சேலம் சுயமரியாதை மகாநாடு
சென்ற 7, 8-5-32 சனி ஞாயிறுகளில் சேலத்தில் நடைபெற்ற முதலாவது சேலம் ஜில்லா சுயமரியாதை மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர்; பெண்கள் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத்தலைவர், திறப்பாளர்; தொண்டர் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர், திறப்பாளர் முதலிய வர்களின் பிரசங்கங்கள் நமது பத்திரிகையில் சென்ற வாரத்திலும், இவ் வாரத்திலும் வெளியாகி யிருக்கின்றன. அந்தப் பிரசங்கங்களை யெல்லாம் படித்துப் பார்ப்பவர்களுக்கு, நமது இயக்கத்தின் தற்கால வளர்ச்சியைப் பற்றியும், உண்மையான கொள்கைகளை அநுபோகத்தில் கொண்டு வரும் செய்தியைப் பற்றியும் நாம் ஒன்றும் அதிகமாகக் கூறவேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.
முதலாவது இவ்வாண்டில் முதலில் சேலத்தில் நமது மகாநாடு நடை பெற்றதே நமக்கு ஒரு பெரிய வெற்றியாகும். ஏனெனில் சேலம் ஒரு பெரிய தேசீயக் கோட்டை என்றும், தேசீயத்திற்கு எதிர்ப்பான எந்தச் செயல்களையும் சேலத்தில் செய்ய முடியாதென்றும், சிலர் மனதில் ஒரு தப்பான எண்ணம் நிலவியிருந்தது. இவ்வெண்ணம் தவறானதென்பதை உணர்த்துவதற்கும், சுயமரியாதை இயக்கமும், அதன் கொள்கைகளும், எந்தத் தேசீயத்திற்கும் அஞ்சாமல் எந்த இடத்திலும் எப்பொழுதும் பரவிப் பொது ஜனங்களை விழிப்படையச் செய்யக் கூடிய தன்மையுடைய தென்பதற்கும், ஒரு எடுத்துக் காட்டாகவே சேலத்தில் நமது மகாநாடு கூடிற்று என்று நிச்சயமாக கூறலாம்!
சேலத்தில் மகாநாடு கூட்ட முயன்றவர்களுக்கு உண்டான துன்பங்கள் எண்ணற்றவை. சுயமரியாதை இயக்கம் பரவினால் தங்கள் தேசீய வயிற்றுப் பிழைப்பிற்குக் கெடுதி வரும் எனக் கருதிய ‘காலிகள்’ சிலர் மகாநாடு கூடா மல் இருக்க எவ்வளவோ பிரயத்தினம் பண்ணி பார்த்தார்கள். ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் சென்று அவர்களுக்குத் தகுந்த மாதிரி இல்லாத பொல்லாத பொய்யுரைகளைப் புகன்று மகாநாட்டிற்கு உதவி செய்யாமல் இருக்கும் படியும், மகாநாட்டு நிர்வாகிகளுடன் ஒத்துழைக்காமலிருக்கும் படியும் கலகம் பண்ணினார்கள். எதிரிகள் இம்மாதிரி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்தும், மகாநாட்டு வேலைகள் தடைப்படாமல் நடந்து கடைசியாகக் குறிப்பிட்ட தேதியில் மகாநாடும் நடைபெற்றது.
நமது இயக்கத் தோழர்களான எஸ். வி. லிங்கம், அழகர்சாமி போன்ற வர்களை வெட்டி விடுகிறோம் என்றும், குத்திவிடுகிறோமென்றும், மிரட்டிக் கொண்டும், மகாநாட்டைக் கலைப்பதற்காக ஆள்சேர்ப்பது போலப் பாவனை பண்ணிக் கொண்டும் கப்பி விட்டார்கள்.
மகாநாடு நடக்கும் சமயத்திலும் ‘காலிகள்’ கலகம் பண்ண மறந்து விடவில்லை. வெளியிலிருந்து கொட்டகை மீது கல் விட்டெறிந்தும், இயக்கத் தோழர்கள் மகாநாட்டில் பேசும்போது இடைஇடையே சத்தம் போட்டும் கலகம் பண்ண முயற்சித்தனர்.
ஆனால், நமது இயக்கத் தோழர்கள் இவற்றையெல்லாம் பொருட் படுத்தாமலும் எதிரிகளுக்குக் கொஞ்சமும் கஷ்டத்தை உண்டாக்காமல் அவர்களிடம் பொறுமை காட்டியும் மகாநாட்டை வெற்றியுடன் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மகாநாட்டிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளும் சுயமரியாதை இயக்கத்தின் உண்மையையும், தேசீயவாதிகள் என்று வேஷம் போட்டுக் கொண்டு கலகம் பண்ண முயற்சித்த எதிரிகளின் காலித் தனங் களையும் உணர்ந்து கொண்டார்கள்.
நமது இயக்கத் தோழர்கள் ‘ஈ. வெ. ராமசாமி’ அவர்களும்,
‘எஸ்.ராமநாதன்’ அவர்களும் மேல்நாட்டுச் சுற்று பிரயாணத்திற்குப் போயி ருப்பதைக் கண்டு “சுயமரியாதை இயக்கம் செத்துப் போய்விட்டது, கொஞ்ச நஞ்சம் உள்ள கிளர்ச்சியும் இனி அடியோடு ஒழிந்துவிடும்” என்று திண்ணைப் பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்த நமது எதிரிகளுக்கு சேலம் ஜில்லா மகாநாடு சரியான புத்தி கற்பித்ததென்றே கூறலாம்; அவர்கள் இரு கன்னங்களிலும் ‘பளிர், பளீர்’ என இரண்டு அறைகள் கொடுத்து ‘ஏ பேதைகளே நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன். முன்னையைக் காட்டிலும் இப்பொழுது அதிகமாகக் கொழுத்துப் பருத்து உயர்ந்து வருகிறேன் பாருங்கள்’ என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுவதைப் போல இருந்ததென்றே கூறுவோம். சுருங்கக் கூறவேண்டுமானால் சேலத்தில் இதுவே முதல் மகாநாடாய் இருந்தாலும் பொது ஜனங்கள் கவனத்தை இது போல் வேறு எந்த மகாநாடும் கவரவில்லையென்றே சொல்லலாம்.
இனி இம்மகாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட தோழர்களின் பேச்சுக் களின் சிறப்பைப் பற்றியும், அப்பேச்சுக்கள் பொது ஜனங்களின் கண்ணைத் திறந்து சுயமரியாதை இயக்கத்தின் உண்மைக் கொள்கைகளை உணர்ந்து பார்க்கும்படி செய்தது என்பதைப் பற்றியும் நாம் கூறுவது தற்புகழ்ச்சி யாகுமென விடுக்கின்றோம்.
ஆனால் சுயமரியாதை மகாநாட்டிற்குத் தலைமை வகித்த தோழர் ம. சிங்கார வேலு அவர்களின் பிரசங்கத்திலுள்ள ஒரு விஷயம் மட்டிலும் குறிப்பிடத்தக்கதாகும். “நாம் விரும்புகின்ற சாதி ஒழிவு, சமய ஒழிவு, பெண்கள் விடுதலை, சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம், மூடப் பழக்கவழக்கங்களை ஒழித்தல் முதலியவைகளைச் செயலில் நிறைவேற்ற வேண்டுமானால் அரசியலைக் கைப்பற்றவேண்டுமென்றும், அரசியலைக் கைப்பற்றாத வரையில் இந்த நோக்கங்களை நிறைவேற்ற முடியா” தென்றும் குறிப்பிடுகிறார்.
ஆனால் இவ்விஷயத்தை நாம் தற்சமயத்தில் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அரசியலைக் கைப்பற்றினால்தான் நமது இயக்கக் கொள்கை களைச் சீக்கிரமாகவும், எளிதாகவும் நிறைவேற்ற முடியும் என்ற தத்துவத்தை ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் இக் கொள்கையை இப்பொழுதே சுய மரியாதை இயக்கம் கைக்கொண்டு விடுமானால் அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பாதகம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
நமது கட்சியின் கொள்கைகள் தேசமக்கள் எல்லோருடைய மனத் திலும் படிந்துவிடுமானால் அதன்பின் நாம் சட்ட மூலமாகவே அரசாங் கத்தைக் கைப்பற்றுவதும், நமது கொள்கைகளைச் சட்டங்கள் செய்வதன் மூலம் நிறைவேற்றுவதும் ஆகிய காரியங்கள் சுலபமாக முடியும். இந்தக் காரணத்தினால்தான் நமது கட்சி இது வரையிலும் அரசியலில் கலக்காமல் சமூகசீர்திருத்தப் பிரசாரம் மட்டும் செய்து கொண்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறோம்.
அன்றியும் நாம் இப்பொழுதே அரசியலைக் கைப்பற்றுவது என்று தீர்மானித்து விடுவோமானால் மற்ற அரசியல் கட்சிகளில் எவ்வாறு பட்டம் பதவிகளை விரும்புகின்ற சுயநலவாதிகள் நிரம்பிக் கிடக்கின்றார்களோ, அவ்வாறே நமது கட்சியிலும் நிரம்பிவிடக் கூடும் என்று நிச்சயமாக நம்பலாம். பட்டங்களுக்கும், பதவிகளுக்கும் ஆசைப்படுகின்றவர்கள் நிறைந் துள்ள கட்சிகள் எல்லாம் உண்மையான சமூக சீர்திருத்தத்திற்கும், சாதி மதங்கள் ஒழிவதற்கும், ஆண் பெண் சமத்துவத்திற்கும், ஏழை பணக்கார சமத்துவத்திற்கும் உண்மையாக உழைக்க முடியாத நிலைமை அடைந்து விடும் என்பதை நமது நாட்டில் தற்காலத்தில் நடைபெற்றுவரும் அரசியல் கட்சிகளின் போக்கைக் கொண்டு உணரலாம்.
ஆகையால் நமது இயக்கம் உண்மையில் ஏழை மக்கள் இயக்க மாகவே இருந்து, ஏழைமக்களின் விடுதலைக்கும், சமத்துவத்திற்கும் உழைக்க வேண்டுமானால், நமது இயக்கக் கொள்கைகள் தேசமெங்கும் பரவி மக்கள் எல்லோரும் அவைகளை ஒப்புக் கொள்ளும் வரையிலும் அரசியலில் கலவாமல் வெறும் சமூகச் சீர்திருத்த இயக்கமாகவே அதிதீவிரமாகப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருவதே சாலச் சிறந்ததென்பதே நமது இயக்கத் தலைவர் களின் கருத்தாகும். இவ்வாறு செய்தால்தான் நாட்டில் சமாதான பங்கம் ஏற்படாமல் நமது இயக்கக் கொள்கைகளை நடைமுறையில் வழங்கும்படி செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை.
மற்றபடி, தோழர் சிங்காரவேலு அவர்கள் சொல்லியுள்ள அபிப்பி ராயங்கள் முழுவதும் நமது கட்சியின் அபிப்பிராயங்களே என்பதையும் அவைகளை நிறைவேற்றுவதன் மூலம்தான் நமது நாட்டில் எல்லாவித சமத்துவமும் உண்டாகமுடியும் என்பதிலும் ஐயமில்லை.
சேலம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் புதுமை யானது ஒன்றுமில்லை யென்றாலும், இதற்குமுன் செங்கற்பட்டு, ஈரோடு, விருதுநகர் முதலிய மகாநாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை ஆதரிப்பதான தீர்மானம் ஒன்றே போதுமானதாகும். இந்த மூன்று மகாநாட்டுத் தீர்மானங்களிலும் நமது இயக்கக் கொள்கைகள் முழுவதும் அடங்கியுள்ளனவென்பதை நாம் கூறுவது மிகையாகும். ஆகையால் அத் தீர்மானங்களைப் பொது ஜனங்களிடம் பிரசாரம் பண்ணி அமுலுக்குக் கொண்டு வருவதைத் தவிர, வேறு புதிதாகத் தீர்மானிக்க வேண்டிய விஷயம் ஒன்றுமில்லையென்றே சொல்லலாம்.
அடுத்தபடியாக, காங்கிரஸ் வருணாச்சிரம தருமப் பிரசாரமும், புராணப் பிரசாரமும் செய்து வருகிறது என்ற கருத்துடன் செய்யப்பட்ட தீர்மானமும் பாராட்டக் கூடியதேயாகும். இத்தீர்மானங்களைப் பற்றிப் பேசிய நமது இயக்கத் தோழர்கள், அப்பாதுரையார், டி. வி. சுப்பிரமணியம்,
கே. வி. அழகர்சாமி, பொன்னம்பலனார், குருசாமி, பண்டிதர் திருஞான சம்பந்தம், எஸ். வி. லிங்கம் முதலானவர்கள் சாதி, சமயம், வேதம், புராணம்,, மதம், கடவுள், மகாத்மா, காங்கிரஸ், ஹிந்தி, கதர், அரசியல் முதலிய புரட்டு களை தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டிய போது பொது ஜனங்கள் உணர்ந்த உண்மைக்கும், அடைந்த மகிழ்ச்சிக்கும், கொண்ட ஊக்கத்திற்கும் அள வில்லை யென்றே சொல்லலாம்.
கடைசியாக பல எதிர்ப்புக்கிடையே சேலம் ஜில்லா மகாநாட்டை நடத்த முன்னின்று உழைத்த நமது இயக்கத் தோழர்களின் ஊக்கத்தையும் தைரியத்தையும் போற்றுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 15.05.1932