எதிரிகளின் விஷமப்பிரசாரம்
நமது இயக்கத் தோழர்களான திரு. சௌந்தர பாண்டியன் அவர்களும், திரு. வி. வி. ராமசாமி அவர்களும், திரு. முருகப்பர் அவர்களும், திரு. கி. ஆ பெ. விஸ்வநாதன் அவர்களும், திரு. டி. வி சோமசுந்தரம் அவர்களும், “சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை வரையறுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியாதிருப்பதனாலும், பலரும் தங்கள் தங்கள் விருப்பப்படி சங்கத்தின் அனுமதியின்றி நடந்து கொள்ளுவதாலும், இயக்க நிர்வாகக் கமிட்டி யினின்றும் நீங்கிக் கொள்ளலாமா” என்று யோசனை செய்ததாகவும், முடிவை நமது மாகாணச் சங்கத் தலைவர் திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் வரும் வரையிலும் ஒத்திவைத்திருப்பதாகவும், அதுவரையிலும் இயக்கத்தின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் விலகியிருப்பதென்று தீர்மானித் திருப்பதாகும் சண்டமாருதம் பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளிவந்தது.
அவ்வறிக்கை வெளிவந்த பின் திரு. டி. வி. சோமசுந்தரம் அவர்கள், தான் அவ்வறிக்கையில் சம்பந்தப்படவில்லையென்றும், தனக்கு அவ் வறிக்கையில் கூறியுள்ளவை யாதொன்றும் தெரியாதென்றும், அவ்வறிக்கை யில் கண்ட விஷயங்களை தாம் ஒப்பவில்லை என்றும், அவ்வறிக்கையில் கையெழுத்து இடும்படி தன்னை யாரும் கேட்க வில்லையென்றும் வெளியிட் டிருக்கிறார். மற்றவர்கள் நால்வரும் ‘சண்டமாருதத்தில்’ வெளிவந்த அவ்வறிக்கைக்குப் பின் வேறொரு செய்தியும் வெளிப்படுத்தாததால் அவ் வறிக்கையின் அபிப்பிராயத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளுவதாகவே நாம் கருத வேண்டியிருக்கிறது.
ஆகவே நமது இயக்கத் தோழர்களான திரு. சௌந்தரபாண்டியன் அவர்களும், திரு. முருகப்பர் அவர்களும், திரு. வி. வி. ராமசாமி அவர்களும், திரு. கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்களும் இவ்வறிக்கையை வெளியிட்ட திலிருந்து நமது இயக்க அபிமானிகள் பலர் அவர்கள் இயக்க த்திலிருந்தே விலகி விட்டதாக ஒரு தப்பு அபிப்பிராயப்படுவதாக அறிகின்றோம். இதற்கு அனுசரணையாக நமது எதிரிகளும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து மேற்கண்ட தோழர்கள் விலகிவிட்டார்களென்றும், அதனால் சுயமரியாதை இயக்கத்தில் பிளவு உண்டாகி விட்டதென்றும், இனி இயக்கம் அழிந்து விடுமென்றும் விஷமப் பிரசாரம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் உண்மையில் மேற்கூறிய நான்கு தோழர்களும் நமது இயக்கத்திலிருந்து விலகவில்லை யென்பதையும், விலகுவதற்கு நினைக்கக் கூட இல்லை என்பதையும், இவர்கள் எந்தக் காலத்திலும் நமது இயக்கத்தை விட்டு விலகக் கூடியவர்கள் அல்ல வென்பதையும் சந்தேகமில்லாமல் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த நான்கு தோழர்களும் நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் இதில் ஈடுபட்டு யாருடைய தயவு தாட்சண்யங்க ளுக்கும் கட்டப்படாமல் உழைத்து வருபவர்கள் என்பதை நாம் கூறுவது மிகையேயாகும். உண்மையில் இத்தோழர்கள் சுயநலங்கருதியவர்களா யிருந்தால் அவர்கள் நமக்கு எதிரிடையான இயக்கங்களில் சேர்ந்து சுலபமாக தேசாபிமானப் பட்டம் பெற்றிருக்கலாம். அப்படியில்லாமல் உண்மையான சுயமரியாதைக் காரர்களாகவும் இயக்கக் கொள்கைகள் முழுவதையும் மனப் பூர்வமாக நம்பி ஒப்புக் கொள்ளுகின்றவர்களாகவும் இருக்கும் காரணத்தால் தான் அவர்கள் இது வரையிலும் நமது இயக்கத்திலிருந்து கொண்டு எதிரி களின் மிரட்டுதல்களுக்கும் வசைமொழிகளுக்கும் அஞ்சாமல் உழைத்து வருகிறார்கள் என்பது நமது இயக்கத்தில் உள்ள மற்ற தோழர்களுக்குத் தெரியாத செய்தியல்ல.
இத்தகைய உண்மையான சுயமரியாதைத் தோழர்களை, இயக்கத் திலிருந்து விலகிவிட்டார்களென்று சிலர் செய்யும் ‘பிரசாரம்’ நமது இயக்கத் தின் மேல் உள்ள குரோத புத்தியினால் செய்யப்படும் பொய் பிரசாரமேயாகும். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிரிகளின் கூற்றுக்கு ஆதாரமாக ஒரு வார்த்தையாவது ஒரு எழுத்தாவது காணப்படுகிறதா? என்று கேட் கின்றோம்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் காணப்படுவது “இயக்க நிர்வாகக் கமிட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளலாமா” என்று யோசித்த தாகவே காணப்படுகிறதே யொழிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அவர்கள் ஒரு பொழுதும் கருதியதில்லை யென்று அறியலாம். ஆகையால் அவர்கள் வெளியிட்ட அறிக்கையைத் திரித்துக் கூறி தப்புப் பிரசாரம் செய்வதன் மூலம் மேற்கூறிய நமது இயக்கத் தோழர்களின்மேல் பழி சுமத்தும் பொறுப்பற்றவர்களின் வார்த்தைகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
எந்த இயக்கத்திலும் தலைவர்களுக்குள் மன வேற்றுமை ஏற்படுவதும், அதனால் வருத்தமடைவதும் சகஜம். அதனால் இயக்கத்தின்மேல் உண்மை யான பற்றுடைய யாரும் திடீரென்று இயக்கத்தை விட்டு விலகி விடாமல், இயக்கத்தில் தாங்கள் வகித்திருக்கும் பொறுப்பான பதவிகளிலிருந்து ஒதுங்கி நிற்பதும், தங்கள் மன வேறுபாடு தீருகின்ற வரையிலும், இயக்க நடவடிக்கை களில் கலந்து கொள்ளாமலிருப்பதும் சில சமயங்களில் நடைபெறக் கூடிய காரியங்கள்தான். இந்தமுறையிலேயே நமது இயக்கத் தோழர்களுக்கும் சில விஷயங்களில் அபிப்பிராயப்பேதம் தோன்றி வருத்தமடைந்து நடவடிக்கை களிலிருந்து மாத்திரம் தற்சமயம் விலகியிருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள் என்றுதான் நம்புகிறோம்.
இனி நமது இயக்கத் தோழர்களான மேற்கூறியவர்கள் நிர்வாகக் கமிட்டியிலிருந்து விலக யோசித்ததற்குத் தாங்கள் கூறிய காரணங்களை நிவர்த்தித்து இயக்கத்தைப் பலப் படுத்துவதற்கு இச்சமயத்தில் தாங்களே உழைக்க வேண்டுமென்றும், நமது எதிரிகளின் விஷமப் பிரசாரத்திற்கு இடங் கொடாமல் இயக்க நடவடிக்கைகளில் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் தோழர்களான ஈ. வெ. ராமசாமி, ஆர், கே.சண்முகம், எஸ். ராமநாதன் முதலியவர்கள் வந்தபின் மனவருத்தம் அடைந்திருக்கும் நமது இயக்கத் தோழர்கள் கூறும் குறைகளின் உண்மை களை ஆராய்ந்து நிவர்த்திக்கப்பட்டு எல்லாத் தோழர்களுக் குள்ளும் ஒருமனப்பட்ட அபிப்பிராயமும் சமரசமும் உண்டாகு மென்பதிலும் இவர் கள் முன்னிலும் பன் மடங்கு உற்சாகத்துடன் நமது இயக்க வளர்ச்சிக்காக வேலை செய்வார்களென்பதிலும் ஐயமில்லை.
ஆகையால் நமது இயக்க அன்பர்கள் யாரும் தோழர்கள் சௌந்திர பாண்டியன், முருகப்பர், வி. வி. ராமசாமி, கி. ஆ. பெ. விசுவநாதன் முதலியவர் களைப் பற்றி எதிரிகள் செய்யும் தப்புப் பிரசாரத்திற்கும் அவர்கள் இயக்கத் திலிருந்து விலகி விட்டதாகக் கூறும் புரளிகளுக்கும் செவி சாய்க்காமலிருக் கும்படி வணக்கமாக எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 22.05.1932