சிறுபிள்ளைத்தனம்

 

சிறுபிள்ளைகள் விளையாட்டிலேயே கவனமுள்ளவர்கள்; தாம் செய்யும் வேலைக்குப் பிற்காலத்தில் இன்னது பலன் கிடைக்கும் என்பது பற்றிச் சிறிதும் சிந்திக்கமாட்டார்கள். தற்கால சந்தோஷத்திற்காக எந்தக் காரியங்களையும் பொறுப்பின்றித் செய்யத் துணிவார்கள். அவர்களுக்குக் கவலையோ பொறுப்போ ஒரு சிறிதும் தெரியாது. இதனால்தான் ‘சிறுபிள்ளை யிட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது’ என்று சொல்லுவது வழக்கம்.

இத்தகைய விளையாட்டுப் பிள்ளைகளைப் போலத்தான் இப்பொழுது காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் நடந்து வரு கிறார்கள். உண்மையில் கொஞ்சங் கூட பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்கள் யாரும் இப்பொழுது இல்லை. பொறுப்பற்ற முறையில்   காலித்தனமான காரியங்களைச் செய்து வீண் கலகத்தை உண்டு பண்ணும் சில சிறுபிள்ளைத் தனமுடையவர்களே இப்பொழுது ‘காங்கிரஸ்’ என்பதன் பெயரால் ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தபால் பெட்டிகளுக்குத் தீயிடுவது, தபாலாபிசை மறியல் செய்வது, ரயிலை மறியல் செய்வது காங்கிரஸ் கட்டளைகளுக்கு உட்படாத தனித்த   வியாபாரிகளுக்கு நஷ்டத்தை  விளைவிப்பது,  அவர்கள் கடைகளை ரகசிய முறையில் தீக்கிரையாக்குவது போன்ற காரியங்களை எந்த யோக்கிய முள்ள மனிதராவது செய்ய முடியுமா? இச்செயல்களெல்லாம் தேசத்தில் நடைபெறவில்லையா?

திரு. சரோஜினி அம்மாள் அவர்களும், திரு. மாளவியா பண்டிதர் அவர்களும் டில்லியில் காங்கிரஸ் நடத்துவதாக ஏற்பாடு செய்து நடத்தத் தொடங்கும்போது அரசாங்கத்தார் அக்காங்கிரசைத் தடைசெய்து விட்டதும், பிறகு காங்கிரஸ் நடவாமற் போனதும் யாவரும் அறிந்த விஷயம். ஆனால் காங்கிரஸ்காரர்கள் டில்லி மகாநாட்டை அரசாங்க உத்தரவை மீறி நடத்தி விட்டதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டதாகவும் வீண் புரட்டாக வீராப்புப் பேசிக் கொண்டனர். டில்லி காங்கிரஸ், அரசாங்கத்தார் செய்திருந்த தடைப் பந்தோபஸ்துகளையெல்லாம் மீறி நடந்து விட்டதாகவும் முக்கியமான தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்றி விட்டதாகவும், பத்திரிகைகளும் பிரசுரித்துக் கிளர்ச்சி பண்ணின. பொறுப்புள்ள ‘காங்கிரஸ்’ தலைவர்கள் என்பவர்கள் எவரும் வெளியில் இல்லாதிருக்கும்போது இவ்வாறு காங்கி ரசைக் கூட்டியதாகவும், அவற்றைத் தேசமக்கள் பின்பற்ற வேண்டும் என்ப தாகவும் பேசியதும் புரளி பண்ணியதுமே சிறு பிள்ளைத்தனமான காரிய மாகும். இதன் பிறகுதான் சிறு பிள்ளைத்தனமான செயல்களும் அதிகப் பட்டன என்பதில் ஐயமில்லை.

இதன்பின் இன்னுஞ் சில இடங்களில் மகாநாடு கூட்டுவதாக விளம்பரம் புரிந்ததும் அரசாங்கத்தார் அவைகளைத் தடுத்ததும் டில்லி காங்கிரஸ் மாதிரியே எங்கோ ஓரிடத்தில் மகாநாடு கூட்டியதாகவும், டில்லி காங்கிரஸ் தீர்மானங்களை ஆதரித்ததாகவும், 500 பிரதிநிதிகள் வந்திருந்த தாகவும், 1000 பிரதிநிதிகள் வந்திருந்ததாகவும் பத்திரிகைகளில் எழுதிப்புரளி பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு உதாரணமாக தஞ்சாவூர் ஜில்லா ‘காங்கிரஸ்’ மகாநாட்டை எங்கோ ஓரிடத்தில் கூட்டியதாகவும், தமிழ் மாகாண மகாநாட்டை மதுரையில் எங்கோ ஒரு சந்திக்கடையில் கூட்டியதாகவும், பத்திரிகைகளில் வெளியான செய்திகளே போதுமானதாகும். இன்னும் கல்கத்தாவைச் சேர்ந்த ஹெளராவில் நடத்த முயற்சித்த காங்கிரஸ் மகாநாடு, குண்டூரில் நடத்த முயற்சித்த  ஆந்திர மாகாண மகாநாடு, பகல்காட்டில் நடத்த முயற்சித்த மகாநாடு, நாகபுரியில் நடத்த முயற்சித்த மத்திய மாகாண மகாநாடு,  அமிர்தசரசில் நடத்த முயற்சித்த பாஞ்சால மாகாண மகாநாடு முதலியவை களும் போதிய உதாரணங்களாகும். இந்த மகாநாடுகளால் உண்டான பலன் என்ன?  பத்திரிகைகளில் மகாநாடு கூட்டப் போவதாக  விளம்பரம் புரிவதும், உடனே அரசாங்கத்தார் மகாநாடு நடத்துவதாக விளம்பரம் பண்ணிய நிர்வாகிகளுக்கு 144 போடுவதும், அதை அவர்கள் மீறுவதும், மகாநாட்டிற்கே தடையுத்தரவு போடுவதும், பிறகு அந்தப் பொறுப்பற்றவர்கள் மகாநாடு நடத்திவிட்டதாகப் புரளி பண்ணுவதும் ஆகிய வீண் விளையாட்டுக் காரியங்களைவிட வேறு கடுகளவேனும் பலன் விளைந்தது என்று சொல்ல முடியுமா?

இவ்வாறே தான் “காங்கிரஸ்”காரர்களால் செய்யப்படும் மறியல், பொதுக்கூட்டம் முதலியவைகளும் நடைபெறுகின்றன. யாராவது தங்களுக் குப் பணம் கொடுக்காத வியாபாரிகள் இருந்தால் அவர்கள் கடைக்கு மறியல் செய்வதாக இரண்டு மூன்று பேர் விளம்பரம் பண்ணிக்கொண்டு போவதும், போலீசார் வந்தவுடன் ஓட்டமெடுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஒரு குறிப் பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறப்போவதாக விளம்பரம் பண்ணு வதும், பிறகு அந்த இடத்தில் கூட்டத்தை நடத்தாமல் நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு எங்காவது ஒரு குப்பை மேட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து போலீசாரை ஏமாற்றிக் கூட்டத்தை நடத்திவிட்டதாக விளம்பரம் பண்ணிக் கொள்வதும், ஜாலவித்தைக் காட்டப் போவதாகவும், கழைக்கூத்தாடப் போவதாகவும் கோழிக் சண்டை, கிடாச் சண்டை நடக்கப் போவதாகவும் விளம்பரம் பண்ணிக் கூட்டத்தைச் சேர்த்து அதில் ‘காங்கிரஸ் பிரசாரம் பண்ணிவிட்டு, போலீசார் வருவதற்கு முன் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடிவிடுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.  இவைகளுக்கும், மாமரத்தை குத்தகை எடுத்திருக்கின்ற ஒருவன் கல்லெறிந்து மாங்காய் அடிக்கும் சிறுபிள்ளைகளைத் தடியைத் தூக்கிக் கொண்டு பயமுறுத்தி விரட்டவும், அவர்கள் ஓடவும், பிறகு குத்தகைக்காரன் மறைந்த பின் மீண்டும் அந்தப் பிள்ளைகள் கல்லெறிந்து மாங்காய் அடிக்கவும், மறுபடியும் குத்தகைக்காரன் முன்போலவே விரட்டவும் இவர்கள் ஓடவும் ஆக, இப் படியே அடுத்தடுத்து நடைபெறுவதற்கும் என்ன வித்தியாசம் என்றுதான் கேட்கிறோம்.

‘காங்கிர’சானது அதைச் சேர்ந்தவர்கள் பிதற்றிக் கொள்வது போல இந்தியாவின் 35 கோடி மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்குமானால், ஏன் இந்து முஸ்லீம் சச்சரவு உண்டாகாமல் பார்த்துக் கொள்ளக் கூடாது? ஏன் தீண்டத்தகாதார் தீண்டுவோர் சண்டை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளக் கூடாது? சென்ற ஆண்டில் கான்பூரில் நிகழ்ந்த இந்து முஸ்லீம் கலகம் இன்னும் இரத்தத்தில் எழுதப்பட்டு நம்மனதை விட்டு அகலாத பயங்கரக் காட்சியாக இருக்கின்றது. சென்ற சில தினங்களுக்கு முன் பம்பாயில் ஆரம்பித்த இந்து முஸ்லீம் கலகம் இன்னும் சரியாக ஓய்ந்த பாடில்லை. தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத மக்களுக்குத் தீண்டத் தகுந்த உயர்த்திக் கொண்டிருக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் செய்துவரும் கொடுமை சகிக்க முடியாததாக இருக்கின்றது. இவற்றை எல்லாம் சரிப்படுத்த முடியாத ஒரு ஸ்தாபனமோ, அதைச் சேர்ந்தவர்களோ நாங்கள்தான் 35 கோடி மக்களுக்கும் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வது வெட்கக் கேடல்லவா?

காங்கிரசின் யோக்கியதையும், அது செய்யும் காரியங்களால் தேசத்தில் நடைபெறும் காலித்தனங்களும், கலகங்களும் இந்த நிலையில் இருக்கும் போது இந்தியாவின் அடிமையைப் பாதுகாப்பதற்கு வைசிராய் அவர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் அவசரச் சட்டத்தைக் கண்டிக்க முன் வந்து விட்டார்கள். இவ்வளவு கட்டுத் திட்டங்களும், கவனிப்பும், அவசரச் சட்டமும் இருக்கும்பொழுதே போக்கற்ற காலிகள் பலர் ‘காங்கிரஸ்’ பெயரைச் சொல்லிக் கொண்டு அடாத செயல்களைச் செய்து, தேசத்தின் அமைதிக்குப் பங்கம் விளைப்பார்களானால் இந்தக் கட்டுத்திட்டங்களும் கவனிப்பும் அவசரச் சட்டங்களும் இல்லாமல் போனால் தேசத்தின் கதி என்னாவது? பம்பாயில் நடப்பது போன்ற கலகம் மூலைக்கு மூலை தாராளமாக நடை பெறாமலிருக்கவும், நிரபராதிகளான பொதுஜனங்களின் சொத்துக்களுக்கும் சுதந்தரங்களுக்கும் உயிர்களுக்கும் அபாயம் ஏற்படாமலிருக்கவும் முடியுமா என்று கேட்கிறோம்.

“கேவலம், சிறுபிள்ளைகள் தண்ணீர்ப் பந்தல் வைக்கும் பொருட்டு யாசகங் கேட்பதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் அவர்களைத் தொந்தரவு செய்த சில துவேஷப் புத்தியுடைய இந்துக்களால் நேர்ந்த கலகந் தான் பம்பாய் இந்து முஸ்லீம் கலகத்திற்குக் காரணம்” என்று சொல்லப் படுவதைவிட நமக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்?

இத்தகைய நிலைமையைப் போக்கி தேசத்தில் அமைதியை உண் டாக்க வேண்டுமென்னும் கவலை மிதவாதிகள் என்று சொல்லப் படுகின்ற காங்கிரசில் சேராத அரசியல் வாதிகளில் அனேகருக்கு இருந்தா லும், அவர் கள் வெளிப்படையாகக் காலிகளின் செயல்களைக் கண்டிக்கவோ தேச மக்களுக்கு நன்மையான வழிகளை எடுத்துக்காட்டவோ தைரியமாக முன்வராமல் பதுங்குகிறார்கள்.  காங்கிரஸ் செயல்களைக் கண்டிப்பதனால் எங்கே தங்கள் செல்வாக்குக் குறைந்து போய்விடுமோ என்று பயப்படு கிறார்கள். ஆகையால் அவர்கள் பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலை யும் காட்டும் ‘விலாங்கு’ மீன்களைப் போல் அரசாங்கத்தார்க்கு நல்ல பிள்ளை களாகவும், காங்கிரஸ்காரர்களிடம் அநுதாபம் உள்ளவர்கள் போலவும் நடந்து கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் கவனிப்போம். வெளியில் பேசும் மிதவாதிகளெல்லாம், காங்கிரசுடன் ராஜி பண்ணிக் கொள்ளாமல், திரு. காந்தியை விடுதலை செய்யாமல் தேசத்தில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென்றும், அரசியல் சீர்திருத்தம் கொடுத்தாலும் அதைச் சரியாக நடத்தி வைக்க முடியாதென்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்றுதான் நாம் கேட்கிறோம். லார்டு இர்வின் அவர்கள் வைசிராயாக இருந்த காலத்தில், திரு. காந்தியவர்களுக்கும், லார்டு இர்வின் அவர்களுக்கும் ராஜி ஒப்பந்தம் ஏற் பட்டதே; சில நாள் அவ்வொப்பந்தமும் அமுலில் இருந்ததாகக் கருதப் பட்டதே; அப்பொழுதுதான் தேசத்தில் அமைதியும் சமாதானமும் நிலவி இருந்ததென்று சொல்ல முடியுமா? ஆகையால் காங்கிரசோடு ராஜி செய்து கொள்ளுவதன் மூலம் தேசத்தில் அமைதி ஏற்பட்டு விடும் என்று கூறுவது வீண் பேச்சென்றே சொல்ல வேண்டும். அன்றியும் பூரண சுயேச்சை கேட்கும் காங்கிரசுக்கும், மாகாண சுயாட்சி கொடுக்கலாமா? என்று யோசனை செய்து கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கும் எப்படி ராஜி ஏற்பட முடியும்?  ஏற்பட்டா லும் எத்தனை நாளைக்கு அந்த ராஜி நிலைத்து நிற்க முடியும்? என்று யோசித்துப் பாருங்கள்.

நமது நாட்டிலுள்ள வகுப்புப் பிரிவுகளும், துவேஷங்களும் ஒழிகின்ற வரையில் மக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட முடியாது என்ற அபிப்பிராயத்தை மறுக்கின்றவர்கள் யாருமில்லை, இருந்தும், இந்த சாதி, மதங்களை ஒழித்து ஒற்றுமையுண்டாக்க யாரும் முயல முன்வரவில்லை. இந்த நிலையில் பூரண சுயேச்சைப் பேச்சுப் பேச சிறிதேனும் யோக்கியதை உண்டா என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?

திரு. காந்தியார் வட்டமேஜை மகாநாட்டுக்குப் போகுமுன்னர் “வகுப்புப் பிரச்சினையில் ஒரு முடிவு ஏற்பட்டால் தான் இங்கிலாந்து போ வேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாரே அதன்படி செய்தாரா? இங்கி லாந்தில் பேசும் போதெல்லாம் “இந்தியாவுக்குப் போனவுடன் முதலில் வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்த பிறகே மற்ற காரியங்களைப் பார்ப்பேன்” என்று சொல்லிக் கொண்டாரே! இந்தியாவிற்கு வந்த பின் என்ன செய்தார்? சட்டமறுப்பில் கலந்து கொண்டு சிறைசென்று,  நூல் நூற்றுக் கொண்டும், பகவத்கீதை படித்துக்கொண்டும் ஓய்வுபெற்றிருப்பதைவிட  வேறு என்ன செய்தார்? இதை ஆலோசித்துப் பார்க்கும்போது திரு. காந்தியா ராலோ அல்லது காங்கிரசாலோ வகுப்புப் பிரச்சினையைத் தீர்த்துச் சமாதா னத்தை ஏற்படுத்த முடியாது என்பது விளங்குகிறதல்லவா? பூரண சுயேச்சைப் பேச்சுப் பேசிக் கொண்டு காலிகளைத் தூண்டிவிட்டுக் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கத்தான் காங்கிரசால் முடியும் என்பது தெரியவில்லையா?

ஆகையால் இச்சமயத்தில், காங்கிரசோடு ராஜி பேச வேண்டு மென்றும், அவசரச் சட்டங்கள் கூடாதென்றும், உடனே காங்கிரசின் விருப்பப் படி பூரண சுயேச்சை கொடுத்தாக வேண்டும் என்றும் பல்லவி பாடிக் கொண் டிருப்பதில் பயனில்லை. பொறுப்பற்ற முறையில் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்டு தேசத்தில் அமைதியைக் கெடுக்கின்றவர்கள் யாராய் இருந் தாலும் அவர்களை அடக்கவும், அவர்களுக்குப் புத்தி கற்பிக்கவும், அவர் களுக்குப் பொது ஜனங்களிடம் செல்வாக்கில்லாமற் செய்யவும், பொது ஜனங் கள் அவர்கள் செயல்களுக்கு ஆதரவு அளிக்காமலிருக்கும்படி செய்யவும் எச்சரிக்க வேண்டியதே இச்சமயத்தில் உண்மையான தேச ஊழியர்களின் கடமையாகும் என்று கூற விரும்புகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 12.06.1932

You may also like...

Leave a Reply