பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை
தேசீயத் துரோகி அடுத்த வருஷத்தில் மாசி மாதத்தில் வரப்போகும் மகத்திற்கு மகா மகம் என்று பெயர். இது பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை கும்பகோணத்திற்கு வரும் ஒரு கொள்ளை நோயாகும். இந்தக் கொள்ளை நோய் கும்பகோணத்தை மட்டிலும் விட்டுவிடுவதில்லை. சென்னை மாகா ணத்தையே பிடித்து ஒரு ஆட்டம் ஆட்டிவிடும். சென்னை மாகாணத்தைத் தவிர வெளிமாகாணத்தில் உள்ளவர்கள் சிலரையும் கூட பிடிக்காமல் விடுவதில்லை. கும்பகோணத்தில் அழுக்கும் பாசியும் நாற்றமும் பிடித்த குளம் ஒன்று இருக்கிறது; அதன் பக்கத்தில் சென்றாலே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். அந்தக்குளத்தில் தான் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சல் இலைகள் ஒதுங்கிக் கிடக்கும். குழந்தைகள் ஆபாசம் பண்ணிய துணி களையும், பாய்களையும் அதில்தான் கழுவுவார்கள். தீட்டுக்காரப் பார்ப்பன பெண்களும், மற்றவர்களும் அதில்தான் சாதாரண நாளில் முழுகுவார்கள். விபசாரம் பண்ணிப் பிள்ளை பெறும் முக்காடு போட்ட அம்மாமார்களும் அந்தக் குளத்தில்தான் குழந்தைகளை அமிழ்த்தி மோட்சத்திற்கு அனுப்பு வார்கள். எல்லாப் பாவங்களையும் அந்த அற்புதமான தீர்த்தம் நீக்கிவிடும். இத்தகைய “மகாத்மீயம்” பொருந்திய குளம் அது. அதில் வந்து மாசி மாச மகத்தில் முழுகிவிட்டால் உடனே மோட்சமும் சகல ஐசுவரியங்களும் கிடைத்து விடுவதாக இந்துக்களின் நம்பிக்கை. இதன் பொருட்டே இந்தியா வின் பல பாகங்களிலிருந்தும் திரளான மக்கள் வந்து கூடி அந்தக் குளத்தில் விழுந்து போவார்கள். ஐயோ! அந்தப் பரிதாபக் காட்சி பார்க்க முடியாததாகும். அன்று பிடிக்கும் நாற்றம் ஒரு மாதம் வரையிலும் உடம்பை விட்டு நீங்காது. ஊர் முழுதும் நாற்றம். அதுமுதல் மாகாணம் முழுதும் காலரா பரவி விடும். ரயில்வேகாரனுக்கு கொழுத்த வரும்படி, இந்துக்களின் பணம் குறைந்தது 5 லட்சமாவது நஷ்டமாகும். இது மாத்திரம் அல்ல. கும்பகோணம் நகர மக்களுக்கும் பெருவாரி யான நஷ்டம். இந்த மகாமகத்தை முன்னிட்டு இப்பொழுதே நகர சபையார் பணத்தைச் செலவழிக்க திட்டம் போடுகின்றனர். மகாமகத்தின் பொருட்டு ரோடுகளைச் சீர்திருத்தவும், புது ரோடுகள் போடவும் அறுபதினாயிரம் ரூபாயும், மகாமகக் குளத்தைச் சுத்தம் பண்ண பன்னிரண்டாயிரம் ரூபாயும் திட்டம் போட்டு நகர சபையின் ஆலோசனைக்குக் கொண்டு வரப்பட்டி ருக்கிறது. ரோடுகளைச் சீர்திருத்தம் பண்ணுவதும் புது ரோடுகள் போடுவதும், நகரத்திற்கே ஒரு பொதுவான நன்மையைத் தருவதாயிருப்பதால் அது அவ்வளவு மோசமான செலவல்ல. ஆனாலும் இந்தப் பணப் பஞ்ச காலத்தில் இவ்வளவு பணத்தை மண்ணில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால் குளத்தைச் சுத்தம் பண்ண வேண்டும் என்பதற்காகச் செலவிடலா மென்று ஆலோசிக்கப்படும் பன்னிரண்டாயிரம் ரூபாயும் பாழ்! பாழ்!! பாழ்!!! என்றுதான் சொல்லுகிறோம். இந்த மாதிரியே ஒவ்வொரு மகாமகத்தின் போதும் செலவழிந்து கொண்டுதான் வந்திருக்கலாம். ஆகவே அந்தப்பாழும் சாக்கடையானது இதுவரையிலும் எத்தனை லட்சம் ரூபாய்களை விழுங்கி யிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! ஜனங்களின் வரிப்பணம் இவ்வாறு பாழாகுவதற்குக் காரணம் என்ன? இந்துக்களின், வைதீகர்களின், மதியற்ற தன்மையல்லவா? சுதேசிப்பிரசாரம் பண்ணுகிறவர்கள் யாராவது இதைப்பற்றி பேசுவார்களா? இந்தமாதிரி 12000 ரூபாயைக் குளத்தில் கொட்டிப் பாழாக்கி, நமது இந்தியாவில் உள்ள ஜனங் களை யெல்லாம் “கும்பகோணத்திற்கு வாருங்கள்!”, என்று கூவியழைப்ப தால் வரும் நஷ்டத்தை எந்தத் தேசாபிமானியாவது சிந்தித்துப் பார்க்கின் றார்களா? ஜனங்கள் ரயிலுக்குக் கொடுக்கும் பணம் எவ்வளவு? அவை எங்கே போய்ச் சேருகிறது. கும்பகோணத்திலேயே கூட்டத்தில் மிதியுண்டு சாகப்போகிறவர்கள் எவ்வளவுபேர்? காலரா, ஜுரம் முதலிய நோய்களால் கும்பகோணத்திலும் மகாமகத்திற்கு வந்து போன ஜனங்களுடைய சொந்த ஊர்களிலும் சாகப் போகின்றவர்கள் எத்தனை பேர்? பிறகு வைத்திய உதவிக்காக ஆகும் செலவு எவ்வளவு? கும்பகோணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தில் நகைகளையும் பணங்களையும் திருட்டுக் கொடுப்பதன் மூலம் நஷ்டமாகும் பொருள் எவ்வளவு? என்று எந்த அறிவுள்ள தேச பக்தனாவது யோசித்துப் பார்க்க முன் வருவானா? அல்லது கும்பகோணம் வாசிகளும், நகர சபையாரும் தான் இவை களை யோசித்துப் பார்க்க முன் வருவார்களா? உண்மையிலேயே இவை களையெல்லாம் ஆலோசித்துப் பார்த்து, நமது மக்களுக்கு அவர்களுடைய அறியாமையால் உண்டாகப்போகும், உடல், பொருள், உயிர் நஷ்டங்களைத் தடுக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? உடனே குளத்திற்கொட்டும் பன்னீராயிரத்தை பத்திரப்படுத்த வேண்டும். வேண்டுமானால் இனி எந்தக் காலத்திலும் இந்த எண்ணமே வராமலிருக்கும் பொருட்டு அந்த மகாமக ஆபாசக்குளத்தைத் தரைமட்டமாகத் தூர்ப்பதற்குச் செலவழிக்கலாம். எங்கும் விளம்பரம் பண்ணி, மகாமகத்தை முன்னிட்டு யாரும் கும்பகோணம் வரக் கூடாதென்று தெரிவித்து விட வேண்டும். மகாமகத்தின் போது கும்பகோணத் திற்கு வருவதால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வது தான் மக்களை அறிவுடையவர்களாகச் செய்வதற்கும், பொருள் நஷ்டத்தைத் தடுப்பதற்கும் வழியாகும். இதனால் நமது நாட்டு “ஏழை மக்களுடைய பல லட்சக்கணக்கான ரூபாய்கள் மீத மாகும் என்பதில் ஐயமில்லை. அவர்களுடைய உடலுக்கு வரும் கஷ்டமும், நேரத்திற்கு உண்டாகும் நஷ்டமும் மீதமாகும் என்பதிலும் ஐயமில்லை. இதை விட்டு விட்டு நகரின் ரோடுகளை யெல்லாம் சுத்தப்படுத்தி வைத்திருக் கிறோம். மகா மகச் சாக்கடையையும் சுத்தம் பண்ணியிருக்கிறோம். ஆகை யால் இந்துக்களே வாருங்கள்!” என்று விளம்பரம் பண்ணுவதனால் என்ன நன்மையுண்டு? இன்னும் ரயில்வேக்காரர்கள் செய்யப் போகும் விளம்பரங் கள் வேறே யிருக்கின்றன. அவர்கள் இதற்காக இப்பொழுது முதலே வர்ணப் படங்கள் தயார் செய்து கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மகாமகத்தின் புராணக் கதையையும் பார்ப்பனர்களைக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகவே இனி எஸ். ஐ. ஆர். காரர்கள் படங்களைப் போட்டு புராணக் கதைகளைக் கூறிப் பொது ஜனங்களுக்குக் கும்பகோணத்தின் பெருமையை உபதேசம் புரியத் தொடங்கி விடுவார்கள். ஆனால், இந்தமாதிரி இச்சமயத்தில் செய்யச் சம்மதித்து விட்டால் அதாவது மகாமகச் சாக்கடையைச் சுத்தப் படுத்தாமலும் கும்பகோணத்திற்கு மகாமகத்தை முன்னிட்டு யாரும் வரக் கூடாதென்றும் பேசாமல் இருந்து விட்டால், கும்பகோணம் பார்ப்பனர்கள் சும்மாயிருப்பார்களா? என்பது தான் சுயமரியாதைக்காரர்கள் கேட்கும் கேள்வி. உடனே அவர்கள் சாஸ்திர மூட்டைகளையும், மடிசஞ்சிகளையும் தூக்கிக் கொண்டு வைசிராயிடம் போய் எங்கள் மதத்திற்கு ஆபத்து வந்து விட்டது என்று முறையிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. அதிலும் முடியாமல் போனால் இங்கிலாந்திற்குக் கூட சாஸ்திரமூட்டை, மடிசஞ்சி இவைகளுடன் கூட கங்காஜலமும் களிமண்ணும் சேர்த்து எடுத்துக் கொண்டு போவார்களென்பதிலும் சந்தேகமில்லை. ஆகவே, நமது செல்வங்களைப் பாழக்குவது எவை என்பதைப் பாருங்கள். நமக்கு மாத்திரமா? அரசாங்கத்தாருக்கும் இதனால் வரும் நஷ்டம் அளவற்றவை. அவர்கள் அன்றைய தினம், நகரத்தில் ஏராளமான போலீஸ் அதிகாரிகளையும் சுகாதார அதிகாரிகளையும், டாக்டர்களையும் வைத்திருக்க வேண்டும். இந்தச் செலவெல்லாம் யார் தலையில் விடிகிறது? ஆகையால் இது போன்ற முட்டாள் தனத்தை ஒழிக்க வேண்டியது அவசியமாகும் என்று சொல்லும் சுயமரியாதைக்காரர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடு படுகிறவர்களா? அல்லது இந்த மாதிரியானவைகளைப் பிரசாரம் பண்ணும் வைதீகர்களும், பார்ப்பனர்களும் அவர்களுக்கு துணை செய்யும் காங்கிரஸ் காரர்களும் நாட்டின் முன்னேற்றத்தைக் கருதுகின்றவர்களா? என்று யோசனைப் பண்ணிப் பாருங்கள்! அழுக்கும், பாசியும், நாற்றமும் எடுத்த ஒரு பாழுங் குளத்தில் குளிப்பதனால், தாங்கள் செய்த பாவமெல்லாம் போய் விடுகிறது! ஏராளமான புண்ணியம் வருகிறது! மோட்சம் கிடைக்கின்றது! நினைத்தவை நிறைவேறுகின்றன. என்று நம்புவதை விட முட்டாள் தனம் வேறு என்ன இருக்கின்றன? நாற்றமடிப்பதையும், வியாதி வருவதையும் கண்கூடாகப் பார்த்திருந்தும் இவ்வாறு செய்வதில் என்ன அருத்தமிருக் கிறது? சுகாதாரமுறை அறிந்த டாக்டர்களில் எவ்வளவுபேர் சயின்சு படித்த கலாசாலைப் பட்டதாரிகளில் எவ்வளவு பேர் இந்தக் களத்தில் விழுவார்கள் என்பதை நினைக்கும் போது நாம் அழுவதா? சிரிப்பதா? என்று தெரிய வில்லை! நமது மக்கள் கற்றவர்களாயிருந்தாலும் கல்லாதவர்களாயிருந்தாலும் அவர்கள் மூளையில் மதம், நம்பிக்கை என்னும் அழுக்குகள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே என்றைக்கு மதமும், வைதீகமும், நம்பிக்கையும் நமது நாட்டை விட்டு ஒழிகின்றதோ அன்றுதான் நாம் உருப்பட முடியும் என்றுகூறுவதில் என்ன தவறு இருக்கின்றது. இந்த ஒரு மகா மகத்திற்கு மாத்திரம், முனிசிபாலிட்டியாரால், ரோட்டுகளுக்காக 60,000 ரூபாயும், குளத்திற்காக 12,000 ரூபாயும், ஆக 72,000 எழுபத்திரண்டாயிரம் ரூபாய் செலவழிக்கத்திட்டம் போடப் படுமானால் மற்றபடி நமது நாடு, முழுவதும் இதுபோல் நடைபெறும் திரு விழாக்களுக் கும், பண்டிகைக்கும் செலவாகும் பணம் எவ்வளவு? இவைகளால் நமது நாடு அடையும் பலன் என்ன? இது வரையிலும் மேலும் மேலும் தரித்திரர் களாகவும், அடிமைகளாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும் ஆனதைத் தவிர வேறு என்ன பயனைப் பெற்றோம்? என்று ஆலோசனை செய்து பாருங்கள்! சுயமரியாதைக்காரர் சொல்லுவதன் உண்மை விளங்கும். குடி அரசு – கட்டுரை – 20.03.1932