர்ச்சி உண்டாகாத காரணத்தால்தான், அதிகமான பொது ஜன ஆதரவு ஏற்படும் வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்களை ஆதரிக்க அரசாங்கத்தார் பின் வாங்குகின்றனர்” என்று பேசியிருக்கிறார். இப்பேச்சிலிருந்து பொதுஜன ஆதரவு இருந்தால் தான் அரசாங்கத்தார், சமூகச் சீர்திருத்த மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க முடியும். இன்றேல் அளிக்க முடியாதென்று அர்த்தம் உண்டாகவும் இட மிருக்கின்றது. உண்மையில் இந்த அர்த்தத்தில் திவான் அவர்கள் பேசி யிருப்பாரானால், இது “அலை ஒய்ந்த பின் கடலில் ஸ்நானம் செய்யலாம்” என்னும் முடிவைப் போன்றது என்று தான் நாம் கருதுகின்றோம். பொது...

சிறுபான்மையோர் ஒப்பந்தம் 0

சிறுபான்மையோர் ஒப்பந்தம்

  வாக்குரிமை சம்பந்தமாக இந்தியாவில் விசாரணை செய்த திரு. லோதியன் கமிட்டியின் அறிக்கையும் வெளியாகி விட்டது. வயது வந்தவர் களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்தால் ஒழிய, தேசத்தில் கஷ்ட நிலை மையை அனுபவத்தில் உணர்ந்திருக்கும் ஏழை மக்கள் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற முடியாதென்றும், ஓட்டுரிமையை நூற்றுக்குப் பத்து வீதமோ, பதினைந்து வீதமோ, இருபது வீதமோ, முப்பது வீதமோ, ஐம்பது வீதமோ அதிகப் படுத்துவதனால் ஏழைகளுக்கு ஒரு வித நன்மையும் ஏற்பட்டு விடாதென்றும், இப்பொழுது இருப்பதுபோல், பணக்காரர்களும், ஜமீன்தார்களும், முதலாளிகளும் தான் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற முடியுமென்றும் முன்பு எழுதியிருந்தோம். வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்கும் விஷயத்தைப் பற்றி. லோதியன் கமிட்டியோடு ஒத்துழைத்த யாரும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை யென்றும் குறிப் பிட்டிருந்தோம். அவ்வாறே இப்பொழுது வெளியா யிருக்கும் லோதியன் கமிட்டி அறிக்கையிலும் ஓட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப் பட்டிருப்பதைத் தவிர வேறு எந்த அபூர்வமான காரியமும் காணப்பட வில்லை. ஆகவே ஏழைமக்கள் நிலை எப்பொழுதும்...

சத்தியாக்கிரகம் வீண் 0

சத்தியாக்கிரகம் வீண்

  “சத்தியாக்கிரகம்” என்பது “சண்டித்தனம்” என்பதும், அதனால் வீண் சிரமமும், நஷ்டமும் ஏற்படும் என்பதும், அது மனிதருடைய வீர உணர்ச் சியைக் குறைத்து அடிமைப்புத்தியை வளர்க்கக்கூடிய தென்பதும் நமது இயக்கத் தோழர்களுக்கெல்லாம் தெரியும். ஆகையால் தான் நாம் சத்தியாக் கிரகத்தைக் கண்டித்து வருகிறோம். அரசியல் துறையில் சத்தியாக்கிரகம் சிறிதும் பயனளிக்காதென்பது வெளிப்படையாகத் தெரிந்த செய்தி. சமூக ஊழல்களைப் போக்கும் வகையில் சத்தியாக்கிரகம் பயன் தரக்கூடும் என்ற ஒரு நம்பிக்கை சிலரிடம் இருந்து வந்தது. அந் நம்பிக்கையும் பயனற்ற தென்பதை விருதுநகர் மகாநாட்டிலும், அதன்பின் பல மகாநாடுகளிலும் நமது பத்திரிகை மூலமாகவும் விளக்கப் பட்டிருக்கிறது. இதை உண்மையென்று நிரூபிக்க, சமீபத்தில், நாசிக்கில், தீண்டாதவர்கள் செய்த சத்தியாக்கிரகம் சம்பந்தமாக அவர்களுக்கும் சனா தன தருமிகளுக்கும் உண்டான சச்சரவை, நாசிக் ஜில்லா மாஜிஸ்திரேட் திரு. எல். என். பிரௌன் அவர்கள் விசாரணை செய்து தீர்ப்பளித்து உத்தர விட்டிருப்பதே போதுமானதாகும். நாசிக்கில், ராமகுண்டம், இலச்சுமணகுண்டம், தனூர்குண்டம், சீதா...

சிறுபிள்ளைத்தனம் 0

சிறுபிள்ளைத்தனம்

  சிறுபிள்ளைகள் விளையாட்டிலேயே கவனமுள்ளவர்கள்; தாம் செய்யும் வேலைக்குப் பிற்காலத்தில் இன்னது பலன் கிடைக்கும் என்பது பற்றிச் சிறிதும் சிந்திக்கமாட்டார்கள். தற்கால சந்தோஷத்திற்காக எந்தக் காரியங்களையும் பொறுப்பின்றித் செய்யத் துணிவார்கள். அவர்களுக்குக் கவலையோ பொறுப்போ ஒரு சிறிதும் தெரியாது. இதனால்தான் ‘சிறுபிள்ளை யிட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்று சொல்லுவது வழக்கம். இத்தகைய விளையாட்டுப் பிள்ளைகளைப் போலத்தான் இப்பொழுது காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் நடந்து வரு கிறார்கள். உண்மையில் கொஞ்சங் கூட பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்கள் யாரும் இப்பொழுது இல்லை. பொறுப்பற்ற முறையில்   காலித்தனமான காரியங்களைச் செய்து வீண் கலகத்தை உண்டு பண்ணும் சில சிறுபிள்ளைத் தனமுடையவர்களே இப்பொழுது ‘காங்கிரஸ்’ என்பதன் பெயரால் ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். தபால் பெட்டிகளுக்குத் தீயிடுவது, தபாலாபிசை மறியல் செய்வது, ரயிலை மறியல் செய்வது காங்கிரஸ் கட்டளைகளுக்கு உட்படாத தனித்த   வியாபாரிகளுக்கு நஷ்டத்தை  விளைவிப்பது,  அவர்கள் கடைகளை ரகசிய முறையில் தீக்கிரையாக்குவது போன்ற...

தற்கொலை தெய்வீகமா? 0

தற்கொலை தெய்வீகமா?

  -தேசியத்துரோகி மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம். இவ்வாறு இறந்ததற்குக் காரணம் அப்பெண், தன்னை “தெய்வத் தன்மை உள்ளவள்” என்றும் தான் “மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்யதை இல்லை” என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்பெண் இறந்ததற்கு ‘தெய்வத்தன்மை’ கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வலமாக தூக்கிச் சென்று அடக்கஞ் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தை புதைத்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம். நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டுவதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் மான முள்ளவர்கள் பலர்...

இளைஞர்களும் சுயமரியாதையும் 0

இளைஞர்களும் சுயமரியாதையும்

  கத்தோலிக்கர்  பயம் இளைஞர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி இப்பொழுது நாம் கூறுவது புதியதன்று. இந்த நாட்டில் மட்டிலும் அல்ல, வேறு எந்த நாட்டிலும் மூடப் பழக்க வழக்கங்களையும் அவற்றிற்குத் தந்தைமார்களாக இருந்து வளர்த்து வரும் புரோகிதர்களின் ஆதிக்கங்களையும், இந்தப் புரோகிதர்களின் வயிற்றுப் பிழைப்பு வஞ்சகச் செயல்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வரும் மதங்களையும் அழித்து தவிடுபொடி செய்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் அந்நாட்டின் வாலிபர் கள் என்பதை உலக ஞானம் உள்ள எவரும் அறிவார்கள். இளைஞர்களால் விரும்பப்படாததும், அவர்களுடைய கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் பெறாததுமான எந்த இயக்கமும் மாண்டு மடிந்து இருந்த இடந்தெரியாமலும், தேச மக்களின் நினைவில்கூட இல்லாமலும் போதல் திண்ணம். ஏனென்றால் முதியோர்களைப் போன்று அழுக்கேறிப் பாசம் பிடித்து, சுரணையற்றுப் போன மூளை இளைஞர்களிடமில்லை. இது நமது முன்னோர் வழக்க மாயிற்றே இதை விட்டு விட்டால், நமக்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ! அண்டை அயலார் நம் மேல் பழி...

சீர்திருத்த அரசியல் சிங்கம் 0

சீர்திருத்த அரசியல் சிங்கம்

  உண்மையான சீர்திருத்தக்காரரும், தேசபக்தருமான திரு. விபினசந்திர பாலர் அவர்கள் காலஞ்சென்ற செய்திகேட்டு வருந்துகின்றோம். நமது நாட்டில் அரசியல்வாதியாகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய தலைவர்கள் சிலரேயாவார்கள், அவர்களில் காலஞ் சென்ற லாலா லஜபதிராய் ஒருவர் என்பது நாடறிந்த செய்தி. அவரைப் போன்றே திரு. விபினசந்திர பாலரும் சமுதாய சீர்திருத்தக் காரராகவும், நிதானமுள்ள அரசியல்வாதியாக வும் விளங்கினார். சென்ற 1925 ல் சென்னையில் நடைபெற்ற ஒரு வாலிபர் மகாநாட்டில் திரு. விபினசந்திர பாலர் அவர்கள் தலைமை வகித்துப் பேசும் போது “நீங்கள் உண்மையில் வீரர்களாகவும், தேசத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புவீர்களானால் 25 வயதிற்குமுன் ஒருக்காலும் மணம் புரிந்து கொள்ளாதீர்கள்! ஒரு சமயம் உங்கள் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மணம் செய்து வைக்கத் துணிவார்களாயின் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுங்கள்” என்று கூறினார். இதைப் போலவே பெண்கள் மணவிஷயத்திலும் பால்ய மணம் கூடாது என்ற அபிப்பிராயமுடையவர். அன்றியும் திரு. பாலர் அவர்கள் தமது முதல்...

விபசாரம் ஒழியுமா? 0

விபசாரம் ஒழியுமா?

‘விபசாரம்’  என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக இப்பொழுது “பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே  தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபசாரம்” என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் ‘விபசாரம்’ என்றே கூறலாம் இத்தகைய ‘விபசார’த்தினால் தேசத்தில் உண்டாகி வரும் தீமைகள் எண்ணற்றவை.   கேட்கச் சகிக்காத கொடும் பிணிகளும், பார்க்கப் பொறுக்காத பெரும்நோய்களும் விபசாரத்தினால் உண்டாகின்றன. விபசாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஆண்களும், பெண்களும் நோய்வாய்பட்டு வருந்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் நோய்க்கு ஆளாகி ஜன சமூகத்தையே பிணியடையச் செய்யும் காளான்களாக இருக்கின்றனர். இன்னும் ‘விபசார’த்தினாலேயே கொலை, களவு முதலிய தீச் செயல் களும் மிகுதிப்படுகின்றன. ஆதலால் இக்கொடிய விபசாரத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது; அறிஞர்கள் எல்லோரும் இக் கொடுமையைப் பற்றி பேசி வருகின்றனர். ஜனசமூகத்தை அரித்துக் கொல்லும்...

எதிரிகளின் விஷமப்பிரசாரம் 0

எதிரிகளின் விஷமப்பிரசாரம்

நமது இயக்கத் தோழர்களான திரு. சௌந்தர பாண்டியன் அவர்களும், திரு. வி. வி. ராமசாமி அவர்களும், திரு. முருகப்பர் அவர்களும், திரு.                      கி. ஆ பெ. விஸ்வநாதன் அவர்களும், திரு. டி. வி சோமசுந்தரம் அவர்களும், “சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை வரையறுத்து ரிஜிஸ்டர் செய்ய  முடியாதிருப்பதனாலும், பலரும் தங்கள் தங்கள் விருப்பப்படி சங்கத்தின் அனுமதியின்றி நடந்து கொள்ளுவதாலும், இயக்க நிர்வாகக் கமிட்டி யினின்றும் நீங்கிக் கொள்ளலாமா” என்று யோசனை செய்ததாகவும், முடிவை நமது மாகாணச் சங்கத் தலைவர் திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் வரும் வரையிலும் ஒத்திவைத்திருப்பதாகவும், அதுவரையிலும் இயக்கத்தின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் விலகியிருப்பதென்று தீர்மானித் திருப்பதாகும் சண்டமாருதம் பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளிவந்தது. அவ்வறிக்கை வெளிவந்த பின் திரு. டி. வி. சோமசுந்தரம் அவர்கள், தான் அவ்வறிக்கையில் சம்பந்தப்படவில்லையென்றும், தனக்கு அவ் வறிக்கையில் கூறியுள்ளவை யாதொன்றும் தெரியாதென்றும், அவ்வறிக்கை யில் கண்ட விஷயங்களை தாம் ஒப்பவில்லை என்றும்,...

இந்து முஸ்லிம் கலகம் 0

இந்து முஸ்லிம் கலகம்

  மொகரம் பண்டிகையை முன்னிட்டு சென்ற 14-5-32  முதல் பம்பாயில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் கடுமையான கலகம் நடைபெற்று வருகின்றது. கல்கத்தாவிலும் இக்கலகம் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. எங்கும் ஒற்றுமை, சகோதரத்துவம், சமரசம், சீர்திருத்தம் என்று பேசப்பட்டு வரும் இக்காலத்தில் கேவலம் மதத்தையும், ஜாதியையும் முன்னிட்டு இவ்வாறு கலகம் விளைவித்துக் கொள்ளுவதாக உலகத்தார் கருதும்படி நடந்து கொள்ளுவதைவிட நமது நாட்டிற்கு மானங்கெட்ட தன்மை வேறு ஒன்றுமே இல்லையென்பதை எந்த இந்தியரும் வெட்கத்தோட ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும். கலகம் உண்டானதற்கு மூலகாரணம் சிறுபிள்ளைகள் ஆரம்பித்த சில காரியங்கள் என்றே பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்படுகின்றது. சில முஸ்லிம் சிறுவர்கள் இந்துக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று யாசகம் கேட்டார் களாம். இந்துக்கள் யாசகம் கொடுக்க மறுத்தார்களாம். இவ்வாறு யாசகம் கொடுக்க மறுத்தவர்களையும் வற்புறுத்திக் கேட்கவே அவர்கள் கோபங் கொண்டு, தமது வேலைக்காரர்களைக் கொண்டு அச்சிறுவர்களைத் துன்புறுத் தினார்களாம். இதைக் கேள்வியுற்ற முஸ்லிம்கள் உடனே கூட்டமாகச் சேர்ந்து வந்து...

திருச்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

திருச்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு

  சென்ற 7, 8-5-32 இல் திருச்சிராப்பள்ளி ஜில்லா பார்ப்பனரல்லாதார் ஆறாவது மகாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம் மகாநாட்டை அங்கு எந்த விஷயத்திற்குக் கூட்டப்பட்டதோ அந்த விஷயத்தைத் தவிர மற்றவை களெல்லாம் வெற்றியோடு நடைபெற்றன என்றுதான் சொல்ல வேண்டும். தற்சமயம், பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி ஆராய்ந்து ஒரு முடிவு செய்யவே இம்மகாநாடு கூட்டப்பட்டதாகும். ஆனால் இவ்விஷயம் விஷயாலோசனைக் கமிட்டியில் விவாதத்திற்கு வந்துங்கூட தலைவர்களின் பிடிவாதத்தினால் நிராகரிக்கப்பட்டதென அறிகிறோம். மற்றபடி அரசியல் சுதந்தரம் சம்பந்த மாகவே பெரும்பாலும் தீர்மானங்கள் நடைபெற்றன. மகாநாட்டின் தலைவர் சர். ஏ. பி. பாத்ரோ அவர்களும், மற்றும் திறப்பாளர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களும், பெரும்பாலும் அரசியல் உரிமை சம்பந்தமாகவே ஊக்கங் காட்டிப் பேசினார்கள். சர். பாத்ரோ, சர், கே. வி. ரெட்டி போன்ற பிரபல தலைவர்கள் அனை வரும் காங்கிரசின் போக்கையும், சட்ட மறுப்பின் தீமையையும்...

சேலம் சுயமரியாதை மகாநாடு 0

சேலம் சுயமரியாதை மகாநாடு

சென்ற 7, 8-5-32 சனி ஞாயிறுகளில் சேலத்தில் நடைபெற்ற முதலாவது சேலம் ஜில்லா சுயமரியாதை மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர்; பெண்கள் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத்தலைவர், திறப்பாளர்; தொண்டர் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர், திறப்பாளர் முதலிய வர்களின் பிரசங்கங்கள் நமது பத்திரிகையில் சென்ற வாரத்திலும், இவ் வாரத்திலும் வெளியாகி யிருக்கின்றன. அந்தப் பிரசங்கங்களை யெல்லாம்  படித்துப் பார்ப்பவர்களுக்கு, நமது இயக்கத்தின் தற்கால வளர்ச்சியைப் பற்றியும், உண்மையான கொள்கைகளை அநுபோகத்தில் கொண்டு வரும் செய்தியைப் பற்றியும் நாம் ஒன்றும் அதிகமாகக் கூறவேண்டியதில்லை என்றே கருதுகின்றோம். முதலாவது இவ்வாண்டில் முதலில் சேலத்தில் நமது மகாநாடு நடை பெற்றதே நமக்கு ஒரு பெரிய வெற்றியாகும். ஏனெனில் சேலம் ஒரு பெரிய தேசீயக் கோட்டை என்றும், தேசீயத்திற்கு எதிர்ப்பான எந்தச் செயல்களையும் சேலத்தில் செய்ய முடியாதென்றும், சிலர் மனதில் ஒரு தப்பான எண்ணம் நிலவியிருந்தது. இவ்வெண்ணம் தவறானதென்பதை உணர்த்துவதற்கும், சுயமரியாதை இயக்கமும், அதன் கொள்கைகளும், எந்தத்...

காலித்தனமா? அஹிம்சையா? 0

காலித்தனமா? அஹிம்சையா?

காங்கிரசின் பெயராலும், திரு. காந்தியின் பெயராலும், அஹிம்சையின் பெயராலும், சத்தியாக்கிரகத்தின் பெயராலும் நமது நாட்டில் இப்பொழுது நிகழ்ந்து வரும் காரியங்களைப் பார்த்தால் நியாய புத்தியுடைய எவரும் அவைகளைக் கண்டிக்காமலிருக்க முடியாது. ‘அஹிம்சையின்’ பெயரால் ஆரம்பித்து நடத்தப்படும் சட்டமறுப்பு இயக்கத்தினால் உண்டாகும் ஹிம்சைகள் எண்ணற்றவை. நாட்டில் வியாபார மந்தமும் பொருளாதார நெருக்கடியும் ஏற்றுமதி இறக்குமதிக் குறைவுகளும் ஏற்பட்டுச் செல்வ நிலை பாழ்பட்டுக் கிடக்கிறது.  ஏழைமக்கள் பட்டினியினாலும் நோயினாலும் கிடந்து மடிகின்றனர். கற்றவர்கள் பலர் வேலையற்ற திண்டாட்டத்தினால் படும் தொல்லைகள் சொல்லித் தொலையாதவை. அரசாங்கமோ இத்துன்பங்களை நிவர்த்தி செய்ய முன் வராம லிருப்பதற்குத் தங்களுக்கு சட்ட மறுப்புக்காரர்கள் கொடுத்து வரும் தொல் லையே காரணம் என்று சொல்லி விடக் கூடிய நிலைமையில் இருக்கின்றனர். ஆகவே பொதுஜனங்களின் கஷ்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு போகின்ற தென்பதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. “அரசாங்கத்திற்கு உண்டாகும் கஷ்டம் ஜனங்களைப் பாதிக்காமல் போகாது” என்ற அரசியல் தத்துவத்தை...

கோயில் நுழைவும் தீண்டாமையும் 0

கோயில் நுழைவும் தீண்டாமையும்

தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமான தென்பதையும், அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும், தீண்டாமை ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலவமுடியு மென்பதையும் இப்பொழுது அனேகமாக எல்லாக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுவிட்டனர். தீண்டாமையை நாட்டை விட்டு அகற்றி, அதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்குச் சமூக சமத்துவமளிப்பதற்காகப் பல கட்சியினரும் பேச்சளவிலும் எழுத்தளவிலுமாவது முயற்சி செய்ய முன் வந்திருக்கின்றனர். தீண்டாமை ஒழிந்துவிட்டால் அதைப் போற்றுகின்ற வேத சாஸ்திரங்க ளுக்கும், வைதீக மதங்களுக்கும், அம்மதங்களைப் பின்பற்றுகின்ற கண்மூடி வைதீகர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆட்டமும் அபாயமும் உண்டாகி விடும் என்பதை அறிந்திருக்கின்ற திரு. எம். கே. ஆச்சாரியார் கூட்டத்தைச் சேர்ந்த முரட்டு வைதீகர்களையும் அவர்களுடைய சூழ்ச்சிகளில் அகப்பட்டு கிடக்கும் பொது ஜனங்களையும் தவிர வேறு யாரும் தீண்டாமைக்கு ஆதரவளிக்கவில்லையென்று துணிந்து கூறலாம். தீண்டாமையை ஒழித்து, அதனால் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை கை தூக்கி விட...

எட்டாவதாண்டு 0

எட்டாவதாண்டு

நமது ‘குடி அரசுக்கு’ ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளிவருகிறது. நமது ‘குடி அரசு’ பிறந்தது முதல் இது வரையிலும் நாட்டில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை எதிரிகளும் வயிற்றெரிச்சலோடு ஒப்புக்கொண்டுதான் தீருவார்கள். நமது ‘குடி அரசு’ மக்களுடைய உயர்வு தாழ்வுக்குக் காரணமான எல்லா மாசுகளையும் போக்கிச் சமத்துவத்தை உண்டாக்கும் கொள்கையுடன் ஏற்பட்டது என்பதை வாசகர்களுக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. முதலில் புரோகிதப் புரட்டில் உள்ள சூழ்ச்சிகளையும் அர்த்தமற்ற செயல்களையும் வெளிப்படுத்திச் சிக்கனத்தையும், மூட நம்பிக்கையைப் போக்கிப் பகுத்தறிவையும் போதித்தது. இரண்டாவது மக்களிடம் ஜாதி பேதத்தையும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளையும் உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கும் வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களின் ஆபாசங்களையும் பொய்யுரைகளையும், அவைகள் பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக உண்டாக் கப்பட்டவை என்பதையும் எடுத்துக்காட்டிற்று. மூன்றாவது மக்கள் ஏமாறுவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் காரணமான அவதாரம், நாயன்மார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், சந்நிதானங்கள், பாதிரிகள், முல்லாக்கள், புரோகிதர்கள், குருக்கள்...

சுயமரியாதையும் காங்கிரசும் 0

சுயமரியாதையும் காங்கிரசும்

  சுயமரியாதை திரு. காந்தியால் 1921ஆம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழை யாமை இயக்கமானது அரசியல் கொடுமைகள் ஒழிப்பதோடு பார்ப்பனக் கொடுமைகளையும் ஒருவாறு ஒழிக்கும்படியான மாதிரியில் சில கொள்கை கள் கொண்டிருந்தாலும் நம் போன்றவர்களின் ஆசைக்கும், அவசரத்திற்கும் தக்கபடி அது காணப்பட்டதை முன்னிட்டும், அவ்வியக்கத்தில் கலந்து மனப்பூர்வமாக நாலைந்து வருஷ காலம் உழைத்ததின் மூலமும் அது சமயம் பார்ப்பனர்களுடைய நெருங்கிய சம்பந்தம் இருக்க நேர்ந்ததன் மூலமும், அதன் பலாபலன்களை நாமும் ஒரு பங்கு அனுபவிக்க நேர்ந்ததின் மூலமும், அவ்வியக்கத்தின் போக்கைப் பார்ப்பனர்கள் எந்த வழியில் திருப்பி அதன் பலனை எப்படி அடைய முயற்சித்தார்கள், முயற்சிக்கின்றார்கள் என்பதை நன்றாய் அறிய நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலிருந்து நமது போக்கையும் ஒரு வகையில் ஒன்றுபடுத்தி ஒரே வழியில் திருப்பி யோசிக்க வேண்டிய அவசிய முண்டாயிற்று. அங்கனம் யோசித்ததின் பலனாக நமக்குக் கிடைத்த பலன் என்னவென்றால் நமது மக்கள் அரசியல் விஷயமாய் கூச்சல் போடுவதும், முயற்சிகள் செய்வதும்...

வக்கீல்களின் ஜாதி ஆணவம் 0

வக்கீல்களின் ஜாதி ஆணவம்

மதுரையில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், கோயமுத்தூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும் சென்னை அரசாங்கத்தின் சட்ட மந்திரி கனம் கிருஷ்ண நாயர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில்லையென்று தங்கள் சங்கத்தில் தீர்மானம் செய்தனர். ஆனால் கோயமுத்தூரிலுள்ள பார்ப்பன ரல்லாத வக்கீல்கள், தங்கள் சங்கத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேறிய தற்குப் பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவமே காரணமென்பதை அறிந்து, பார்ப்பனரல்லாத வக்கீல் சங்கம் ஒன்றை ஸ்தாபனம் பண்ணினார்கள்.   இவ்வாறு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் செய்த காரியத்தை நாம் வரவேற் கின்றோம். நமது மாகாண முழுவதிலும் உள்ள வக்கீல் சங்கங்கள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் மிகுந்து நிற்கின்றது. ஆகையால் மாகாணத் தில் உள்ள எல்லா வக்கீல்களுமே பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென ஒரு தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் நன்மையேயாகும். இனி கனம் கிருஷ்ணன் நாயருக்கு வரவேற்பு அளிப்பது கூடாது என்று தீர்மானித்த வக்கீல்களின் மனப்போக்கையும் அவர்கள் செய்த காரியம் உண்மையில் தேசாபிமானத்திற்கு அறிகுறியான காரியமா? அல்லது ஜாதி...

ஐக்கிய திட்டத்தின் அலங்கோலம் 0

ஐக்கிய திட்டத்தின் அலங்கோலம்

மதவாதிகள் என்று இருப்பவர்கள் ஏதேனும் ஒரு ‘கடவுள்’  என்பதன் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வாறு உலக இயல்பாக ஆகிவிட்டதோ, அவ்வாறே அரசியல்வாதிகளாக இருக்கின்றவர் கள் மிதவாதிகளானாலும் சரி, அமிதவாதிகளானலும் சரி, மற்றும் எந்த வாதி பிரதிவாதிகளானாலும் சரி எல்லோரும் ‘சுயராஜ்யம்’ என்று சொல்லிப் பாமர மக்களை ஏமாற்றுவது சகஜமாக இருந்து வருகிறது. இதன் உண்மையை அறிவதற்கு நமது நாட்டின் தற்கால அரசியல் நிலைமையைக் கவனித்துப் பார்ப்பது ஒன்றே போதுமானதாகும். நமது நாட்டில், இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஐக்கிய ஆட்சி என்பதைப் பற்றியே எங்கும் பேசிக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் ஏற்படுத்துவது என்பதைப் பற்றி யோசனை செய்வதற்காகக் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாடுகளின் பயனால் உண்டான வார்த்தையே இந்த “ஐக்கிய ஆட்சி” என்பதாகும். காங்கிரசின் சர்வாதிகாரியான திரு. காந்தியுள்பட மற்ற எல்லா அரசியல் கட்சிக்காரர்களும், இந்தியாவுக்கு “ஐக்கிய ஆட்சித் திட்டம்” ஏற்படுத்துவதை ஒப்புகொண்டு விட்டனர். ஆனால்...

கவியும் பண்டிதரும் 0

கவியும் பண்டிதரும்

காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தின் பேரில், காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கும் காலத்திலேயே பூரியில் அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டையும் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அரசங்கத்தார் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போது காங்கிரஸ் மகாநாடு கூடினால் சட்ட மறுப்பு இயக்கத்தை இன்னும் பலப்படுத்துவதற்குக் காரணமாகும் என்று கூறி பூரி காங்கிரசைத் தடுத்து விட்டார்கள். இதன்பின் காங்கிரஸ் கமிட்டியினர் மகாநாடு கூட்டும் விஷயத்தில் கவலை கொள்ளுவதை விட்டுச் சட்டமறுப்பு இயக்கத்தையே நடத்தினர். இதன் பலனாகக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர் பெரும்பாலும் சிறை சென்றுவிட்டனர். இப்பொழுது வெளியிலிருப்பவர்கள் இரண்டொரு வரே யாவார்கள். இந்த நிலையில் இப்பொழுது காங்கிரசின் ஆக்டிங் தலைவராக இருக்கும் திருமதி சரோஜினிதேவியார் காங்கிரசின் 47வது மகாநாட்டை டில்லியில் கூட்டத் தீர்மானித்து, அதற்குத் திரு. மாளவியா பண்டிதரைத் தலைமை வகிக்கும்படி கேட்டு, அவரும் ஒப்புக் கொண்டு, மற்றும் மகாநாட்டு உத்தியோகஸ்தர்களும் நியமிக்கப்பட்டுப் பத்திரிகைகளிலும்...

இத்தகைய கோயில்கள் ஏன்? 0

இத்தகைய கோயில்கள் ஏன்?

தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோயிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தெரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ரல்லாதார்களுக்கும் நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும், ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்த போது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர். ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்பனரல்லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்;  ஜஸ்டிஸ் வாலர் பார்ப்பனரல்லாதாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்;  ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலஸ் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார். இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பன ரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில் களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோத ரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு...

சட்டசபைநாடகம் 0

சட்டசபைநாடகம்

  ஏழை மக்களுடன் பழகி, ஏழை மக்களாகவே வாழ்கின்ற ஏழை மக்கள் தான் அவர்களுடைய துன்பங்களை நீக்க உண்மையாகப் பாடுபட முடியுமே யொழிய ஏழைமக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவி வகித்து வருகிற வேறு எந்தப் பணக்கார முதலாளிகளும் அவர்களின் துன்பத் தைப் போக்கப் பாடுபடமுடியாது என்று நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம். இதற்கு உதாரணம் வேண்டுமானால் நமது இந்தியா சட்டசபையின் நிகழ்ச்சிகளையும் மாகாண சட்டசபைகளின் நிகழ்ச்சிகளையும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். இச்சமயத்தில் சென்ற 4-4-32 ² இந்திய சட்டசபையில் இந்திய ராணுவ சம்பந்தமான முக்கிய விஷயம் பற்றி விவாதம் நடக்கும்போது சபையில் பல உறுப்பினர்களின் ஸ்தானங்கள் காலியாக இருந்தனவாம். இதை திரு. எஸ். சி. மித்திரா அவர்களும், சட்டசபைத் தலைவரும் எடுத்துக்காட்டி கண்டித்தனர். அப்போது தலைவர் கண்டித்துக்  கூறியதாவது:- “சட்டசபைக் கூட்டத்திற்கு பலர் வரவில்லை என்றும், சிலர் வந்து விட்டுத் திரும்பி விட்டார்கள் என்றும், சபையில் அதிக...

யோகப்புரட்டு 0

யோகப்புரட்டு

மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத்தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய மாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது. இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித் தால் விளங்கும். “ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள்...

ஹிந்திக் கொள்ளை 0

ஹிந்திக் கொள்ளை

ஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர்களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழி யின் மூலம் எல்லா விஷயங்களையும் போதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுவருகிறது. இதுதான் பொது ஜனங்களின் மனத்தில் தேசாபி மான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலையென்றும் சொல்லப்படுகிறது.  இது போலவேதான் சுதந்தரப்போர் புரிந்த நாட்டினர் செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறி கின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது. சுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத்தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை. ஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் ஹிந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது  நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர்.   தேசாபிமானியாக வெளி வருகின்ற ஒருவன் “காந்திக்கு ஜே”...

சுதேசிப் பிரசாரம் 0

சுதேசிப் பிரசாரம்

நமது நாட்டின் பொருளாதாரத் துறையை விருத்திச் செய்ய வேண்டு மென்பதிலும் இதற்கு ஆதாரமானத் தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதிலும் நாம் யாருக்கும் பின்வாங்கியவர் அல்லோம் என்பதை நமது மகாநாடுகளில் அவ்வப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானங் களைக் கொண்டு அறியலாம். பொருளாதாரத் துறையிலும், தொழில் அபிவிருத்தியிலும் நாம் முன்னேற்றமடைய வேண்டுமானால் கூட்டுறவுத் தொழில் முறையில் இயந்திரங்களை விருத்தி செய்தால் ஒழிய நாம் வியாபாரத்தில் அன்னிய தேசங்களுடன் போட்டி போட ஒரு நாளும் முடியாது என்பதே நமது கொள் கையாக இருந்து வருகின்றது. இந்தத் தத்துவத்தைக் கொண்டுதான் நாம், ராஜீயச் சின்னமாக உபயோகப்பட்டு வருகின்ற கதர்த் திட்டத்தைப் பலமாக எதிர்த்து வருகின்றோம். அன்றியும் இப்பொழுது காந்தீயத்தினால் ஏற்பட்ட ‘சுதேசீயம்’ என்னும் பிரசாரம் மக்களை மீண்டும் பழய மிருகப் பிராயத்திற்கு இழுத்துச் செல்லும் தத்துவத்தை யுடையதென்று கூறி அதை அடியோடு கண்டிக் கின்றோம். ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய பொருள்களைப் பிறரு டைய கூட்டுறவை விரும்பாமல்...

தீண்டாமையே இந்துமதம் 0

தீண்டாமையே இந்துமதம்

அகில இந்திய தீண்டாமை விலக்குச் சங்கத்தின் சென்னைக் கிளை யின் ஆதரவில் சென்ற 17 – 3 – 32 வியாழனன்று, காலஞ் சென்ற சுவாமி  சிரத்தானந்தர் அவர்களின் உருவப் படத்தை வைக்கும் பொருட்டு, சர். ஏ. பி. பாத்ரோ அவர்கள் தலைமையில் சென்னைக் கோகலே மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் கூடிற்று. கூட்ட ஆரம்பத்தில், திரு. பாத்ரோ அவர்கள், “தீண்டாதாருக்கு இந்து சமூகம் செய்துள்ள தீமைகள் கொஞ்சம் அல்ல. அதை அகற்றுவதற்குப் பல சீர்திருத்தக்காரர்கள் பாடுபட்டு வந்திருந் தும், இன்று வரையிலும் இக்கொடுமை அழியாமல் இந்தியாவில் நிலைத்து வருவது வருந்தத் தக்கதாகும். ஒரு சமூகத்தாரைத் தொடவும் கூடாதென மிருகங்களைக் காட்டிலும் இழிவாக நடத்துவதை விடக் கொடுமையான விஷயம் வேறொன்றுமில்லை. புத்தர் போன்ற பெரியார்களின் உபதேசங்கள் இந்நாட்டில் தோன்றியிருந்தும், இன்னும் இத்தீண்டாமைக் கொடுமை ஒழியா மலிருப்பதற்குக் காரணம் இந்து சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே யாகும்” என்று...

பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை 0

பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை

தேசீயத் துரோகி அடுத்த வருஷத்தில் மாசி மாதத்தில் வரப்போகும் மகத்திற்கு மகா மகம் என்று பெயர். இது பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை கும்பகோணத்திற்கு வரும் ஒரு கொள்ளை நோயாகும். இந்தக் கொள்ளை நோய் கும்பகோணத்தை மட்டிலும் விட்டுவிடுவதில்லை. சென்னை மாகா ணத்தையே பிடித்து ஒரு ஆட்டம் ஆட்டிவிடும். சென்னை மாகாணத்தைத் தவிர வெளிமாகாணத்தில் உள்ளவர்கள் சிலரையும் கூட பிடிக்காமல் விடுவதில்லை. கும்பகோணத்தில் அழுக்கும் பாசியும் நாற்றமும் பிடித்த குளம் ஒன்று இருக்கிறது; அதன் பக்கத்தில் சென்றாலே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். அந்தக்குளத்தில் தான் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சல் இலைகள் ஒதுங்கிக் கிடக்கும். குழந்தைகள் ஆபாசம் பண்ணிய துணி களையும், பாய்களையும் அதில்தான் கழுவுவார்கள். தீட்டுக்காரப் பார்ப்பன பெண்களும், மற்றவர்களும் அதில்தான் சாதாரண நாளில் முழுகுவார்கள். விபசாரம் பண்ணிப் பிள்ளை பெறும் முக்காடு போட்ட அம்மாமார்களும் அந்தக் குளத்தில்தான் குழந்தைகளை அமிழ்த்தி மோட்சத்திற்கு அனுப்பு வார்கள். எல்லாப் பாவங்களையும்...

வாக்குரிமை 0

வாக்குரிமை

சுதந்தரம் பெற்ற ஒரு தேசத்தின் அரசாங்கம் நன்றாய் நடைபெறுவ தற்கு முதன்மையான காரணமாயிருப்பவர்கள் வாக்காளர்களே யாவார்கள். உள்நாட்டுக் கலகங்கள் ஒன்றும் இல்லாமலும், வெளி நாடுகளுடன் சண்டைச் சச்சரவுகளில்லாமலும் நடைபெறுவதாக மாத்திரம் இருக்கின்ற அரசியலை நல்ல அரசியல் என்று கூறிவிட முடியாது. நியாயமாக ஆளுகின்ற அரசாங் கத்தாலும் அமைதியோடு ஆட்சி புரிய முடியும். கொடுங்கோல் ஆட்சி புரிகின்ற அரசாங்கத்தாலும் அமைதியோடு ஆளமுடியும். கொடுங்கோல் அரசாங்கம் பணக்காரர்களையாதரித்து அவர்களுக்குப் பட்டம் பதவிகளை யளித்து ஏழை மக்களையடக்கி யாண்டால் நாட்டில் எந்தக் கலகமும் உண்டா காமல் தடுக்க முடியும், ஆதலால் நல்ல அரசாங்கமென்பது ஏழை பணக்காரர் என்ற வேறு பாடில்லாமல் எல்லா மக்களும் சம சுதந்தரமுடையவர்களாக வாழும் படியும், தேசத்தில் உள்ள வறுமை, பிணி முதலியவைகளைப் போக்கியும் நன்மை செய்கின்ற அரசாங்கமேயாகும். இம்மாதிரியான நல்ல அரசாங்கம் என்பது ஒன்று நடைபெற வேண்டு மானால், அதன் நிர்வாகிகள் சமதர்ம நோக்கமுடையவர்களாகவும், காலதேச வர்த்தமானங்களையறிந்து ஆட்சி புரியக் கூடியவர்களாகவும்,...

கீதைக் கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா? 0

கீதைக் கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா?

காங்கிரஸ்காரர்கள், தங்களுடைய காரியங்களுக்கு இப்பொழுது ஜனக்கூட்டம் சேர்வதும் கஷ்டமாகி விட்டதை அறிந்து புதிய வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இன்று திரு. காந்தியவர்கள் தமது “ராமராஜ்ய”ப் பேச்சையும், “பகவத்கீதை”ப் பிரபாவத்தையும் விட்டு விடுவாரானால் அவருக்கும் பொது ஜனங்களிடம் உள்ள மதிப்புக் குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை. பொது ஜனங்கள், தாங்கள் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை காரணமாக “ராமராஜ்யம்” “பகவத் கீதை” முதலிய வார்த்தை களைக் கேட்டே ஏமாறுகிறார்கள் என்பதில் ஐயமில்லை. சென்ற 14 – 3 – 32ல் கராச்சியில் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி சுவாமி கிருஷ்ணானந்தர் என்பவர் ஐவுளிக்கடை வீதியில் காங்கிரசின் பெயரால் கூட்டம் சேர்ப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார். இரு தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியில் உட்கார்ந்து கொண்டு ‘பகவத்கீதை’ பாராயணம் பண்ண ஆரம்பித்தார். உடனே அதைக் கேட்க ஜனக்கூட்டம் சேரத் தொடங்கிற்று. பிறகு வழக்கம்போல் போலீஸார் வருவதும், கலகஞ் செய்வதும், கைது செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறின....

ஏ. பி. சி. வைதீகம் 0

ஏ. பி. சி. வைதீகம்

– தேசீயத்துரோகி நாம் சொல்லுவதைத் தயவு செய்து கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள். பிறகு அதைப் பற்றிக் கொஞ்சம் ஆலோசனையும் செய்து பாருங்கள். அதன் பின் வேண்டுமானால் நம்மைத் தூற்றுங்கள். தாராளமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம். கூடுமானால் நாம் பதில் சொல்லுகிறோம். “காங் கிரஸ் இயக்கம் முதலாளிகள் இயக்கம் அதில் உள்ளவர்கள் அனைவருமே முதலாளிகளின் ஆதிக்கத்தை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள்” என்று எந்தக் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டும் சொல்லத்தயார். இதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்! இப்பொழுது சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போயிருக் கின்றவர்களைப் பாருங்கள். அவர்கள் ஜெயிலுக்குப் போன விதத்தையும் ஆலோசனை பண்ணுங்கள். ஜெயிலில் போய் அடையும் கஷ்ட நஷ்டங் களையும் கொஞ்சம் ஆலோசனை செய்து பாருங்கள். நாம் கூறுவதன் உண்மை காந்த விளக்கைப் போலத் தெரியும். முதலில் தொண்டர் கூட்டத்தைப் பாருங்கள். இவர்களெல்லாம் மறியல் செய்து போலீஸ்காரரிடம் தடியடியும், பிறம்படியும் பட்டு ஜெயிலுக்குப் போகின்றார்கள். தொண்டர்களில்...

சர். ரெட்டி நாயுடு அவர்கள்

சர். ரெட்டி நாயுடு அவர்கள்

இந்திய சர்க்காரின் ஏஜண்டாகத் தென்னாப்பிரிக்காவில் உத்தியோகம் வகித்திருந்த சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்கள் தமது உத்தியோகத்தினின் றும் நீங்கி இந்தியாவுக்கு வந்து விட்டார். சர். ரெட்டி நாயுடு அவர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியாவின் நன்மைக்காக உண்மையாகவும், அஞ்சாமலும் உழைத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சர். ரெட்டி நாயுடு அவர்கள் சமுதாய ஊழியத்தில் அளவு கடந்த பற்றும், உண்மையாகத் தனது கொள்கைகளைக் கைப்பற்றி நடக்கும் தன்மையும் உள்ளவர் என்பதை அவரை நேரில் அறிந்த நமது மாகாண வாசிகள் அனைவரும் அறிவர். இவருக்கு முன் தென்னாப்பிரிக்காவில் ஏஜண்டாயிருந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரிகளைக் காட்டிலும் ஊக்கமாகவும், உண்மையாகவும் இந்தியர்களுக் காக உழைத்தவராவார். ஆனால் மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் தென்னாப் பிரிக்காவிலிருந்த காலத்தில், அவர் எங்கேயாவது மூச்சு விட்டாலும், தும்மி னாலும், இருமினாலும் அவற்றையெல்லாம் நமது நாட்டுப் பத்திரிகைகள் பிரமாதமாக வெளியிட்டு விளம்பரம் பண்ணி வந்தன. அதற்குக் காரணம் அவர் பார்ப்பனராயிருந்ததும், நமது...

திரு. மாளவியாவின் புரோகிதம் 0

திரு. மாளவியாவின் புரோகிதம்

பிரபல வருணாச்சிரம தருமவாதியாகிய பண்டித மதன் மோகன மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண் ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதீகர் என்பது தெரியும். ‘சூத்திரன்’ என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் “அவன் இருபத்தோரு ஜென்மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிராமணனாகப்பிறந்து தான் மோட்சம் பெற வேண்டும்” என்ற பிராமணீய மதக்கொள்கையில் உறுதியான நம்பிக்கை யுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதீகர் என்பது அவருடைய போக்கை உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும். இத்தகைய வைதீக மாளவியா அவர்கள் அரசியல் சீர்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார் என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த “தசாஸ்வமேதக் கூட்டத் தில்” இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி “மந்திரதீiக்ஷ” கொடுத்தாராம்! அப்போது 150 பேர்களுக்குமேல் 500...

தேசீயப் பைத்தியம் 0

தேசீயப் பைத்தியம்

தேசீயம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும், நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். பாமர மக்களைப் பலவகையிலும் ஏமாற்றி அவர்களைத் தன்னைப் பின்பற்று மாறு செய்துகொள்ள முடியாத எவனும் தேசீயத்தலைவனாக இருக்க முடியாது. பாமர மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு பித்தலாட்டங்களும், அயோக்கியத்தனங்களும் செய்தாக வேண்டுமோ அவ்வளவும் செய்துதான் ஆகவேண்டும். அன்றியும் ஒரு நிலையான கொள்கையும், நேர்மையான நடத்தையும் இல்லாதவனே தேசீயவாதியாக இருக்க முடியும். அல்லாமலும் பாமர மக்கள் எவ்வளவு பிற்போக்கான கொள்கையும், பழக்க வழக்கமும் உடையவர்களா யிருக்கிறார்களோ அவ்வளவு பிற்போக்கான கொள்கையை யும் பழக்க வழக்கங்களையும் பாராட்டுகின்றவனே தேசீயத்தலைவனாகப் புகழ்பெற்று விளங்க முடியும். காலத்திற்குத் தகுந்த மாதிரியில் நாட்டிற்கு நன்மை தரும்...

பாராட்டுகிறோம் 0

பாராட்டுகிறோம்

தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறவும், தங்கள் உரிமையையும், சமத்துவத்தையும் பெற அவர்கள் போதிய கல்வியறிவு பெற்று உலக ஞான மறிந்து தங்கள் இழிவான நிலையைத் தாங்களே உணரவேண்டுமென்பதை நாம் பன்முறையும் கூறிவருகிறோம். அத்தகைய அவர்களது நிலையை அறிய அவர்கள் எல்லோரும் ஏனையோரைப் போலவே கல்வி கற்று அறிவு வளர்ச்சிபெற வேண்டுவது மிகமிக இன்றியமையாதாகும். அவ்விதமே அவர்கள் கல்வி கற்க முற்படினும் அவர்களுக்கு அதனால் ஏற்படும் கஷ்டங்களும், இன்னல்களும், எதிர்ப்புகளும் எண்ணிறந்தன. அத்தகைய பல இடையூறுகளில் பொருளின்மை தலைசிறந்ததெனலாம். தங்கள் பிள்ளை களைப் படிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா பல பெற்றோர்க்கு இருந்த போதிலும் போதிய பணமின்மையால் அவர்களது புஸ்தக வகைக்கோ, அல்லது துணிமணிகளுக்கோ வேண்டியன கொடுத்துதவ முடியாமையால் பிள்ளைகளின் படிப்பில் கவலை செலுத்தாத பெற்றோர்கள் அனேகர் உண்டென்பதும் நமக்குத் தெரியும். அத்தகைய அவர்களது குறை நீக்கப்பட்ட திற்கொப்ப திருச்சி ஜில்லா லால்குடியில் உள்ள போர்டு ஸ்கூல் ஆதிதிராவிட மாணவர்களின் உபயோகத்திற்காக ரூபாய் 10,000...

மத உரிமையின் ஆபத்து 0

மத உரிமையின் ஆபத்து

இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும், மூன்று கமிட்டிகளில் ஒன்றாகிய ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் சில நாட்களாகப் புது டில்லியில் நடைபெற்று வருகின் றது. அக்கமிட்டியில் அரசியல் சீர்திருத்தத்தில் சேர்க்க வேண்டிய அடிப்படை யான உரிமைகளைப்பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர். அவர்கள் முடிவு செய்து ஒப்புக் கொண்டிருக்கும் உரிமைகளாலும், அத்தகைய உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சீர்திருத்தத்தாலும் நமது நாட்டின் ஏழைமக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அதிகமான நன்மையுண்டாகப் போவதில்லையென்றுதான் நாம் துணிந்து கூறுகிறோம். இவ்வாறு நாம் கூறுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம். “எந்த சமஸ்தானமாயினும், மாகாண ஆட்சிக்கு உட்பட்டதானாலும், ஐக்கிய ஆட்சிக்குள் அடங்கியதானாலும், அவ்விடங்களில் சர்க்கார் மத மென்பது ஒன்று இல்லை என்று அறிக்கையிட வேண்டும்” என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.  அடுத்தபடியாக “மத சுதந்தரம், பொது ஜனங் களின் பழக்க வழக்கங்கள் முதலிய உரிமைகளுக்குச் சம்மதம் அளிக்கிறது” என்பதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விரு...

தனித் தொகுதியா? பொதுத் தொகுதியா? 0

தனித் தொகுதியா? பொதுத் தொகுதியா?

ஒரு நாட்டில் வகுப்புப் பிரிவினைகள் நிலைத்திருக்கும் வரையிலும், ஒவ்வொரு வகுப்பினரும் தாம் தாம் தனித் தனி வகுப்பினரென்றும், தாம் மற்ற வகுப்பினருடன் உடனிருந்து உண்பதும், கலப்பதும், உறவாடுவதும், தமது மதத்திற்கும், கடவுளுக்கும், வேதத்திற்கும், புராதன நாகரீகத்திற்கும் விரோத மான செய்கையாகுமென்றும் நினைத்துக் கொண்டும் உண்மையாகவே நம்பிக் கொண்டும் இந்த நம்பிக்கையின் படி நடந்து கொண்டும் வருகின்ற வரையிலும் ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினருடைய நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அந்தரங்க  சுத்தியுடன் உழைப்பார்கள் என்று நினைப்பது தவறான எண்ணமேயாகும். இவ் விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கு நாம் வேதங்களையோ, சாஸ்திரங்களையோ, சிலாசாசனங் களையோ கஷ்டப்பட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. தற்காலத்தில் நம் கண் முன் நடைபெறும் காட்சிகளைக் கொண்டே யாவரும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக இன்று அரசியலிலோ, அல்லது உத்தியோகத் துறையிலோ, அல்லது வியாபாரத் துறையிலோ, மற்றும் எந்தத் துறையிலாகட்டும் உயர்ந்த பதவியும், ஆதிக்கமும், செல்வாக்கும் அடைந்திருக்கின்ற அய்யர், அய்யங்கார், முதலியார், பிள்ளை,...

தீண்டாதார் துன்பம் 0

தீண்டாதார் துன்பம்

வெள்ளைக் காரர்களைப் பார்த்து “நீங்கள் எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள்! ஆகையால் உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்க வில்லை; ராஜ்யத்தை எங்களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள்; நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்ளுவோம்” என்று சுயராஜ்ய வாதிகள் கூச்சலிடுகின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்கின்றனர்; இன்னும் சத்தியாக் கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால் வடநாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள கலகமும் வெறுப்பும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை. இது ஒரு புறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக்களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதீக இந்துக்கள் எதிர்த்துத் துன்பப்படுத்துதலும் ஒரு புறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது சுத்தமாகவும்,...

சட்டசபையில் வைதீகர் 0

சட்டசபையில் வைதீகர்

மதம், கடவுள், வேதம், சாஸ்திரம் முதலிய கற்பனைகளில் குருட்டு நம்பிக்கையுடைய பகுத்தறிவற்ற வைதீகர்களைக் காட்டிலும், தாம் பார்க்காத வைகளையும், அறியாதவைகளையும், நம்பாத பகுத்தறிவுடைய நாஸ்திகர் களே உலகத்தில் நன்மையை, மக்களுடைய நலத்தைக் கவனிப்பவர்கள் என்பது ஒரு உண்மையான அபிப்பிராயமாகும் என்று நாம் தீர்மானமாக நினைக்கிறோம். வைதீகர்கள் எவ்வளவு தான் யோக்கிய பொறுப்புடைய வர்களாயிருந்தாலும், இரக்கமன முடையவர்களாய் இருந்தாலும் கால நிலையையும் மக்களுடைய மனோபாவத்தையும், பிறர் நலத்தையும் அறிந்து அதற்குத் தகுந்த வகையில் நடந்து கொள்ளுவதற்குரிய அறிவு, அவர்களிடம் உண்டாவதில்லை. ஏனெனில், கொடுமைப்படுகிற மக்கள் கொஞ்சம் சுக மடையக்கூடிய சீர்திருத்த சம் மந்தமான விஷயங்கள் வருகிற பொழு தெல்லாம் அவர்கள் வேதங்களில் என்ன சொல்லப்படுகின்றது. புராணம் ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களில் என்ன சொல்லப்படுகின்றது என்று பார்த்து அதன்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களே ஒழிய தமது சொந்த புத்தியினால் ஆலோசித்துப் பார்க்க முன்வருவதே யில்லை. அவர்கள் சொந்த அறிவும் உபயோகப்படுவதேயில்லை. ஆனால்...

இரண்டு மசோதாக்களின் கதி 0

இரண்டு மசோதாக்களின் கதி

  இந்திய சட்ட சபையில் இம்மாதம் 4-ந்தேதி நடந்த நிகழ்ச்சிகள் நமது நாட்டுச் சீர்திருத்தவாதிகள் எல்லோராலும் கவனிக்கக் கூடிய தொன்றாகும். அன்று நமது நாட்டுப் பெண்மக்களுக்கு விடுதலையளிக்கக் கூடிய இரண்டு மசோதாக்கள் விவாதத்திற்கு வந்தன.  அவைகளில் “விதவைகளுக்கு சொத்துரிமை” அளிக்கும் மசோதா ஒன்று.  இம்மசோதா விவாதத்திற்கு வந்த காலத்தில், வைதீகர்கள் இதைப் பற்றி கூறிய அபிப்பிராயத்தையும் சென்றவாரம் எடுத்துக் காட்டி கண்டித்திருந்தோம். கடைசியாக இம்மசோதா தனிக் கமிட்டிக்கு அனுப்பப்படாமல் தோற்றது. இரண்டாவது “விவாக விடுதலை மசோதா” ஒன்று விவாதத்திற்கு வந்தது. கடைசியில் இம் மசோ தாவைப் பற்றிய விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதுவும் “விதவை களுக்குச் சொத்துரிமை” வழங்கும் மசோதாவைப் போலவே தோற்றுப் போகும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு இந்தியப் பெண்மணிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் மசோதாக்கள் தோற்றுப் போவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். முதற்காரணம் வைதீகர்கள்;  இரண்டாவது காரணம் அரசாங்கத்தார்கள். இவர்களில் வைதீகர்களைப் பற்றி நாம் குறை கூறுவதில் ஒன்றும் பயன் உண்டாகப்...

மலேயா தமிழர்கள் 0

மலேயா தமிழர்கள்

  மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17-1-32 ல் அகில மலேயாத் தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடை பெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண்டாற்றி வரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். ஐயாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர் முதலானவர்கள் அம்மகாநாட்டில் அதிகமான பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள். அந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக்கின்றன. அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங் களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் “அகில மலேயா தமிழர் மகாநாடு” என்பதை “அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு” என்று மாற்ற வேண்டும் என்ப தும் முக்கியமான தீர்மானங்களாகும்....

உணர்ச்சி வீண் போகாது 0

உணர்ச்சி வீண் போகாது

எல்லா மக்களும் தாங்கள் இருக்கும் நிலையை விட்டு இன்னும் உயர்ந்த நிலையை அடைவதற்கே ஆசைப்படுவார்கள். கீழான நிலையை அடைவதற்கு விரும்புகின்ற மனிதர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கீழான நிலைக்குச் செல்லவேண்டுமென்னும் கருத்துடையவர்கள் யாராவது இருந்தாலும், அவர்கள் கருத்தும், அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையைக் கொண்டதாகத் தான் இருக்கக் கூடும். இது மனித சமூகத்தின் இயற்கையாகும். இத்தகைய ஆவலும் முற்போக்குணர்ச்சியும் இருந்த காரணத்தால்தான் மனித சமூகமானது பண்டை காலத்திலிருந்த மிருகப் பிராயத்திலிருந்து முற்றும் மாறுதலடைந்து தற்கால முள்ள நாகரீகமான நிலைக்கு வந்திருக்கின்றது. “மனிதன் அறிவுடையவனாகவே படைக்கப்பட்டான்” என்னும் மத வாதிகளின் கட்டுக் கதையைத் தள்ளிவிட்டுச் சரித்திர மூலமாகப் பண்டைக் காலத்தில் மக்கள் எந்த நிலையிலிருந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். மக்கள் உண்டான காலத்தில் அவர்கள் குரங்கு களைப் போலவே மரங்களிலும், மலைகளிலும் வாழ்ந்து பிறகு தழை, மரப் பட்டைகளை எடுத்து, மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள்...

வைதீக வெறி 0

வைதீக வெறி

இந்துப் பெண்மணிகள் பலவகையிலும் சுதந்திரம் இல்லாதவர்களாய் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு முதன்மையான காரணம், அவர்கள் ஆண் களின் தயவைக் கொண்டு ஜீவனம் பண்ணக் கூடிய நிர்ப்பந்தமான நிலை யிலிருப்பதேயாகும். இந்த வகையான நிர்ப்பந்த நிலைமை இருப்பதற்குக் காரணம் இந்தப் பாழும் இந்து மதமும், அதன் மூலம் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகையால் ஆண் மக்களுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளும் பெண் மக்களுக்கும் சட்ட மூலமாக ஏற்பட்டால் தான் அவர்கள் சீர்திருத்தமடைய முடியுமென்று நாம் கூறி வருகிறோம். ஈரோடு, விருதுநகர், சென்னை முதலிய இடங்களில் கூடிய நமது இயக்கப் பெண்கள் மகாநாடுகளிலும் இது சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டிருக்கின்றன. ஆனால் எந்த விதமான மாறுதலையும் விரும்பாமல் தங்கள் சுயநலம் ஒன்றையே விரும்புகின்ற வைதீகர்கள், பெண் மக்கள் உரிமைகளுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்து கொண்டு வருகின்றனர். பெண் மக்கள் கேட்கும் சுதந்தரங்களையெல்லாம் மதத்திற்கு விரோதம், ‘கடவுள்’ கட்டளைக்கு விரோதம், சாஸ்திரங்களுக்கு...

நான்கையும் பாருங்கள் 0

நான்கையும் பாருங்கள்

– தேசீயத்துரோகி சீனாவைப் பாருங்கள் தற்காலத்தில் சீனதேசம் ஆபத்தான நிலைமையிலிருந்து கொண்டிருக் கிறது. ஜப்பான் அதை ஓட ஓட விரட்டுகிறது. ஜப்பானுடன் எதிர்த்து நின்று போர் செய்யும் வல்லமை சீனாவுக்கு இல்லை. ஆகையால் அது சர்வதேச சங்கத்தினிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச சங்கமும் இத் தனை நாட்களாக ஒரு முடிவுக்கும் வராமலிருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சர்வ தேசங்களுக்கும் சொந்தமாக இருக்கும் பிரதேசத்தில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதால் சீனா ஜப்பான் தகராறில் சர்வதேச சங்கமும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இது எப்படியாவது போகட்டும். சீனா இத்தகைய பலமற்ற நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன என்பதை மாத்திரம் கொஞ்சம் கவனிப்போம். சீனாவில் சரியான சீர்திருத்தம் ஏற்பட வில்லை. சீனாவின் மக்கள் ஏறக் குறைய இந்தியா மக்களைப் போன்றவர்கள்.  பழய நாகரீகத்தை விடாப் பிடி யாக பிடித்திருப்பவர்கள். சீனாவில் சீர்திருத்த நோக்கமுடைய கூட்டத்தாரும் இருக்கின்றனர். அவர்கள் நம்மைப் போன்ற – அதாவது சுய மரியாதை இயக்கக்காரர்களைப்...

ஈ. வெ. இராமசாமியின் “கெய்ரோ” கடிதம் 0

ஈ. வெ. இராமசாமியின் “கெய்ரோ” கடிதம்

போர்ட் சைட்டிலிருந்து எழுதிய வியாசம் கிடைத்திருக்கலாம். அதில் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” என்கின்ற கப்பல் விஷயத்தைப்பற்றி மாத்திரம் எழுதமுடிந்தது. மற்றபடி கொழும்பிலிருந்து கப்பல் புறப்பட்ட தற்குப் பின் கண்ட விஷயங்களைப்பற்றி சுருக்கமாக எழுதுகிறேன். கொளும்பிலிருந்து டிசம்பர் 17 -ம் தேதி காலை புறப்பட்ட கப்பல் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ‘ஜிபுட்டி’ என்கின்ற பிரஞ்சு துறைமுகம் வந்து சேர்ந்தது. இது ஏடனுக்கு எதிர்பாகத்தில் இருப்பதும் பிரஞ்சுக்காரருடைய துறை முக முமாகும். நாங்கள் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணம் செய்ததால் பிரஞ்சு கப்பல் அங்கு செல்ல வேண்டியதாயிற்று. பிரஞ்சுக்காரருக்குச் சொந்தமான தீவாகிய மடகாஸ்கர் என்னும் தீவுக்கு அனுப்பப்படும் சாமான்களும் அத்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சாமான்களும் ஜிபுட்டி என்கின்ற துறைமுகத்தின் வழியாகத்தான் வரவேண்டும். இந்த துறைமுகத்தில் நாங்கள் இரங்கினதும் “கமாலியர்” என்கின்ற ஒரு ஜாதியார் நீக்கிறோவர்களைப் போல் அதிக கருப்பும் மிகவும் சுருண்ட தலைமயிரும் உடையவர்கள் தான் இந்தத் தேசத்தில் அதிகமாய் இருக்கிறவர்கள், இவர்கள் பாஷை...

கிறிஸ்துவ மதத்தில் ஜாதியுண்டா? 0

கிறிஸ்துவ மதத்தில் ஜாதியுண்டா?

இந்து மதத்தில் தான், சாஸ்திர சம்மதமாகவும், தெய்வ சம்மதமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளி யேறினாலொழிய மனிதத் தன்மை பெறமுடியாதவர்களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதாக உலக முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக – சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்துவ மதத்தில் இத்தகைய சாதிக் கொடுமை இல்லை என்று பறை சாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின் படி – அந்த மத கர்த்தாவான யேசு நாதரின் கொள்கைப் படி அந்த மதத்தில், சாதி வித்தியாசம் பாராட்டவோ, சாதி வித்தியாசம் காரண மாகத் தாழ்த்தப் பட்ட மக்களைக் கொடுமைப் படுத்தி வைத்திருக்கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம். இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியாசங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்று பார்த்தால், இந்து மதத்தின் அண்ணனாகவோ, அப்பனாகவோ பாட்ட...

வெண்ணெயை வைத்துக் கொண்டு? 0

வெண்ணெயை வைத்துக் கொண்டு?

  நமது நாடு விடுதலை பெற வேண்டும் என்று நமது நாட்டிலுள்ள எல்லாக் கட்சியின் தலைவர்களும் கூறிக் கொண்டு வருகின்றனர். அதற்காக ஏதோ சில காரியங்களையும் செய்து கொண்டும் வருகின்றனர். தற்பொழுது சுயராஜ்யத்தைப் பற்றியும், தேச விடுதலையைப் பற்றியும் பேசாத மனிதர்கள் ஒருவர்கூட இல்லை யென்றே சொல்லலாம். ஆனால் யாரும் நமது நாட்டு ஏழை ஜனங்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைச் சுகமாக வாழும்படி செய்வதற்குத் தகுந்த வழி என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பது கிடையாது. சுயராஜ்யம் வந்து விட்டால் எல்லாம் சரிப்பட்டு விடும் என்று ஒரேயடியாகச் சொல்லி விடுகிறார்கள். இப்படிப் பேசுகின்ற கூட்டத்தார் இது வரையிலும் நமது நாட்டு மக்களின் கஷ்டத்தைப் போக்க ஏதாவது செய்திருக்கிறார்களா? அல்லது அதைப் பற்றி நினைத்ததுதான் உண்டா? என்றால் கொஞ்சங்கூட இல்லை என்று நாம் துணிந்து சொல்லுவோம். நமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எண்ணற்ற மக்கள், இன்று கட்டத் துணி இல்லாமலும், உண்ண உணவில்லாமலும், இருக்க...

பூனைக்கும்? பாலுக்கும்? 0

பூனைக்கும்? பாலுக்கும்?

இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 – 1 – 32 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் தற்கால சட்ட மறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமே யாகும். மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதியவர்கள் “சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின் வாங்கி நிற்கும்?” என்று கேட்கும் கேள்வியும், “சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமுலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா” என்று கூறிவிருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும். அதிலும் காங்கிரஸ்காரர்கள்பால் அநுதாபம் காட்டுவதன் மூலம் “தேசாபிமானிகள்” என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதின் மூலம் அரசாங்கத்தாருக் கும் “நல்லபிள்ளைகளாக” இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டி ருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம்...

சமதர்மப் போர் 0

சமதர்மப் போர்

  – தேசீயத்துரோகி டில்லியில் உள்ள போலீஸ் சீனியர் சூப்பரின்டென்ட் அவர்கள் போலீஸ் இலாகாவில் பெண்களையும் சேர்க்க முயற்சி செய்கிறார். ‘போலீஸ் உத்தியோகத்திற்கு பெண்கள் தேவை’ என விளம்பரங்களும் வெளியிட்டி ருக்கிறார். இந்த நிகழ்ச்சியை நாம் பாராட்டுகிறோம். எதற்காகப்  பெண் போலீஸ்  தேவை என்று சொல்லுகிறார் என்பதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் இது பெண்களின் சமத்துவத்திற்கு ஏற்ற செய்கையாகும் என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையில் சென்ற வருஷத்தில் கூடிய பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்கு போலீஸ் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக் கப்பட்டிருப்பதாக  நமது ஞாபகம். டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் கூட ஒரு சமயம் பெண்களுக்குப் போலீஸ் உத்தியோகம் வேண்டுமெனப் பேசியிருப்பதாக நினைக்கிறோம். பெண்மக்களும் ஆண்மக்களைப் போல் சமஉரிமை பெற வேண்டும் என்று சொல்லுகின்ற ஆண் பெண்கள் அனை வரும் டில்லி போலீஸ் சூப்பரின்டென்டின் யோசனையை வரவேற்பார்க ளென்று நம்புகின்றோம். சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டிருக்கும் பெண்களைப்...