இத்தகைய கோயில்கள் ஏன்?
தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோயிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தெரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ரல்லாதார்களுக்கும் நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும், ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்த போது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.
ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்பனரல்லாதாருக்கும் தரிசனம் பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்; ஜஸ்டிஸ் வாலர் பார்ப்பனரல்லாதாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலஸ் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.
இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பன ரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில் களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோத ரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பனரல்லாதார்களே செய்து வருகின்றார்கள். இத்தகைய ஒரு கோயிலுக்குள், பார்ப்பனரல்லாதார் போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர் களின் சுய நலத்தையும் அகங்காரத்தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பன ரல்லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன் வர மாட்டார்களென்றே நம்புகின்றோம்.
ஆகையால் உண்மையில், பார்ப்பனர்களின் சுயநலத்தையும், அகங் காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில் களை பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங்களுக்கு உரிமை யில்லாத கோயில் சம்பந்தமான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவைகளைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே அனேகமாக ஒழிந்து போய் விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசி மூட நம்பிக்கைகள் ஒழிந்து போகு மென்பதில் ஐயமில்லை.
ஆகையால் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்ற வர்கள், கோயில்களை ஒழிக்கப்பாடுபடுவார்களானால், அதனால் அதிக நலனும், பொருளாதாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் ஐயமில்லை.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 10.04.1932